
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,741
Date uploaded in London – 3 FEBRUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்தியாவின் ஒரு அபூர்வமான பிரதம மந்திரி!
ச.நாகராஜன்
இந்தியாவின் பிரதம மந்திரிகளின் வரலாற்றில் மிக அபூர்வமான பிரதம மந்திரி ஒருவர் இருக்கிறார்.
அவர் தனது தாயாரிடம் தான் பாரதத்தின் மத்திய அரசில் ஒரு முக்கியமான மந்திரி என்றே சொல்லவில்லை.
அவர் யார்?
லால் பகாதூர் சாஸ்திரிஜி!
அவர் ரயில்வே மந்திரியாக இருந்த போது தான் ரயில்வே மந்திரி என்பதைத் தன் தாயாரிடம் சொல்லவே இல்லை.
அவர் ரயில்வே மந்திரியாக இருந்த காலத்தில் முகல்சராயில் ஒரு ரயில்வே சம்பந்தமான பெரிய நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது.
அதில் கலந்து கொள்ள சாஸ்திரிஜி முகல்சராய் வந்து சேர்ந்தார்.
அவரது தாயாரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்.
தன் மகன் ரயில்வேயில் இருப்பதாகவும் ஆகவே அவன் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருப்பதாகவும் அங்கிருந்தோரிடம் சொன்னார்.
அங்கிருந்தோர், “சரி, அம்மா உங்களின் பையன் பெயர் என்ன?” என்று கேட்டனர்.
“லால் பகாதூர் சாஸ்திரி!”

இந்த பதிலைக் கேட்ட அவர்கள் திகைத்து பிரமித்து நின்றனர்.
சிலர், ‘அந்த அம்மா பொய் சொல்கிறார்’ என்றனர்.
“இல்லை, இல்லை, என் பையன் நிச்சயமாக இந்த நிகழ்ச்சிக்கு வந்தாக வேண்டும்” என்றார் அவர்.
சிலர் பரிதாபப்பட்டனர். அவர்களில் ஒருவர் அவரை அழைத்துக் கொண்டு மேடை அருகில் சென்றார்.
“இதில் யார் உங்கள் பையன்?” என்று கேட்டார்.
மிக்க மகிழ்ச்சியோடு லால்பகாதூரைச் சுட்டிக் காட்டிய அவரது தாயார், “அதோ, பாருங்கள், அவர் தான் எனது பையன்” என்றார்.
அனைவரும் திகைத்துப் போனார்கள்.
அவரை மரியாதையோடு மேடை மேல் அழைத்துச் சென்றனர்.
லால்பகாதூர் சாஸ்திரிஜியிடம் அவர்கள், “இவர் உங்கள் தாயாரா?” என்று கேட்டனர்.
“ஆம்” என்று நிதானமாக பதில் அளித்த அவர் சற்று ஆச்சரியப்பட்டார், தனது தாயாரை அங்கு பார்த்து!
பிறகு சிறிது நேரம் அவருடம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரை வீட்டிற்கு அனுப்பினார்.
அங்கு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் ஆச்சரியப்பட்டனர்.
அவர்கள் சாஸ்திரிஜியிடம். “அவரை இங்கேயே இருக்கச் செய்து உங்கள் உரையை நிகழ்த்தி இருக்கலாமே, அவரும் கேட்டிருப்பாரே, ஏன் அப்படிச் செய்யவில்லை?” என்று கேட்டனர்.
“நான் ஒரு மந்திரி என்பது எனது தாயாருக்குத் தெரியாது” என்றார் சாஸ்திரிஜி.
“நான் மந்திரி என்பது தெரிந்தால் பல பேருக்கு பரிந்துரை செய்ய ஆரம்பிப்பார். அதை என்னால் மறுக்க முடியாது. ஒருவேளை மறுத்தாலோ என் அம்மாவின் முரட்டுகுணத்திற்கு நான் ஆளாக வேண்டி வரும்” என்றார் அவர்.
அனைவரும் இப்படி ஒரு மந்திரியா என்று திகைத்தனர்; ஆச்சரியப்பட்டனர்!
அவருக்கு அரசு சார்பில் அரசாங்க காரியங்களுக்காகப் பயன்படுத்த ஒரு செவர்லட் இம்பாலா கார் அளிக்கப்பட்டிருந்தது.
ஒரு சமயம் அவரது மகன் அதைப் பயன்படுத்தி இருந்தார்; அது சாஸ்திரிஜிக்குத் தெரிய வந்தது.
உடனே தனது டிரைவரை அழைத்தார் சாஸ்திரிஜி.
“எவ்வளவு தூரம் தன் மகன் அதில் போனார்?” என்று கேட்டார்.
‘14 கிலோ மீட்டர்’ என்று பதில் வந்தது.
உடனடியாக டிரைவரிடம் அதை, “சொந்த காரியத்திற்காக” என்று எழுதச் சொன்னார்.
தனது தாயாரிடம் அதற்குரிய பணத்தைத் தனது அந்தரங்க செயலாளரிடம் கொடுக்குமாறு கூறினார் சாஸ்திரிஜி.
செயலாளரிடம் அந்தப் பணத்தை அரசு வங்கிக் கணக்கில் போடச் சொன்னார்.
இப்படி ஒரு அபூர்வமான பிரதம மந்திரியைக் கொண்டிருந்த அற்புத தேசம் தான் நமது தேசம்!
ஒரு சின்ன விஷயம்.

மரணமடைந்த பின்னர் பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டவர்களில் லால் பகாதூர் சாஸ்திரிஜி தான் முதலானவர்.
ஜெய் ஜவான்! ஜெய் கிஸான்!
***
tags— லால் பகாதூர் சாஸ்திரி