அர்த்தநாரீஸ்வரராக சிவபிரான் எழுந்தருளும் திருச்செங்கோடு! (Post No.11792)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,792

Date uploaded in London –   11 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 13

அர்த்தநாரீஸ்வரராக சிவபிரான் எழுந்தருளும் திருச்செங்கோடு!

ச.நாகராஜன்

தன் உடலில் அம்பிகைக்குப் பாதி இடம் கொடுத்து சிவபிரான் அர்த்தநாரீஸ்வரராக ஆன வரலாறு ஹிந்து மதத்தில் பெண்மைக்கு எப்படிப்பட்ட உயரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான நிரூபணமாகும்.

வரலாறு இது தான்:

பண்டொரு காலத்தில், ஒரு சமயம் பிருங்கி முனிவர் சிவபிரானை வணங்குவதற்குக் கைலாயம் சென்றார். பரமசிவனைத் தவிர மற்றுள்ளனவெல்லாம் அழிவுள்ளவை என்ற தனது எண்ணத்தினால் பார்வதி தேவியை வணங்க வேண்டாம் என்று நினைத்து பரமசிவனை மட்டும் அவர் வணங்கினார். இன்னொரு நாள் அவர்  கைலாயம் சென்ற போது பார்வதி தேவியைப் பிரிவில்லாதபடி அணைத்தவாறு ஒரே ஆசனத்தில் சிவபிரான் அமர்ந்திருந்தார்.

இதைக் கண்ட பிருங்கி முனிவர் சிவபிரானை மட்டும் வணங்க வேண்டும் என்ற தனது கருத்தினால் ஒரு வண்டு உருவம் எடுத்தார். வண்டாகப் பறந்த அவர் கழுத்தில் இருந்த சந்து வழியாகப் புகுந்து சிவனை மட்டும் வலம் செய்யலானார்.

தேவியார் சினந்தார். பிருங்கி முனிவரை நோக்கி, ‘என்னை அவமதித்தனை. ஆகவே என் கூறு ஆன பொருளையும் நீக்கி விடு’ என்றார்.

உடனே பிருங்கி முனிவரின் உடலில் இருந்த ஊன் முதலியன கழன்று விட்டன.

பிருங்கி முனிவர் வலுவை இழந்தார். வலிமை போன காரணத்தால் முனிவர் கீழே சாயலானார். உடனே சிவபிரான் இன்னொரு கால் தோன்ற அருள் பாலித்தார்.

முனிவரிடம் சிவபிரான், “கிரணமின்றி சூரியன் இல்லை; சூடின்றி நெருப்பில்லை. ஆதலில் சக்தி இன்றி சிவம் இல்லை. சக்தி இன்றி இந்த சத்தன் இல்லை.  இந்த உண்மை காணாது மயங்கினையே” என்று கூறி அவரைத் தேற்றினார்.

பிருங்கி உண்மை உணர்ந்து மகிழ்ந்தார். பார்வதி பரமேஸ்வரரை உளமாரத் தொழுதார்.

 ‘சிவன் வேறு, நாம் வேறு என்ற கருத்தினால் அல்லவோ ஒரு முனிவன் நம்மை இப்படி இகழ நேர்ந்தது’ என்று எண்ணிய பார்வதி தேவியார் கேதாரம், காசி, காஞ்சி, திருவண்ணாமலை முதலிய தலங்களில் தவம் புரிந்து பின்னர் திருச்செங்கோட்டை அடைந்தார்.

அங்கு கேதார விரதம் இயற்றி  சிவ பரம் சுடரின் இடது பாகத்தைப் பெற்றார்.

ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் என்னும் திருப்பெயரைக் கொண்டு இருவரும் ஒன்றாக இணைந்து அருள் பாலிக்கலாயினர்.

திருச்செங்கோடு கொங்கு மண்டலத்தில் கீழ்கரைப் பூந்துறை நாட்டைச் சேர்ந்தது. திருச்செங்கோடு தற்போதைய ஈரோட்டிலிருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவிலும் சேலத்திலிருந்து தெற்கே 45 கிலோமீட்டர் தொலைவிலும் நாமக்கல்லிலிருந்து மேற்கே 32 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம். திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது.

மூலவர் அர்த்தநாரீஸ்வரர்,

அம்பிகை பாகம் பிரியாள்.

வேலவனுக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.

இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் போது ஆணாகவும் மறு புறம் பார்க்கும் போது பெண் போலவும் தோற்றமளிப்பது ஒரு தெய்வீக விந்தையாகும்

இப்படிப்பட்ட அரிய தலம் கொங்கு மண்டலத்தில் உள்ளதேயாம் என்று கொங்கு மண்டல சதகம் பாடல் 13இல் பெருமையுடன் பதிவு செய்கிறது.

பாடல் இதோ:

நெடுவா ரிதிபுடை சூழுல கத்தி னிமலியுமை

யொடுவாகு பெற்ற திருமேனி காணு முயிர்கட்கெல்லாம்

நடுவாக நின்ற பரஞ்சோதி தானர்த்த நாரிச்சிவ

வடிவான துந்திருச் செங்கோடு சுழ்கொங்கு மண்டலமே.

பாடலின் பொருள் : கடல் சூழ்ந்த இந்த உலகில் உமா தேவியாரோடு சிவபிரான் அர்த்தநாரீஸ்வரர் என்று ஒரு வடிவான திருச்செங்கோடு மேவியது கொங்கு மண்டலமே ஆகும்.

பெண்ணின் பெருமையை உணர்த்தும் திருத்தலம் திருச்செங்கோடு என்பதில் ஐயமுண்டோ!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: