
Post No. 11,778
Date uploaded in London – – 7 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

பிப்ரவரி 2023-ல் திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்களுக்கு விஜயம் செய்தேன். திருப்பாம்புரத்தில் சிவன் மீதும், அம்மன் மீதும் ஏழரை அடி , எட்டு அடிப் பாம்புகள் வந்து அவற்றின் சட்டைகளை மாலையாக அணிவித்துச் சென்றதை நேற்று கண்டோம் .
திருநாகேஸ்வரம் மற்றோர் பரிகார தலம். ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டு , பலனை அடைகிறார்கள். இது ஒரு சிவன் கோவில்.
திருநாகேஸ்வரம் கோவில் கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
சுவாமியின் திரு நாமம் – சண்பகாரண்யேஸ்வரர் , நாகநாதசுவாமி
ஒரு காலத்தில் இந்த இடம் சண்பக மரங்கள் நிறைந்த வனம் ஆக இருந்தது
அம்மனுக்கு இரண்டு சந்நிதிகள் உண்டு
தேவியின் திருநாமம் – குன்றாமுலைநாயகி , கிரி குஜாம்பிகை
கிரி குஜாம்பிகை சந்நிதி தனியே உள்ளது. சுதையால் ஆன உருவம் ஆதலால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.
பிறையணிவாள் நுதல் அம்மை என்ற பெயருடைய தேவியின் கருவறையில் கார்த்திகை மாத சந்திரன் ஒளி புகும்.
இறைவன் சந்நிதியில் சங்க நிதி, பதும நிதி, மகா சாஸ்தா விக்கிரகங்களும் இருக்கின்றன .
XXXX

கோவில் மிகவும் பெரியது. நான்கு புறங்களும் கோபுரங்கள் உடையது . சூர்ய புஷ்கரணி இங்குள்ள திருக்குளம் ஆகும். தேவாரப்பாடல் பெற்றதால் குறைந்தது 1500 ஆண்டு பழமை உடைத்து. ஆதித்ய சோழன் காலத்திலிருந்து வரலாறு உடையது. சேக்கிழாரும், கோவிந்த தீட்சிதரும் போற்றிய தலம் இது .
சந்திரனும் சூரியனும் , ஐந்து தலை நாகமும் இங்கே பூஜித்ததாக ஐதீகம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியார் சகிதம் தரிசனம் தருகிறார்.
ராகு பகவானுக்கு உள்ள தனி சந்நிதியில் மனித முகத்துடன் ராகு காட்சி தருவது வியப்பான விஷயம். ஏனெனில் பொதுவாக பாம்பு முகத்துடன்தான் ராகு சிலைகள் இருக்கும். ராகு காலத்தில் இங்கு பாலாபிஷேகம் செய்தால் திருமணத் தடைகள், குடும்பச் சண்டைகள், குழந்தை பிறவாமை முதலிய பிரச்சினைகள் தீருமாம் .
(தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரையாகும்.(FROM WIKIPEDIA))
XXX
இங்கு சேக்கிழாருக்கு சந்நிதி இருப்பதுடன் ஆண்டுதோறும் சேக்கிழார் விழாவும் நடைபெறுகிறது
பெரிய புராணத்தை அருளிய சேக்கிழார், அவரது தம்பி பாலறாவாயர், தாயார் அழகாம்பிகை இங்கே உள்ளனர். சேக்கிழாரின் ஊர் சென்னையில் பூவிருந்தவல்லிக்கு அருகிலுள்ள குன்றத்தூர் ஆகும் . அங்கு சிவபெருமானுக்கு கோவில் கட்டி, அந்தக் கோவிலுக்கு திருநாகேஸ்வரம் என்றே பெயர் சூட்டினார். அவ்வளவு அன்பு இக்கோவிலின் இறைவன் மீது.
அங்கிருந்து அரை மைல் தூரத்தில் உள்ள நத்தம் என்ற இடத்தில் சிறிய குன்றின்மேல் சுப்ரமண்யர் ஆலயமும் கீழே சேக்கிழார் கோயிலும் உள்ளன.
XXX

நரேந்திர மோடி, நச்சினார்க்கினியர், ஐந்து தலைப் பாம்பு
திருநாகேஸ்வரம் தேவாரம் —
சம்பந்தர் , அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப்பட்ட தேவார பதிகங்கள் நிறைய தகவல்களைத் தருகின்றன .
கச்சைசேர் அரவர் போலுங்
கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும்
பேரரு ளாளர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி
இரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர் போலும்
நாக ஈச்சரவ னாரே. 1 —அப்பர்
தமிழ் இலக்கியத்தில் அதிகமாக உரை எழுதிய பார்ப்பனன் நச்சினார்க்கினியன். மதுரை நகர பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர் உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியன் என்று போற்றப்பட்டவர் . அவருடைய நாமம் இந்த அப்பர் பாட்டில் வருகிறது.
XXX
மோடி= துர்கா தேவி
போகமார் மோடி கொங்கை
புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும்
வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும்
பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும்
நாகஈச் சரவ னாரே. 8
5 தலை நாகம் = ஐந்து புலன்கள்
கொக்கரை தாளம் வீணை
பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும்
ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும்
மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும்
நாகஈச் சரவ னாரே. 9
XXXX

தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்
தலையவனை மலையவனை உலக மெல்லாம்
ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை
அழலவனை நிழலவனை அறிய வொண்ணா
மாயவனை மறையவனை மறையோர் தங்கள்
மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற
தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. 1 — அப்பர், ஆறாம் திருமுறை
XXXX
பாடல் எண் : 1
நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு நாகேச் சரவரே.– அப்பர், ஐந்தாம் திருமுறை
XXX
1)
அரையினில் பாம்பை அணிகிற ஐயன் அவன்தாளை
விரைமலர் கொண்டு பணிகிற பத்தர் வினைபோக்கிக்
கரையினில் சேர்த்துக் கருணைசெய் ஈசன் கடிதேகும்
நரைவிடை ஏறும் நலம்தரும் நாகேச் சரத்தானே.– சம்பந்தர் தேவாரம்
ஆதி சேடன் அன்று போற்ற அருள்செய்தான்
பாதி உடலைப் பார்வ திக்குப் பரிந்தீந்தான்
ஓதித் தொழுவோர் உள்ளத் துள்ளே உறைகின்ற
நாதி ஆவான் நலம்செய் நாகேச் சரத்தானே.– சம்பந்தர் தேவாரம்
TO BE CONTINUED……………………………..
TAGS– திரு நாகேஸ்வரம் , ராகு, பரிகார தலம் , சேக்கிழார் , நீல நிறம் , தேவாரம், மோடி, நச்சினார்க்கினியர்