
Post No. 11,874
Date uploaded in London – 6 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்லோகமும் சோகமும்!
ச.நாகராஜன்
ஸ்லோகம் சோகமாவது எப்போது?
ஒரு ஸ்லோகம் எப்போது சோபிக்கிறது? அதைச் சொல்பவர் அழகாகச் சொல்ல வேண்டும்; அவர் சொல்லும் போது ஒருவர் அதைக் கேட்க வேண்டும்.
ரசித்துக் கேட்டு அவரைப் பாராட்டவும் வேண்டும்.
இப்படி இல்லையெனில் ஸ்லோகம் என்ற சம்ஸ்கிரத வார்த்தையில் இருக்கும் ‘ல’ என்ற எழுத்தை நீக்கி விட வேண்டியது தான்.
இந்த ‘ல’ எழுத்தை நீக்கி விட்டால் ஸ்லோகம் சோகம் என்ற வார்த்தையாக ஆகி விடும்.
இப்படிக் கூறும் சுபாஷிதத்தைப் பார்ப்போம்:
ஸ்லோக: சுஸ்லோகானாம் யாதி சதி ச்ரோதரி வக்தரி |
யதி ச்ரோதா ந வக்தா வா லகாரஸ்தத்ர லுப்யதே ||
பொருள் : ஒரு ஸ்லோகமானது அதைச் சொல்பவரும் கேட்பவரும் இருக்கும் போது நன்றாக இருக்கிறது. அதைச் சொல்ல ஒருவர் இல்லை, கேட்கவும் ஒருவர் இல்லை என்னும் போது ஸ்லோகத்தில் உள்ள ல என்ற எழுத்தை நீக்கி விட்டு அதைச் சொல்ல வேண்டியது தான்.
ஸ்லோகம் சம்ஸ்க்ருத விதிப்படி சோகம் ஆகி விடும்!
கவிஞனின் புலம்பல்!
“அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்”
என்று வருந்திப் புலம்பினான் மாபெரும் கவிஞன் பாரதி.
கவிஞனின் உளத்தை அறிந்து கவிதையை ரசிப்பவே உண்மையான கவிதா ரஸிகன்.
நான்கு முகம் படைத்த பிரம்மாவே, நீ விரும்புகின்றபடி எனக்கு நூற்றுக் கணக்கான கவலைகளைக் கொடு, அரஸிகனாக இருப்பவனுக்கு கவிதை சொல்லித் தருவதைத் தவிர! இந்த சாபத்தை மட்டும் என் தலையில் எழுதி விடாதே!
இது தான் பிரம்மாவிடம் ஒரு கவிஞனின் வேண்டுதல்.
சுபாஷித கவிதையைப் பார்ப்போம்:

இதரதாபஷதாநி யதேச்சயா விதர தானி சஹே சதுரானன |
அரஸிகேஷு கவித்வநிவேதனம் சிரஸி மா லிக மா லிக ||
இதை மட்டும் எழுதி விடாதே, எழுதி விடாதே – மா லிக, மா லிக, என்று புலம்பும் கவிஞன் எத்தனை வேதனைப் பட்டிருக்க வேண்டும் கவிதையை உண்மையாக ரஸிக்கத் தெரியாதவரிடம் நல்ல கவிதையைச் சொல்லியதால்.
செயலில்லாத அறிவால் என்ன பயன்?
செயலில்லாத அறிவு ஒரு நொண்டியின் இயக்கம் போலத் தான். அவனால் எங்கும் செல்லவும் முடியாது எதையும் சாதிக்கவும் முடியாது. ஆகவே அறிந்தவன் அறிந்ததை நல்ல செயலில் காட்ட வேண்டும்.
கர்மணா ரஹிதம் ஞானம் பட்குணா சத்ருஷம் பவேத் |
ந தேன ப்ராப்யதே கிஞ்சித் ந ச கிஞ்சித்ப்ரசாத்யதே ||
ஞானமானது கர்மம் – செயல் -இல்லாமல் இருக்கக் கூடாது. அறிந்ததை நல்ல விதமாக செயலில் காட்ட வேண்டும்.
செயலும் செய்பவனும் பிரிக்க முடியாத ஜோடி
ஒரு செயலைச் செய்பவனையும் அவனது செயலையும் எவராலும் பிரிக்க முடியாது. செய்ததை செய்பவன் – நல்ல கர்மமாக இருந்தாலும், தீய கர்மமாக இருந்தாலும் – அனுபவித்தே ஆக வேண்டும்.
இதோ ஒரு சுபாஷிதம்:
யதா சாயாதபௌ நித்யம் சம்பத்தௌ ச பரஸ்பரம் |
த்த்தத் கர்ம ச கர்த்தா ச சுசம்ப்பத்தௌ பரஸ்பரம் ||
சூரியனின் ஒளியையும் நிழலையும் பிரிக்கவே முடியாது.
அதை இங்கு கவிஞர் உதாரணமாகக் காட்டுகிறார்.
எப்படி ஒரு நிழலும் சூரிய ஒளியும் பரஸ்பரம் நிரந்தரமாக தொடர்பைக் கொண்டிருக்கிறதோ அதே போல செயலும் அதைச் செய்பவனும் பரஸ்பரம் தொடர்பைக் கொண்டுள்ளவராவர்.
ஸ்லோகம் சிறிது; அது தரும் கர்ம விளக்கமோ பெரிது!
***