
Post No. 11,770
Date uploaded in London – – 4 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
எனது இந்தியப் பயணத்தின் ஓரு பகுதி, பார்க்காத கோவில்களைப் பார்ப்பதாகும். குல தெய்வமான வைதீஸ்வரன் கோவிலையும், ஒரு காலத்தில் நாங்கள் கண்ணாமூச்சி விளையாட்டு (Hide and Seek game) விளையாடிய மீனாட்சி கோவிலையும் (Madurai) மட்டும் என்றும் மறவோம். எத்தனை முறை வாய்ப்பு கிடைத்தாலும் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
புதிய கோவில்களின் விஜயத்தின் ஒரு பகுதியாக, சென்னைக்கு அருகிலுள்ள சிறுவாபுரி பால சுப்ரமண்ய சுவாமி கோவிலுக்குப் போனோம். நல்ல தரிசனம் கிடைத்தது. எல்லா வகை அபிஷேகங்களையும் கண்டு களித்தோம். இது அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் என்பதால் சுமார் 600, 700 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கவேண்டும். கோவில் மிகவும் சிறியதுதான் .
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு முருகன் விக்ரகம் வள்ளியை அணைத்துக்கொண்டு இருக்கும் செப்புத் திருமேனி ஆகும். கோவிலில் வைத்துள்ள பலகைகளில் சிறுவா புரி முருகன் மீது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்களை பொறித்து வைத்துள்ளனர்.. மேலும் என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற போர்டும் வைத்துள்ளார்கள் . இந்தக் கோவிலில் செவ்வாய்க் கிழமைகளிலும் முருகனுக்குரிய விழா தினங்களிலும் நீண்ட வரிசை இருக்குமாம். மணிக் கணக்கில் வரிசையில் நின்றால் தான் தரிசனம் கிடைக்குமாம். நல்ல வேளையாக மாணவ மாணவிகளுக்கு பரீட்சை அடக்கும் பிப்ரவரியில் நாங்கள் சென்றதால் முருகன் எங்களைச் சோதிக்கவில்லை .
இந்த அழகிய கோவிலில் ஸ்ரீ அண்ணாமலை (சிவன்) மற்றும் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் ஆகியோரும் உள்ளனர். முருகனுக்கு முன்னால் மயில் வாகனம் கற்சிலையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது
ஒரு திருப்புகழில் வேண்டுவன வெல்லாம் தரும் முருகன் என்ற வரி வருகிறது. அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் எனது உறவினர் விஷயத்திலேயே அற்புதங்கள் நடந்தன.
ஒரு பெண் வெளிநாட்டில் வேலை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காக ஏழு வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்தார். ஐந்தாவது வாரத்தில் அவருக்கு வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் உத்தரவுக் கடிதம் வந்துவிட்டது.
மற்றோர் உறவினருக்குத் திருமணம் ஆகி, நீண்ட நாட்களுக்குக் குழந்தை பிறக்காததால் வேண்டிக்கொண்டு விரதம் இருந்தார். ஏழு வாரங்களுக்கு முன்னதாகவே அவர் கர்ப்பவதி ஆனார்.
இந்த இரண்டு விஷயங்களையும் என் கார் டிரைவருடன் பேசிக்கொண்டே வந்தேன். அவரும் அதை ஆமோத்தித்து ஒரு விஷயத்தைச் சொன்னார் . வழக்கமாக ஒருவாடிக்கையாளரை அவரது டாக்சியில் அழைத்துச் செல்வாராம். அவரை இந்த முருகனை , வரப்ப்ரசாதியான கடவுள் என்று புகழ்ந்துவிட்டு உனக்குக் குழந்தை இருக்கிறதா என்று கேட்டாராம். கல்யாணமாகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்றவுடன் சிறுவாபுரி முருகனைத் துதித்து விரதம் இருக்கச் சொன்னாராம். அவரும் அப்படியே செய்ய, அவருக்கும் குழந்தை பிறந்தது. அதுமட்டுமல்ல மார்ச் 2ம் தேதி , அதிகாலை 5 மணிக்கு என்னை சென்னை விமான நிலையத்துக்கு ஏற்றிச் செல்ல வந்த போது , ஸார் , ஒரு குட் நியூஸ் ; என மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார் என்றார் . இறங்குகையில் அதிகாலை வேளையில் நல்ல செய்தி சொன்னீர்கள் என்று சொல்லிவிட்டு கூடவே 200 ரூபாய் கொடுத்து வாழ்த்தும் தெரிவித்தேன். எங்களை கோவிலுக்கு அழைத்துச் சென்ற புண்ணியம் என்று நினைத்தேன்.
· வீடு, நிலம் வாங்க நினைப்பவர்கள்.
· தொடர்ந்து ஆறு செவ்வாய் கிழமை வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.
இந்தக் கோவில் பெரம்பூரிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அங்கிருந்து நாங்கள் ஒரே மணி நேரத்தில் போய்ச் சேர்ந்தோம். இது தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அந்தக் கோவில் தரிசனத்தை முடித்துக் கொண்டு பெரிய பாளையம் பவானி அம்மன் கோவிலுக்கும் சென்று வந்தோம் . இந்தக் கோவிலுக்கும் சிறுவருக்குமென்ன தொடர்பு இருக்கிறது என்று வியப்போருக்கு ஒரு கதையும் இருக்கிறது ; இதைக் கோவிலில் எழுதியும் வைத்துள்ளனர் :
இதோ கோவில் பலகையில் கண்ட விஷயம் :
இராம பிரானின் மகன்களான குசன், லவன் என்ற இரண்டு சிறுவர்களும் ராம பிரானுடன் போரிட்டு வெற்றி பெற்ற தலம் ஆதலால் சிறுவர் +அம்பு+ எடு = சிறு வரம்பெடு, என்றும் சிறுவம்பெடு , சிறுவாபுரி , ‘சிறுவை’யென்றும் பெயர் வந்துள்ளது. அழகு மயிலில் ஆடி வந்து , அருணகிரியாருக்கு முருகன் காட்சி அளித்த இத்தலத்திற்கு நான்கு திருப்புகழ் பாடல்கள் உள்ளன. புது வீட்டில் குடியேற விரும்புவோர், சிறுவாபுரி திருப்புகழை ஓதி , சிறுவாபுரி முருகனைத் தரிசித்து, மரகதக் கல்லில் மாட்சியுடன் விளங்கும் மயிலையும், மற்ற மூர்த்திகளையும் வழிபட்டு, வாழ்வில் சொந்த வீட்டில் மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் பெறலாம் என வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அருளாசி வழங்கியுள்ளார் .
இதோ சிறுவாபுரி கோவில் பற்றி அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்கள்:-

Number 1
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram from kaumaram.com
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
பிணிக ளான துயரு ழன்று …… தடுமாறிப்
பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி
பிடிப டாத ஜனன நம்பி …… யழியாதே
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
நளின பாத மெனது சிந்தை …… யகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
நலன தாக அடிய னென்று …… பெறுவேனோ
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
பொருநி சாச ரனைநி னைந்து …… வினைநாடிப்
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்பு னைந்த …… முருகோனே
சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்
சிலையி ராம னுடனெ திர்ந்து …… சமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
சிறுவை மேவி வரமி குந்த …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
பிறவியான சடமிறங்கி … இந்தப் பிறப்புக்கு என்று ஏற்பட்ட
உடலிலே புகுந்து,
வழியிலாத துறைசெறிந்து … நல்வழி இல்லாத வேறு வழிகளிலே
நெருங்கிப்போய்,
பிணிகளான துயருழன்று தடுமாறி … நோய் முதலிய துக்கங்களின்
வேதனையுடன் தடுமாறி,
பெருகு தீய வினையி னொந்து … பெருகும் கெட்ட வினைகளினால்
கஷ்டப்பட்டு,
கதிகடோறும் அலைபொருந்தி … இவ்வாறு பிறப்புக்கள் தோறும்
அலைச்சல் அடைந்து,
பிடிபடாத ஜனன நம்பி யழியாதே … பிறவியின் உண்மைத்தன்மை
ஏதும் புலப்படாத இந்தப் பிறப்பையே நம்பி அழிந்து போகாமல்,
நறைவிழாத மலர்முகந்த … தேன் நீங்காத மலர்கள் நிரம்பியதும்,
அரிய மோன வழிதிறந்த … அருமையான மெளன வழியைத் திறந்து
காட்டுவதுமான
நளின பாத மெனது சிந்தை யகலாதே … உனது தாமரைப்
பாதங்கள் என் மனத்தை விட்டு நீங்காமல்,
நரர் சுராதிபரும்வணங்கும் … மனிதர்களும், தேவர் தலைவர்களும்
வணங்குகின்ற
இனிய சேவை தனைவி ரும்பி … இனிமையான உன் தரிசனத்தை
விரும்பி
நலனதாக அடிய னென்று பெறுவேனோ … நன்மை அடையும்
பாக்கியத்தை யான் என்று பெறுவேனோ?
பொறிவழாத முநிவர் … ஐம்பொறிகளும் தவறான வழியில் போகாமல்
காத்திருந்த நக்கீர முனிவர்
தங்கள் நெறிவழாத பிலனு ழன்று … (குகையில் அடைபட்டாலும்)
தமது நித்திய அநுஷ்டானங்களை தவறாமல் நின்று காத்த குகையிலே
மன அலைச்சலுற்று,
பொருநிசாசரனைநினைந்து வினைநாடி … குகையில்
அகப்பட்டவர்களை எல்லாம் கொல்லவிருந்த ராட்சசனை* வெல்ல
நினைந்த நக்கீரர் உய்யும் வழியை நாடியபோது,
பொருவிலாமல் அருள்புரிந்து … ஒப்பில்லாத அன்பு வழியிலே
கிருபை கூர்ந்து,
மயிலினேறி நொடியில் வந்து … உன் மயில் மீது ஏறி ஒரு நொடிப்
பொழுதில் வந்து,
புளக மேவ தமிழ்புனைந்த முருகோனே … புளகாங்கிதம்
கொள்ளுமாறு மிக்க மகிழ்ச்சி கொண்டு, (நக்கீரரை குகையினின்று மீட்டு)
திருமுருகாற்றுப்படை என்ற தமிழ் மாலையைப் புனைந்த முருகனே,
சிறுவராகி யிருவர் … சிறுவரான லவ, குசர் என்னும் ஸ்ரீராமரின்
புதல்வர்கள் இருவரும்
அந்த கரிபதாதி கொடுபொருஞ்சொல் … அந்த யானைப்படை,
காலாட்படை இவற்றைக் கொண்டு, போரில் வீர வாசகங்களுடன்
சிலையிராமனுடனெதிர்ந்து சமராடி … வில் ஏந்திய ஸ்ரீராமருடன்
எதிர்த்துப் போர் செய்து,
செயமதான நகர் அமர்ந்த … வெற்றி பெற்ற நகரமாகிய சிறுவையில்**
அமர்ந்த,
அளகை போல வளமிகுந்த சிறுவை மேவி … குபேரப்பட்டினம்
போல வளப்பம் மிக்கதான சிறுவையில் வீற்றிருந்த,
வரமி குந்த பெருமாளே. … வரங்களை நிரம்பத் தரும் பெருமாளே.
* குதிரை முகத்தைக் கொண்ட ஒரு பெண் பூதத்தினின்றும் நக்கீரரை
முருகன் காத்த வரலாறு.
** சிறுவைத்தலம் சென்னை – ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே
7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் ‘சிறுவரம்பேடு’. ‘லவ – குசர்’ ஆகிய
சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.
Xxxx
Number 2
சீதள வாரிஜ பாதாந மோநம
நாரத கீதவி நோதாந மோநம
சேவல மாமயில் ப்ரீதாந மோநம …… மறைதேடுஞ்
சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம
தேவர்கள் சேனைம கீபாந மோநம …… கதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோராந மோநம
பாரினி லேஜய வீராந மோநம …… மலைமாது
பார்வதி யாள்தரு பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம
பாலகு மாரசு வாமீந மோநம …… அருள்தாராய்
போதக மாமுக னேரான சோதர
நீறணி வேணியர் நேயாப்ர பாகர
பூமக ளார்மரு கேசாம கோததி …… யிகல்சூரா
போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக …… முருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
மாநில மேழினு மேலான நாயக …… வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் …… பெருமாளே.
Xxxx
Number 3
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி …… வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய …… முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே.
(தேவர்களின் மனம் மிகக் களிப்படையும்படி அருள்செய்து, காளியுடன் நடனமாடுகின்ற சிவபெருமான் மகிழ்ச்சி அடைய, விநாயகனும், உமாதேவியும் மிகக் களிப்படைய,பூமியில் உள்ளோரும், முநிவர்களும், எட்டுத்திசையில் உள்ளோரும், இந்திரனும், பிரமனும் எதிரே நின்று கண்டு களிக்க,லக்ஷ்மியுடன் திருமாலும் தம்மகிழ்ச்சியை இன்பமாகக் கூற,வலிமையான மயிலுடன் ஆடி என்முன் நீ வரவேண்டும்.
தாமரை போன்ற கண்களை உடையவனே,தேவர்கள் வளர்த்த மகள் தேவயானையின் மணவாளனே, அறிவு நிறைந்த மெய்ஞ்ஞானியே, உயர்ந்த புயங்களை உடையவனே,பொங்கிய கடலுடன், கிரெளஞ்சமலையையும் பிளவுபடச் செய்து,ஏழு மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்த, பொன்னொளி பரப்பிச் சுடர் வீசும் கூரிய வேலாயுதனே,குளிர்ந்த முத்துமாலையை அணிந்த மார்பனே,செம்பொன்னின் அழகு நிறைந்த உருவத்தோனே,நல்ல தமிழில் மிகுந்த நேசம் கொண்ட முருகேசப் பெருமானே,எப்போதும் உன் அடியார்களின் சிந்தையிலே குடிகொண்ட, குளிர்ந்த சிறுவைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.)
Xxx
வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
காத லின்பொருள் மேவின பாதகர்
வீணில் விண்டுள நாடிய ரூமைகள் …… விலைகூறி
வேளை யென்பதி லாவசை பேசியர்
வேசி யென்பவ ராமிசை மோகிகள்
மீது நெஞ்சழி யாசையி லேயுழல் …… சிறியேனும்
மால யன்பர னாரிமை யோர்முனி
வோர் புரந்தர னாதிய ரேதொழ
மாத வம்பெறு தாளிணை யேதின …… மறவாதே
வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி
யேவி ரும்பி வினாவுட னேதொழ
வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் …… களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி
நாட கம்பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி …… யுமைகாளி
நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ
காம சுந்தரி யேதரு பாலக
நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக …… முருகேச
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
மாநி லங்களெ லாநிலை யேதரு
ஆய னந்திரு வூரக மால்திரு …… மருகோனே
ஆட கம்பயில் கோபுர மாமதி
லால யம்பல வீதியு மேநிறை
வான தென்சிறு வாபுரி மேவிய …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள்
மேவின பாதகர் … வேல் இரண்டு என்று கூறும்படியான நீண்ட
கண்களை உடைய விலைமாதர்கள் ஆசையுடன் பொருளை விரும்பும்
பாதகிகள் ஆவர்.
வீணில் விண்டு உ(ள்)ள நாடியர் ஊமைகள் விலை கூறி
வேளை என்பது இ(ல்)லா வசை பேசியர் … வந்தவரிடம் வீணாகப்
பகைத்து உள்ளத்தை ஆராய்பவர். ஊமைகள் போல இருப்பவர்கள். விலை
பேசி வாதாடி, நேரம் என்பது இல்லாமல் பழிப்புச் சொற்களைப் பேசுபவர்.
வேசி என்பவராம் இசை மோகிகள் மீது நெஞ்சு அழி
ஆசையிலே உழல் சிறியேனும் … பரத்தையர் எனப்படும் இவர்கள்
இசையில் ஆசை கொள்பவர். இத்தகைய விலைமாதர்கள் மீது மனம்
கசிதலுற்று அழியும் ஆசையில் திரிகின்ற சிறியேனும்,
மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்தரன்
ஆதியரே தொழ மா தவம் பெறு தாள் இணையே தினம்
மறவாதே … திருமால், பிரமன், சிவனார், தேவர்கள், முனிவர்கள்,
இந்திரன் முதலானோர் தொழும்படியான பெரிய தவத்தைப் பெற்ற
உனது இரு திருவடிகளை நாள் தோறும் மறக்காமல்,
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி
வினாவுடனே தொழ … நல் வாழ்வைத் தரவல்ல சிவ போகத்தை
விளக்கும் சிறந்த நூல்கள் கூறிய வழியையே நான் விரும்பி ஆராய்ச்சி
அறிவுடன் தொழுது,
வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே … வாழும்
வரத்தைத் தருவாயாக. அடியேனுடைய வருத்தங்களை நீக்கி
அருள்வாயாக.
நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி
பூரணி … நீல நிற அழகி, இளமை வாய்ந்தவள், பச்சை நிறம் உடையவள்,
கூத்துக்கள் பல நிகழ்த்தும் நாரணி, நிறைந்தவள்,
நீடு பஞ்சவி சூலினி மாலினி உமை காளி … சிறந்த ஐந்தாவது
சக்தியாகிய அனுக்கிரக சக்தி, திரி சூலத்தைத் தரித்தவள், மாலையை
அணிந்தவள், உமையவள், காளி,
நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக …
அன்பர்கள் அருகில் விளங்கி உதவும் குருக்கத்திக் கொடி போன்றவள்,
சிவகாம சுந்தரி ஆகிய பார்வதி ஈன்ற குழந்தையே,
நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச … கங்கை
நீர் தங்கும் சடையை உடைய சிவபெருமான் பெற்ற குருவாகிய
முருகேசனே,
ஆலில் நின்று உலகோர் நிலையே பெற மா நிலங்கள் எல்லா
நிலையே தரு ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே …
ஆல் இலையில் இருந்தபடியே உலகத்தில் உள்ளவர்கள் நிலை பெற்று
வாழவும், பெரிய கிரகங்கள் எல்லாம் நிலைத்து இயங்கவும் காக்கின்ற
இடையர் குலத்தோன், நமக்கு உரிய திருவூரகம்* என்னும் தலத்தில்
விளங்கும், திருமாலின் மருகனே,
ஆடகம் பயில் கோபுர மா மதில் ஆலயம் பல வீதியுமே
நிறைவான … பொன் போல விளங்கும் கோபுரம், பெரிய மதில்கள்,
கோயில், பல வீதிகளும் நிறைந்துள்ள
தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே. … அழகிய சிறுவாபுரியில்**
வீற்றிருக்கும் பெருமாளே.
* சிறுவாபுரியில் உள்ள திருமாலுக்கு ‘திருவூரகப் பெருமாள்’ என்று பெயர்.
—- subham —-
Tags- சிறுவாபுரி, பால சுப்ரமண்ய சுவாமி, கோவில் , அருணகிரிநாதர் , திருப்புகழ்,