மஹேஸ்வரன், குரு பத்னிகளிடத்தில் மயங்கலாமா?!?!! (Post No.11,720)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,720

Date uploaded in London –  28 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

மஹேஸ்வரன் காம மயக்கத்தினாலும் மோஹத்தினாலும் குரு பத்னிகளிடத்தில் மயங்கலாமா?!?!! 

ச.நாகராஜன் 

மஹேஸ்வரன் காம மயக்கத்தினாலும் மோஹத்தினாலும் குரு பத்னிகளிடத்தில் மயங்கியதாக புராணம் கூறுகிறது.

இப்படி மஹேஸ்வரன் செய்யலாமா? இது கேள்வி.

ஒரு சின்ன விளக்கத்தை முதலிலேயே சுலபமாகக் கூறி விடலாம்.

இப்படி எல்லாம் கேள்விகள் பின்னொரு காலத்தில் எழக்கூடும் என்பதை, அறிவும் ஞானமும் கொண்ட முனிவர்கள் அறிய மாட்டார்களா, என்ன?

சுலபமாக இப்படி ஒரு சரித்திரத்தை எழுதாமலேயே விட்டிருக்கலாமே.

கேள்விகள் எழ சந்தர்ப்பமே கொடுக்காமல் இருந்திருக்கலாமே!

ஆனால் இப்படி ஒரு விவரம் இருக்கிறது. அப்படியானால் கேள்வி எழும்.

அதற்கான பதிலும் அவர்களிடம் இருக்க வேண்டும். இருக்கிறது.

சரி, நிகழ்வுக்குள் செல்வோம்.

***                                                        

முன்னொரு காலத்தில் தேவதாரு வனத்தில் உள்ள முனிவர்கள் தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

இந்த உலகத்தின் காரியத்தை – ஜகத்கார்யத்தை – நிர்வகிப்பது – கர்மமே, கர்மம் மட்டுமே தான் என்பது அவர்கள் முடிவு.

அதாவது செயல்களினால் மட்டுமே உலகம் இயங்குகிறது.

இந்த கர்மங்களுக்கு அப்பாலும் ஒரு ஈஸ்வரன் – மேலதிகாரி- இருக்க முடியாது என்பது திண்ணம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

அத்தோடு ஈஸ்வரன் என்ற ஒரு கொள்கையை நம்ப வேண்டாம் என்று திடமாகப் பிரசாரமும் செய்தனர்.

வெறும் கர்மங்களே போதும் என்ற அவர்களின் கொள்கையும் செயலும் பூவுலகை அல்லல் படுத்திக் கொண்டிருந்தது – அவர்களின் அதீத செய்கையினால்!

தேவதாரு வனத்தில் இல்லாத முனிவர்கள், ஈஸ்வர பக்தர்கள், இதனால் திகைத்தனர். ஈஸ்வரனுக்கே ஒரு சங்கடமா? அவர்கள் பிரமித்தனர்.

*** 

தேவர்கள் தவித்தனர். அவர்களுடன் ஈஸ்வர பக்தர்களான முனிவர்களும் சேர்ந்தனர்.

தங்கள் தவத்தின் சக்தியினால் அவர்கள் பரமேஸ்வரனிடம் நேரடியாகச் சென்றனர். முறையிட்டனர்.

பரமேஸ்வரன் அவர்கள் மீது கருணை கொண்டார்.

கர்மம் மட்டுமே தான் எல்லாம் என்று நினைக்கும் முனிவர் கூட்டத்திடம் உபதேசம் எடுபடாது.  கர்மத்திற்கு அப்பாலும் ஒரு சக்தி உள்ளது என்பதை அவர்களே உணர வேண்டும் என்று அவர் திருவுள்ளம் கொண்டார்.

உடனே நாராயணனிடம் ஜகத்திலுள்ளோரை மயக்கும் சுந்தர ரூபம் கொண்ட சுந்தரியாக மாறச் சொன்னார்.

பரமேஸ்வரனின் லீலையைத் தெரிந்து கொண்ட நாராயணன் உலகை மயக்கும் அபூர்வ மோஹினியாக ஆனார்.

இருவரும் அனைவரையும் மயக்கும் யௌவன பருவம் கொண்டு தாருகா வனம் வந்தனர்.

முனிவர்கள் அசந்தனர்; முனிபத்னிகள் பிரமித்தனர்.

என்ன ஒரு லாவண்யம்!

என்ன ஒரு அழகு!!

கர்மபடர்களாக இதுவரை இருந்த முனிவர்கள் காமவசப்பட்டனர்.

அனைவரும் மோஹினியின் பின்னால் ஓட ஆரம்பித்தனர்.

யாகமாவது, கர்மமாவது அனைத்தையும் கை விட்டு விட்டு மோஹினி எந்தப் பக்கம் இருக்கிறாள் என்று தேடி அவளைப் பின் தொடர்ந்தனர்.

ரிஷிகளின் பத்னிகளின் கதையோ வேறு.

அவர்கள் அனைவரும் சுந்தர ரூபனாக விளங்கிய ஈஸ்வரன் பின்னால் காம வசப்பட்டு சென்றனர்.

இப்படி மோஹினியின் பின்னால் முனிவர்களும். ஈஸ்வரனின் பின்னால் ரிஷி பத்னிகளும் திரிய ரிஷிகளின் பிரமசர்ய மஹிமை போனது; பத்னிகளின் பதிவிரதா தர்மம் கெட்டது.

ஒரு க்ஷணத்தில் ஹரியும் ஹரனும் மறையவே ரிஷிகளும் ரிஷி பத்னிகளும் தன் உணர்வு பெற்றனர்.

அடடா, நமது பிரமசர்யம் கெட்டதோடு, ரிஷி பத்னிகளின் பதிவிரதா தர்மமும் பங்கப்பட்டு விட்டதே என்று அவர்கள் வருந்தினர்.

தம்மை இப்படி வருத்தத்திற்குள்ளாக்கிய சுந்தரனையும் சுந்தரனையும் கொன்று விட வேண்டுமென்று என்று எண்ணிய அவர்கள் கடுமையான ஆபிசார ஹோமத்தை மேற்கொண்டனர்.

பலன் இல்லை. பின்னர் அஸ்திர சஸ்திரங்களை ஏவினர். பலன் இல்லை.

‘அட, கர்மாவே, பரம் என்று எண்ணி இருந்தோமே, ஈஸ்வரன் என்று யாருமே இல்லை என்று எண்ணினோமே, நமது கர்மங்கள் பலன் அளிக்கவில்லையே. மந்திரம், அஸ்திரம், சஸ்திரம் எதுவும் பயன் அளிக்கவில்லையே” என்று ஆச்சரியப்பட்டனர்.

கர்மம் பலன் உள்ளது என்றாலும் கூட, அதற்கு அப்பாற்பட்ட மேலான ஒரு சக்தி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

சுந்தரனே பரம்பொருளாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர்கள் பரமேஸ்வரனைத் தொழுது வணங்கினர்.

பரமேஸ்வரன் அவர்கள் முன் தோன்றி அருள் பாலித்து தன் திரு நடனத்தை ஆடினார். திரு நடனம் அகிலாண்டகோடி பிரம்மாண்டத்தை இயக்கும் தெய்வீக சக்தி என்பது பொருள்.

அதனால் பிரம்மானந்த அனுபவத்தை ரிஷிகள் பெற்றனர்.

பதிவிரதைகள் அனைவரும் ஈஸ்வரனின் மஹிமையை எண்ணி வியந்து அவனைப் போற்றித் துதித்தனர்.

சரி, இதைக் கேட்டாயிற்று, நாமும் ஈஸ்வரனைப் போல சுந்தர ரூபம் எடுத்து (மேக் அப் போட்டுக் கொண்டு)

வனிதைகளைக் கவரலாம் என்று எண்ணி அதை வாதமாக முன் வைப்பவர்களுக்கும் ஒரு பதில் உண்டு.

நீங்கள் ஹாலாஹல விஷத்தை அருந்தி அதைத் தொண்டையில் நிறுத்தி விட்டு உங்கள் ஜாலங்களைச் செய்யுங்கள் என்பதே பதில்!

ஆகவே தெய்வத்தன்மை பொருந்திய ஆன்றோர்கள் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை அறிவதோடு அதை நாமும் ஏன் செய்யக்கூடாது என்ற சந்தேகத்தையும் எழுப்பக் கூடாது.

இதுவே வ்யதிரேக திருஷ்டாந்தத்தின் கருத்து ஆகும்!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: