
Post No. 11,854
Date uploaded in London – – 30 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பண்டிகை நாட்கள்- ஏப்ரல் 4- மஹாவீர் ஜயந்தி , 5- பங்குனி உத்திரம் , 7-புனித வெள்ளி 9- ஈஸ்டர் , 14-தமிழ் புத்தாண்டு தினம் , 22-ரம்ஜான் , 23- அக்ஷய திருதியை , 25- ஆதி சங்கர ஜயந்தி
பெளர்ணமி -5; அமாவாசை – 19; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 1,16
சுப முகூர்த்த தினங்கள் – ஏப்ரல் 10,23, 26, 27
சென்ற மாத காலண்டரில் 31 ரமணர் பொன்மொழிகளைக் கண்டோம்; இதோ ரமண மஹரிஷியின் மேலும் 30 தெய்வீக அருள்மொழிகள்:
Xxx
ரமணரின் அருள் வாக்குகள்
ஏப்ரல் 1 சனிக் கிழமை
மனத்தை உள்நோக்கிச் செலுத்துவது என்பது பயிற்சியினாலும் வைராக்கியத்தினாலும் கிட்டும் . அது படிப்படியாக வெற்றி தரும்.
xxx
ஏப்ரல் 2 ஞாயிற்றுக் கிழமை
என்னால் மனத்தை ஒருமுகப்படுத்த முடியவில்லை என்ற எண்ணமே ஒரு தடைதான்.அந்த எண்ணம் ஏன் எழவேண்டும்?
Xxx
ஏப்ரல் 3 திங்கட் கிழமை
தன்னை உணர தெய்வீக அருள் கட்டாயம் தேவை. உண்மையான பக்தனுக்கு அல்லது யோகிக்கு மட்டுமே அருள் கிட்டும் . விடுதலைப் பாதையில் கடுமையாக உழைப்பவர்க்கே அது தரப்படுகிறது .
xxx
ஏப்ரல் 4 செவ்வாய்க் கிழமை
அருள் எப்போதும் உண்டு; ஆனால் பயிற்சியும் அவசியம். முயற்சி செய்து ஆன்மாவில் நிலைத்தல் என்பது , அடங்காது திரியும் காளைமாட்டைப் புல்லைக்காட்டித் தறியில் கட்டிவைப்பது போன்றது.
xxx
ஏப்ரல் 5 புதன் கிழமை
நாம் முயற்சி செய்யவும் வேண்டும்.குருவின் உதவியும் நமக்குக் கட்டாயம் தேவை
xxx
ஏப்ரல் 6 வியாழக் கிழமை
சிலர் வந்தவுடனேயே ஞானியாக நினைக்கின்றனர்.. அதற்கான முயற்சியை அவர்கள் ஒதுக்கிவிடுகின்றனர்.
xxx
ஏப்ரல் 7 வெள்ளிக் கிழமை
மோக்ஷத்திற்குக் குறுக்கு வழி உண்டா என்ன? அது என்ன கடையில் விலைக்கு வாங்கக் கூடிய பொருளா ?
xxx
ஏப்ரல் 8 சனிக் கிழமை
தியானிக்கும்போது தூக்கம் வருகிறது என்கிறீர்கள்.தூங்க ஆரம்பித்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.ஆனால் விழித்து இருக்கும்போது எல்லா எண்ணங்களிலிருந்தும் விலகியிருக்க முயற்சி செய்யுங்கள் .
xxx
ஏப்ரல் 9 ஞாயிற்றுக் கிழமை
தூங்குவதற்கு முன்னர் உள்ளநிலை தூங்கி விழித்த பின்னர் தொடரும். தூங்கத் தொடங்கும்போது எங்கே விட்டீர்களோ அங்கு தொடர்வீர்கள்.
xxx

ஏப்ரல் 10 திங்கட் கிழமை
செயல்படும் எண்ணங்கள் இருக்கும் வரை தூக்கமும் உண்டு ; எண்ணமும் தூக்கமும் ஒரே பொருளின் இரு பக்கங்கள்.
xxx
ஏப்ரல் 11 செவ்வாய்க் கிழமை
நாம் அதிகமாகவும் தூங்கக்கூடாது ; தூங்காமலும் இருக்கக்கூடாது . மிதமாகத் தூங்க வேண்டும் . எண்ணங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.சத்துவ குணத்தை வளர்க்கும் உணவினை அளவாக உண்ண வேண்டும். அதிகமான உடல் செய்கைகளில் ஈடுபடக்கூடாது .
xxx
ஏப்ரல் 12 புதன் கிழமை
தூக்கம்தான் முதல் தடை; இரண்டாவது நம் கவனத்தை ஈர்க்கும் உலகப் பொருட்கள்; மூன்றாவது, பழைய அனுபவங்களை பற்றிய எண்ணங்கள். நாலாவது தடை, ஆனந்தம். அந்த நிலையிலும் நான் அனுபவிக்கிறேன் என்ற எண்ணம் இருக்கும் . இறுதியில் சமாதி நிலைய அடையும்போது உண்மையான ஆனந்தத்தில் மூழ்கி விடுவோம்.
Xxx
ஏப்ரல் 13 வியாழக் கிழமை
சாதுக்களின் சத் சங்கம் கிடைத்து விட்டால் பின்னர் சமயச் சடங்குகள் எதற்கு? குளிர்ந்த தென்றல் வீசும்போது கை விசிறியால் என்ன பயன்?
Xxx
ஏப்ரல் 14 வெள்ளிக் கிழமை
குளிர்ந்த சந்திரன் வெப்பத்தைப் போக்கும். கற்பக மரம் வறுமையை நீக்கும். கங்கை நதி பாவங்களைப் போக்கும். ஆனால் ஒப்புயர்வற்ற சாதுக்கள் தரிசனத்தாலேயே இவை எல்லாம் நடக்கும்.
xxx
ஏப்ரல் 15 சனிக் கிழமை
மிதக்கும் பொருள் மூழ்க வேண்டுமானால் அதன் மீது கனமான எடையை வைக்க வேண்டும் . அது போல சாதுக்கள் சங்கம் மனத்தை இதயத்தில் ஆழ்த்திவிடும்.
xxx
ஏப்ரல் 16 ஞாயிற்றுக் கிழமை
சத் சங்கத்தால் உலகத் தொடர்புகள் நீங்கும். அதனால் மனத்திலிருந்து வாசனைகள் அழியும்.. அவை செயலற்றுப் போகும்.ஆகவே சீவன் முக்தி உண்டாகிறது .
xxx
ஏப்ரல் 17 திங்கட் கிழமை
மூர்த்திகளும் தீர்த்தங்களும் மகாத்மாக்களோடு ஒப்புமை ஆக மாட்டா . ஆ, என்ன ஆச்சரியம்! மூர்த்திகளும் தீர்த்தங்களும் பல நாட்களுக்குப் பின்னரே மனத் தூய்மையை அளிக்கின்றன.ஆனால் சாதுக்களைத் தரிசித்த உடனேயே மனது தூய்மை அடையும் .
Xxxx
ஏப்ரல் 18 செவ்வாய்க் கிழமை
குருநாதரின் சந்நிதியில் வாசனைகள் வலுவிழக்கின்றன. மனம் நிச்சலமாகிறது. சமாதி வாய்க்கிறது. ஆகவே குருவின் சந்நிதியில் சீடன், உண்மை அறிவும் சரியான அனுபவமும் பெறுகிறான். அதில் அசையாது நிற்க மேலும் முயற்சி தேவை.
xxx
ஏப்ரல் 19 புதன் கிழமை
தம்மை உணர்ந்த ஞானிகளோடு தொடர்பு கொள்ளுவதால் ஒருவர் படிப்படியாக அறியாமையை இழக்கிறார். இறுதியில் அறியாமை முற்றும் நீங்குகிறது. பின் நித்திய ஆத்மா வெளிப்படுகிறது.
xxx

ஏப்ரல் 20 வியாழக் கிழமை
நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு .அவரிடத்து, சாந்தி, மன்னிக்கும் மனப்பாங்கு, பொறுமை போன்ற நல்ல குணங்கள் அமைந்திருக்க வேண்டும் .
xxx
ஏப்ரல் 21 வெள்ளிக் கிழமை
கனவில் சிங்கத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே யானை விழித்துக்கொள்ளும். . அது போல குருவின் அருட்பார்வை மூலம், சீடன் அறியாமை என்னும் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்கிறான் .
xxx
ஏப்ரல் 22 சனிக் கிழமை
அருளின் உயர்ந்த வடிவம் மெளனம் .அதுவே மிக உயர்ந்த ஆன்மீக உபதேசம் . மற்ற எல்லா உபதேசங்களும் மெளனத்திலிருந்தே பெறப்படுகின்றன .
xxx
ஏப்ரல் 23 ஞாயிற்றுக் கிழமை
மெளன விரதம் என்பது ஒரு விரதமே. அது தியானத்திற்கு ஓரளவு உதவும். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்வதில் என்ன பலன்?
xxx
ஏப்ரல் 24 திங்கட் கிழமை
எந்த நிலையில் நான் என்ற எண்ணம் சிறிதுகூட எழவில்லையோ அது மெளனம் என்கின்றனர் முனிவர்கள்.
xxx
ஏப்ரல் 25 செவ்வாய்க் கிழமை
மெளனமே சிறந்ததும் மிக வலிமை வாய்ந்ததுமான தீக்ஷை . தக்ஷிணாமூர்த்தி அனுஷ்டித்ததுவும் அதுவே .ஸ்பர்ச தீக்ஷை, சக்ஷு தீக்ஷைஆகியவை அதைவிடத் தரம் குறைந்தவையே .மெளன தீக்ஷை, எல்லோர் இதயங்களையும் மாற்றிவிடும் .
xxx
ஏப்ரல் 26 புதன் கிழமை
எண்ணமில்லாது இருக்கும்போது உலகப் பொதுமொழியாம் மெளனத்தால் நாம் ஒருவர் மற்றொருவரைப் புரிந்து கொள்கிறோம்.பல ஆண்டுகள் வாத்தைகளால் புரியவைக்க முடியாததை மெளனத்தின் மூலம் உடனே புரியவைக்கலாம் . இதற்கு தக்ஷிணாமூர்த்தி சிறந்த எடுத்துக்காட்டு .
xxx
ஏப்ரல் 27 வியாழக் கிழமை
மெளனமே மிக உயர்ந்ததும் மிகப் பயன் தருவதுமான மொழி.
xxx
ஏப்ரல் 28 வெள்ளிக் கிழமை
நான் செய்கிறேன் என்ற எண்ணம் இருக்கும்வரை செயலின் பயனை, அது நல்லதோ கெட்டதோ, அனுபவித்தே ஆக வேண்டும்.
சுதந்திரமும் விதியும் யாருக்கு என்று கண்டுபிடி. அவை அப்போது வெல்லப்படும்.
xxx

ஏப்ரல் 29 சனிக் கிழமை
குரு கட்டாயமாகத் தேவை. புத்தியாலும் பொறி புலன்களாலும் ஆன கட்டிலிருந்து மனிதனை விடுவிக்க குருவால் மட்டுமே முடியும் என்று உபநிஷதங்கள் உரைக்கின்றன.
xxx
ஏப்ரல் 30 ஞாயிற்றுக் கிழமை
குரு, ஆத்ம சாட்சாத்காரத்தைக் கொண்டு வருவதில்லை. மாறாக அதற்கான தடைகளை அகற்றுகிறார்.
— subham —
Tags – தூக்கம், தடைகள் , தியானம், ரமணர், பொன்மொழிகள், ஏப்ரல் 2023, காலண்டர், மெளனம், குரு , சத்சங்கம் ,ஞானி,