முருகனுக்கு நாமம் சாற்றினார்; நம்மை என் செய்வாரோ? (Post No.11,756)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,756

Date uploaded in London –  8 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முருகனுக்கு நாமம் சாற்றினார்; நம்மையும் என் செய்வாரோபுலவரின் பயம்!

 ச.நாகராஜன்

கவிஞர்களும் பெரும் கவிஞராகத் திகழ்ந்தவர் மு.ரா.அருணாசலக் கவிராயர்.

 சேற்றூர் சமஸ்தான வித்வானாக இருந்த முகவூர் வேளாள குலத்தினராகிய இராமசாமிக் கவிராயரின்  மூத்த புதல்வர் இவர்.

கொல்லம் ஆண்டு 1027இல் (கி.பி.1852) விரோதிகிருது வருடம் பங்குனி மாதம் பிறந்தவர்.

திருவாவாடுதுறை ஆதீனம் இரண்டாவது சந்நிதானமாகிய ஶ்ரீலஶ்ரீ நமசிவாய தேசிக சுவாமிகளிடம் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றவர். 25 வருடங்கள் சிவகாசியில் வசித்தவர்.

மதுரை தமிழ்ச்சங்கத்தில் நூல் பரிசோதகராகப் பணியாற்றியவர். தமிழ்ச்சங்க வித்வான்களில் ஒருவராக இருந்தார்.

சிவகாசி தலத்து விஸ்வேஸ்வரரையே தனது முழுமுதல் தெய்வமாகக் கொண்டு சிவகாசிப் புராணம், பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறைத்திரிபந்தாதி, வெண்பா அந்தாதி, கலிவிருத்த அந்தாதி, மாலை ஆகியவற்றை இயற்றிப் பாடியவர்.

இது மட்டுமின்றி, திருசெங்கோட்டுத் திரிபந்தாதி, திருப்பரங்கிரி முருகர் பிள்ளைத் தமிழ், சேறைத்தவம்பெற்றநாயகி பிள்ளைத்தமிழ், இராமேச்சுரம் பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ், குறுக்குத்துறைச் சிலேடை வெண்பா, அரிமழம் மீனாட்சி சுந்தரேசர் பதிகம், மீனாட்சியம்மை பதிகம், பழநியாண்டவர் பதிற்றுப் பத்தந்தாதி, ஶ்ரீ ஆறுமுக நாவலர் சரித்திரம் ஆகிய நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.

ஆங்காங்கே சென்ற ஊர்களில் சமயத்திற்கேற்றவாறு பல தனிப்பாடல்களையும் சமத்காரமாக இயற்றியவர் இவர்.

திருச்செந்தூர்ப் புராண வசனம், திருப்பரங்கிரிப் புராண வசனம், திருக்குற்றாலத் தல புராண வசனம், புதுவைப் புராணச் சுருக்க வசனம், சிவகாசி மான்மிய வசனம் ஆகிய வசன நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

இத்துடன், சிவ ரகசியம், பாவநாசத் தல புராணம், கம்பராமாயணம் ஆரணியகாண்ட உரை, புதுவைத் தல புராணம், கன்னியாகுமரித் தல புராணம் முதலிய நூல்களையும் பரிசோதித்து அச்சிட்டு வெளியிட்டவர்.

திருவாவடுதுறை ஆதீன வித்துவான் சுப்பிரமணியக் கவிராயரும் மதுரை விவேகபானு பத்திரிகையின் அதிபர் கந்தசாமிக் கவிராயரும் இவருக்குப் பின்னர் பிறந்த சகோதரர்களாவர் (தம்பிகள் ஆவர்).

இவர் சிறந்த முருக பக்தர்.

திருப்பதி திருத்தலமானது வேங்கடாஜலபதி கோவில் கொண்டுள்ள தலம் என்று சொல்லப்படுவதை இவர் மனம் ஒப்பவில்லை.

குன்று என்றாலேயே அது முருகனுக்குரிய இடம் என்பதில் இவர் திட நம்பிக்கை கொண்டவர்.

இப்பொது திருப்பதி என்று நாம் வழங்கும் வட வேங்கடத் தலத்திற்கு இவர் சென்றார்.

பாடினார் இப்படி:

வடவேங் கடமலையில் வாழ்முருகா நிற்குந்

திடமோங்கு நின்சீர் தெரிந்து – மடமோங்க

நாமத்தைச் சாற்றினார் நம்மையுமென் செய்வாரோ

காமுற்றிங் காரிருப்பர் காண்

வட வேங்கட மலையில் குடி கொண்டிருக்கும் முருகா, உன் சீர் தெரிந்து உனக்கு நாமத்தைச் சாற்றி விட்டார்கள். என்னையும் என் செய்வார்களோ?! இங்கு யார் இருப்பர் என்று அச்சத்துடன் பாடினார் கவிராயர்.

அதுமட்டுமல்ல, இன்னொரு பாடலையும் பாடினார்:

உருமாறிப் பேர்மாறி யோர்புலவன் பின்போய்

மருவு மொருவெண்பா வாங்கு – முருகவுனக்

கித்தனைதுந்ன் பெற்றுக்கின் றெத்தனைவெண் பாவேண்டும்

அத்தனைக்கு மென்னவருள் வாய்

முருகன் ஒரு புலவர் பின்னால் சென்று வெண்பா பெற்ற வரலாறை ஏற்கனவே ஒரு கட்டுரை வாயிலாகப் பார்த்திருக்கிறோம்.

உனக்கு இத்தனை துன்பம் ஏனோ? எத்தனை வெண்பா வேண்டும், அத்தனையையும் நான் பாடுகிறேன், அதற்கு அருள்வாயாக என்று வேண்டிப் பாடினார் கவிராயர்.

திருப்பதி பற்றிய விவாதம் நீண்ட கால விவாதம். ஆனால் ஒரு புலவர் இப்படிப் பாடலில் பதிவு செய்தது இந்தப் பாடலில் தான்.

அருணகிரிநாதர் திருவேங்கடம் குறித்து நான்கு பாடல்களை அருளியுள்ளார்.

‘கறுத்த தலை’ எனத் தொடங்கும் பாடலில் ‘குகைவழி வந்த மலைச்சிகர வடமலை நின்ற பெருமாளே’ என்று வடவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும்  முருகனைப் பாடி இருக்கிறார்.

அத்துடன், வெள்ளிக்கிழமைகளில் வில்வம் கொண்டு திருப்பதி மூலவருக்கு அர்ச்சனை செய்யப்படுவது உள்ளிட்ட பல காரணங்கள் இது முருகன் உறையும் திருத்தலம் என்ற வாதத்தை  முன் வைக்கின்றன.

ஆனால் பின்னொரு காலத்தில் இது வைணவத் திருத்தலமாக ஆகி விட்டது என்று சொல்லப்படுகிறது.

எது எப்படியானாலும் வெங்கடாஜலபதியின் அருள் பெற்று பல கோடிப் பேர்கள் தம்தம் குறைகள் தீரப்பெற்று முன்னேறி செல்வத்துடன் வாழ்வதை நேரடியாக இன்றும் பார்க்க முடிகிறது.

தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளும் திருத்தலமும் இதுவே தான் என்பதில் ஐயமே இல்லை!

***

குறிப்பு :-

அன்பர்கள் tamilandvedas.com திரு பா.கண்ணன் அவர்கள் எழுதிய அருணகிரிநாதரின் மூன்று புதிர்களுக்கு விடை என்ற கட்டுரையில் மேலதிக விவரங்களைப் படித்து மகிழலாம்.

கட்டுரை எண் 9301 வெளியான தேதி 23-2-2021

tags– அருணாசலக் கவிராயர்., முருகனுக்கு நாமம்

Leave a comment

2 Comments

  1. S Govindaswamy

     /  February 8, 2023

    வெங்கடசுப்பிரமணியன் வெங்கடசுப்பு வெங்கடசுப்பம்மா என்பன தெலுங்கு ப்ராம்மணப்
    பெயர்கள்.

  2. Santhanam Nagarajan

     /  February 9, 2023

    மாமாவும் மருமகனும் கலந்தனரோ! அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு. இது தான் என் கட்சி!
    thanks for your information
    நாகராஜன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: