சீதையின் ப்ரதிக்ஞை! (Post No.11,886) Part 1

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,886

Date uploaded in London –   10 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

ராமாயண வழிகாட்டி!

சீதையின் ப்ரதிக்ஞை!

ச.நாகராஜன்

 வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான வரங்களைப் பற்றியும், சாபங்களைப் பற்றியும் காண்கிறோம்.

அது மட்டுமல்ல ஏராளமான ப்ரதிக்ஞைகளையும் காண முடிகிறது.

இவை கதையோட்டத்திற்கு உயிரையும் வலிமையையும் சுவையையும் கூட்டுகின்றன.

ஆனால் உண்மையாக நடந்த இதிஹாஸத்தில் உண்மைக்கே முதலிடம் என்பதால் இந்த உண்மைகளைக் கண்டு வியக்கிறோம், பிரமிக்கிறோம்.

சுந்தர காண்டம் வால்மீகி ராமாயணத்தில் முக்கியமான காண்டம்.

அதில் அனுமன் சீதையைத் தேடிச் சென்று அசோகவனத்தில் அன்னையைக் காண்கிறான்.

இராவணனைச் சந்திக்கும் அவன், சீதையை விட்டு விடு என்று அறவுரையை அறிவுரையாகக் கூறுகிறான்.

‘ஆவியை விடுவேன் அல்லால் தேவியை விடுவேன் அல்லேன்” என்ற கோட்பாட்டை உடைய ராவணன் அனுமனைக் கொல்ல உத்தரவிடுகிறான். (சமாதிஷதஸ்ய வதம் மஹாகபே – ராவணன்)

ஆனால் விபீஷணனோ தூதுவனாக வந்த ஒருவனைக் கொல்லுதல் தகாது என்கிறான்.

உடனே அதை ஒத்துக் கொண்ட ராவணன், ஒரு குரங்குக்கு முக்கியமானது வால் தான்; அதில் நெருப்பை இடுங்கள் என்கிறான்.

அதன் படியே அநுமன் வாலில் துணிகள் கட்டப்பட்டு எண்ணெய் ஊற்றப்பட்டு தீ மூட்டப்படுகிறது.

அனுமனை வீதி வீதியாக நெருப்பிட்ட வாலுடன் இழுத்துச் செல்கின்றனர்.

கூட்டம் கூட்டமாக அரக்கர்கள், அவர் தம் மனைவிமார்கள், குழந்தைகள் என அனைவரும் வீதியில் இழுத்துச் செல்லப்படும் அனுமனை வேடிக்கை பார்க்கின்றனர். ‘சாரன், சாரன்’ என்று கத்துகின்றனர்!

இந்தச் செய்தியை ஓடோடிச் சென்று அரக்கியர்கள் சீதையிடம் தெரிவிக்கின்றனர்.

“ஓ! ஸீதே! எந்த சிவந்த முகமுடைய குரங்கு உன்னுடன் பேசிக் கொண்டிருந்ததோ அதே இது. தீப்பற்றி எரிகின்ற வாலுடன் கண்டபடி இழுக்கப்படுகிறது.”

இந்த செய்தியைக் கேட்ட சீதா தேவியின் மனம் கலங்குகிறது.

இந்த விவரங்களை அருமையாக சுந்தரகாண்டம் 53ஆம் ஸர்க்கம் விவரிக்கிறது.

உயிரைப் பறித்தது போன்ற அரக்கியரின் செய்தியால் சீதை அக்னி தேவனை மனதினுள் நினைக்கிறாள்.

மஹாகபிக்கு ஆசீர்வாதம் செய்ய நினைத்த சீதை தூய்மையுடன் தாழ நின்று அக்னிதேவனை வேண்டுகிறாள்.

43 ஸ்லோகங்கள் கொண்ட 53ஆம் ஸர்க்கத்தில் நான்கு ஸ்லோகங்கள் சீதையின் ப்ரதிக்ஞையை, உறுதியை தெரிவிக்கின்றன.

 யத்யஸ்தி பதிஸுஸ்ருஷா யத்யஸ்தி சரிதம் தப:

யதி சாஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹநூமத:

யதி கஸ்சி தநுக்ரோஸஸ் தஸ்ய மய்யஸ்தி தீமத:

யதிவா பாக்யசேஷோ மே ஸீதோ பவ ஹநூமத:

யதி மாம் வ்ருத்த ஸம்பந்நாம் தத்ஸமாகம லாலஸாம்

ஸ விஜாநாதி தர்மாத்மா ஸீதோ பவ ஹநூமத:

யதி மாம் தரயே தார்ய: ஸுக்ரீவ: ஸத்யஸங்கர:

அஸ்மாத் துக்காம்பு ஸம்ரோதாச் ஸீதோ பவ ஹநூமத:

(ஸ்லோகங்கள் 26,27,28,29)

இவற்றிற்கான பொருள் “

பர்த்தாவை (கணவனை) ஏற்றபடி உபசரித்தல், என்னிடம் உண்டானால், தவத்தை விதிப்படி புரிதல் உண்டானால், பதி தானே கதி என்றடைதலும் உண்டானால் ஹனுமாருக்கு குளிர்ந்து தோன்றி அருளுதல் வேண்டும்.

அறிவிற்சிறந்த அவருக்கு என்னிடம் அன்பென்பது சிறிதேனும் உண்டேயானால், அதுவுமன்றி எனக்கு அதிர்ஷ்டலேசம் உண்டேயானால் ஹனுமாருக்கு குளிர்ந்து தோன்றி அருளுதல் வேண்டும்.

தர்மஸ்வரூபியான அவர் என்னை அவரை அடைவதொன்றையே பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் நன்னெறி தவறாதவளாய் அறிவாரானால் ஹனுமாருக்கு குளிர்ந்து தோன்றி அருளுதல் வேண்டும்.

பெருந்தோளுடையவரும் ஸத்யஸந்தரும் பூஜ்யருமான சுக்ரீவர் இந்த துயர்த்தினின்றும் என்னை விடுவிப்பார் என்றால் ஹனுமாருக்குக் குளிர்ந்து தோன்றி அருளுதல் வேண்டும்.

இந்த வேண்டுகோளைக் கேட்ட அக்னி பகவான் “மான்குட்டியினது கண்கள் போன்ற கண்களை உடையவளுக்கு ப்ரத்யக்ஷமாகத் தெரிவது போல சாந்தமாய் மங்களகரமான ஜ்வாலையுடன் எரிந்தார்.”

ஹனுமாரின் தந்தையான வாயு பகவானும் அவர் பங்கிற்கு தேவிக்கு திருப்தி செய்பவராய் குளிர்ந்த பனிக்காற்றாய் வீசலானார்.

ஹநுமார் இந்த தீடீர் நிகழ்வால் ஆச்சரியமடைந்தார்.

‘அட, இது என்ன, நன்றாய் ஜ்வலிக்கின்ற இந்த அக்னி தேவன் ஏன் என்னை முற்றிலும் எரிக்கவில்லை?

ஜ்வாலையோ மஹத்தானதாய் காணப்படுகிறது. எனக்கோ கஷ்டத்தைத் தரவில்லை. வாலின் நுனியில் குளிர்ந்த வஸ்துவின் கலவை அப்பப்பட்டது போல இருக்கிறது. ஆஹா! சந்தேகத்திற்கு இடமில்லை. நிச்சயம் தான்! ஸமுத்திரத்தைத் தாண்டும் போது ஶ்ரீ ராமரது பிரபாவத்தால் மலை ஒன்று காணப்பட்டது எப்படி ஆச்சரியமோ இதுவும் அப்படிப்பட்டதே.

ஸமுத்திரராஜனுக்கும் புத்திமானான மைநாகத்திற்குமே ஶ்ரீ ராமர் விஷயத்தில் அப்படிப்பட்ட பக்தி என்றால் அக்னி பகவான் இப்போது எப்படி உதவி செய்யாமல் இருப்பார்?” என எண்ணினார் ஹனுமார்.

“சீதையின் தண்ணளியாலும் ஶ்ரீ ராகவரின் திவ்ய சக்தியாலும் என் தந்தையின் உறவாலும் அக்னிபகவான் என்னை எரிக்கவில்லை”  என்று எண்ணினார் ஹனுமார்.

மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியத்தை ஆலோசிக்கலானார் அவர்.

இந்த அத்தியாயம் சீதையின் சௌகந்தத்தை விளக்கும் அத்தியாயமாகப் பரிமளிக்கிறது.

இறைவனை வேண்டுவோருக்கு இறைவன் பணியில் ஈடுபட்டோருக்கு கஷ்டங்கள் எதிரில் வந்தாலும் அவை அவர்களுக்கு ஒரு வித துன்பமும் தராது என்பதே இது கூறும் செய்தி.

துன்பங்களும் குளிர்ந்து போகும்; அக்னியும் குளிரைத் தருவான் என்பது எப்படி ஒரு அற்புதமான அபூர்வமான ஆனந்தமான செய்தி!

ஶ்ரீ ராம் கி ஜய்! ஸீதா மாதா கி ஜெய்!! ஹனுமான் கி ஜெய்!!!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: