WRITTEN BY S NAGARAJAN
Date uploaded in London – 8 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்திய சிற்பக் கலை!
ச. நாகராஜன்
உலகில் உள்ள அனைத்து நாடுகளின் சிற்பக்கலையை எடுத்து ஒரு ஆய்வை மேற்கொண்டோமானால் அதில் சிறந்து விளங்குவது பாரத தேசத்தின் சிற்பக் கலையே என்பது தெரிய வரும்.
ஆயிரக் கணக்கான கோவில்கள் பாரத தேசமெங்கு பரவி நிறைந்துள்ளன.
கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்கள் கலை நேர்த்தியுடனும் அறிவியலின் இன்றைய தொழில்நுட்பத் திறனை உள்ளடக்கியும் அமைக்கப்பட்டிருப்பது பிரமிப்பைத் தரும்.
எடுத்துக் காட்டாக மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள அறிவியல் ரீதியிலான ஒலி அமைப்பை உள்ளடக்கிய திறனைக் கூறலாம்.
அக்னி புராணம், சிற்பி தனது கலையை உடனே உருவாக்கி விட முடியாது என்று உறுதி படக் கூறுகிறது.
ஒரு சிற்பத்தை வடிவமைப்பதற்கு முன்பாக முதல் நாள் இரவு அந்த சிற்பி உள்ளார்ந்து இறைவனை வழிபட வேண்டும் என்று அது கூறுகிறது.
“இறைவனுக்கு இறைவனே! எனது மனதில் உள்ளதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை எனது கனவில் வந்து தெரிவி” என்று ஒரு சிற்பி வேண்டிக் கொள்ள வேண்டும் என்று அது வழி வகை கூறுகிறது.

ஹைதராபாத்திற்கு 60 மைல் தொலைவில் உள்ளது அஜந்தா. இதன் புகழை அறியாதவர் இருக்க முடியாது.
எல்லோராவில் உள்ள கைலாஸ் ஆலயம் பற்றி மும்பை ஆர்ட் காலேஜின் முதல்வராக இருந்த சாலமன் என்பவர் (ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில்) எழுதுகையில் கூறுகிறார் இப்படி:
“கைலாஸர் ஆலயத்தில் உள்ள பெரும் சிற்ப வேலைப்பாடுகள் அனைத்து ஹிந்து தெய்வங்கள், தேவதைகளைச் சித்தரிக்கிறது.
சுவர்க்கத்தில் உள்ள தேவதைகள் அங்கு சுவர்களில் மிதக்கின்றனர்.”
அடுத்து மைசூரில் உள்ள சோமநாத்புர ஆலயத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளைப் பார்த்து வியந்த யாத்ரீகர் ‘Through Town and Jungle’
என்ற தனது புத்தகத்தில் சோம்நாத்புர ஆலயத்தின் கோபுரத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் மனதை ஈர்க்கிறது என்றும் ஒவ்வொரு சிற்பமும் அநேக வடிவமைப்புகளையும் சிற்ப நேர்த்தியையும் கொண்டுள்ளது என்றும் கூறி வியக்கிறார்.
ஹாவல் (Havell) என்ற எழுத்தாளர் தனது “Indian Architechture” என்ற நூலில் ஹிந்து கட்டிடக் கலை விற்பன்னர்கள் மட்டும் இல்லையெனில் ஒரு தாஜ்மஹாலோ அல்லது ஜும்மா மஜ்ஜித்தோ அல்லது மோடி மஜ்ஜித்தோ சிறப்புற இப்படி உருவாக சாத்தியமே இல்லை என்கிறார்.
ஹிந்து சிற்பிகளின் மேதையையும் புத்திகூர்மையையும் ஐரோப்பிய மற்றும் முகலாயர்கள் தங்களது மதத்தின் சிறப்பை உயர்த்திக் காட்டப் பயன்படுத்தியுள்ளனர் என்பது அவரது கூற்று.
அராபிய யாத்ரீகரான அல்பெரூனி ஹிந்து தேசத்தைப் பற்றிப் பாராட்டுவது ஒவ்வொருவரையும் வியக்க வைக்கும். தனது கூரிய பார்வையையும் தனது யாத்ரீக அனுபவத்தையும் அடிப்படையாக வைத்து அவர் வியந்து கூவுகிறார் இப்படி : “Our people when they see them, wonder at them and are unable to describe them much less to construct anything like them”

“நமது மக்கள் இவற்றைப் பார்க்கும் போது வியப்பு மேலிட, அவை போல அமைப்பது ஒரு புறம் இருக்கட்டும்,
அவற்றை விளக்கக் கூட முடியாமல் இருக்கிறார்கள்.”
கஜினியைச் சேர்ந்த சுல்தான் மஹம்மது மதுராவை அழித்த பிறகு தனது கஜினி கவர்னருக்கு எழுதினான் இப்படி: “இது போன்ற இன்னொரு அமைப்பு இன்னும் இருநூறு ஆண்டுகளானாலும் அமைக்கப்பட முடியாது!”. அவன் மதுரா நகரின் புகழுக்குக் காரணமான லக்ஷக்கணக்கான பக்தர்களைப் புகழ்ந்து ‘லக்ஷக்கணக்கான’ என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகிறான்.
இப்படி பாரத தேசத்திற்கு வந்த யாத்ரீகர்களின் பார்வையையும் மேலை நாட்டு ஆய்வாளர்களின் ஆய்வையும் தனியாக எடுத்துத் தொகுத்து அலசி ஆராய்வோமானால் நமது தேசத்தின் சிற்பக் கலையின் பெருமை வர்ணனைக்கு அப்பாற்பட்டது என்பதை உணர முடியும்!
இப்படிப்பட்ட சிற்பக்கலையின் மகோன்னதத்தை உணராதவர்கள் நாம் என்பதை வருத்தத்தோடு உணர்வதோடு மட்டுமல்லாமல், இதைப் பாராட்டி வியந்து நமது சந்ததியினருக்கு இந்த மாபெரும் உண்மையைத் தெரியப்படுத்த தவறியவர்களாகவும் நாம் இருக்கிறோம் என்பதையும் சோகத்தோடு சொல்லவும் வேண்டும்.
இந்த நிலையை மாற்ற ஒவ்வொருவரும் முயன்று அனைவருக்கும் நமது புகழோங்கிய நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும்.
வாழிய பாரதம்! வளர்க அதன் கலைகள்!
***