
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,784
Date uploaded in London – 9 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கிருஷ்ண சைதன்யரின் தியாகம்!
ச.நாகராஜன்

கிருஷ்ண சைதன்யரின் கிருஷ்ண பக்தியைப் பற்றிக் கேள்விப் படாதவர் இருக்க முடியாது.
இளமையில் இவர் நிமாயி என்றே அறியப்பட்டார்.
நவத்வீபத்தில் இவர் வாழ்ந்து வந்தார்.
மிகப் பெரும் அறிவாளியான இவர் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார். பதினாறே வயதில் இலக்கணத்தைக் கற்றுத் தேர்ந்த பின் அவர் நியாய சாஸ்திரத்தைக் கற்க ஆரம்பித்தார்.
அதில் தேர்ந்த பின் அதைப் பற்றிய ஒரு நூலை எழுத ஆரம்பித்து முடித்தார்.
அவரது இளமைப் பருவ நண்பராகவும் வகுப்பில் இணைந்து படித்தவராகவும் இருந்தவர் பண்டிட் ஶ்ரீ ரகுநாதர்.
அவரும் பேரறிஞர். அவரும் நியாய சாஸ்திரம் பற்றிய ஒரு நூலை எழுதலானார்.
ரகுநாதருக்கு நிமாயியும் நியாய சாஸ்திரம் பற்றி ஒரு நூல் எழுதியது தெரிய வந்தது.
நிமாயி எழுதிய நூலை அவர் பார்க்க விரும்பினார்.
ரகுநாதர் தனது விருப்பத்தை நிமாயியிடம் கூறினார்.
மறு நாள் வகுப்பிற்குச் செல்லும் போது தனது நூலை எடுத்து வந்தார் நிமாயி.
அக்கரைக்குச் செல்ல இருவரும் படகில் அமர்ந்தனர்.
நிமாயி தனது நூலை எடுத்து ரகுநாதருக்கு வாசித்துக் காண்பிக்க ஆரம்பித்தார்.
பொருள் செறிவும் சொற் செறிவும் நிறைந்த அந்த நூலைக் கேட்ட ரகுநாதர் ஓவென்று அழ ஆரம்பித்தார்.
அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நிமாயி, “ரகுநாதரே! என்ன ஆயிற்று? எதற்காக அழ வேண்டும் இப்படி?“ என்று வியப்புடன் கேட்டார்.
“எனது நியாய சாஸ்திரம் நூலைப் படித்தவர்கள் இது மட்டுமே நியாய சாஸ்திரத்தில் ஒப்பற்ற நூல் என்று சொல்வார்கள் என்று இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் நூலைக் கேட்டவர்கள் இதை சீண்டக் கூட மாட்டார்களே! எனது நம்பிக்கை சிதைந்து வீணாகி விட்டதே! அதை நினைத்து வருந்தி அழுதேன்” என்று மனம் திறந்து வெளிப்படையாகத் தான் அழுத காரணத்தை ரகுநாதர் விளக்கினார்.
“அட, இந்த சின்ன விஷயத்திற்காகவா அழுகை?” என்று கேட்ட நிமாயி கடகடவென்று சிரித்தார்.
ரகுநாதருக்கு ஒன்றும் புரியவில்லை.
“இதோ இந்த நூல் எனது நண்பருக்கு இப்படி ஒரு வேதனையைத் தரும் என்றால் அது தேவையற்ற ஒன்று தான்” என்று கூறிய நிமாயி அதைக் கிழித்து கங்கை ஆற்றில் தூக்கி எறிந்தார்.
ரகுநாதர் விக்கித்துப் போய் பிரமித்தார்.

நிமாயியின் காலைப் பிடித்து வணங்கினார்.
நிமாயியோ சிரித்தவாறே அவரைக் கட்டித் தழுவினார்.
கிருஷ்ண சைதன்யரின் வாழ்வில் பக்தி, சேவை, தியாகம் இதெல்லாம் சர்வ சாதாரணமாக அமைந்திருந்தது.
***