
Post No. 11,877
Date uploaded in London – 7 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் எண் 83
வாரணவாகனனையும் வென்ற வாரணவாசி?!
ச.நாகராஜன்
பழைய காலத்தில் மன்னராட்சியின் போது அனைத்து நாட்டதிகாரிகளும் சிலம்ப வித்தையில் தேர்ந்திருப்பர். நாட்டுப்படை ஆக்கியும் வைத்திருப்பர்.
இப்படிப்பட்ட வீரர் தம் குடும்பங்களில் கொங்கு மண்டலத்தில் கட்டி முதலி என்ற குடும்பம் குறிப்பிடத் தகுந்த ஒன்றாக இருந்தது.
இவர்கள் தாரமங்கலம், அமரகுந்தி நகரங்களைத் தலைநகரங்களாகக் கொண்டிருந்தனர்.
தொண்டை மண்டல வேளாளர் இளமன் கட்டி கட்டியதால் இளமீசுரர் கோவில் என ஒரு சிவாலயம் தாரமங்கலத்தில் உள்ளது.
இந்தக் கோவிலப் பற்றிய பல சாசனங்கள் உள்ளன.
ஔசல ராமநாத ராஜாவின் அரசியல் ஆண்டு 14-20 (கி.பி. 1268;1274) சாசனங்களும் இரண்டாவது ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி. 1281, 1289,1290,1302) ஆண்டுகளின் சாசனங்களும் இளமீசுரர் கோவிலில் இருப்பதால் சாசன காலங்களுக்கு முற்காலத்திலேயே கட்டி முதலி சந்ததியினர் சிவாலயத் திருப்பணி செய்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.
தார மங்கலம் கைலாசநாதர் கோவிலி மும்முடிக்கட்டி முதலியாலும் சீயால கட்டி முதலியாலும் முறையே செய்யப்பட்டு வணங்கா முடிக் கட்டி முதலியால் முடிவு பெற்றது.
இந்த வணங்காமுடிக் கட்டி முதலி பெரும் பெயரும் புகழும் பெற்றவன்.
அந்தக் காலத்தில் மேல்கரைப்பூந்துறை நாட்டுக்குத் தலைவனாக வாரணவாசி என்பவன் திகழ்ந்தான். அவன் இப்படிப்பட்ட பெரும் கட்டி முதலியை வென்று பெரும் புகழ் பெற்றான்.
இவனைப் பற்றி கொங்கு மண்டல சதகம் 83ஆம் பாடலில் காணலாம்.
வாரண வாகன நோவென மன்னர் மனமதிக்குங்
காரண வான்வணங் காமுடிக் கட்டி கனத்தபடை
பூரண வாகினி யுஞ்சிரந் தாழப் பொருது வென்ற
வாரண வாசி வளர்பூந் துறை கொங்கு மண்டலமே
கொங்குமண்டல சதகம் பாடல் எண் 83
பாடலின் பொருள் :
வேந்தர்கள் அனைவரும் , இவன் தேவேந்திரனோ (வாரணவாகனன்) என மதிக்கும் படி காரணம் பெற்றவனான வணங்கா முடிக் கட்டி முதலியும், தகுதி வாய்ந்த அவனது முழுப் படையையும் தலை கவிழுமாறு போர் செய்து வென்ற வாரணவாசி என்பவன் வசித்துள்ள பூந்துறையும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்ததேயாம்.
கட்டிமுதலிகள் சேலம் மாவட்டம், கோவை மாவட்டங்களில் பல கோவில்கள், குளங்கள், ஏரிகள், கோட்டைகள் கட்டியுள்ளனர்.
அடியார் மீது பக்தி, தெய்வ பக்தி, கல்விப் பெருக்குடன் திகழ்ந்த இவர்கள் பொதுவகை உபகாரங்களையும் நல்லறங்களை செய்து புகழ் கொண்டவராவர்.
இவர்களில் பெண்பாலாரும் இத்துறையில் தலை சிறந்து விளங்கினர் என்பதை பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தின் சாசனம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
திருச்செங்கோட்டு திருப்பணி மாலை பாடல் எண் 248 முதல் 262 முடிய உள்ள பாடல்கள் திருச்செங்கோட்டில் இவர்கள் செய்த தருமங்களை விளக்கிக் கூருகின்றன.
வாரணவாசியைப் புகழ வந்த பாடலினால் கட்டி முதலி பற்றிப் பல விவரங்களை அறிய முடிகிறது.
வாரணவாசி கொங்குமண்டல சதகம் பாடல் எண் 56 விளக்கும் பூந்துறைக் குப்பிச்சியின் வழித்தோன்றலாவான்.
கொங்குமண்டலத்தைச் சார்ந்தோர் இப்படிப்பட்ட கட்டிமுதலி, மன்றாடியார் குடும்பங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்தல் இன்றியமையாதது.
***