
Post No. 11,851
Date uploaded in London – – 29 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

திருவண்ணாமலைக்கு எத்தனையோ முறை போய்விட்டேன். ஆனால் 2022 இந்திய விஜயத்தின்போது நான் உள்ளே நுழையும் போது சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமக் கதவைப் பூட்டிவிட்டார்கள். எல்லோரும் தட்டு நிறைய தயிர் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். என்னையும் என் மனைவியையும் பிரசாதம் வாங்கிக் கொள்ளுங்கள், முடியப்போகிறது என்று சொன்னார்கள். நாங்கள் சென்றதோ அருட் பிரசாதத்துக்கு; பொருட் ப்ரசாதத்துக்கு அன்று. ஆகையால் உள்ளே சென்று கம்புக்கிராதி வழியாக பூட்டிய சந்நிதியைப் பார்த்தோம். திருப்தி இல்லை.
ஆகையால் 2023 பிப்ரவரி இந்திய விஜயத்தின்போது , ஒரே நோக்கத்தோடு, சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரம தரிசனம் என்னும் ஒரே நோக்கத்தோடு ,காரை எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து பறந்தோம். என்னுடன் வர வேண்டியவர்களால் வர முடியவில்லை. ஆக நானும் டிரைவரும் மட்டும்தான்.
திருவண்ணாமலையில் இரண்டே மணி நேரத்துக்குள் என்ன செய்ய முடியும் என்று திட்ட மிட்டோம். மாலை 3 மணிக்குப்பின்னர் அண்ணாமலை குன்றினை காரிலிருந்து தரிசித்தோம். ரமணாஸ்ரமம் இரண்டு மணிக்கே திறக்கும் என்பதால் முதலில் ராமணருடைய ஆசிரமத்துக்குள் நுழைந்தேன்.
இந்த முறை இந்தியப்பயணத்தில் வினோத அனுபவங்கள்; நான் சென்ற 30 கோவில்களில் ஆகம ரீதியிலான பக்தி மார்க்கம் . அதாவது தேங்காய், பூ, பழம் , தட்டு, நெய் தீப ஆராதனை (Ritual worship)முதலியன.
கோவிந்தபுரம் முதலிய இட ங்களிலோ ஆட்ட பாட்டங்களுடன் (Dance and Music) சேர்ந்த பஜனை வழி பக்தி. இது முன்னர் சொன்னதிலிருந்து வேறுபட்டது.
ரமண ஆச்ரமத்திலோ வித்தியாசமான ஞான மார்க்கம். அவரது சமாதிக்கு முன்னர் தியான மண்டபத்தில் (Meditation) உட்கார்ந்துகொண்டு “நான் யார் ? Who am I ? என்று சிந்திக்க வேண்டும். மெளனமான தியானத்தின் மூலமே ஆனந்தம் பெறலாம். மனத்தை உட்புறமாகத் திருப்பி உன்னையே நீ எண்ணிப்பார் ; நாம் எல்லோரும் பிறந்ததே ஆனந்தத்துடன்தான். அதைத் தேடத் தேவையே இல்லை . மூடி மறைத்ததுள்ள திரைகளை அகற்றினால் போதும்” என்ற உபதேசம்.
நானும் தியான மண்டபத்தில் அமர்ந்து சுமார் 50 பேருடன் அரை மணி நேரம் தியானம், துதிப்பாடல் மனனம் ஆகியவற்றைச் செய்துமுடித்தேன்.
எனக்குப் பின்பக்கத்தில், தியான மண்டபத்தில், ஒரு நாய் மிகவும் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது. யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் மட்டும் அவ்வப்போது திரும்பிப் பார்த்துக்கொண்டே தியானம் செய்தேன் . வழக்கமான விஷ்ணு சஹஸ்ர நாமம் முதலியவற்றைப் படித்தேன்
முதல் தடவையாக ரமண ஆஸ்ரமம் முழுவதையும் சுற்றிப்பார்த்தேன் காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் மலையும் கடலும் எங்கள் கூட்டம் என்ற பாரதி வாக்கினை அங்கே செயலில் கண்டேன் . ரமணர் நேசித்த பல பிராணிகளின் சமாதிகள் பின்புறத்தில் மண்டபங்களுடன் அமைக்கப்பட்டிருந்தன . காகத்தின்(Crow ) சமாதியையும் பல பிராணிகளின்
சமாதிகளையும் கண்டேன் . அங்கு ரமண பக்தர்களின் சமாதிகளும் இருக்கின்றன .
ரமணர் தொடர்பாக என் தந்தை வாங்கிச் சேகரித்த பொக்கிஷம் அனைத்தும் என் சகோதரர்களிடம் இந்தியாவில் இருந்ததால், லண்டனுக்கு எடுத்துவர, ஒரு தமிழ், ஒரு ஆங்கிலப் பொன்மொழி புத்தகங்களையும் அங்குள்ள புத்தகக கடையில் வாங்கினேன். அருமையான புத்தகங்கள். (அதிலுள்ள தமிழ் ஆங்கிலப் பொன் மொழிகளை போன மாத, இந்த மாத காலண்டர் பகுதியில் என் பிளாக் BLOG குகளில் காணலாம் ).

மணி 4 ஆகிவிட்டது. சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் GATE கேட் திறந்தவுடன் முதல் ஆளாக உள்ளே நுழைந்தேன். என்னுடன் 3, 4 பேர் மட்டுமே இருந்தனர் . அவருடைய சமாதி அமைந்த கோவில் இது. பல முறை அவரது கோவிலை வலம் வந்தேன் அலுவலத்துக்குச் சென்று காணிக்கை செலுத்தி ரசீதும் பிரசாதமும் பெற்றுக்கொண்டேன் . பரம திருப்தி
சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கை முழுதுமே அற்புதச் செயல்கள் நிறைந்தது; இதே பிளாக்கில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய கட்டுரைகள் இருப்பதால் ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் வரலாற்று அற்புதங்களைத் திருப்பி எழுதத் தேவை இல்லை..
அங்கு உமாதேவியார் , கண்ணாடி சுவாமிகள் என்று பல பக்தர்கள், சித்தர்களின் சமாதிகளும் இருக்கின்றன .

அவரை நம்பி வேண்டிக்கொண்டபோது எனக்கும் அவை நிறைவேறியதால் அபரிமித நம்பிக்கை. அவருடைய வரலாற்றை முறையாக விவரிக்கும் சேஷாத்ரி சுவாமிகள் சரிதத்தை எனது அண்ணன் சீனிவாசன் எப்போதும் படித்து எங்களுக்குச் சொல்லுவான். ஏய் , உன் பைபிள் எங்கே? என்று கிண்டல் செய்வோம். அந்த ஒரிஜினல் புஸ்தகம் இப்போது கிடைப்பதில்லை.. ஆக 60 ஆண்டுக்கால பக்தர்கள் நாங்கள். ரமண மகரிஷி புஸ்தகங்களையும் எனது தந்தை தினமணி சந்தானம் வாங்கிக் குவித்து வைத்திருந்தார்.
60, 65 ஆண்டுகளுக்கு முன்னர், மதுரையிலுள்ள சொக்கப்ப நாயக்கன் தெரு ரமணர் வீட்டில் உட்கார்ந்து தியானம் செய்தபோதும் அவருடைய உபதேசங்களை இப்போதுதான் படிக்கிறேன்.
இன்னும் விட்டுப்போன ஒரே ஆஸ்ரமம் யோகி ராம் சுரத் குமார் ஆஸ்ரம ம்தான் .
பின்னர் நேராக திருவண்ணாமலைக் கோவிலில் நுழைந்தேன். பல முறை தரிசித்த கோவில் என்பதால் நேராக சுவாமி, அம்மன் சந்நிதிகளைத் தரிசித்துவிட்டு சென்னை திரும்பினேன்.

பிரம்மாண்டமான கோவில். எனக்கு அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும். எப்படி எனில் ……………
லண்டன் அருகிலுள்ள ஒரு ஊரில் வசிக்கும் ஈஸ்வரி கமல பாஸ்கரன் என்ற இந்துப் பெயருடைய ஒரு ஆங்கிலப் பெண்மணி திருவண்ணாமலை கோவில் பற்றி எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்துக் கொஞ்சம் புண்ணியம் சம்பாதித்து இருந்தேன். அதில் எழுதிய விவரங்கள் எல்லாம் வேகமாக மனத்திரையில் ஓடின.
சென்ற முறை கிரிவலம் பற்றி எழுதி புகைப்படங்களையும் இங்கே போட்டிருக்கிறேன்.
அண்ணாமலைக்கு அரோஹரா என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறி ‘சிட்’ டாகப்பறந்தேன் சென்னைக்கு.
–சுபம்—
Tags- திருவண்ணாமலை, கோவில், ரமண, ஆஸ்ரமம் , சேஷாத்ரி சுவாமிகள்