
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,750
Date uploaded in London – 6 FEBRUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரத தேச ஜோதிடக் கலையை வியந்த ரொனால்ட் வைல்ட்!
ச.நாகராஜன்
பாரத ஜோதிடக் கலையை வியக்காதவர் யாருமே கிடையாது. இதற்கு மேலை நாட்டவரும் விலக்கல்ல.
லண்டனிலிருந்து வெளிவந்த ‘பீப்பிள்’ (People) பத்திரிகை, ரொனால்ட் வைல்ட் (Ronald Wild) என்பவரின் கட்டுரை ஒன்றை பிரதானமாக பிரசுரித்திருந்தது. அது பாரத ஜோதிடக் கலை பற்றிய கட்டுரை.
அதில் ரொனால்ட் வைல்ட் தெரிவித்த சில சுவையான செய்திகள்:
இந்திய ஜோதிடக் கலையை மதிக்காதவர்கள் கிடையாது. இந்தியாவில் உள்ள ராஜாக்கள் சிறந்த ஜோதிடரை அடிக்கடி கலந்தாலோசிப்பது வழக்கம்.
பண்டிட் ஹரேஷ்வர் என்று ஒரு சிறந்த ஜோதிடர் இருந்தார். பம்பாயில் அவர் வசித்து வந்தார். அவரை அனைவரும் கலந்து ஆலோசிப்பது வழக்கமாக இருந்தது.
நவநகர் மஹாராஜா (Maharaha of Nawanagar) பம்பாய்க்குச் செல்லும் போதெல்லாம் அவரைச் சந்தித்து ஜோதிடம் கேட்பது வழக்கம்.
மஹாராஜாவை அனைவரும் ரஞ்சி (Ranji) என்றே அறிவர்.
வயதானதன் காரணமாக ஹரேஷ்வர் ஜோதிடம் பார்ப்பதை விட்டு விட்டார்.
ஆனால் மஹாராஜாவுக்கு மட்டும் பார்ப்பதாக ஒத்துக் கொண்டார்.
ஜோதிடம் பார்க்கப் பல மாதங்கள் ஆயின.
ரஞ்சியின் இறுதிக் காலத்தில் அவரால் எல்லா வேலைகளையும் பழைய காலம் போலச் செய்ய முடியவில்லை. அவருக்கு வந்த கடிதங்கள் எல்லாம் பிரிக்கப்படாமலேயே கிடந்தன.
அவற்றில் ஒன்று பம்பாயிலிருந்து வந்த தந்தி. அது பிரிக்கப்படவே இல்லை.
கடைசி கடைசியாக ரஞ்சியின் நெருங்கிய உறவினர் பிரிக்கப்படாமல் இருந்த அந்த உறையைத் திறந்தார். அவர் தான் ரஞ்சிக்குப் பிறகு தற்போதைய மஹாராஜாவாக ஆகியிருந்தார்.
தந்தியில் அவர் கண்ட செய்தி இது:-
“உங்கள் மாரகம் உங்கள் ஜாதகத்திலிருந்து தெரிய வருகிறது. உங்களது மகுடம் சூடிய 25 வருட விழா நடந்த பிறகு சரியாக ஒரு வருடத்தில் உங்கள் மரணம் சம்பவிக்கும்.”
மஹாராஜா ரஞ்சியின் மகுடம் சூடிய வெள்ளி விழாக் கொண்டாட்டம் 1932ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
1933ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி காலை 5 மணிக்கு மஹாராஜா ரஞ்சி மரணமடைந்தார்.
அந்த உறையைத் திறந்து படித்தவர் தற்போதைய மஹாராஜா.
இப்போதைய ராஜாவான இளைய ரஞ்சியின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருந்தது. அவர் இந்தியாவில் இருப்பது ஆபத்தாக இருந்தது. அவர் மஹாராஜாவாக இருப்பாரா என்பதும் சந்தேகமாக இருந்தது.
ஆகவே அவர் தனது எதிர்காலத்தைச் சரியாக அறிய ஒரு சின்ன சோதனையைச் செய்தார்.
பண்டிட் ஹரேஷ்வர் பம்பாய்க்கு வெளியில் இருந்த ராஜாவின் பங்களாவிற்கு அழைக்கப்பட்டார்.
அவர் நான்கு ஆள்களைப் பார்த்தார். அவர்களுக்குப் பின்னால் ஒரு சேவகன் விசிறியை வைத்து வீசிக் கொண்டிருந்தான்.
நால்வரில் ஒருவர், “ஓ! பண்டிட்ஜி, எங்கள் நால்வரில் யார் மஹாராஜாவாக ஆகப் போகிறோம். சொல்லுங்கள்” என்றார்.
பண்டிட்ஜி அவர்களது பிறந்த தேதி, நேரம் முதலியவற்றைக் கேட்டறிந்தார். பின்னர் சிறிது நேரத்தில், “உங்கள் நால்வரில் யாருமே மஹாராஜாவாக ஆக முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“இதோ நிற்கும் இந்த சேவகனின் கையை நான் பார்க்கிறேன்” என்று கூறிய அவர் சேவகனின் கைரேகையைக் கூர்ந்து கவனித்தார்.
“ஆஹா! இவரே தான் மஹாராஜாவாக ஆகப் போகிறார். அது மட்டுமல்ல, அவர் இன்னொரு துறையிலும் பிரகாசிக்கப் போகிறார். அது விளையாட்டுத் துறை. அதிலும் இவர் பிரகாசிப்பார்” என்றார் பண்டிட்ஜி.
சேவகனாக நின்று சோதனையை நடத்திய இளைய ரஞ்சி வியந்து போனார்.
பண்டிட்ஜியை கௌரவித்தார். அவர் கூறியபடியே தான் எல்லாம் நடந்தது.
*
இங்கிலாந்திலும் கூட ஜோதிடர்களுக்குத் தனி மதிப்பு இருந்தது.
16,17ஆம் நூற்றாண்டுகளில் அவர்கள் பெரிதும் கௌரவிக்கப்பட்டனர்.
முதலாம் சார்லஸ், க்ராம்வெல் ஆகியோர் ஜோதிடர்களைக் கலந்தாலோசித்தே எதையும் செய்து வந்தனர்.
லார்டு கர்ஸானிலிருந்து பலரும் ஜோதிடர்களைக் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ததில்லை.
உலகப் போர் நடக்கப்போவதை முதலில் கணித்து அறிவித்தவர்கள் பாரத ஜோதிடர்களே.
ஐந்து பெரிய தேசங்கள் நான்கு வருடங்கள் இந்தப் போரில் ஈடுபடும் என்று கூறிய அவர்கள் ஐந்து பெரிய தேசங்களில்இங்கிலாந்தைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டனர்.
ஐந்தாம் ஜார்ஜின் மரண தேதி மிகத் துல்லியமாக பல ஜோதிடர்களாலும் கணிக்கப்பட்டு சொல்லப்பட்டது.
பூகம்பங்கள், வெள்ளங்கள், புயல்கள் என அனைத்தையும் வருடா வருடம் ஜோதிடர்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
அதன்படியே அனைத்தும் நடந்தது.
இப்படி முக்கிய விஷயங்களை ரொனால்ட் வைல்ட் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
மஹாராஜா ரஞ்சியின் விஷயம் அவரால் நேரடியாகப் பார்க்கப்பட்ட ஒரு விஷயம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்தக் கட்டுரை பற்றி ஆங்கில வார இதழான ‘ட்ரூத்’ எழாம் தொகுதியில் 5-5-1939ஆம் தேதியிட்ட இதழில் குறிப்பிட்டிருந்தது.
இதன் மறு பிரசுரம் 78ஆம் தொகுதியில் 35ஆம் இதழில் 10-12-2010 இதழில் வெளி வந்தது.
**
நன்றி : Truth weekly Kolkata, Issue Dated 10-12-2010