கோவில் சொத்தை துஷ்பிரயோகம் செய்யும் திராவிட மாடல் அதிகாரிகளுக்காக ஒரு ராமாயண சம்பவம்! (11,823)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,823

Date uploaded in London –   21 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com  

கோவில் சொத்தை துஷ்பிரயோகம் செய்யும் திராவிட மாடல் அதிகாரிகளுக்காக ஒரு ராமாயண சம்பவம்!

ச.நாகராஜன் 

ஒவ்வொரு நாளும் யூ டியூபில், செய்தித் தாளில், தொலைக்காட்சி செய்திகளில் கோவிலில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்க்கும் போது, கேட்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது.

கோவில் பணத்தில் சொகுசு கார், கோவில் பிரகாரத்திலேயே நிற்கிறது.

அர்ச்சகர் பணம் அம்பேல்.

கோவில் நிலத்தைச் சொந்தக்காரர்களுக்கும், லஞ்சம் தரும் வியாபாரிகளுக்கும் தரத் தயார்!

இப்படி நூற்றுக் கணக்கான அவலங்கள்.

இந்த திராவிட மாடல் டிரஸ்டிகளுக்கும் கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கும் கும்பலுக்கும் என்ன கதி கிடைக்கும்?

ஓ, ராமா. ஒரு பதிலைச் சொல்லேன்.

பதில் கிடைத்தது வால்மீகி ராமாயணத்தில்!

வாருங்கள் ராமாயணத்திற்குள் புகுவோம்!!

*

ராமராஜ்யம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு விதவை இல்லை. ஒரு பிச்சைக்காரன் இல்லை.

கொடுக்க யாரும் இல்லை, ஏனெனில் கொள்வோர் இல்லை.

வண்மை இல்லை ஓர் வறும இன்மையால்.

இப்படி கம்பனின் வர்ணனைப்படி அற்புதமாக நடந்து கொண்டிருந்தது ராம ராஜ்யம்.

அரண்மனை வாயில் வெறிச்சோடிக் கிடக்கும் எப்போதும்.

ஏன், யாருக்கும் எந்தக் குறையும் இல்லையே, இருந்தால் தானே அரண்மனை வாசலில் வந்து நிற்க வேண்டும்?

*

ஒரு நாள் ராமர் லட்சுமணனை அழைத்தார். ‘லட்சுமணா. அரண்மனை வாசலுக்குப் போய் யாராவது நிற்கிறார்களா, பார்த்து வா’ என்றார்.

லட்சுமணருக்கு ஒரே ஆச்சரியம்!

ராம ராஜ்யத்தில் ஒரு குறை இருக்குமா, என்ன!

என்றாலும் அண்ணா சொல்கிறாரே போய்ப் பார்ப்போம் என்று வாசலுக்கு வந்து பார்த்தார்.

யாரையும் காணோம்.

திரும்பிச் சென்று ராமரிடம், ‘யாரும் இல்லை’, என்றார்.

இந்த முறை ராமர், “ நீ மீண்டும் சென்று கவனமாகப் பார்.” என்றார்.

லட்சுமணர் திரும்பி அரண்மனை வாயிலுக்கு வந்தார்.

யாரும் இல்லை.

ஆனால் அண்ணா கவனமாகப் பார்க்கச் சொல்லி இருக்கிறாரே!

கவனமாக லட்சுமணர் பார்த்தார்.

ஒரு நாய் வாலை ஆட்டிக் கொண்டு முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தது.

லட்சுமணர் அதன் அருகே சென்றார்.

“என்ன, எதாவது சொல்ல வேண்டுமா? உள்ளே வா!” என்றார்.

“சொல்ல வேண்டும். ஆனால் நாய்ப் பிறப்பான நாங்கள் அரண்மனைக்குள் வரலாமா, கூடாதே” என்றது நாய்.

“இல்லை, இல்லை, யார் வேண்டுமானாலும் வரலாம், வா, வா” என்று நாயை அழைத்துக் கொண்டு ராமரிடம் சென்றார்.

*

ராமர் நாயைக் கூர்ந்து பார்த்தார்.

அதன் மண்டையில் அடிபட்டதற்கான ரத்தக் காயங்கள் மூன்று இருந்தன.

திகைத்த ராமர், “என்ன ஆயிற்று? சொல், ஏன் மண்டையில் காயம்?” என்று பரிவுடன் கேட்டார்.

நாய் பேச ஆரம்பித்தது : “நான் ஒன்றுமே செய்யவில்லை. நடந்து வந்து கொண்டிருந்தேன். சர்வசித்தி என்ற பிராம்மணன் என் தலையில் அடித்தான். இப்படிக் காயங்கள் ஏற்பட்டன. நீங்கள் தான் நீதி வழங்க வேண்டும்” என்றது நாய்.

ராமர் அரசவையைக் கூட்டினார்.

அந்த சர்வசித்தி பிராம்மணனை உடனே அவைக்கு அழைத்து வர ஆணை பிறப்பித்தார்.

பிராமணனும் வந்து சேர்ந்தார்.

“ஏன் இப்படிச் செய்தீர்?” என்று ராமர் பிராமணனைக் கேட்டார்.

பிராமணன் ராமரைப் பார்த்து, “ஓ! ராமா! பசியோடு நடந்து வந்து கொண்டிருந்தேன். இந்த நாய் நடு வழியில் வந்து நின்று வாலை ஆட்டி என்னை ஏளனம் செய்வது போல நடந்து கொண்டது. கோபம் வந்தது. களைப்பு, பசி! என்ன செய்வதென்று தெரியவில்லை. அது நடந்து கொண்ட விதத்திற்காக அடித்தேன். சிறு காயங்கள் ஏற்பட்டு விட்டன” என்றார்.

அரசவையினர், பிராமணனை தண்டிக்கும் அளவு இது பெரிய குற்றமில்லை என்று அபிப்ராயப்பட்டனர்.

ஆனால் நாய் ராமரைப் பார்த்து, ‘நான் தண்டனையைச் சொல்லலாமா’ என்று கேட்டது.

ராமர் அனுமதிக்கவே நாய், “இந்த பிராமணனை காலாஞ்சர் மடத்தின் தலைவராக நியமித்து விடுங்கள்” என்றது.

அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

ப்ரம்மாண்டமான மடத்தின் அதிபதியாக அவரை அமர்த்துவதா?

ராமர் நாய் சொல்வதற்கு இணங்கினார்.

பிராம்மணன் நன்கு அலங்கரிக்கப்பட்டு பெரிய யானையின் மீது ஆசனத்தில் அமர்த்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

அவையினர் பலரும் நாயைப் பார்த்து, “ ஒரு சந்தேகம்! இது தண்டனை அல்ல, வரம்! எவ்வளவு பெரிய கௌரவம் இது. இதை தண்டனையாக எப்படி எடுத்துக் கொள்வது?” என்று கேட்டனர்.

*

நாய் பதில் அளிக்க ஆரம்பித்தது:

“நான் இந்த ஜன்மத்தில் நாய். போன ஜன்மத்தில் ஒரு பெரிய மடாதிபதி. எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன். ஆனால் அன்றாட வாழ்க்கையில் தேவ திரவியங்களை எடுத்துப் பயன்படுத்தினேன். உண்டேன். அதனால் தான் எனக்கு இந்த இழிபிறப்பு கிடைத்து விட்டது. ஆகவே பிராமணனுக்கு எனக்குத் தெரிந்த அளவில் சரியான தண்டனையைத் தான் கொடுத்திருக்கிறேன்.” – இப்படி பதில் சொல்லியது நாய்.

அனவைரும் விஷயத்தை நன்கு புரிந்து கொண்டனர்.

கோவில் சொத்தைக் கொள்ளை அடிப்போருக்கு உரித்தான நரகம் எது?

கோவில் தெய்வ சொத்தை துஷ்பிரயோகம் செய்வது, மனைவி, பிராமணர், மற்றவர் சொத்தை அபகரிப்பது, ஒரு மைனரின் சொத்தை அபகரிப்பது இப்படிப்பட்ட செயல் படுபாதகச் செயல். இதைச் செய்தவருக்கு அவிச்சின்ன நரகமும் நாய்ப் பிறப்பும் தான் கிடைக்கும்.

இதை அவையோர் உணர்ந்தனர்.

நாயைப் புகழ்ந்தனர். நாய் தன் வாலை நன்றியுடன் ஆட்டியது.

*

திராவிட மாடல் கோவில் சொத்துக் கொள்ளையர்களுக்கு என்ன கதி என்று இனி நாம் எண்ண வேண்டாம்.

வால்மீகி ராமாயணத்திலேயே பதில் இருக்கிறது.

சிவன் சொத்துக் குல நாசம் என்று வழி வழியாக நமது முன்னோர் கூறியதோடு கோவிலில் அர்ச்சகர் கொடுக்கும் விபூதியில் நெற்றியில் இட்டது போக மீதியை அங்கேயே கோவிலிலேயே விட்டு விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை இப்போது நினைக்கத் தோன்றுகிறது!

என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை முறை ஹிந்து வாழ்க்கை முறை!

கோவிலைக் காப்போம்! இறைவனின் உடைமைகளை துஷ் பிரயோகம் செய்ய அனுமதியோம் இனி! – கொள்ளையரின் நலன் கருதியே!!!!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: