
Post No. 11,850
Date uploaded in London – 29 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நித்யானந்த மர்மம்!
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா! – 2
ச.நாகராஜன்
ஜெனிவாவில் உள்ள ஐக்கியநாடுகளின் சபையில் அவ்வப்பொழுது பல மாநாடுகள், கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
சென்ற மாதம், பிப்ரவரி 2023இலும் அப்படிப்பட்ட கூட்டங்கள் நடைபெற்றன.
Committee on Economic, Social and Cultural Rights (CESCR) மற்றும் Committee on the Elimination of Discrimination against Women (CEDAW) ஆகியவற்றின் கூட்டங்களும் ஜெனிவாவில் யு.என். தலைமை அலுவலகத்தில் நடைபெற்றன.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பலாய்ஸ் வில்ஸன் (Palais Wilson Building) கட்டிடத்தில் மாநாடுகளின் பங்கு பெறுவோர், என் ஜி ஓக்கள், நிரந்தரமான குழுக்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை பல நாடுகளிலிருந்தும் வந்திருக்க, அந்த அறையே ஜே ஜே என்று இருந்தது.
அதில் ஒரு விசித்திரமான காட்சி இந்தத் தடவை இருந்தது. பத்து பன்னிரெண்டு பெண்மணிகள் ஆரஞ்சு வண்ண சேலைகளைக் கட்டிக் கொண்டு தங்க நகைகளை அணிந்து கொண்டு முடி அலங்காரம் செய்து கொண்டு திலகம் தீட்டிக் கொண்டு வந்திருந்தனர். அவர்கள் பின்னால் இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் இருந்த போர்டு ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா” என்று இருந்ததால் அந்த நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் அவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. விஜயபிரியா நித்யானந்தா தான் அந்த நாட்டின் நிரந்தர தூதுவர்.
அவர்கள் தங்களது சுப்ரீம் மதகுரு எப்படி எல்லாம் ஹிந்து விரோத சக்திகளால் கொடுமைப்படுத்தப் படுகிறார் என்று எடுத்துரைக்க ஆரம்பித்தனர்.
சோஷியல் மீடியா அசந்து போனது.
கைலாஸா நாடு இல்லவே இல்லையே உலக வரைபடத்தில்?
நித்யானந்தா தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடர் அருகே ஒரு இடத்தை வாங்கி ‘கைலாஸாவை’ நிர்மாணித்தார் என்று சொல்லப்படுகிறது.
ஈக்வேடாரோ அவர் வந்தது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டது.
ஆனால் எந்தத் தீவையுமோ அல்லது இடத்தையோ அவருக்கு விற்கவில்லை என்று உறுதிபடச் சொன்னது.
ஈக்வேடாருக்கு ஏன் நித்யானந்தா சென்றார்? அந்த நாட்டுடன் தேவையானோரை திருப்பி அழைக்கும் உடன்படிக்கையை இந்தியா செய்து கொள்ளவில்லை என்பது தான். ஆகவே அங்கு சென்று புகலிடமாக அதை அடைந்த ஒருவரை இந்தியாவிற்கு நினைத்தபடி மீண்டும் கொண்டு வர முடியாது.
அது சரி, ஐநா சபை கூட்டங்களில் கைலாஸா நாட்டினர் எப்படிக் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்?
இதற்கு ஐ நா அதிகாரிகள் பதில் கூறி விட்டனர்.
இது போன்ற கூட்டங்களில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், தங்கள் பிரச்சினைகளைப் பற்றி மனுக்களைத் தரலாம். அவற்றைப் பெற்ற பின்னர் அவற்றின் உண்மைத் தன்மை பற்றி அதற்கான குழுக்கள் ஆராயும் என்றனர் அவர்கள்.

VIJAYAPRIYA
இது ஒரு புறமிருக்க கைலாஸா நாடு அமெரிக்காவில் உள்ள 30 நகரங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது.
நெவார்க் நகரம் (Newark City) ‘Sister City’ ஒப்பந்தம் ஒன்றை கைலாஸா நாட்டுடன் செய்து அலுவலக சீல் சகிதம் நிறைவேற்றியுள்ளது.
ஒப்பந்தம் முடிந்த ஆறாம் நாளில் தான் அந்த நகரம் கைலாஸா நாடு பற்றிய ‘உண்மையை’ அறிந்து திகைத்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று அறிந்து சங்கடப்பட்டது.
ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அனுப்பிய கைலாஸா நாட்டு ஈமெயில் தாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை என்று தெளிவு படுத்தியுள்ளது.
கைலாஸா நாடு எல்லையே இல்லாத சேவையையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு உண்மையான நாடு என்று அது தெளிவுபடுத்தியது.
கைலாஸா நாடு ஒவ்வொரு ஆண்டும் வரும் ஜனவரி 3ஆம் தேதியை நித்யானந்தா டே என்று அறிவித்துள்ளது.
கைலாஸா நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் அதன் அதிகாரபூர்வமான விமான சர்வீஸான கருடாவில் ஏறிச் செல்லலாம்.
மூன்று நாட்கள் தங்கலாம்.
தங்குமிடம், உணவு இலவசம்.
பாஸ்போர்ட், விசா எல்லாம் உண்டு.
என்றாலும் கூட கோவிட் பாதிப்பு உலகையே கலக்கிய காலத்தில் இந்தப் பயண அனுமதி நிறுத்தப்பட்டது.
யார் என்ன சொன்னாலும் நித்யானந்தாவின் உறுதியான சீடர்கள் உலகெங்கும் உள்ளனர். சென்னையிலும் உள்ளனர்.
அவர்களில் பலர் – பெண்மணிகள் உட்பட – நித்யானந்தாவின் உருவத்தைத் தங்கள் கைகளில் பச்சை குத்திக் கொண்டுள்ளனர்.
உலகின் ஒரே ஹிந்து தேசம் என்று தன்னை உறுதிபடச் சொல்லும் கைலாஸா தங்கள் நாடு சிறந்த முறையில் திறம்பட உலக நன்மைக்காக இயங்குகிறது என்று கூறுகிறது.
**
நன்றி, ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை, 26-3-2023 இதழ்
கட்டுரை தலைப்பு:
“Decoding the fictional country of Kailasa that catfished 30 US cities”
By Mohua.Das@timesgroup.com இந்தக் குறுந்தொடர் முற்றும்