
Post No. 11,779
Date uploaded in London – – 8 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

நாகேஸ்வரன் = பாம்பு ஈஸ்வரன் என்பது சிவ பெருமானின் திரு நாமங்களில் ஒன்று . 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்று நாகேசம். அது தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ளது .
.தமிழ்நாட்டில் குடந்தையிலும் நாகேஸ்வரன் குடிகொண்டுள்ளார்.
பிப்ரவரி 2023 இந்தியப் பயணத்தில் கும்பகோணத்திலுள்ள நாகேஸ்வரன் கோவிலுக்கும் சென்றுவந்தோம். முன்னதாக திருப்பாம்புரம், திரு நாகேஸ்வரம் தலங்களைத் தரிசித்தோம்.
இன்று நாகேஸ்வரர் கோவிலை தரிசிப்போம்
கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் பாடல்பெற்ற க்ஷேத்திரங்களில் ஒன்று. அப்படியானால் குறைந்தது 1500 ஆண்டுப் பழமை உடையது. இந்தக் கோவிலை நரகாசுரன், சூரியன் ஆகியோர் பூஜித்ததாக கோவில் வரலாறு சொல்லும். அதை மெய்ப்பிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மூன்று நாட்களில் சூரிய கிரணங்கள், மூலவர் சிலை மீது விழுகிறது. பல கோவில்களில் கர்ப்பக் கிரகத்துக்குள் சூரிய ஒளி புகும் வண்ணம் பிரம்மாண்டமான கோபுரங்களை எழுப்பிய தமிழர்களின் பொறியியலைக் கண்டு வியக்காதோர் எவருமில்லை . சில கோவில்களில் சந்திரனின் ஒளியும் இவ்வாறு விழுகிறது; அற்புதத்திலும் அற்புதம். இது இந்துக்களின் வானவியல் அறிவுக்கும் சான்று பகர்கிறது .

இந்தக் கோவில் அப்பர் பெருமானால் தேவார பாடலில் போற்றப்படுகிறது. அவர் இந்தக் கோவிலைக் குறிப்பிட்டு பாடுகையில் குடந்தைக் கீழ்க்கோட்டம் என்று சொல்லுவதால் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதிக்கு இருந்த பெயரையும் நாம் அறிய முடிகிறது. இது வில்வத்தில் தோன்றிய லிங்கம் என்ற நம்பிக்கையும் உளது (ஒருவேளை, வில்வ மரக் காட்டில் தோன்றியதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் சொந்தக் கருத்து ; இதே போல சூரிய ஒளி விழுவதால் சூரியன் பூஜித்த தலம் என்கிறார்கள் போலும்!)
சிவனின் திருநாமம் – நாகேஸ்வரர்
அம்மனின் திருநாமம்- பெரிய நாயகி
இந்தப் பெயருக்கு ஏற்றவாறு பெரிய கோபுரங்களை உடையது இந்தக் கோயில்.
தல மரம் – வில்வம்
தீர்த்தம் : சிங்கமுக தீர்த்தம். தீர்த்தக் கிணற்றில் படிகள் இறங்கிச் செல்ல வேண்டும்; இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன.
xxx
சிற்பக் கலைச் சிறப்பு – சூரிய ரதம்

இந்தக் கோவிலின் நடராஜ மண்டபம் , ஒரு தேர் போலவும் அதை 2 குதிரைகளும் 4 யானைகளும் இழுப்பது போலவும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இது சூரிய தேவன் ஆகும். இதைப் பார்த்தவுடன் கொனாரக்கிலுள்ள சூரிய ரதம் நினைவுக்கு வரும். குடந்தை ரதத்தில் பிரமாண்டமான சக்கரத்தைக் காணலாம். அதன் 12 ஆரங்கள் 12 ராசிகள் ஆகும். இந்த நடராஜ மண்டபத்தில் நட ராஜன் டான்ஸுக்கு / நடனத்துக்கு சிவகாமி அம்மை தாளம் போடுகிறார்; விஷ்ணு மியூசிக் Music தருகிறார்; அதாவது குழல் Flute ஊதுகிறார்.
‘அறம் வளர்த்தாள் தாளம் ஏந்த நடம்புரியும் சித்திரப் பொற் பொது உடையான் கோலம் போற்றி, என்று குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் பாடியதற்கு ஏற்ப அமைந்த சிலை வடிவோ என்னும்படி மிக்க அழகாக இருந்தது என்று வேங்கடம் முதல் குமரி வரை என்ற நூலில் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமே.
மகாமக உற்சவத்தின் போது இந்தக் கோவில் மூர்த்தியும் மகாமக குளத்திற்கு தீர்த்தவாரிக்குச் செல்லுவார்.
Xxx
‘பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்‘
‘பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்‘ என்னும் மகான்; புதர் மண்டிக்கிடந்த இத் திருக்கோயிலைச் சீர்த்திருத்தித் திருப்பணிகள் செய்வித்து 1923-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார். ராஜகோபுரம், மேற்குக் கோபுரம், நடராஜ சபை, சுற்றுச் சுவர்கள், சிங்கமுக தீர்த்தக்கிணறு முதலிய திருப்பணிகள் அவரால் செய்யப்பட்டவை. இதற்காக இம் மகான், தம் கழுத்தில் பித்தளைச் சொம்பு ஒன்றை உண்டிக் கலயமாகக் கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சையெடுப்பது போல நிதி திரட்டினார் .
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவ்வாலயத்தின் உட்பிரகாரத்தில் ஆறுமுகப் பெருமானின் சந்நிதி உள்ளது. ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது தேவியர் இருவருடன காட்சி தருகிறார்.

xxxxx
அப்பர் தேவாரம் – ஆறாம் திருமுறை (Please go to thevaram.org for full meaning)
பாடல் எண் : 1
சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
சொற்பொருளுங் கடந்த சுடர்ச் சோதி போலும்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் தோளர் போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர் போலும்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
பாடல் எண் : 2
கானல்இளங் கலிமறவ னாகிப் பார்த்தன்
கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்
ஆனல்இளங் கடுவிடையொன் றேறி யண்டத்
தப்பாலும் பலிதிரியும் அழகர் போலும்
தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்
செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்
கூனல்இளம் பிறைதடவு கொடிகொள் மாடக்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
பாடல் எண் : 3
நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்
நிலாஅலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறலைத்த சடைமுடியும் அம்பொன் தோளும்
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையர் போலும்
ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலும்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே-3

Ratha/ Chariot at Hampi
பாடல் எண் : 4
தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்
சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி
மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே- 4
பாடல் எண் : 7
காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்
கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்
சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்
பாரிலங்கு புனல்அனல்கால் பரமா காசம்
பரிதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலும்
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
பாடல் எண் : 8
பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து
திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
பாடல் எண் : 10
ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
யிப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே

Ratha/ Chariot at Konark
பாடல் எண் : 11
செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்
தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்
நெறிகொண்ட குழலியுமை பாக மாக
நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்
மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீழிட்டுக்
குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
–subham—
TAGS- குடந்தைக் கீழ்க்கோட்டம் , கும்பகோணம், நாகேஸ்வரர் கோவில், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், கல் ரதம் , பெரியநாயகி , சூரிய ஒளி, கர்ப்பக்கிரகம் , அப்பர் தேவாரம்
.