
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,821
Date uploaded in London – 20 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருடனின் கம்பு!
ச.நாகராஜன்
பழைய காலத்தில் நியாயாதிபதிகள் எவ்வளவு புத்திகூர்மையுடன், தர்க்கரீதியாக, துப்பறிவதில் சிறந்து விளங்கினர் என்பதற்கு ஒரு சம்பவம் சொல்லப்படும்.
அது இது தான்:
ஒரு கிராமத்தில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவரிடம் இரண்டு வேலைக்காரர்கள் வேலை பார்த்து வந்தனர்.
செல்வந்தர் அவர்களைப் பெரிதும் நம்பினார். அவர்களும் நன்கு நடந்து கொண்டு வந்தனர்.
நாளடைவில் நம்பிக்கையின் பேரில் வீட்டின் பொறுப்பை அவர்களிடமே தந்தார் செல்வந்தர்.
தனது நகைகளை அவர் பத்திரமாக ஒரு பீரோவில் வைத்துப் பூட்டி இருந்தார். சாவி பீரோவின் மேலேயே வைக்கப்பட்டிருந்தது.
ஒரு நாள் தனது பீரோவைத் திறந்த செல்வந்தர் திடுக்குற்றார்.
நகைகளைக் காணோம்.
வீட்டில் இருப்பதே இரு வேலைக்காரர்கள் தான்; உடனே வேலைக்காரர்களை அழைத்த அவர், ‘யார் நகைகளைத் திருடியது, உண்மையைச் சொல்லுங்கள்’ என்றார்.
இருவரும் தாங்கள் திருடவில்லை என்று உறுதியாகக் கூறினர்.
ஊர் நியாயாதிபதியிடம் சென்ற செல்வந்தர் நடந்ததைக் கூறினார்.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்டார் நியாயாதிபதி.
அவர் மிகுந்த புத்திகூர்மை உள்ளவர். திருடர்களின் சைக்காலஜி தெரிந்தவர்.
அவர் திடமாக செல்வந்தரிடம் இவர்கள் இருவருமே நிரபராதிகள் போலத் தான் எனக்குத் தோன்றுகிறது என்றார்.
இதைக் கேட்ட இரு வேலைக்காரர்களும் மகிழ்ந்தனர். அவர்களில் ஒருவனே நகை முழுவதையும் எடுத்திருந்தான். அவன் இன்னும் அதிகமாக மகிழ்ச்சியுற்றான்.
பின்னர் செல்வந்தரைத் தன் அருகே அழைத்த நியாயாதிபதி, “இருந்தாலும் உங்கள் திருப்திக்காக இதை நிரூபிக்க முயல்கிறேன்” என்று சொல்லி விட்டு அவர் காதோடு ரகசியமாகப் பேச ஆரம்பித்தார்.
அவர் தனது பேச்சை ரகசியமாக ஆனால் சற்று உரக்கவே சொன்னார்.
அதை இரு வேலைக்காரர்களும் உன்னிப்பாகக் கேட்டனர்.
“என்னிடம் மர்ம மூங்கில் தடிகள் இரண்டு உள்ளன. இரண்டும் ஒரே அளவு உயரம் கொண்டவையே. அந்த இரண்டையும் இவர்களிடம் ஆளுக்கு ஒன்றாகத் தருகிறேன். அதில் மர்மம் என்னவென்றால் திருடியவன் கையில் சென்ற தடி இரவு நேரத்தில் ஆறு அங்குலம் வளர்ந்து விடும். நாளை பார்ப்போம்” என்றார்.
“இரு வேலைக்காரர்களிடம் நாளைக்குக் காலை இதைக் கொண்டு வாருங்கள், இப்போது போகலாம்” என்றார்.
நல்ல வேலைக்காரன் தடியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அதை ஒரு ஓரத்தில் பத்திரமாகச் சாத்தி வைத்தான்.
திருட்டு வேலைக்காரனோ சற்று சிந்தித்தான்.
“இரவில் ஆறு அங்குலம் திருடியவனின் தடி வளரப் போகிறது. ஆகவே சரியாக ஆறு அங்குலத்தை இப்போது வெட்டி விடுவோம். அப்போது நாளைக்கு தடி சரியான பழைய உயரத்தை அடைந்து விடும்” என்று எண்ணினான்.
சரியாக ஆறு அங்குலம் தடியை வெட்டினான்.
மறுநாள் காலை இருவரும் நியாயாதிபதியிடம் குறித்த நேரத்தில் சென்றனர்.
திருட்டு வேலைக்காரனின் தடி ஆறு அங்குலம் குறைந்திருந்தது.
அவனைச் சுட்டிக் காட்டிய நியாயாதிபதி, செல்வந்தரிடம், “இவன் தான் உங்கள் நகையைத் திருடியவன்” என்றார்.
திருட்டு வேலைக்காரனோ கத்தினான் :”நேற்று நீங்கள் திருடியவனின் தடி ஆறு அங்குலம் வளரும் என்று சொன்னீர்களே! என் தடி ஆறு அங்குலம் குறைவாக அல்லவா உள்ளது” என்றான்.
“உனது தவறான செய்கையால் உன் மனச்சாட்சி உன்னை உறுத்தவே நீ தான் ஆறு அங்குலம் தடியை வெட்டினாய். இந்தத் தடி நியாயத்தை இப்படித் தான் வழங்கும்” என்றார் நியாயாதிபதி.
அந்த வேலைக்காரனின் வீட்டைச் சோதனை போட்ட போது அனைத்து நகைகளும் கிடைத்தன.
செல்வந்தர் நியாயாதிபதியின் புத்திகூர்மையை எண்ணி வியந்தார்.
அந்தக் கால நியாயாதிபதியின் செயல்பாட்டை விளக்கும் சம்பவம் இது!
—subham—