
Post No. 11,723
Date uploaded in London – 29 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ் இன்பம்
சண்பக பாண்டிய மன்னனுக்கு அடங்காத இரண்டு காரியங்கள்!
ச.நாகராஜன்
சண்பக பாண்டியன் என்ற மன்னன் புகழ் பெற்றவன். கல்வியின் சிறந்தவன். செல்வத்தில் சிறந்தவன்.
அவனைப் பற்றிக் காளிமுத்துப் புலவர் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
சுமார் 13க்கும் மேற்பட்ட பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் இரண்டு:
பாண்டிய மன்னனுக்கு அடங்காத காரியம் இரண்டு!
சண்பக பாண்டிய மன்னனுக்கு எல்லாம் அடங்கும் யாவரும் அடங்குவர்.
ஆனால் அவனுக்கும் அடங்காதவை இரண்டு,
இதைப் புலவர் கூறிய போது அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
சரி, புலவர் வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறார் என்றே அரசவையினர் நினைத்தனர்.
ஆனால் பாடல் முடிந்தவுடன் அனைவரும் அவரைப் போற்றினர்.
பாண்டியனின் மகிழ்ச்சிகோ எல்லையே இல்லை.
புலவரை நன்கு ‘கவனித்தான்’ என்று சொல்லவும் வேண்டுமோ?!
மற்றொப்பி லாக்கொடைச் சண்பக மாறவ ரோதயநின்
வெற்குக் கிரண்டுண் டடங்காத காரிய மேருகிரிச்
சுற்றிலுங் கீர்த்தி யடங்காது நின்னுடைத் தோடழுவாக்
கற்றைக் குழலிக்கு மாலடங் காதிது கைகண்டதே
சண்பக பாண்டியனின் புகழ் மேருமலையைச் சுற்றினாலும் அடங்காது. அவனுடைய தோளைத் தழுவாத என் பெண்ணுக்கு மயக்கம் அடங்காது! போதுமா, பாண்டியனின் புகழ்!
பாடலின் பொருள்:
மற்று ஒப்பு இலாகொடை – வேறொரு உவமையில்லாத கொடையை உடைய
சண்பக மாற – சண்பக மாற பாண்டியனே!
வரோதய – வரத்தினால் அவதரித்தவனே!
நின் வெற்றிக்கு – உனது வெற்றிக்கு
அடங்காத காரியம் இரண்டு உண்டு – அடங்காத விஷயங்கள் இரண்டு உள்ளன
(அவை யாவை என்று கேட்டாயெனில்)
கீர்த்தி – உன் புகழானது
மேருகிரி சுற்றிலும் அடங்காது – மேருமலையின் சுற்றுப்புறத்தினும் அடங்கமாட்டாது
நின்னுடைத் தோள் தழுவா – உன்னுடைய தோள்களைத் தழுவாத
கற்றைக் குழலிக்கு – கூந்தல் கற்றையை உடைய என் பெண்ணுக்கு
மால் அடங்காது – காம மயக்கம் அடங்க மாட்டாது
இது கை கண்டது – இந்த விஷயம் கை கண்ட ஒன்றாகும்.
கீர்த்தியும் விரக நோயும் பாண்டியனின் ஆணைக்கு அடங்க மாட்டாதவை.

அடுத்த பாடல் :
பூணித் திலத்துப் புயல்வீர மாறன் புகல்கவிக்கு
நாணிப் புலவர் செல்லா தென்செய்வ ரிந்தநானிலத்திற்
ஆணிங் கனக மணந்தரிற் பூமணம் யார்கொள்ளுவார்
மாணிக்கந் தித்திக்கி லென்னாகு வற்ற மதுரங்களே
பாண்டியன் செல்வத்தால் மட்டுமில்லை, கல்வியிலும் சிறந்தவனே என்று புகழ்கிறார் புலவர்.
பாடலின் பொருள் :
இந்த நானிலத்தில் – இந்த பூமியில்
பூண் நிலத்துப் புயல் – முத்து மாலையை அணிந்த மேகம் போன்ற
வீரமாறன் புகல் கவிக்கு – வீர பாண்டியன் சொல்லும் கவிதைக்கு
புலவர் நாணிச் செல்லாது – புலவர்கள் நாணிப் போகாமல்
என் செய்வார் – என்ன தான் செய்வார்கள்?
ஆணிக் கனகம் மணம் தரின் – ஆனிப் பொன்னானது வாசனையை வீசுமாயின்
பூ மணம் யார் கொள்ளுவார்? – பூக்கள் தரும் வாசத்தை யார் ஏற்பார்?
மாணிக்கம் தித்திக்கின் – மாணிக்கம் இனிக்குமாயின்
மற்ற மதுரங்கள் – மற்ற இனிமையான அனைத்துமே
என் ஆகும் – என்ன ஆகுமோ?
சண்பக பாண்டியனைப் பற்றிய புலவரின் சாதுரியப் பாடல்கள் இன்னும் பல உள்ளன.
***