.jpg)
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,837
Date uploaded in London – 25 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரக்ஞை பற்றி புத்தபிரானின் அருளுரை!
ச.நாகராஜன்
பிரக்ஞை என்பது எல்லா திசைகளிலும் ஊடுருவி எங்கு பரந்திருக்கும் பார்க்க முடியாதது, ஒளி மிக்கது, எல்லையற்றது –
இதுவே புத்தபிரான் பிரக்ஞையைப் பற்றி கூறி அருளிய உபதேச உரையாகும்.
அவர் ஆயிரக் கணக்கில் சித்திரங்களையும், உவமைகளையும் வெவ்வேறு வடிவங்களையும் தனது உரைகளில் வழங்குவது வழக்கம்.
ஏனெனில் மனிதர்கள் ஆயிரம் வகையினர்.
ஒருவருக்குச் சொன்னது இன்னொருவருக்குப் புரியாது.
ஆகவே கேட்பவர் மனநிலை, பக்குவத்திற்கு ஏற்ப அவர் உபதேச மொழிகளை அருள்வது வழக்கம்.
ஒரு முறை பிரக்ஞையைப் பற்றி அவர் கூறியது ஒரு சீடருக்குப் புரியவில்லை.
அவர் மனநிலையையும் பக்குவ நிலையையும் புரிந்து கொண்ட புத்தபிரான் அவரை நோக்கிக் கேட்டார்:
“ அப்பனே! கிழக்கு நோக்கி இருக்கும் சுவரைக் கொண்ட ஒரு வீட்டில், அந்த சுவரில் ஒரு ஜன்னலும் இருக்கும் போது, காலையில் சூரியன் உதிக்கும் போது, சூரிய ஒளியானது எங்கு விழும்?”
சீடர் யோசித்தார்,, பதில் சொன்னார் இப்படி: “மேற்குப் பக்க சுவரில்.”
புத்தர் கேட்டார்: “ மேற்குப் பக்கம் சுவரே இல்லை என்றால் சூரிய ஒளி எங்கு விழும்?”
சீடர் யோசித்துச் சொன்னார் : “நிலத்தில் விழும்”.
புத்தர் மேலும் கேட்டார் : “நிலமே இல்லை எனில் எங்கு விழும்?”
சீடர் கூறினார் : “நீரில் விழும்”.
புத்தர் : நீரும் இல்லை என்றால்?
சீடர் கூறினார் : “ நீரும் இல்லை என்றால் அது எங்கும் விழாது.
புத்தர் சந்தோஷத்துடன் கூறினார்: “சரியாகச் சொன்னாய். நமது இதயம் எப்போதும் பற்றி கொண்டிருக்கும் நான்கு சத்துணவுகளான உணவு, புலன் சார்ந்த தொடர்பு (பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல்), எண்ணம் மற்றும் பிரக்ஞை ஆகிய நான்கிலிருந்தும் விடுபடும் போது பிரக்ஞையானது எங்கும் விழாது. அந்த நிலை தான் துக்கம், பற்று, ஏமாற்றம் எதுவும் இல்லாத இடம், இதை தான் நான் உனக்குச் சொல்கிறேன்”
சீடன் நன்கு புரிந்து கொண்டான்.

ஒரு புத்த பிட்சு புத்தரை நோக்கி, “ஐயனே! பூமி, தீ, காற்று, நீர் ஆகியவை மங்கி மிதி மிச்சமில்லாமல் போய்விடும் இடம் எது? என்று கேட்டார்.
புத்தபிரான், “ நீ கேட்ட கேள்வி தவறு. அதை இப்படி மாற்றிக் கேட்டிருக்க வேண்டும். பூமி, தீ, காற்று, நீர் ஆகியவை இருக்க முடியாத இடம் எது? என்று கேள்.
எல்லையற்று எல்லா திசைகளிலும் உள்ள பார்க்க முடியாத, ஒளிர்கின்ற, எல்லையற்ற பிரக்ஞையில் அந்த நான்கும் உள்ளன. அந்த நான்கு பூதங்கள்(Elements), பெரியது, சிறியது, கரடு முரடானது, மிருதுவானது, சுத்தமானது, அசுத்தமானது எதற்கும் அங்கு இடமில்லை. அதில் தான் நாமமும் ரூபமும் ஒரு முடிவுக்கு வருகிறது. இந்த முற்றுப் பெற்ற நிலையில், பிரக்ஞை இல்லாத நிலையில், எல்லாமும் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது” என்றார்.
பிரக்ஞையைப் பற்றி ஆங்காங்கே சீடர்களுக்கு புத்தபிரான் பல அரிய ரகசியங்களை, பெரிய உண்மைகளை அருளியுள்ளார்.
அவை பிரக்ஞை பற்றிய தெளிவான உண்மையை நமக்கு நல்கும்!
***