
YOU CAN SEE THE PARROT AT THE TOP NEAR YALI
Post No. 11,772
Date uploaded in London – – 5 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாடல்பெற்ற தலம் திருமீயச்சூர் ஆகும். இது பேரளத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நாங்கள் கும்பகோணத்திலிருந்து காரில் (பிப்ரவரி 2023) சென்றோம். மிகவும் குறுகலான பாதை. ‘திரு’ என்ற அடைமொழியே பாடல் பெற்ற தலம் என்பதைக் காட்டிநிற்கிறது. இந்தக் கோவிலில் மேக நாதர் என்ற பெயரில் சிவன் குடிகொண்டுள்ளார். பல சிறப்புகளை உடைய கோவில் இது. இங்குதான் லலிதா சஹஸ்ராமம் உருவாகியது ; மேலும் ரத்தனக் கால் போட்டு அம்மன் லலிதாம்பிகை அமர்ந்துள்ளார்.
நாங்கள் சிவன் சந்நிதியில் தரிசனம் செய்துவிட்டு வலம் வந்தோம். அங்குள்ள பட்டர் எங்களை விரட்டிக்கொண்டு ஓடிவந்தார். “பாருங்கள், பாருங்கள் ! கோவில் விமானத்தின் மீது கிளி அமர்ந்து இருக்கிறது” என்றார். பல கோவில்களில் கிளிகள் பறந்து செல்வதைக் கண்டுள்ளேன். ஆகையால் எனக்கு அது பெரிதாகப்படவில்லை. ஆயினும் அந்தக் கிளி கொஞ்ச நேரத்துக்கு அமைதியாக அங்கேயே அமர்ந்து இருந்ததை தெளிவாகக் கண்டு ரசித்தோம். அதன் சிறப்பை பட்டர் விளக்கினார்.
பக்தர்களின் வருகையையும் அவர்களது வேண்டுகோளையும் கிளி போய் அம்மனிடம் சொல்லும் என்ற ஐதீகம் அங்குள்ளதாகவும் , இது அபூர்வமாகவே நிகழும் என்றும், ஆகையால் இப்போது என்ன என்ன எல்லாம் வேண்டு மோ அதை எல்லாம் வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் பகர்ந்தார் . நாங்களும் அதைக்கேட்டுபி பிரமித்துப் போய் வேண்டியதெல்லா வற்றையும் மானஸீகமாகப் பட்டியலிட்டோம். பின்னர் லலிதாம்பிகை சந்நிதிக்குள் நுழைந்தோம் . பட்டருக்கு ஏற்கனவே தட்சிணை கொடுத்துவிட்டோம். ஆகையால் அவர் காசு வாங்க அப்படிச் சொல்லவில்லை. “நம்பினார் கெடுவதில்லை ; இது நான்கு மறைத் தீர்ப்பு. அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்” (பாரதியார் சொன்னது)
கொலுசு அதிசயம்
இந்த மேக நாதர் கோவிலில் லலிதாம்பிகை சன்னிநிதியில் அகத்திய முனிவருக்கு , ஹயக்ரீவர் , லலிதா சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தார் என்பதால் இந்த இடம் மிகவும் புகழ் பெற்றது ; அபூர்வமான மந்திரச் சொற்கள் அடங்கிய லலிதா சஹஸ்ரநா மத்தை தினமும் கோடிக் கணக்கானோர் உல கின் பல பகுதிகளில் இன்றும் வாசித்து வருகின்றனர் . (எனது மனைவி சமைக்கத் துவங்கியவுடன் , சமையல் அறையிலிருந்து இது ஒலித்துக்கொண்டே இருக்கும்).
அம்மன் லலிதாம்பிகை , உட்கார்ந்த நிலையில் , வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டவாறு அமர்ந்துள்ளார். இங்கு பக்தர்கள், பல வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக அம்மனுக்குக் கொலுசு போட வேண்டிக் கொள்கிறார்கள் . எங்களுடன் வந்த ஒருவர் இது பற்றி விளக்கமாகக் கேட்டார். பட்டரும் பின்னர் அலுவலக ஊழியரும் இது பற்றி விளக்கமாகச் சொன்னார்கள்.

11 அல்லது பதினொன்றரை அங்குல வெள்ளி அல்லது தங்கக் கொலுசு கொண்டுவரவேண்டும் என்றும் வரி செலுத்தப்பட்ட ரசீது சகிதம் வந்தால்தான் அதைக் கோவில் ஏற்கும் என்றும் பெரும்பாலும் இந்நிகழ்ச்சி காலையில் 10 மணி அளவில் தொடங்கி 3, 4 மணி நேரம் நீடிக்கும் என்றும் , மூன்று நாட்களுக்கு முன்னரே போன் செய்து கோவிலில் Booking புக்கிங் செய்வது அவசியம் என்றும் விளக்கினார்கள். கட்டணம் பற்றிக் கேட்டபோது அம்மனுக்கும் சிவனுக்கும் சேர்த்து அபிஷேகம் செய்ய ரூபாய் 5000-க்குள் என்றும் ஒருவருக்கு மட்டும் அபிஷேக ஆராதனை செய்ய அதில் சரி பாதித் தொகை என்றும் விளக்கினார்கள். பிரசாதமும் இதில் அடக்கம்
அம்மனின் சொரூபம் அற்புதமான காட்சி. வாசனை மிகுந்த குங்குமப் பிரசாதம், அங்குள்ள தெய்வீக சூழ்நிலையை மேலும் உயர்த்திக் காட்டியது.. வளையல்களையும் பக்தர்கள் , அம்மனுக்குக் கொடுக்கிறார்கள். எங்களுக்கு நிறைய கண்ணாடி வளையல்களும் குங்குமத்தோடு கிடைத்தன. சென்னை, முதலிய இடங்களில் விநியோகித்த பின்னர் 4 வளையல்களுடன் லண்டனுக்கு வந்து சேர்ந்தேன்
சூரியன் பெற்ற சாபத்தை நீக்க இங்கு சூரியன் வழிபட்டதால், மீய்ச்சூர் , என்ற பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லுவார்கள். சம்பந்தரால் பாடப்பெற்றதால் இந்தக் கோவில், குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்கு சான்று கிடைக்கிறது. கோவில் பிரகாரத்தில் அற்புதமான சிவலிங்கங்கள் காட்சி தருகின்றன.
கோவிலுக்குள் கோவில் அமைந்த இடம் இது. உள்ளுக்குள் உள்ளது இளம் கோயில் எனப்படுகிறது. ஆகவே இரண்டு தலங்களை த் தரிசித்த புண்ணியமும் கிடைக்கிறது .
பிரகாரத்தில் திருமால் வடிவம் தாங்கிய சிலை கும்பிடும் நிலையில் இருக்கிறது. அதற்கு எதிரே குபேர லிங்கம்! திருப்பதி பாலாஜி , குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்கத்தான் நிறைய பணத்தை பக்தர்களிடமிருந்து ஆகர்ஷிக்கிறார் என்ற கதை அனைவரும் அறிந்ததே. எப்போதும் அபய ஹ ஸ்தத்துடன் அருள்பாலிக்கும் பெருமாள், இங்கு பவ்யமாக கைகூப்பி நிற்பது அவர் வாங்கிய கடனை அடைக்க கும்பிடு போட்ட நிலையில் நிற்பது சாலப் பொருத்தமே.

கோவிலில் உள்ள அனைத்து சிலைகளும் நல்ல, அழகிய முறையில் செதுக்கப்பட்டுள்ளது. மாலை வெய்யிலில் கூட்டமே இல்லாத நிலையில் தரிசனம் செய்தது மன அமைதியை அளித்தது. உற்சவ நாட்களிலும், அம்மனுக்கு உரிய வெள்ளிக்கிழமை முதலிய நாட்களிலும் கூட்டம் நெருக்கித் தள்ளுமாம். கோவிலுக்கு வெளியே உள்ள பூக்கடைகளும் படக்கடைகளும் இதற்குச் சான்று பகர்கின்றன
சூரியன், அவனது தேரோட்டியை அவமதித்த காரணத்தினால் சபிக்கப்பட்டு கருமை நிறம் அடைந்ததால், இதைப் போக்க இங்குள்ள சிவனை வழிபட்டார் என்ற கதையைக் கேட்ட போது , 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப் புள்ளிகள் (Sun Spots 11 year cycle) அதிகரிக்கும் என்ற விஞ்ஞான உண்மையைத்தான் இப்படிச் சொல்கின்றனரோ என்ற எண்ண அலைகள் என் மனத்தில் பாய்ந்தன .
அனைவரும் தரிசிக்க வேண்டிய அற்புதக் கோவில் இது
இறைவர் : முயற்சி நாதர், மேகநாதர்
இறைவியார் : சௌந்திரநாயகி, சுந்தரநாயகி, லலிதாம்பாள்
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்
யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள “கஜப்ரஷ்ட விமானம்” மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன. ராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்ட கோவில்.
சித்திரை மாதத்தில் ஏழு நாட்களுக்கு மேக நாதர் சந்நிதிக்குள் சூரிய ஒளி புகும். அக்காலத்தில் சூரியனே சிவபெருமானைப் பூஜிக்கிறார் என்றால் மிகையாகாது

இதோ திருஞானசம்பந்தர் பதிகம்
பாடல் எண் : 1
காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப்
பாயப் படர்புன் சடையில் பதித்த பரமேட்டி,
மாயச் சூர்அன்று அறுத்த மைந்தன் தாதைதன்
மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.
பொழிப்புரை :அழகிய உடலை உடைய காமனைக் காய்ந்து, கங்கையை விரிந்த புன்சடையிற் பாயுமாறு செய்து, பதித்த பரமேட்டியும் சூரபன்மன் மாயும்படி அழித்த முருகப்பெருமானின் தந்தையும் ஆகிய சிவபிரானது மீயச்சூரைத் தொழுது வினையைத் தீர்த்தொழியுங்கள்.
பாடல் எண் : 2
பூஆர் சடையின் முடிமேல் புனலர், அனல்கொள்வர்,
நாஆர் மறையர், பிறையர், நறவெண் தலைஏந்தி
ஏஆர் மலையே சிலையாக் கழிஅம்பு எரிவாங்கி
மேவார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே.
பாடல் எண் : 3
பொன்நேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்,
மின்நேர் சடைகள் உடையான், மீயச் சூரானைத்
தன்நேர் பிறர்இல் லானைத் தலையால் வணங்குவார்
அந்நேர் இமையோர் உலகம் எய்தற்கு அரிதுஅன்றே.
பாடல் எண் : 4
வேக மதநல் லியானை வெருவ உரிபோர்த்துப்
பாகம் உமையோடு ஆகப் படிதம் பலபாட
நாகம் அரைமேல் அசைத்து நடம் ஆடியநம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.
பாடல் எண் : 5
விடைஆர் கொடியார், சடைமேல் விளங்கும் பிறைவேடம்,
படைஆர் பூதஞ் சூழப் பாடல் ஆடலார்,
பெடைஆர் வரிவண்டு அணையும் பிணைசேர் கொன்றையார்
விடைஆர் நடைஒன்று உடையார் மீயச் சூராரே.
பாடல் எண் : 6
குளிரும் சடைகொள் முடிமேல் கோலம் ஆர்கொன்றை
ஒளிரும் பிறைஒன்று உடையான் ஒருவன், கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன்,
மிளிரும் அரவம் உடையான் மீயச் சூரானே.
பாடல் எண் : 7
நீல வடிவர், மிடறு நெடியர், நிகர்இல்லார்,
கோல வடிவு தமதுஆம் கொள்கை அறிவொண்ணார்,
காலர், கழலர், கரியின் உரியர், மழுவாளர்,
மேலர், மதியர், விதியர், மீயச் சூராரே.
பாடல் எண் : 8
புலியின் உரிதோல் ஆடை, பூசும் பொடிநீற்றர்,
ஒலிகொள் புனல்ஓர் சடைமேல் கரந்தார், உமைஅஞ்ச
வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே.
பாடல் எண் : 9
காதில் மிளிரும் குழையர், கரிய கண்டத்தார்,
போதில் அவனும் மாலும் தொழப்பொங்கு எரிஆனார்,
கோதி வரிவண்டு அறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.

பாடல் எண் : 10
கண்டார் நாணும் படியார், கலிங்கம் உடைபட்டைக்
கொண்டார், சொல்லைக் குறுகார், உயர்ந்த கொள்கையார்
பெண்தான் பாகம் உடையார், பெரிய வரைவில்லா
விண்டார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே.
பொழிப்புரை :கண்டவர் நாணும்படியாக ஆடையின்றித் திரியும் சமணர், கலிங்கமாகிய பட்டாடையை உடுத்த தேரர் ஆகியோர் கூறுவனவற்றை உயர்ந்த சிவநெறிக் கொள்கையர் குறுகார். திருமீயச்சூர் இறைவர் பெண்ணைப் பாகமாக உடையவர். பெரிய மலையாகிய வில்லால் பகைவரின் முப்புரங்களை எரித்தவர்
பாடல் எண் : 11
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்
பாடல் ஆய தமிழ் ஈர்ஐந்து மொழிந்து, உள்கி
ஆடும் அடியார் அகல்வான் உலகம் அடைவாரே.
பொழிப்புரை :பற்பல வடிவங்களைக் கொண்டருளிய பெருமான் உறையும் திருமீயச்சூரை விரும்பும் புகழார்ந்த புகலி ஞானசம்பந்தன் அருளிய பாடலாகிய தமிழ் ஈரைந்தையும் மொழிந்தும் நினைத்தும் ஆடும் அடியவர் அகன்றவானுலகை அடைவர்.
–subham–
Tags- திருமீயச்சுர் , லலிதாம்பிகை, லலிதா சஹஸ்ரநாமம் , சிவன் ,கோவில், கொலுசு, வளையல் , மேகநாதர்