
Post No. 11,838
Date uploaded in London – – 25 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

நதியின் போக்கையே திருப்பிவிட்ட ஆதி சங்கரர் முதலிய பெரியோரின் வாழ்க்கை பற்றி அறிவோம்.; நதி மீதே நடந்த ஆதி சங்கரரின் சீடர் பத்மபாதர் முதலிய பெரியோரின் வாழ்க்கை பற்றி அறிவோம்.. யமுனை நதியே பிளந்து வாசுதேவ கிருஷ்ணனுக்கு வழிவிட்ட அற்புதத்தையும் அறிவோம். அடியார்களுக்காக காவிரி நதி வெள்ளம் குறைந்து வழிவிட்ட செய்திகளையும் அறிவோம். இப்படி எவ்வளவோ விஷயங்களைப் படித்திருந்தாலும், வீட்டுக் கிணற்றில் கங்கை நதியைக் கொண்டுவந்த ஸ்ரீதர அய்யாவாள் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்காது ; தண்ணீர் அற்புதங்கள் ரிக் வேத காலம் முதல் நடந்து வருகிறது; விசுவாமித்திரர்- நதி சம்பாஷணை (RV 3-33) பற்றி முன்னரே கண்டோம்.
xxx
கிணற்றில் கங்கை நதி பெருக்கெடுத்து பொங்கிய அதிசயம் திருவிசை நல்லூர் என்ற கிராமத்தில் நடந்தது.
கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ.தூரத்தில் திருவிசை நல்லூர் இருக்கிறது.இங்கு திருமடமும் உற்சவ விக்கிரகமும் உள்ளன.
ஸ்ரீதர ஐயாவாள் பற்றி ஏற்கனவே இந்த பிளாக்கில் நாகராஜன் எழுதிய விஷயத்தை அப்படியே தருகிறேன்.என்னதான் பல அற்புதங்களைப் படித்தாலும், தலங்கள் பற்றிக் கேட்டிருந்தாலும் , அங்கே நேரில் சென்று அதைப் பார்க்கையில் தனி ஆனந்தம் கிடைக்கிறது. நாங்கள் நேரில் சென்றபோது (பிப்ரவரி 2023) அதிக கூட்டம் இல்லை. கிணற்றிலிருந்து நாங்களே தண்ணீரை இறைத்து தலையில் ப்ரோக்ஷ்ணம் செய்துகொண்டோம். மடத்திலுள்ள திருவுருவங்களை நமஸ்கரித்து, சிறிய காணிக்கை செலுத்திவிட்டு விடை பெற்றோம். ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசையில் நடக்கும் கங்கை நதி விழாவுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து அருளாசி பெறுகின்றனர்.
தண்ணீர் கரை புரண்டு ஓடினாலும் ஊற்று நீருக்குள்ள மஹிமை தனிதான். எங்கள் இங்கிலாந்தில் Mineral Water மினரல் வாட்டர் என்ற பெயரில் விற்கப்படும் ஊற்று நீரைத்தான் நாங்கள் விலைக்கு வாங்கிக் குடிக்கிறோம். அதில் எந்த ஊற்று நீர், எவ்வளவு ரசாயன உப்புகள் எந்த விகிதத்தில் உள்ளன என்று எழுதியும் இருப்பார்கள். அந்த ஊற்றின் மகிமைக்கு ஏற்ப விலையும் இருக்கும். அது போல சிறிய கிராமங்களில் கூட பெரிய மஹான்கள் அவதரித்து அற்புதம் புரிகின்றனர்.அப்படிப்பட்ட இடமான திருவிசை நல்லூரையும் கிணற்றையும் தரிசிக்கத் தவறாதீர்கள்
(இதிலுள்ள படங்களைக் காணத் தவறாதீர்கள்; Pictures are taken by me during my February 2023 visit))
Xxx
Following is taken from S Nagarajan’s article in this blog:
கங்கையிற் புனிதமாய காவிரி தீரம் கண்ட மகான்கள் பலர். அவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்கிறார் திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! இவர் 1635ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி பிறந்தார். 1720 இல் மறைந்தார்.
அற்புதமான இவர் சரித்திரம் பல அபூர்வமான நிகழ்ச்சிகளைக் கொண்டதாகும்.
தெலுங்கு பிராமணரான இவர் கர்நாடகத்தில் மைசூரில் தந்தை தாயுடன் வசித்து வந்தார். மைசூர் அரசாங்கத்தில் இவரது தந்தையார் லிங்கராயர் திவானாகப் பதவி வகித்து வந்தார். பெற்றோர்கள் காலமானவுடன் இவரை மைசூர் மஹாராஜா தன்னிடம் திவானாகப் பணி செய்ய அழைத்தார். ஆனால் இவருக்கோ அந்த ‘மன்னர் சேவகம்’ பிடிக்கவில்லை. மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட மைசூர் அரசர் அவருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவைக் கேள்விப்பட்ட ஸ்ரீதர ஐயாவாள் மன்னரின் வீரர்கள் தனது வீட்டிற்கு வந்து சேர்வதற்கு முன்பாகவே தனது வீட்டின் கதவுகளைத் திறந்து விட்டார். யாருக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார். அனைவரும் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ள அரசனின் வீரர்கள் அவர் இல்லம் வந்த போது அங்கு எடுத்துச் செல்லும்படியாக ஒன்றுமே இல்லை. ஸ்ரீதர ஐயாவாளும் அவரது மனைவி லக்ஷ்மியும் உஞ்சவிருத்தி ஜீவனம் செய்ய ஆரம்பித்தனர். இதைக் கேள்விப்பட்ட மைசூர் மன்னர் மனம் மிக வருந்தினார். தனது செயலுக்கு மன்னிக்க வேண்டும் என்று அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். அவர்களும் அரசனை மன்னித்து விட்டு மைசூரை விட்டுப் புறப்பட்டனர். தீர்த்த யாத்திரையை மேற்கொண்ட ஸ்ரீதர ஐயாவாள் திருச்சி, ஜம்புகேஸ்வரம், ஸ்ரீரங்கம் முதலிய ஸ்தலங்களை தரிசித்தார். திருச்சியில் மாத்ருபூதேஸ்வர சதகத்தைப் பாடி வழிபட்டார். ஒவ்வொரு ஸ்தலத்திலும் பாடல்களைப் பாடித் துதித்த அவர், சகாஜிராஜபுரம் என்று அழைக்கப்பட்ட திருவிசைநல்லூரை வந்து அடைந்தார். 1685ஆம் ஆண்டு முதல் 1712ம் ஆண்டு முடிய தஞ்சையை ஆண்ட இரண்டாம் ஷாஷி 45 வேத பண்டிதர்களுக்கு தானமாக அளித்ததால் இந்த ஊர் அந்தப் பெயரைப் பெற்றது. மிகவும் ரமயமான அந்த ஊர் அவரது மனதைக் கவரவே அங்கேயே தங்கலானார்.
தங்கள் ஊருக்கு வந்து தங்கியுள்ள மஹானின் மஹிமையை ஊரார் நன்கு உணர்ந்தனர். தஞ்சை அரசனான ஷாஜியை அணுகிய ஊர் மக்கள் தங்கள் ஊரில் வசிக்கும் மகானின் பெருமையைச் சொல்லி அவர் வாழ்வதற்காக ஒரு வேலி நிலத்தையும் ஒரு வீட்டையும் அளிக்குமாறு வேண்டினர். தஞ்சை அரசனும் மனமுவந்து அதை அளித்தார். ஊர் மக்கள் இதை ஸ்ரீதர ஐயாவாளிடம் சொன்னால் அவர் இதை ஏற்க மாட்டார் என்பதை அறிந்து அதைச் சொல்லாமல் அங்கேயே வசிக்குமாறு செய்தனர்.
தஞ்சையை ஆண்ட மன்னரான ஷாஜி ஸ்ரீதர ஐயாவாளைப் பெரிதும் போற்றி வணங்கியவர். ஐயாவாள் அவருக்குப் பல விதத்திலும் ஆலோசனை சொல்லுவது வழக்கம். அவரது பெருமையை உணர்த்தும் வண்ணம் அவரது வாழ்க்கை வரலாற்றை எட்டு சர்க்கம் அடங்கிய ஷாஷி ராஜ சரித்ரம் அல்லது ஷாஹேந்த்ர விலாஸம் என்ற நூலாக அவர் எழுதினார். அதில் அவர் ஷாஜியின் ராமேஸ்வர யாத்திரையைக் குறிப்பிடுகிறார். ஷாஜிக்காக அவர் பதமணி மஞ்சரி என்ற சம்ஸ்க்ருத அகராதி நூலையும் இயற்றினார்.
தினமும் உஞ்சவிருத்தி செய்து சாப்பிடுவது அவரது வழக்கமானது. பகலில் கர்கடேஸ்வரர் தரிசனம் செய்வதும் மாலையில் அருகில் உள்ள திருவிடைமருதூர் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் மஹாலிங்க ஸ்வாமியை தரிசிப்பதும் அவரது வழக்கம்.
தன்னிடம் வரும் மாணாக்கர்களுக்கு அவர் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுப்பார். நாட்கள் கழிந்தன. சிறந்த பாகவதோத்தமராகத் திகழ்ந்த அவர் நாமசங்கீர்த்தன மஹிமையை உலகெங்கும் பரப்பினார். தவளை ஒன்று கரக், கரக், கரக் என்று போடும் சத்தத்தில் கூட ஹர ஹர ஹர என்ற நாமம் தெரிவதாக அவர் கண்டார். ஐயாவாள் வாழ்ந்த சமகாலத்தில் சதாசிவ ப்ரஹ்மேந்திராள் மற்றும் போதேந்திர ஸ்வாமிகள் வாழ்ந்து வந்தனர். போதேந்திரர் திருவிசைநல்லூருக்கு மிக அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் இருந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்து நாம மஹிமை பற்றியும் இதர ஆன்மீக விஷயங்களையும் பற்றிப் பேசி அதை உரிய வகையில் மக்களுக்கு எடுத்துச் சொல்லலாயினர். செங்கோட்டை ஆவுடை அக்காள் உள்ளிட்டவர்கள் அவரிடமிருந்து நாம மஹிமையைக் கேட்டறிந்தனர். ஆவுடை அக்காள் தனது பாடல்களில் ஐயாவாளைக் குறிப்பிடுகிறார்.
Ganges Miracle
ஒரு நாள் தனது தாயாருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டியிருந்த தினத்தன்று காவேரிக்கு ஸ்நானம் செய்ய அவர் சென்றார். அங்கே வழியில் ஒரு தாழ்ந்த குலத்தவன் பசியால் வருந்தி இரண்டு நாட்கள் ஏதும் சாப்பிடாமல் வாடி இருந்ததைக் கண்டார். அவனைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து சிரார்த்தத்திற்காக சமைத்த உணவை அவனுக்கு அளித்து உண்ணுமாறு செய்தார். பசியாறிய அவன் திருப்தியுற்றான். ஆனால் இதைக் கண்ட ஊர் பிராமணர்கள் அவரது இல்லம் சென்று, “சிரார்த்த தினத்தன்று இப்படிச் செய்யலாமா? நீங்கள் சுத்தி செய்து கொண்டால் தான் உங்கள் வீட்டிற்குள் நாங்கள் நுழைவோம். கங்கையில் நீங்கள் ஸ்நானம் செய்ய வேண்டும்” என்று கண்டிப்பாகக் கூறினர்.
அவர் இறைவனைத் துதித்து கூர்ச்சத்தைப் போட்டு மந்திரங்களைச் சொல்ல திரிமூர்த்திகளும் பிராமணர்களாக வந்தனர். அவரும் சிரார்த்தத்தை முறையாகச் செய்து முடித்தார். இதைப் பார்த்த ஊரார் அதிசயித்தனர்.
ஊர் அபவாதம் நீங்க அவர் கங்கைக்கு யாத்திரையாகக் கிளம்ப யத்தனிக்க, கங்கை அவர் முன் தோன்றி, “நான் கார்த்திகை மாதம் அமாவாசையன்று உங்கள் இல்லத்திற்கு வருகிறேன்” என்று கூறி மறைந்தாள்.
கார்த்திகை அமாவாசை தினம் வந்தது. அன்று அவர் கிணற்றின் முன் நின்று கங்காஷ்டகத்தை இயற்றிப் பாட கங்கை கிணற்றில் புகுந்தாள். கிணற்றிலிருந்து கங்கை நீர் பெருகிப் பொங்கி வீட்டை நிறைத்து வெளியில் வீதியிலும் பிரவாகமாக ஓட ஆரம்பித்தது. எல்லோரும் அவரது மஹிமையை உணர்ந்தனர்.
இன்று வரை கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று அவரது இல்லத்தில் கங்கை வருவதும் பக்தர்கள் அங்கு ஸ்நானம் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.
xxxx
ஒரு சமயம், தஞ்சாவூரில் அவர் இருந்த போது ஒரு சிறு பையனைப் பாம்பு கடித்து விட்டது. அவன் இறந்து போனான். அவன் மீது கருணை கொண்ட அவர் 29 துதிப்பாடல்கள் அடங்கிய தாராவளி ஸ்துதி என்ற துதியை இயற்றிப் பாட பாம்பின் விஷம் கீழே இறங்கி கடிபட்ட பையன் உயிரைப் பெற்றான்.
இதனால் அவர் மஹிமையை உலகம் நன்கு உணர்ந்தது.
தினமும் மாலையில் மஹாலிங்க ஸ்வாமியையும் ப்ருஹத் சுந்தர குஜாம்பாளையும் அவர் தரிசித்து வரும் நாளில் ஐப்பசி மாதம் ஒரு நாள் மழை கொட்டு கொட்டென்று கொட்ட காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஐயாவாள் வெளியே செல்ல முடியாத அளவு மழை இருக்கவே அவர் மனம் மிக வருந்தினார். தரிசனம் முடிந்த பின்னரேயே உணவு அருந்துவது அவர் பழக்கம் என்பதால் உணவும் உண்ணாமல் அவர் தியானத்திலேயே இருந்தார். அப்போது இரவு நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க கதவைத் திறந்தார். அங்கு திருவிடைமருதூர் அர்ச்சகர் கையில் பிரசாதத் தட்டுடன் நின்று கொண்டிருந்தார்.
“நீங்கள் ஸ்வாமியை தரிசிக்காமல் உணவு உண்ணுவதில்லை என்பதை நான் அறிவேன். வீரசோழன் ஆற்றைக் கடக்க முடியாத நிலையில் இருப்பதும் எனக்குத் தெரியும். அதிர்ஷ்டவசமாக ஒரு படகுக்காரன் என்னை இங்கு கொண்டு வந்து விட்டான். இதோ, பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் அர்ச்சகர்.
மஹாலிங்க ஸ்வாமியின் கருணையை எண்ணி அதை எடுத்து உண்ட ஐயாவாள் அர்ச்சகரை வீட்டில் இரவு நேரத்தில் படுத்து உறங்க ஒரு போர்வையைக் கொடுத்தார்.
காலையில் அர்ச்சகரைக் காணோம். நேராகக் கோவில் சென்ற ஐயாவாள் குருக்களைக் கண்டு, “ என்ன, சொல்லாமல் கிளம்பி விட்டீர்களே” என்று சொல்ல அவர் திகைத்தார். “நான் வந்தால் அல்லவா சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும். நேற்று பெயத மழையில் நான் எப்படி உங்கள் இல்லத்திற்கு வர முடியும்?” என்று அவர் வியப்புடன் கேட்டார்.
அர்ச்சகருடன் அவர் கர்பக்ருஹம் சென்று பார்க்கையில் அவர் அர்ச்சகருக்கு அளித்த போர்வை அங்கு இருந்தது.

இறைவனே அர்ச்சகர் உருவில் அவர் இல்லம் எழுந்தருளியிருப்பதை அறிந்த அவர் விழிகளில் கண்ணீர் ததும்ப இறைவனின் கருணையை நினைத்து வழிபட்டார். அவர் நாவிலிருந்து தயா சதகம் என்ற அற்புத சதகம் வெளிப்பட்டது. இந்த சம்பவம் எங்கும் பரவ அவரது மஹிமை இன்னும் அதிகமாக மக்களால் உணரப்பட்டது.
–subham—
Tags- திருவிசைநல்லூர், கிணறு, கங்கை, ஸ்ரீதர ஐயாவாள் , அய்யாவாள்