
Post No. 11,907
Date uploaded in London – – 16 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
தமிழ் நாட்டைப்போலவே மஹாராஷ்டிர மாநிலத்திலும் எங்கு சென்றாலும் கோவிலும், புனிதக் குளங்களும் மரங்களும் இருக்கும். நிவ்ருத்தி, ஞானதேவ், சோபான முக்திபாய், ஏகநாத் நாமதேவ், துக்காராம், சமர்த்த ராமதாஸ் ஆகிய புனிதர்கள் நடமாடிய பூமி. எங்கு சென்றாலும் இவர்களுடன் தொடர்புடைய இடங்களோ, பொருட்களோ இருக்கும். அவைகளைத் தரிசிக்க ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பார்கள். த்ரயம்பகேஸ்வரர், ஓம்காரேஸ்வரர், பீமசங்கரர் போன்ற சிவத் தலங்களும் , பிள்ளையாரைப் போற்றும் அஷ்ட விநாயகர் கோவில்களும், மகாலெட்சுமி கோவில்களும் நிறைந்த பூமி. மும்பாய் என்ற பம்பாய் நகரமே தேவியின் பெயர் உடைத்து. அண்மைக்காலத்தில் புகழ்பெற்ற பம்பாய் நகர மகாலெட்சுமி கோவில் , சித்தி விநாயகர் கோவில்,ஷீரடி என்னும் ஊரிலுள்ள சாய்பாபா கோவில்களும் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கும். இவ்வளவுக்கும் காரணம் அவங்கசீப்பின் கொட்டத்தை அடக்கி ஹிந்து சாம்ராஜ்யத்தைத் தாபித்த வீர சிவாஜியாகும் .
ஞானேஸ்வர் 700 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் வாழ்ந்தார். திருஞான சம்பந்தரைப் போலவே இளம் வயதிலேயே பல அற்புதங்களை செய்தார். அவரைப் போலவே இளம் வயதிலேயே முக்தியும் அடைந்தார். அவர் முக்தி அடைந்த ஆலந்தி என்னும் ஊர் புனே நகருக்கு அருகில் உள்ளது. அவர் எழுதிய ஞானேஸ்வரி என்ற நூல் மிகவும் பிரசித்தமான மராட்டிய பக்தி நூலாகும். மிகப்பெரிய இந்துமத தத்துவங்களை எளிய மொழியில் மராட்டியர்களுக்கு உபதேசம் செய்தார். அவருடன் உடன்பிறந்தவர்கள்தான் நிவிருத்தி , சோபான , முக்தாபாய் என்னும் மூவர் ஆவர் .
ஆலந்தியில் உள்ள ஞானேஸ்வர் சமாதி அதற்கு முன்னரே அங்கிருந்த சித்தேஸ்வரர் கோவிலில் இருக்கிறது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த சமாதி மீதும் கோவில் எழுப்பப்பட்டது. மராட்டிய மஹான்கள் அனைவரும் பண்டரீபுரத்திலுள்ள விட்டல் , பண்டரிநாதன், விட்டோபா என்று அழைக்கப்படும் விஷ்ணுவின் பக்தர்கள் ஆவர் . செங்கல் மீது நின்று காட்சி தந்ததால் விட்டல் என்று அழைத்தனர் (விட்+ தல = செங்கலையே தலமாகக் கொண்டவன் )
இந்த ஆலந்தியில் ஒரு அபூர்வ மரம் இருக்கிறது. பொதுவாக இந்தியாவில் அதிகமாகக் காணப்படாத விருக்ஷம் / மரம் இது. அதை அஜான விருட்சம் என்று அழைப்பர். புத்தருக்கு போதி /அரச மரம் எப்படியோ, நம்மாழ்வாருக்கு புளிய மரம் எப்படியோ அப்படி ஞானேஸ்வரருக்கு ஞானம் தந்த மரம் இது.
ஆலந்தியில் அவர் சமாதி அடைந்த மரத்தின் தாவரவியல் பெயர் Ehretia laevis (Boraginaceae or borage family.) இதைத் தமிழில் குரு விச்சை மரம் என்று அழைப்பர். கடந்த சில நூற்றாண்டுகளாக ஆலந்தியில் ஒரு விழா கொண்டாடப்படுகிறது. அங்குள்ள ஞானேஸ்வரரின் பாதுகைகளை பண்டரீபுரம் பாண்டுரங்கன் கோவிலுக்குப் பல்லக்கில் கொண்டு செல்லுவார்கள். கேரளத்தில் ஐயப்பனின் ஆபரணங்களைக் கொண்டு செல்லுவது போல இது ஒரு புனித ஊர்வலம். இது 21 நாட்களுக்கு நடைபெறும். மதுரை சித்திரைத் திருவிழாவின் போது 13 மைல் தொலைவிலுள்ள அழகர் கோவிலில் இருந்து எப்படி கள்ளழகர் (விஷ்ணு, பெருமாள்) மண்டகப்படிகளில் தங்கி வருவாரோ அது போல ஞானேஸ்வரரின் பாதுகைகளைச் சுமந்து வரும் பல்லக்கும் மண்டகப்படி தோறும் நின்று வரும் . அந்த 21 நாட்களில் பல்லக்கு தங்கும் இடங்களில் எல்லாம் அஜான மரத்தின் நாற்றுகள் நடப்படுகின்றன. இதற்கு ஞானத்தை வழங்கும் சக்தி உண்டு என்ற நம்பிக்கையால் தாவரவியல் நிபுணர்களும் பக்தர்களும் சேர்ந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளனர் .
இந்த மரம் ஞானேஸ்வரர் வைத்திருந்த ஒரு குச்சியிலிருந்து வந்ததாக பக்தர்கள் நம்புகின்றனர் . இது போன்ற நம்பிக்கைகள் அபூர்வ மரங்களைப் பாதுகாக்கவும் பெருகச் செய்யவும் உதவுகின்றன.
அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தை வழங்கும் அஜான மரத்தை நாமும் வணங்குவோம் .
xxxx

ஆயுர்வேதத்தில்
பல மொழிகளில் இதன் பெயர்
commonly known as: ovate-leaved ivory wood • Gujarati: વઢવારડી vadhavaradi • Hindi: भैरी bhairi, चामरोड़ chamror • Konkani: kalo gamdo • Malayalam: ചരണ്ടി caranti • Marathi: अजानवृक्ष ajaanvruksha, धतरंग dhatrang • Nepali: datingal • Oriya: mosonea • Sanskrit: चर्मवृक्ष charmavriksha • Tamil: குருவிச்சை kuruviccai, ஒருசாதிமரம் oruvakai-maram, பட்டைவிரசு pattaivirachu • Telugu: తెల్లజువ్వి tellajuvvi
Native to: China, Bhutan, India, Pakistan, Laos, Myanmar, Vietnam
இது சீனா, பூடான், இந்தியா, பாகிஸ்தான் , லாவோஸ், பர்மா வியட்நாம் நாடுகளில் வளருகிறது
கண்டுசக்க என்று ஆயுர்வேத மருத்துவர் அழைக்கும் இந்த மரத்தின் பாகங்கள் எலும்பு முறிவுச் சிகிச்சையில் பயன்படுகிறது. தலைவலி, சொறி, சிரங்குகள், புண்களைக் குணப்படுத்தவும் இதை மராட்டியர்கள் பயன்படுத்துகின்றனர் . இது ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவுக்கு வெளியே, அதிகம் வளருகிறது.
The application of Khanduchakka (Ehertia Laevis) Kalka (paste) in the case of Delayed-union of metatarsal fracture is an innovative idea. It is a case report having the fracture of 3rd and 4th metatarsal of right foot. Ehertia Laevis is folklore plant locally known as Khanduchakka used in fracture and wound healing in various forms by the tribal people.(Journal of Indian System of Medicine)
–subham–

Tags-ஆலந்தி, அற்புத தல விருட்சம், ஞானேஸ்வர், ஞானேஸ்வரி, கண்டுசக்க, குருவிச்சை, பட்டைவிரசு, மரம்