
Post No. 11,848
Date uploaded in London – – 28 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பாதுகா பட்டாபிஷேகம் என்ற தலைப்பில் திருமுருக கிருபானந்த வாரியார் ஒரு ராமாயணச் சொற்பொழிவு நடத்தினார். அதில் துவக்கத்திலேயே இரண்டு அருமையான விஷயங்களை வழங்கினார்.
ராமனின் தலைக்கு மேல் இருந்தது மணி மகுடம். ராமனின் காலுக்கு அடியில் இருந்தது பாதுகைகள், அதாவது காலணி . இந்த இரண்டையும் இணைத்தான் பரதன் ; (பாதுகைகளை வைத்து 14 ஆண்டு அரசாண்டான்) ஆக, பாதுகா பட்டாபிஷேகத்தின் பொருளே, சமுதாயத்தில் மேலே உள்ளவர்களும் கீழே உள்ளவர்களும் இணைய வேண்டும் என்பதுதான். ஆட்சியாளர்களும் கீழ்மட்டத்திலுள்ளவர்களும் இணைந்து ஒன்றுபடவேண்டும் .
xxx
இடது கையை எதற்குப் பயன்படுத்துகிறோம் ? தூய்மை செய்ய, உடலைச் சுத்தப் படுத்தப் பயன்படுத்துகிறோம்.. வலது கையை எப்படி உபயோகிக்கிறோம் ? உண்ணுவதற்காக உபயோகிக்கிறோம் .
ஆனால் கோவிலுக்குப் போனவுடன் வலது கையுடன் இடது கையையும் இணைத்து இறைவனை வணங்குகிறோம். இரண்டுக்கும் சம மரியாதை .
எங்காவது அகில இந்திய இடது கைகள் மகாநாடு நடந்தது உண்டா? அங்கே அவர்கள் வாரத்துக்கு ஒருமுறை நாங்கள் வேலை செய்யமாட்டோம். நாங்களும் இடது கையை உண்ணுவதற்குப் பயன்படுத்துவோம் என்று தீர்மானங்களை நிறைவேற்றினவா? இல்லையே.!
இப்படி நமஸ்தே, வணக்கம் சொல்லி இரு கைகளையும் கூப்புவது ஏன்?
கீழான வேலை செய்வோரும் மேலான வேலை செய்வோரும் சமுதாயத்தில் இணைந்து செயல்படவேண்டும் என்பதே ய் இதன் பொருள்.
Xxx

எனது கருத்து
நமஸ்தே/ வணக்கம் பற்றி எவ்வளவோ தத்துவ விளக்கங்களைப் படித்து உள்ளோம்.
முதலில் ஒருவருக்கு ஒருவர் மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறோம். எவ்வளவு பெரியவர் ஆனாலும் அவர்களும் பதிலுக்கு நமஸ்தே சொல்லுவது அவர்களின் பணிவைக் காட்டுகிறது. மேலும் எல்லோரிடத்திலும் இறைவன் உள்ளான் என்ற இந்து மத தத்துவத்தை நமஸ்தே விளக்குகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்பதே இதன் பொருள். தமிழிலும் வணக்கம் என்பது அதையே குறிக்கிறது.
ஞானேஞ்த்ரியம் ஐந்தும் கர்மேந்த்ரியம் ஐந்தும் இணைந்து இறைவனை அடைவதைக் குறிக்கிறது என்றெல்லாம் தத்துவ விளக்கம் சொல்வதைவிட இழிவான வேலை செய்யும் இடது கையும் மேலான வேலை செய்யும் வலது கையும் இல்லாமல் உடல் இயங்காது. சமுதாயமும் அப்படித்தான். ஆனால் தாழ்வு, உயர்வு என்பதெல்லாம் நம் மனக் கற்பனையே என்பதே பொருத்தமாக இருக்கிறது.
வாரியார் சுவாமிகள் சொல்லுவது போல இடதுகைகள் மஹாநாடு கூட்டி ஸ்டிரைக் STRIKE செய்வதற்கு தீர்மானித்தாலோ அதே போல வலது கைகள் மகாநாடு கூட்டித் தீர்மானித்தாலோ என்ன ஆகும்?
இவையெல்லாம் தவறு என்பதை இரு கைகள் கூப்பி வணங்குவது காட்டுகிறது. நமஹ= வணங்குதல் என்ற சொல் வேத மந்திரங்களிலேயே இருக்கிறது.
CORONA DANGER
ஏனைய கலாசாரங்களில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவது, கன்னத்தில் முத்தமிட்டு அன்பைக் காட்டுவது எல்லாம் இருக்கிறது. இவை எல்லாம் சுகாதாரக் கேடானவை, நோய் பரப்பும் கருவிகள் என்பது CORONA கொரோனா என்னும் சீன வைரஸ் பரவியவுடன் தெரிந்தது. இப்போது நமஸ்தேயை உலகமே ஏற்கிறது .
வாரியார் சுவாமிகள் அளித்த விளக்கம் எல்லோருக்கும் புரியும். அவர்தம் உரைகளைக் கேட்டுப் பயன் அடைவோமாக!

Xxxx
வாரியார் நகைச் சுவை
மேலும் சில வாரியார் சொற்பொழிவுப் பொன்மொழிகள் :–
குளத்தில் இருந்தால் நீர்; அதுவே வியாபாரியின் குடத்தில் இருந்தால் மோர்!
xxx
கணவன் வீட்டுக்கு வந்தால் மனைவி பையைப் பார்ப்பாள்;
தாயோ அவனுடைய வயிற்றைப் பார்ப்பாள்
( என் மகன் சாப்பிட்டானானா , இல்லையா என்று கவலைப்படுவதால்)
xxx
கேதாரம் சென்றால் சேதாரம் வாராது
(கேதார்நாத் சிவனைப் பார்த்தால் அழிவே இல்லை)
xxx

எத்தனை வயது மகன் வீட்டுக்கு வந்தாலும் அம்மாவுக்கு அவன் குழந்தை
மனைவியோ கிழவன் வந்துவிட்டான்; அப்புறம் உன்னிடம் பேசுகிறேன் என்று அடுத்த வீட்டு அம்மணியிடம் சொல்லுவாள்
xxx
–subham—