
WRITTEN BY B. KANNAN, NEW DELHI
Post No. 11,725
Date uploaded in London – – 29 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxx
WRITTEN BY B.KANNAN, NEW DELHI
மாம்பழக் கவிச் சிலேடை
பழநி மாம்பழக் கவிசிங்க நாவலர் சிலேடையாகப் பேசி, கூடயிருப்போர் யாவரை யும் மகிழ்விக்கும் இயல்புடையவர். அவர் பல சமயங்களில் இவ்விதம் இருபொருள் படப் பேசி, கேட்போருக்கு வியப்பும்,உவப்பும் ஊட்டியுள்ளார். அவற்றுள் சிலவற்றை
இப்போது பார்க்கலாம்…
மரப்படி
ஒரு சமயம் சேதுசமஸ்தான மன்னர் பொன்னுச்சாமித் தேவர் அரண்மனை மண்ட பத்தில் தனியே அமர்ந்திருந்தார். கவிசிங்க நாவலர் தினசரி வழக்கப்படி அரசருடன் அளவளாவ வந்து கொண்டிருந்தார். மண்டபத்தின் தளவரிசை மரப்பலகைகளால் அமைக்கப் பட்டிருந்தது. நாவலருக்குக் கண்கள் தெரியாதாகையால் அவர் தம் கைத் தடியால் மரப்பலகையின் மீது தட்டித்தட்டி நடந்து சென்றார். யானை வரும் பின்னே, மணியோசை கேட்கும் முன்னே என்பதற்கிணங்க, கைத்தடி ஓசையை உணர்ந்த அர சர், ”புலவர் அவர்களே! வரும்போது படி தட்டுகிறதோ?” என்று நகைத்தபடி கேட்டார்.
நாவலர் மனதில் அது வேறு எண்ணத்தைத் தோற்றுவித்தது. அவர் ஆசாரி எனும் பத்தர் குலத்தைச் சார்ந்தவர். ஆகையால் தம் குலத் தொழிலானப் படி தட்டுவதைக் குறித்துதான் மன்னர் தன்னைப் பரிகாசம் செய்கிறார் போலும் என நினைத்தார்.
உடனே தானும் அவருக்கு ஈடுகொடுத்துப் பரிகாசத்துடன் பதிலளித்து அவருடையக் குலத்தையும் குறிப்பிட வேண்டும் எனக் கருதி, “வேடிக்கையாக இருப்பினும் மரப் படிதானே! அது (இந்தச் சாதாரண மனிதனை) தட்டவே தட்டாது!” என்று ‘ர’கரத்தைச் சற்று அழுத்தி ஒலித்து “மறப்படி” எனும் ஓசை தோன்றுமாறு பதிலிருத்தார். இதில் மன்னர் அவர்கள் “மறவர்” இனத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லாமல் சொல்லிக் காட்டிவிட்டார், அல்லவா? அதையும் புரிந்து கொண்டுவிட்டார் மன்னர்.
அந்தச் சாதுரியப் பதிலைக் கேட்ட தேவர் சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து வந்து, நாவலருக்குக் கைலாகு கொடுத்து அழைத்துச் சென்றுத் தன் அருகில் அமர்த் திப் பாராட்டினார்.
பணத் தட்டு:
மற்றொரு சமயம் கவிஞரின் சொல்வன்மை, தமிழார்வம், கவி இயற்றும் புலமை ஆகியவற்றைப் போற்றிட நினைத்த மன்னர் அவருக்குத் தக்கப் பரிசு வழங்க விரும் பினார். ஆஸ்தான அதிகாரியிடம் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு நிரம்பிய வெள்ளித்தட்டு ஒன்றைக் கொண்டு வருமாறு பணித்தார். அவ்வாறே மங்கலப் பொருட்கள் நிரம்பிய வெள்ளித்தட்டு தேவரின் முன் வைக்கப்பட்டது. அதில் தான் அளிக்க நினைத்தப் பரிசுத் தொகையை வைத்துப் புலவரிடம் கொடுக்க எழுந்தார்.
அப்போது புலவர் அருகிலிருந்தக் கையேடு எழுதும் சீடன் (சிலர் தாங்கள் சொல் வதை ஏட்டில் பதிவு செய்துக் கொள்ள உதவியாளரை வைத்திருப்பர். இவர் கண் பார்வையற்றவராதலால் உதவி தேவைப்படுகிறது) மிகவும் மெதுவாக அவரிடம் குனிந்து ‘அது வெள்ளித் தட்டு,ஐயா!’ என்று சொன்னான். பரிசிலுடன் கூடியத் தட் டையும் தனக்கு மன்னர் அளிக்கிறார் எனும் மகிழ்ச்சியுடன் கையேந்திப் பெற்றுக் கொண்டார்.சம்பிரதாயப்படி பரிசை எடுத்துக் கொண்டு, தட்டைத் திருப்பிக் கொடுத்து விடுவார் என எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. பரிசுப் பொருளை எடுத்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டு வெள்ளித்தட்டைக் கையில் உயரப் பிடித்து, அவையினருக்குக் கேட்கும்படி,”பணத்தட்டு அரசருக்கா, நமக்கா?” என்று கேட்டார். அக்கேள்வி அனைவருக்கும் வியப்பளித்தது.
சிறிது நேரம் பதில் கூறத் தயங்கிய தேவர் பெருமான் நாவலரின் நோக்கத்தை ஒரு வாறு அனுமானித்துக் கொண்டவராகி, “பணத்தட்டு தங்களுக்கேதான்!” என்றார்.
பணத்தட்டு என்பதற்கு, “பணமுடை”, “செல்வக் குறைவு” எனவும் பொருள் கொள்ள லாம். செல்வச் செழிப்புள்ள வேந்தருக்கு ஏது பணமுடை? அது சாதாரண மனிதர் களுக்குத்தானே பொருந்தும்? இரு பொருள்படும் அச்சொல்லைப் புரிந்துகொண்ட தேவர், “பணத்தட்டு எமக்குத்தான்!” எனக் கூறத் தயங்கினார். ஒருவேளை அப்படிக் கூறியிருப்பாரேயானால், அது பொருத்தம் அற்றதாய் இருப்பது மட்டுமின்றி அவரை ஏளனத்திற்கும் உள்ளாக்கி இருக்கும்.
அரசரின் பதிலைக் கேட்டதும் மகிழ்ச்சியுற்ற நாவலர், வெள்ளித் தட்டைச் சீடனிடம் கொடுத்துப் பரிசுப் பொருள்களுடன் சேர்த்துக் கொள்ளுமாறு கூறினார்.
இருவரின் சாதுரியச் சொற்விளையாட்டை ரசித்து அனுபவித்த சபையினர் ‘ஆகா’ காரமிட்டு ஆரவாரித்தனர்.
ஈ வந்தது:
பின்னர் ஒருசமயம், நாவலர் அவர்கள் அன்னை திரிபுரசுந்தரி உடனுறை ஶ்ரீமகு டேஸ்வரர் அருளும் தலமும், சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடியத் தலமுமான ஈரோடு மாவட்டத்திலுள்ளக் கொடுமுடிக்குச் சென்றிருந்தார். அங்குத் தங்கியிருந்த போது அவ்வூரைச் சேர்ந்தத் தமிழ்ப் புலவர் இராசலிங்கக் கவிராயர் என்பவர் அவரைச் சந்திக்க வந்தார். இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், நாவலர் கவி ராயரை நோக்கி,”தங்கள் பெயர் யாதோ?” எனக் கேட்க மற்றவர்,” அடியேன் பெயர் இராசலிங்கம்!” என்று பெயரிலுள்ள முதற்சொல்லான ‘இ’கரத்தைச் சற்று அழுத்தியே உச்சரித்தார்.
அதைக் கேட்ட நாவலர்,”கவிராயரே! இங்கு ‘இ’(ஈ) எங்கே வந்தது? ராசலிங்கம் என்று சொன்னாலே போதுமே. உச்சரிக்கும் போது ‘இ’ மறைந்து நிற்பதுதானே வழக்கம்!” என்றார்.
அதற்குக் கவிராயர், “இருக்கலாம். ஆனால் இங்கு இடம், பொருள் பார்த்துதான் ‘இ’ வந்துள்ளது!” என்று பதில் சொன்னார்.
“தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்!” என வினவினார் நாவலர்.
“கூறுகிறேன், ஐயா! அது வேறொன்றுமில்லை. மாம்பழத்தைச் சுற்றி ‘இ’(ஈ) மொய்க் கத்தானே செய்யும்? அதிலிருந்து எழும் தமிழ் மணத்திற்கு ‘இ’(ஈ) வராமல் இருக்க முடியாதே! மாம்பழமாகியத் தங்களைச் சுற்றி இந்த ‘இ’ராமலிங்கம் வருவதில்என்ன அதிசயம்?” எனச் சாதுரியமாகப் பதிலுரைத்தார் கவிராயர்.
கூடியிருந்தோர் அவர்களின் பேச்சை ரசித்து மகிழ்ந்தனர்.
சாணம் போடு
இலக்கியச் சம்பாஷணையை முடித்துக் கொண்டதும் கவிராயர் நாவலரைத் தம் இல்லத்தில் விருந்துண்ண அழைக்க, நாவலரும் அங்குப் போய்ச் சேர்ந்தார். இருவ ரும் உணவு உட்கொண்ட பிறகு வெற்றிலைப் பாக்கு போடத் துவங்கினர். சாப்பிட்ட இலையை எடுத்ததும் உண்டஇடத்தைப் பசுஞ்சாணம் கொண்டு மெழுகித் துடைப்பது கிராமத்து வழக்கம். அதனால் கவிராயர் வீட்டுப் பெண்களைப் பார்த்து,”அம்மணிகளா! நாவலர் உண்ட இடத்தில் சாணமிடுங்கள்!” என்று கூறி நகைக்கவும் செய்தார்.
கவிராயரின் உட்பொருள் அடங்கியப் பேச்சு நாவலருக்குப் புரிந்துவிட்டது. “முறைவாசல் செய்வது, சாணமிடுவது வீட்டுப் பெண்களுக்கு இயல்புதானே! புதிதாகக் கூறுவது தேவையில்லாததும்,அதைக் குறித்துச் சிரிக்க வேண்டியதும் தவிர்க்கப் படவேண்டியதே!” என்று மனதில் சொல்லிக் கொண்டாலும், வெளிப் படையாக அப்பெண்களிடம் சொன்னார்: “ஆம், அம்மா! சாணத்தை வேறெங்கும் தப்பித்தவறிப் போட்டுவிடாதீர்கள்! ஐயா அவர்கள் சொன்ன இடத்திலேயே போடுங் கள்!” என்று சொல்லித் தானும் சிரித்தார்.
இவ்வுரையாடலில் உண்ட இடம் வாய் எனவும்,’நாவலர் வாயில் சாணம் போடு என்று கவிராயர் சொன்னதை மாற்றி, “சாப்பிட்ட இலை இருந்த இடத்தில் மட்டும் போடு, ஐயா சொன்னபடி வேறு எவ்விடத்தும் போடாதே!’’ எனவும் பொருள்படுமாறு பேசிக் கொண்டது அனைவரும் கேட்டுச் சுவைக்கும் பேச்சாக விளங்கியதைச் சொல் லவும் வேண்டுமோ?
இவ்வாறு நாவலரின் வாழ்க்கையில் எவ்வளவோ சுவையானப் பேச்சுகள் நிகழ்ந் துள்ளன. அவையெல்லாமே ஒவ்வொருவிதம்!.
–subham—
tags- மாம்பழக் கவி, சிலேடை, பணத் தட்டு, சாணம் போடு