
Post No. 11,813
Date uploaded in London – 17 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி எடுத்த
ஆரத்தி! – 2
ச.நாகராஜன்
மேக்நாத் சாஹா ஜெர்மானிய மொழியைக் கற்றுத் தேர்ந்தார். ஜெர்மானிய மொழியில் இருந்த புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சத்யேந்திர நாத் பிரெஞ்சு மொழியைக் கற்றுத் தேர்ந்தார். அந்த மொழியில் இருந்த புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
1921இல் டாக்கா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அதில் சத்யேந்திரநாத். இயற்பியல் பிரிவில் ரீடராகச் சேர்ந்தார். அங்கு அவர் ‘எலிமெண்டல் பிஸிக்ஸ் (Elemental Physics) மற்றும் எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபியில் தனது ஆய்வைத் தொடங்க ஆரம்பித்தார்.
ஒரு நாள் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது போட்டோ எலக்ட்ரிக் எபக்ட் பற்றியும் அல்ட்ரா வயலட் காடராஸ்கோப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தக் கொள்கையில் இருந்த பலஹீனத்தைப் பற்றி (Weakness of the theory) அவர் சொல்லிக் கொண்டிருந்த போது, தன்னால் எடுக்கப்பட்ட குறிப்புகளில் உள்ள வித்தியாசத்தைப் பற்றி அவர் கூறினார்.
அதில் அவர் ஒரு தவறை கணக்குப் போடுவதில் செய்யவே கொள்கையும் சோதனை முடிவுகளும் ஒன்றாக அமைந்திருந்ததைக் கண்டு திகைத்தார். நன்கு சிந்தித்துப் பார்த்ததில் தான் கணிதத்தில் தவறு இழைக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார்.
அவரது ஆர்வம் மிகுந்தது. தீவிரமாக ஆராய ஆரம்பித்தார். முதலில் அவர் கொள்கை முடிவுகளை ஒருவர் கூட ஆதரிக்கவில்லை.
ஆனால் அவர் ‘”Plank’s Law and the Hypothesis of Light Quanta’ என்ற ஆய்வுப் பேப்பரை எழுதி வெளியிட்டார்.
பின்னர் தனது ஆய்வுப் பேப்பரை நேரடியாக ஐன்ஸ்டீனுக்கு அவர் அனுப்பி வைத்தார். ஐன்ஸ்டீன் அதைப் பார்த்தார். அதில் இருந்த உண்மையைக் கண்ட அவர் அதை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
எந்தக் கணிதம் தவறாகப் போடப்பட்டது என்று சத்யேந்திரநாத் நினைத்தாரோ அது இப்போது, ‘ஐன்ஸ்டீன் ஸ்டாடிஸ்டிக்ஸ்’ (Einstein’s Statistics) என்று அறியப்படுகிறது.
ஐன்ஸ்டீன் இந்தக் கொள்கை முடிவை அணுக்களின் மீது பிரயோகம் செய்து பார்த்தார். அது ஒரு புதிய ‘Condensate’ஐக் கண்டு பிடிக்க வழி வகுத்தது. இதுவே இப்போது போஸ் ஐன்ஸ்டீன் கண்டன்சேட்’ என்று அழைக்கப்படுகிறது.
கண்டன்சேட் என்பது உண்மையில் போஸ்டன் துகளின் செறிந்த நிலையாகும்.
1995ஆம் ஆண்டு அது இருப்பது நிரூபிக்கப்பட்டது.
பிரபஞ்சத்தில் உள்ள இந்தத் துகள்கள் க்வாண்டம் நம்பருடன் முழுமை எண்(integer) கொண்ட மதிப்பாக பிரபல விஞ்ஞானி பால் டிராக்கினால் ‘போஸான் பார்டிகிள்’ என்று பெயரிடப்பட்டது. (Paul Dirac named it as Boson Particle)
1924ஆம் ஆண்டு சத்யேந்திரநாத் ஐரோப்பாவிற்குப் பயணமானார்.
ஜெர்மனியில் அவர் ஐன்ஸ்டீனைச் சந்தித்தார். அவருடன் பல பொருள் பற்றி விவாதித்தார்.
பிரான்ஸ் சென்று மேடம் கியூரியைச் சந்தித்தார். அவரது சோதனைக்கூடத்திலேயே சில காலம் சோதனைகளைச் செய்தார்.
1924 முதல் 1926 முடிய பிரபல விஞ்ஞானிகள் பலரையும் அவர் சந்தித்தார்.
1927இல் டாக்கா திரும்பிய அவர், இயற்பியலில் மூத்த பேராசிரியராக அமர்ந்தார்.
ரவீந்திரநாத் தாகூர் சத்யேந்திரநாத்தைப் பார்த்து மிகுந்த உத்வேகம் கொண்டார். 1937ஆம் ஆண்டு அவர் வங்க மொழியில் ஒரு அறிவியல் புத்தகத்தை எழுதி அதை சத்யேந்திரநாத்திற்கு சமர்ப்பணம் செய்தார்.
இதனால் மனம் மகிழ்ந்த சத்யேந்திரநாத் நோபல் பரிசு கிடைத்திருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சியைத் தான் பெற்றிருக்க மாட்டேன். அவ்வளவு பெரிய மதிப்பை ரவீந்திரநாத் தாகூர் கொடுத்து விட்டார் என்று கூறினார்.

வங்க மொழியிலேயே அறிவியல் கற்பிக்கப் பட வேண்டும் என்ற பேரார்வத்தை அவர் கொண்டிருந்தார். யாராவது அறிவியலை வங்க மொழியில் கற்பிக்க முடியாது என்று கூறினால் ஒன்று அவருக்கு வங்க மொழியைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்றோ அல்லது அறிவியலைப் பற்றி அவர் அறியவே இல்லை என்றோ கூறலாம் என்றார்.
வங்க மொழியில் அறிவியலைக் கற்பிக்க வேண்டும் என்பதற்காக ‘விக்ஞான் பரிசய’ என்ற ஒரு இதழையும் அவர் ஆரம்பித்தார்.
சத்யேந்திரநாத் ஒரு நல்ல இசைப் பேரறிஞர். பல நாட்கள் இரவில் தூங்காமல் நல்ல இசையைக் கேட்டுக் கொண்டே இருப்பார். எஸ்ராஜ் வாத்தியத்தை இசைப்பார். தோட்டக்கலையில் அவருக்கு ஈடுபாடு உண்டு.
அவர் நோபல் பரிசு பெறாதது ஒரு பெரும் துரதிர்ஷ்டமே.
ஒரு நாள் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது….
– தொடரும்