
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,748
Date uploaded in London – 5 FEBRUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தந்தையின் ஆணையை ஏற்று சொந்தத் தாயை பரசுராமர் கொல்லலாமா?
ச.நாகராஜன்
ப்ருகு மஹரிஷியின் குலத்தில் ஜமதக்னி என்ற மஹா தபஸ்வியான மஹரிஷி அவதரித்திருந்தார்.
அவர் ப்ரஸோஜித் என்ற அரசனின் கன்னிகையாகிய ரேணுகை என்னும் மஹா புண்ணியவதியை மணம் செய்து கொண்டார்.
மனமொத்த தம்பதிகள் நன்கு வாழ்ந்து வந்தனர்.
இல்லறத்தின் பயனாக ருமண்வா, ஸுஷேணன், வஸூ, விச்வாவஸூ, பரசுராமன் என ஐந்து புதல்வர்கள் பிறந்தனர்.
ரேணுகை ஒரு சமயம் குளிப்பதற்காக நதிக்குச் சென்றாள்,
அங்கு பத்மமாலையை அணிந்து மிகவும் அழகு பொருந்திய சித்திரன் என்னும் அரசன் பல பெண்களோடு ஜலகிரீடை செய்து கொண்டிருந்தான்.
அவனைக் கண்ட ரேணுகை மனதால் அவனை மோகித்தாள். ‘மனோமாத்திர வியபசாரம்’ என்னும் தோஷத்திற்கு ஆளானாள்.
ஆசிரமத்திற்கு அவள் திரும்பி வந்த போது அவளது தோஷத்தைத் தன் தபோ பலத்தினால் அறிந்த ஜமதக்னி மிகுந்த கோபமுற்றார்.
தனது நான்கு புதல்வர்களை அழைத்தார்.
இவளை வதம் செய்யுங்கள் என்றார்.
அவர்கள் தாயைக் கொல்ல மறுத்து விட்டனர். உடனே மஹரிஷி அந்த நான்கு புதல்வர்களையும் நோக்கி, “நீங்கள் அறிவிழதந்து பொம்மை போல ஆகக் கடவீர்கள்” என்று சாபம் கொடுத்தார். அவர்கள் அப்படியே ஆயினர்.
அப்போது தனது அநுஷ்டானத்தை முடித்துக் கொண்டு அங்கு வந்தார் பரசுராமர்.
தவத்தினால் அக்னி போல ஜ்வலித்த அவரை நோக்கிய ஜமதக்னி, “ மகனே! உன் அன்னையை வதம் செய்” என்றார்.
தனது தந்தை மஹா தபஸ்வி, பெரிய ஞானி என்பதை அறிந்திருந்த ஜமதக்னி அவர் ஒரு போதும் தர்மம் அல்லாத காரியத்தில் பிரவேசிக்க மாட்டார் என்று எண்ணி தனது தாயின் சிரசை வெட்டினார்.
உடனே ஜமதக்னி பரசுராமரின் பித்ரு வாக்கிய பரிபாலனத்தால் சந்தோஷம் அடைந்தார்.
“மகனே! உனது இந்த செய்கையால் சந்தோஷம் அடைந்தேன். உனக்கு வரம் தருகிறேன். விரும்பியதைக் கேள்” என்றார்.
பரசுராமர் உடனே, தனது தாய் உயிர் பெற்று எழுந்து வாழ வேண்டும் என்று வரம் கேட்டார். உடனே அவரது அன்னை உயிர் பெற்று எழுந்தாள்.
“இன்னொரு வரம் கேள், தருகிறேன்” என்றார் ஜமதக்னி.
“என் அன்னையை நான் வதம் செய்தது அவள் ஞாபகத்தில் இல்லாமல் போக வேண்டும். எனது அன்னையைக் கொன்ற பாவம் சிறிதும் எனக்கு இல்லாமல் போக வேண்டும். அத்தோடு எனது சகோதரர்கள் அறிவுடன் பழையபடி ஆக வேண்டும்” என்று வேண்டினார் பரசுராமர்.
அப்படியே நடந்தது.
பரசுராமரின் கீர்த்தி உலகெங்கும் உயர்ந்தது.
இந்த வரலாற்றை மஹாபாரதம் வனபர்வம், தீர்த்தயாத்ரா ப்ரகரணத்தில் விரிவாகக் காணலாம்.
குதர்க்கவாதிகளுக்கு வரும் சந்தேகம், “நாங்களும் இப்படிச் செய்யலாமா?” என்று.
பதில் : நீ பரசுராமர் போல தபஸ்வியாக இருந்து உனது தந்தை ஜமதக்னி போல இருந்து அன்னை ரேணுகை போல புண்ணியவதியாக இருந்தால அது பற்றி யோசிக்கலாம்” என்பதே.
அந்தக் காலத்தில் ரிஷி பத்னிகள் மனதால் கூட ஒரு சிறிதும் மற்றவரைத் தவறாக நினைக்காமல் இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறது இந்த வரலாறு.
பித்ரு வாக்ய பரிபாலனம் என்பது பரசுராமர் செய்தது, ஶ்ரீ ராமர் செய்தது ஆகியவற்றை நினைவூட்டுகிறது.
மிக சுலபமாக இந்த வரலாறை எழுதாமல் விட்டிருக்கலாமே, ஏன் இதை அப்படியே சொல்லி இருக்கின்றனர் என்றால் சத்தியம் எப்போதும் ஒளிரும் என்பதைச் சுட்டிக் காட்டவே தான்!
புராண, இதிஹாஸ, சாஸ்திரங்களை சரியானபடி தக்கவர் மூலமாகக் கேட்க வேண்டும்.
உள் ரகசியங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
***