
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,800
Date uploaded in London – 13 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மிகுந்த வேதனையிலும் கூட அன்பு செலுத்திய புத்த குரு மாஸ்டர் ஷு யுன்!
ச.நாகராஜன்
மிகுந்த வலியிலும் மரண வேதனையிலும் கூட மற்றவர் மீது எல்லையற்ற அன்பு செலுத்த முடியுமா? குறிப்பாக அப்படி நமக்கு வேதனையைத் தந்த எதிரியிடம் அன்பு செலுத்த முடியுமா?
முடியும் என்ற அதிசய பதில் புத்தமத குருமார்களின் வரலாற்றிலிருந்து நமக்குக் கிடைக்கிறது.
மரண வேதனையில் அப்படிப்பட்ட சொல்லவொண்ணா வேதனையைத் தந்த செஞ்சட்டை ராணுவத்தினருக்குத் தன் அன்பைக் காட்டிய அபூர்வமான குரு மாஸ்டர் ஷூ யுன் (Master Hsu Yun)!
இவர் மாஸ்டர் ஷுவன் ஹுவாவின் (Master Hsuan Hua) குரு. மாஸ்டர் ஹூவா சீனாவில் பத்தாயிரம் புத்தர்கள் நகரின் மாபெரும் ஆலயத்தின் மடாதிபதி.
அவரது குருவான மாஸ்டர் ஷூ யுன், சீனாவில் இருந்த ஐந்து விதமான புத்தமத வம்சாவளியினரின் தலைமை குரு. அந்த ஒவ்வொரு வம்சாவளியினராலும் அவர் மிகவும் பூஜிக்கப்பட்டார்.
சான் வம்சம், சூத்ரா வம்சம், மந்த்ரா வம்சம், வினயா வம்சம், மறைவியல் வம்சம் என இந்த ஐந்து வம்சங்களைச் சேர்ந்தவர்களும் அவரிடம் அன்பு பாராட்டினர். ஒவ்வொரு வம்சமும் அவரைத் தங்கள் வம்சத்திற்கு குருவாக இருக்க வேண்டும் என்று வேண்டினர்.
துரதிர்ஷ்டவசமாக சீனாவில் செஞ்சட்டை ஆதிக்கம் கம்யூனிஸத்தால் ஏற்பட்ட போது புத்த மதத்தினரும் புத்த மத குருமார்களும் எல்லையற்ற துன்பத்திற்கு ஆளாயினர்.
செஞ்சட்டை ராணுவம் அவர் மடத்தைத் தாக்கிய போது அவருக்கு வயது 110.
மரத் தடிகளைக் கொண்டு செஞ்சட்டை தடியர்கள் அவரைத் தாக்கினர்.
மாமிசக் குவியலாக ரத்தம் ஒழுக அவரைப் பார்த்த பிறகே அவர் அப்படியே சாகட்டும் என்று விட்டு விட்டு அந்தப் பொல்லாத் தடியர்கள் அகன்றனர்.
உடைந்த எலும்புகள், பிய்ந்த சதைகள், ஒழுகும் ரத்தம் – என்றாலும் கூட அவர் உயிர் பிழைத்தார்.
இந்த அதிசயச் செய்தி சீனாவெங்கும் பரவியது.
இதைக் கேட்ட செஞ்சட்டையினர் மீண்டும் அவர் இருப்பிடத்திற்கு வந்தனர். அவரைக் குறி வைத்துத் தாக்கினர். இந்தத் தடவை இரும்புத் தடிகளால் தாக்கினர்.
அவர் சுருண்டு விழுந்தார்.
ஆனால் இந்த முறையும் அவர் இறக்கவில்லை.
அவரது சீடர்கள் அவருக்குக் கட்டுப் போட்டு சிகிச்சை செய்து அவரைக் காப்பாற்றினர். அவர் உயிருடன் இருந்தார்.
அனைவரும் இது கண்டு அதிசயித்தனர்.
ஆனால் அற்புதமான தியானத்தின் சக்தி அவரிடம் இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆகவே ஆற்றலுடன் அவர் இருப்பதை அனவரும் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்தனர்.
அவர்கள் அனைவரும் ஒன்று கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
‘தங்களது மாஸ்டர் தங்கள் மீது மாறா அன்பு கொண்டவர்; தான் இறந்து விட்டால் சீடர்கள் சொல்லொணா வேதனைக்கு ஆட்படுவார்களே என்று நினைத்து அவர் தன் உயிரை இந்த வேதனையிலும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தனது பிரிவு வேதனையால் சீடர்கள் தவிக்கக் கூடாதே என்று தான் அவர் தன் உயிரை விடாமல் இறப்பைத் தள்ளிப் போட்டு உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்’ – என்று இப்படி அவர்கள் எண்ணினர்.
ஆகவே அவர்கள் அனைவரும் ஒன்று கூடி அவரிடம் சென்றனர்.
“ஐயனே! எங்களுக்காக நீங்கள் வேதனைப் பட வேண்டாம். நீங்கள் இப்படி வேதனைப்படுவதைத் தான் எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்த வேதனைக்கு நீங்கள் இறந்ததால் வரும் வேதனையே பரவாயில்லை. நீங்கள் உங்கள் உயிரை விடுவதற்கான தருணம் இது தான் என்றால் தாராளமாக உயிர் துறக்கலாம்” என்றனர்.

உடனே மாஸ்டர் அவர்களைப் பார்த்து அன்புடன் கூறினார் இப்படி:
“சீடர்களே! நான் உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது உண்மை தான்! ஆனால் அது உங்களுக்காக அல்ல. இது அந்த செஞ்சட்டை ராணுவ வீரர்களுக்காக. என்னை அடி அடி என்று அடித்து அவர்கள் துன்புறுத்தி இருக்கின்றனர். நான் இறந்தால் அந்த கர்மாவினால் அவர்களுக்கு வரும் எல்லையற்ற பாதிப்பு நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவு பெரியது. அந்த விளைவுக்கு நான் ஒரு காரணமாக இருக்க வேண்டாமே என்று நினைத்துத் தான் என் உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.”
இதைக் கேட்ட அனைவரும் எதிரி மீதும் அவர் காட்டும் பரிவையும் அன்பையும் எண்ணி பிரமித்தனர்.
இதை அறிந்த செஞ்சட்டை ராணுவ வீரர்கள் அதிர்ந்து போனார்கள்.
அவரை விட்டு விட்டு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
அதற்குப் பிறகும் அவர் உயிர் வாழ்ந்தார். 100 வயது புத்த சந்யாசியாக இருப்பதாக அவர் விரதம் பூண்டிருந்தார்.
தனது 120ஆம் வயதில் அவர் உயிர் துறந்தார்.
இந்தச் சம்பவம் நடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் சீடர்களுக்கு ஆற்றிய உரை பிரசித்தி பெற்றவை ஆகும். இந்த தர்மா போதனைகள் Ch’an and Zen Training என்ற நூலாக Charles Luk என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
புத்த மத குருமார்கள் சரித்திரம் உலகில் அவ்வளவாகப் பரவவில்லை.
ஆர்வமுள்ளோர் அவற்றைத் தேடிப் பார்த்து நூல்களிலிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
**