Post No. 11,805
Date uploaded in London – – 14 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பிப்ரவரி 2023 இந்திய பயணத்தின்போது பல சிவன் கோவில்களுக்குச் சென்றேன். நானும் பட்டரும் மட்டும்தான் இருந்தோம். ஒரு வேளை பிப்ரவரி மாதம் , தேர்வுகள் நெருங்கும் மாதம் என்பதாலோ அல்லது இப்போதுதான் பொங்கல் விடுமுறை முடிந்து எல்லோரும் களைப்பு அடைந்திருப்பதாலோ தெரியவில்லை.
திருமங்கலக்குடி, திருநறையூர், , திருவலஞ்சுழி ஆகிய சிவன் கோவில்களை தரிசிப்போம்.
XXX
திருமங்கலக்குடி கோவில்
சுவாமியின் பெயர் – பிராண வரதேஸ்வரர்
தேவியார் – மங்கள நாயகி
ஆடுதுறை ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை மைல் தொலைவில் இருக்கிறது . கும்பகோணத்திலிருந்து 18 கிலோமீட்டர்.
தல மரம் – வெள்ளெருக்கு
சம்பந்தரும் அப்பரும் பாடிய தலம்.
கோவிலுக்கு எதிரில் குளம் இருக்கிறது.
மாகாளி பிரம்மா, விஷ்ணு, சூரியன், அகத்திய முனிவர் பூஜித்த திருத்தலம்.
அரசனிடத்தில் பொக்கிஷதாரர் வேலை பார்த்த ஒரு சிவபக்தர், அரசனுடைய பணத்தைக்கொண்டு ஆலய திருப்பணி செய்தார். இதை அறிந்த அரசன் அவரை அழைத்தார். அவரோ அரச கட்டளைக்கு கீழ்ப்படியாமல், உயிர்துறந்தார். அவரது சடலத்தைத் திருமங்கலக்குடிக்கு அப்பாற்சென்று இறுதிச் சடங்கு செய்ய மன்னர் உத்தரவிட்டார். ஆனால் சடலம் திருவியலூருக்கு அருகில் வரும்போது, அவரது மனைவியின் பிரார்த்தனையால் , அவருக்கு மீண்டும் உயிர்வந்தது. இதனால் உயிர்கொடுத்த இறைவன் என்று அங்குள்ள சிவன் போற்றப்பட்டார்.
திருமங்கலக் குடியில் இருந்த மங்களாம்பிகையை அவர் வேண்டிக்கொண்டார் என்பது தல புராணம் ஆகும்.
XXX
திருவலஞ்சுழி பிள்ளையார் கோவில்

இது ஒரு சிவன் கோவில் என்றாலும் பிள்ளையாரால், பெயர் பெற்ற தலம் ஆக விளங்குகிறது.
கும்பகோணத்திருந்து ஆறு கிலோமீட்டர்
தல மரம் – வில்வம்
அப்பர் பாடிய கோவில்.
நாங்கள் உள்ளே சென்றபோது பிள்ளையார் முன்னிலையில் நாங்கள் மட்டுமே பட்டருடன் இருந்தோம். தீபாராதனை காட்டிய பின்னர், அவர் எங்களுடன் மற்ற சந்நிதிகளைக் காட்டுதற்கு முற்பட்டபோது வேறு சில பக்தர்கள் வந்ததால் நாங்களே உள்ளே சென்று சிவனையும் தேவியையும் தரிசித்தோம். பின்னர் அவர் அஷ்டபுஜ துர்க்கை தவி சந்நிதியில் காத்திருந்த ஒரு தம்பதிக்காக அரச்சனைசெய்ய வந்தார். புகழ்பெற்ற கோவில் கரடு முரடான பாதைகளுடன் பராமரிப்பின்றி இருப்பது வருத்தம் தந்தது. அந்தந்த பகுதிமக்கள் அந்தந்த கோவில்களை பராமரிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
என்றோ ஒருநாள் வெளிநாட்டிலிருந்து அந்த ஊர் மக்கள் காசு பணம் அனுப்புவதால் மட்டும் எந்தக் கோவிலையும் பாதுகாத்துவிட முடியாது.
ஒரு ஊரில் வேதபாட சாலைக்கு டொனேஷன் / நன்கொடை தருவது பற்றி விவாதித்தேன் அப்போது அதை நடத்தும் சாஸ் திரிகள் சொன்னார் . அ ந்த ஊர்க்காரர்கள் வெளிநாட்டிலிருந்து நிறைய பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்; ஆயினும் மாணவர்களைத் தக்க வைத்துக்கொள்வதே கடினமாக இருக்கிறது என்றார். டெலிவிஷனும் சினிமாவும் மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ள காலத்தில், சில மாணவர்களை அந்த செல்வாக்கிலிருந்து பாதுகாப்பது கடினமே.
இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், முந்தைய தலைமுறைக்கு திடீரென்று வேத இதிஹாச புராணங்களில் நம்பிக்கை வருகிறது அடடா, நாம் கற்றுக்கொள்ளவில்லை; அடுத்த தலைமுறையாவது கற்றுக்கொள்ளட்டும் என்று பணம் அனுப்புவது பலன் ராது. அதற்கான சூழ்நிலையும் தேவை. மேலும் தான் கடைப்பிடிக்காத விஷயங்களை மற்றவர்களை பின்பற்றச் செய்யமுடியாது. சாகும் நேரத்தில் சங்கரா சங்கரா என்று சொல்லுவதற்குச் சமம் இது . குறைந்தது தினசரி சந்தியா வந்தனம் செய்தால்தான் , வேதம் பிழைக்கும். காயத்ரீ மந்திரம் ஒன்றே போதும் என்று மனு ஸ்ம்ருதி முதல் , காஞ்சி மகா சுவாமிகள் வரை சொல்லிவிட்டனர். அதைச் செய்யாதோர் வேதங்களைக் காப்பாற்ற முயலுவது விழலு க்கு இறைத்த நீர் போன்றதே
.XXXX
மீண்டும் கோவிலுக்கு வருவோம்
திரு வலஞ் சுழி சிவன் கோவிலில் இறைவன் திருநாமம் -கற்பக நாதேஸ்வரர், கபர்தீஸ்வரர்
தேவியின் திரு நாமம் – பெரியநாயகி.
தேவேந்திரன் பூஜித்த கோவில். தலத்துக்கு வடக்கில் அரசலாறு ஓடுகிறது.
காவிரி நதி, பூமிக்குள் புகுந்து வெளியே வராமல் நின்றுவிட்டது. மக்களின் கஷ்டத்தைக் கண்ட ஏரண்ட முனிவர் தம்மையே பலிகொடுத்த பின்னர் காவிரி நதி, மீண்டும் தோன்றி வலமாகச் சுழித்து ஓடியதால் ஊருக்கு இப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவார்கள் ஏரண்ட முனிவரின் உருவமும் கோவிலுக்குள் இருக்கிறது அவருக்குப் பின்பக்கத்தில் வலம் சுழி நாதர் (தக்ஷிணாவர்த்தர்) என்ற பெயரில் சிவபெருமான் லிங்க வடிவத்தில் வீற்றிருக்கிறார் .
இங்குள்ள பிள்ளையார் சந்நிதி மிகவும் சிறியது; கடல் நுரையால் ஆன பிள்ளையார் என்று சொல்லுகிறார்கள். ஸ்வேத / வெள்ளை விநாயகர் .ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவம் முதலிய விழாக் காலங்களில் பெரிய கூட்டம் இருக்கும்.
அறுபடை வீடுகளில் ஒன்றான முருகன் திருத்தலமான சுவாமி மலையிலிருந்து 2 பர்லாங் தூரத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது .
சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர் .கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று.
அப்பர் சம்பந்தர் ஆகிய இருவரால் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலம் இது .
1500 ஆண்டுக்கும் மேலான பழமை உடைய இந்தக் கோவிலில் சோழர் காலக்கல்வெட்டுகள் இருக்கின்றன.
XXXX
திருநறையூர்
கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோவில் 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. நாச்சியார் கோவிலின் முற்பகுதியில் திருநறையூர் அமைந்துள்ளது.
சுவாமியின் திருநாமம்- சித்தநாதேஸ்வரர்
தேவியின் திருநாமம்- அழகம்மை
தல மரம் – பவள மல்லிகை
சம்பந்தரும் சுந்தரரும் பாடிய திருத்தலம்.
சித்தர்கள் வழிபட்டுச் சென்ற இடம் ஆதலால் சித்தீச்வரம் என்று பெயர் பெற்றது
குபேரன், தேவர்கள், கந்தர்வர்கள் வழிபட்டனர்.
பிள்ளையார் பெயர்– ஆண்ட பிள்ளையார்.
தீர்த்தம் – பிரம தீர்த்தம் . இது கோயிலுக்கு வடபால் உள்ளது.
தேன் சித்தி தீர்த்தம் என்றும் ஒன்று இருந்ததாகச் சொல்லுவார்கள்.
XXX
கோவிலுக்குள் நாதஸ்வர முழக்கம்
ஆளில்லாத ஒரு கோவிலுக்குள் மிக சப்தமாக நாதஸ்வர இன்னிசை ஒலித்தது. சுற்றுமுற்றும் பார்த்தால் பட்டர் கூட இல்லை. ஓஹோ! பட்டர் இல்லாததால் டேப்ரிகார்ட்டர் ஒலிப்பதிவைப் போட்டுவிட்டு போய்விட்டார் போலும் என்று ஒலி பெருக்கியைத் தேடினோம். அதையும் காணோம்.
என்ன அதிசயம் !
ஒரு நாதஸ்வர வித்வான் தனிமையில் அமர்ந்து நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார் .
அது கோவில் முழுதும் கேட்பதற்காக அதனுடன் ஸ்பீக்கரையும் இணைத்திருந்தார். அவரிடம் கொஞ்சம் நன் கொடை கொடுத்து எங்கள் பாராட்டைத் தெரிவித்தோம்.
சிவன் கோவிலுக்குள் மஹா லெட்சுமி சந்நிதிக்குப் போகும் வழி என்று ஒரு போர்டு வேறு தொங்கியது. அதைக் கண் டுபிடிக்காமல் திணறினோம். ஆளே இல்லாத கோவில் என்பதால் அந்த நாதஸ்வர வித்வானையே கேட்டோம். ஒரு மூலையில் குறுகிய படி ஏறிச் சென்றால் , மகா லெட்சுமி தரிசனம் கிடைக்கும் என்றார் . அவரையும் தரிசித்தோம் .
xxxx
கல்வெட்டுகள் தரும் அரிய தகவல்கள்
அரசாங்கம் படியெடுத்த 24 கல்வெட்டுகள் இருக்கின்றன. அவை குறிப்பிடும் சோழ அரசர்கள் (கால வரிசைப்படி)
ராஜ ராஜன், வீர ராஜேந்திரன், முதல், இரண்டாம், மூன்றாம் குலோத்துங்கன் விக்ரம சோழன், இரண்டாம் ராஜ ராஜன், இரண்டாம் ராஜாதி ராஜன்.
ஒவ்வொரு மன்னர் காலத்திலும் வளநாடு என்பதன் முன்னர் அந்தந்தக் கால அரசர் பெயர் உள்ளது
கல்வெட்டுகளில் சித்த நாதேஸ்வரமுடைய தேவர் , சித்த நாதேஸ்வரமுடையார் என்றும் இறைவன் திருநாமம் காணப்படுகிறது
இங்குள்ள பிட்சாடன தேவர் சிறப்புடையார் .. இவருக்கு திரு நறையூர் சிவப்பிராமணர் ஒருவர் 30 பொற்காசுகளை நிவேதனத்துக்காக அளித்தார்
இங்கு வழிபட வரும் சிவ யோகியாருக்கு உணவு படைக்க, மண்ணி நாட்டுக்கு கருப்பூர் உடையான், நில தானம் செய்தார்.
இத்தலத்துள்ள பிடாரி கோயிலுக்கு நிலம்விட்ட செய்தியையும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
ஏனைய கல்வெட்டுகள் விளக்கு ஏற்றவும் நிவேதனம் செய்யவும் பொன்னும் பொருளும் நிலமும் தானம்விட்டதைப் பகர்கின்றன.
—-subham—
Tags- திருமங்கலக்குடி, திருநறையூர், திருவலஞ்சுழி , சிவன் கோவில், நாதஸ்வர வித்வான், ஏரண்ட முனிவர், காவிரி நதி