நான் அரசனுக்குப் பிறந்தவனா? ஆண்டிக்குப் பிறந்தவனா? கதை (Post No.11,811)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,811

Date uploaded in London – –  16 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

திருச்சி கலைமாமணி கல்யாண ராமன் சொற்பொழிவுகள் மிகவும் சுவையானவை; அவர் நிறைய உண்மைகளை , பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்துவார். இதோ அவர் சொன்ன ஒரு குட்டிக்கதையும் , அவர் உதிர்த்த சில பொன்மொழிகளும் :

ஒரு மாமி, நம் உபன்யாசகரிடம் பெருமையாகச் சொன்னாளாம் :

என் மகன் லண்டனுக்குப் போயும் தினசரி விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி வருகிறான் —என்று பெருமையுடன் சொன்னாளாம்.

உபந்யாசகர் சொன்னார்:

மாமி; அதைக் கொஞ்சம் மாற்றிச் சொல்லுங்கோ. என் மகன் தினசரி விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொன்னதால் அவனுக்கு லண்டன் செல்லும் வேலை கிடைத்தது என்று.

XXX

பிராமணர்களுக்கு ஜோதிடமே தேவை இல்லை!

என்னிடம் நிறைய பேர் ஜோதிடம் பார்க்க வருகிறார்கள்; உண்மையைச் சொல்லுகிறேன்; சந்தியா வந்தனம் செய்யும் பிராமணர்களுக்கு ஜோதிடமே தேவை இல்லை. அவர்கள் மூன்று வேலையும் நவக்கிரகங்களையும் வணங்குகிறார்கள். நவக்  கிரகங்களின் பெயரைச் சொல்லி தர்ப்பணம் செய்கிறார்கள் (ஆதித்யம் தர்ப்பயாமி…….கேசவன் தர்ப்பயாமி………. மந்திரங்கள் )

மேலும் காயத்ரீயை உபாசனை செய்கிறார்கள்; அவர்களுக்கு நவக்கிரகங்கள் தீமை செய்யாது .

xxxx

(இதோ என் சரக்கு : அப்படியானால் சந்தியாவந்தனம் செய்யாத பிராமணர் அல்லாதோருக்கு ஏதேனும் மந்திரம் உண்டா ? இருக்கிறது; உண்டு .

1962-ம் ஆண்டில் அஷ்ட கிரஹ சேர்க்கை ஏற்பட்டது; அப்போது உலகம் அழியுமா என்ற பெரும் பீதியைப் பத்திரிகைகள் தினமும் வெளியிட்டு வந்தன . காஞ்சி மஹா சுவாமிகள் (சங்கராச்சார்யார் 1894-1994) மக்களின் மனதை அமைதிப்படுத்தினார். திருஞான சம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகத்தை எல்லோரும் சொல்லுங்கள் என்றார். பத்திரிக்கைகளும் அதை வெளியிட்டன. பல்லாயிரக்கணக்கில் அந்த தேவாரப்  பாடல் இலவச விநியோகம் செய்யப்பட்டன . எட்டு கிரகங்களும் ஒரே ராசியில் கூடிய காலத்தில் பெரிய கேடு  எதுவும் நிகழவில்லை . பிறகு வந்த சீனப் போரிலும் அமெரிக்க உதவியால் நாம் பிழைத்தோம் . வேயுறு தோளி பங்கன் என்று துவங்கும் கோளறு திருப்பதிகத்தில் நவக்கிரக தர்ப்பணம் வந்துவிடுகின்றது.

பாடல் 1

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்

    மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்

    உளமேபு குந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி

    சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல

    அடியார வர்க்கு மிகவே.))

Xxxx

ஆண்டி மகனாஅரசன் மகனாகதை

மீண்டும் திரு.கல்யாண ராமன் உரைக்குத் திரும்புவோம். மாயவரம் ராதா கல்யாண உற்சவத்தில் கர்ணனும் கண்ணனும் என்னும் தலைப்பில் ஒன்றரை மணி நேரம் சொற்பொழிவு நடத்தினார்; கடல்மடை திறந்தார் போல வில்லிப்புத்தூரார் இயற்றிய மஹாபாரத பாடல்களைபி பொழிந்தார்; நயம்பட பொருள் உரைத்தார் . கர்ணனுக்கு மிஞ்சிய கொடையாளி பூமியில் இல்லை என்றார். அப்போது கருணையும் கொடையும் பிறவிக்குணங்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக ஒரு கதை சொன்னார் (என் சொற்களில் அதை வடிக்கிறேன்; பிழை இருப்பின் அது என் பிழையே)

xxxx

ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார்; ஒரு நாள் கண்ணிரண்டும் தெரியாத ஒரு புலவர் அந்த அரசவைக்கு வந்தார். அவரை அரசனுக்கு மந்திரி அறிமுகம் செய்துவைத்தார்

ராஜனே இவருக்கு கண்பார்வை இல்லாவிடினும் எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அதைச் சரியாகக் கண்டுபிடித்துவிடுவார் என்கிறார் மந்திரி.

உடனே அரசனும் அவனது சோதனைகளைத் தொடங்கினான்.

ஒரு வைரக் கல்லையும் ஒரு கூழாங் கல்லையும் , கண் தெரியாத புலவர் கையில் கொடுத்து இவை என்ன? என்று சொல்லுங்கள் என்றான். புலவரும் அவற்றை சற்று நேரம் சூரிய ஒளியில் காட்டிவிட்டு சூடேறிய கல்லை சாதாரணக் கல் என்றும் மற்றதை வைரக் கல் என்றும் பகர்ந்தான் .சரியான பதில் சொன்னவுடன்,

“மந்திரி, நமது காளி கோவில் பிரசாதமான தயிர் சாதத்தை இவருக்குப் பரிசாக  அளியுங்கள்” என்றான் .

அடுத்த சோதனையாக ஒரு குதிரையையும் கழுதையையும் அழைத்துவரச் செய்து உன் முன்னால் நிற்கும் மிருகங்கள் என்ன என்ன? என்று கேட்டான் மன்னன்.

புலவரும் அவற்றின் அருகே சென்று அவற்றைக் கிள்ளிவிட்டார்; குதிரை கனைத்தது ; கழுதையோ காள் காள் என்று கத்தியது. அதை வைத்து, புலவர் கழுதை, குதிரை என்று மொழிந்தார்.

இதற்கும் ஒரு விலை மதிப்பில்லாத பரிசினை கொடுக்க உத்தரவிட்டான்

அரசன் மேலும் சில சோதனைகளைச் செய்யவே 100 சதவிகிதம் சரியான பதில்கள் கிடைத்தன.

உடனே அரசன், அந்தப் புலவனை மரியாதையோடு  தனது அந்தரங்க அறைக்கு அழைத்துச் சென்றான். புலவரே உண்மையினைச் சொல்லும் :

நான் அரசனுக்குப் பிறந்தவனா? , ஆண்டிக்குப் பிறந்தவனா ? என்று கேட்டான்.

இத்தகைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல சாமுத்ரிகா லட்சணம் என்னும் சாஸ்திரம்தான் உதவும். அதைப் பயன்படுத்த முழுக் கண்பா ர்வை இருக்கவேண்டும். அனால் புலவருக்கோ கண்கள் இல்லை. அப்படியிருந்தும் ஒரு நொடியில் பதிலிறுத்தார்.

மன்னர் மன்னா, ராஜாதி ராஜனே ! நீ ஆண்டிக்குப் பிறந்தவன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

திடுக்கிட்ட அரசன் கேட்டான் . இந்த உண்மையை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் ? என்று வினவினான்.

மன்னா , முதல் பரீட்சையில் ஒரு கூழாங்கல்லையும் வைரக்கல்லையும் கொடுத்து என்னைச் சோதித்தாய் .நானும் சரியான பதிலைக் கொடுத்தேன். நீ மன்னவனுக்குப் பிறந்து இருந்தால் உடனே அந்த வைரக்கல்லை எனக்குப் பரிசளித்திருப்பாய். நீயோ கோவில் சாதத்தைக் கொடுக்கவைத்து உன் ஆண்டி புத்தியைக் காட்டிவிட்டாய் .

கருணையும்,கொடையும் பிறவிக்குணங்கள்

ஆகையால் சொல்லுகிறேன்- நீ ஆண்டிக்குப் பிறந்தவன் என்பதில் சந்தேகமில்லை.

அசரனும் வெட்கித்து தலை குனிந்தான் ..

Xxxx

நன்கொடை கேட்டால்

கல்யாணராமன் தொடர்ந்து சொன்னார்

யாராவது நல்ல காரியத்துக்கு நன்கொடை கேட்டால் , உடனே பையில் இருந்ததைக் கொடுத்துவிடுங்கள். மனித மனம் மாறிக்கொண்டே இருக்கும். நாளைக்கு வாருங்கள் என்று ஒருவர் சொன்னால் , அவன் கொடுக்கவே மாட்டான். அது இல்லை என்று சொல்லுவதற்குச் சமம். கர்ணனோ கடைசிவரை கொடுத்தான். இறக்கும் தருவாயிலும்  அவனது புண்ணியத்தை தானம் கேட்டான் கண்ணன். அதையும் கர்ணன் கொடுத்தவுடன் கண்ணன் நெகிழ்ந்துபோய் தனது ஆனந்தக் கண்ணீராலும் , அழுத கண்ணீ ராலும் கர்ண மாமன்னனை அபிஷேகம் செய்தான் என்கிறார் வில்லிப்புத்தூரார். அப்போது கர்ணா! நீ என்ன வரம் வேண்டுமானாலும் கேள் என்றபோது, எத்தனை பிறவி எடுத்தாலும் இல்லை என்று சொல்லி வருவோருக்கு நான் இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்க வேண்டும். அந்த வரத்தை அருளுக என்று  கர்ணன் கேட்டான் .

கருணையும் கொடையும் பிறவிக்குணங்கள் !

–சுபம்—

TAGS- அரசன் , ஆண்டி , கல்யாணராமன், திருச்சி, சொற்பொழிவு , ஜோதிடம், பிராமணன்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: