
Post No. 11,788
Date uploaded in London – 10 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஏழை கோடீஸ்வரனாகி செய்த அற்புத சேவை!
ச.நாகராஜன்
ஒருவேளை உணவுக்கு வழி இன்றித் தெருவில் பிச்சை எடுக்க மனமின்றித் தவித்த ஒரு சிறு பையன் மனதில் உழைக்க உறுதி பூண்டு அனாதைகளைக் காப்பாற்றுவேன் என்று சபதம் செய்து அதில் வெற்றி பெற்றான் என்றால் ஆச்சரியமாக இல்லை?
உண்மை இது, வெறும் பொய்யுரை இல்லை.
ஸ்காட்லாந்தில் க்ளாஸ்கோவில் பிரம்மாண்டமாக இன்று விளங்கும் அனாதை விடுதிகளுக்கு ஒரு ஆச்சரியமான மூல கதை உண்டு.
அதன் ஹீரோ வில்லியம் க்வாரியர் (William Quarrier)
வில்லியம் க்வாரியர் 1829ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி க்ரீன்நாக் என்னுமிடத்தில் பிறந்தார். ஆனால் அவர் பின்னால் மூன்றாம் வயதிலேயே க்ளாஸ்கோவிற்கு இடம் பெயர்ந்தார். 1903ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி அவர் மறைந்தார்.
அவரது தந்தையார் அவரது மூன்றாம் வயதிலே மனைவியை விதவையாக்கி மூன்று குழந்தைகளை ஆதரவற்று விட்டு விட்டு மரணமடைந்தார். ஒரே ஏழ்மை நிறைந்த குடும்பம். சாப்பிடவே வழியில்லை. பள்ளிப் படிப்பை நினைக்கக் கூட முடியாது.
ஒரு சமயம் 36 மணி நேரம் எந்த உணவும் இல்லாமல் வாடி வதங்கிய அவர் தெருவிளக்கின் அடியில் வந்து நின்றார். யாராவது உதவி செய்வார்களா என்று பார்த்தார். ஒருவரும் வரவில்லை.
பிச்சை எடுக்கவோ மனம் கூசியது. பின் தயாரிக்கும் வேலையில் சேர்ந்த அவர் வாரத்திற்கு ஒரு ஷில்லிங் சம்பாதித்தார். கூடவே தானாகவே படிக்க ஆரம்பித்தார்.
மிகக் கடுமையாக உழைக்க ஆரம்பித்த வில்லியம் ஷூ தயாரிக்க ஆரம்பித்தார். தனது குடும்பத்தையும் தனது வருமானத்தை வைத்துக் காப்பாற்றினார்.
இன்னும் அதிக உழைப்புத் தேவையாக இருந்தது. இன்னும் உழைத்தார். 23ஆம் வயதில் ஒரு சிறிய கடையை வைத்தார். கடை பெரிதானது.
பணம் சற்று சேர்ந்தது. ஆனால் 2000 ஷில்லிங் அவருக்குத் தேவையாக இருந்தது – ஒரு அனாதை இல்லத்தை ஆரம்பிக்க.
சில நண்பர்கள் உதவினர். 3 அனாதைச் சிறுவர்களை வைத்து ஒரு அனாதை இல்லத்தை ஆரம்பித்தார். நாளடைவில் அது பெரிதாக வளர்ந்து 2000 அனாதைக் குழந்தைகளுக்குப் புகலிடத்தைத் தந்தது.
1872ஆம் ஆண்டில் தனது 43ஆம் வயதில் ஓரளவு வெற்றி பெற்ற போது அவர் தான் பட்ட கஷ்டத்தை இப்படிக் கூறினார்:

“When a little boy, I stood in the High Street of Glasgow, barefoot, bareheaded, cold and hungry, having tasted no food for a day and a half, and, as I gazed at each passer-by, wondering why they did not help such as I, a thought passed through my mind that I would not do as they when I would get the means to help others. “
1890களில் அவர் பெயரால் ஒரு கிராமமே உருவானது. க்வாரியர்’ஸ் கிராமத்தில் (Quarrier’s Village) 34 விடுதிகள் உருவாயின. கூடவே ஒரு பள்ளி, ஒரு தீயணைப்பு நிலையம், ஒரு தேவாலயம் உருவாயின.
உலகம் அவரை வியப்புடன் பார்க்க, அரிய சேவை செய்த அவர் 1903இல் மறைந்தார். தனது மனைவியின் அருகேயே அடக்கமாக விரும்பினார். அப்படியே க்வாரியர் கிராமத்தில், மவுண்ட் ஜியான் சர்ச்சில் உள்ள கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
இன்றும் க்வாரியர் அனாதை இல்லங்கள் தம் சேவையைத் தொடர்கின்றன.
உத்வேகம் ஊட்டும் உன்னத சேவா மனப்பான்மை கொண்டோரில் ஒருவர் க்வாரியர்!
***