
Post No. 11,913
Date uploaded in London – – 18 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இந்துக்கள் பல மரங்களை இந்தியா முழுதும் வழிபட்டு வருகின்றனர். தமிழ் இந்துக்கள் ஒவ்வொரு தலத்துக்கும் ஒரு மரம் அல்லது செடியை தெய்வ அம்சமாகக் கருதி தல விருட்சம் என்றும் குறித்துள்ளனர். மரங்களில் தென்னை மரத்துக்கு உள்ள சிறப்பு தனிப்பெருமை வாய்ந்தது. தென்னிந்தியாவின் நிலப்பரப்பு கடற்கரையை ஒட்டிய தீபகற்பப் பகுதி என்பதால் இங்கு தேங்காய்க்கு குறைவே இல்லை ; இதனால் தேங்காய் (Coconut) உடைக்கும் வழக்கம் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தமிழ் நாட்டில் உள்ளது. தென்னை மரத்தைத் தமிழ்ப்புலவர்களும் பாடிப் பரவியுள்ளனர்

பிள்ளையார் கோவிலில் சதிர்த் தேங்காய் போடுவது, முக்கிய தேர் அல்லது சுவாமி ஊர்வலம் புறப்படும் முன்னர் சதிர்த் தேங்காய் போட்டு உடைப்பதைக் காண்கிறோம். கோவிலின் உள்ளேயும் சுவாமிக்கு தேங்காய், பழம் வெற்றிலையை சமர்ப்பிக்கிறோம் . தீவு நாடான இலங்கையிலும் தென்னை மரம் அதிகம் என்பதால் கோவில்களில் . விசேஷங்களில் தேங்காய் முன்னிடம் பெறுகிறது. கேரளத்தில் தேங்காய் இல்லாத சமையலே இராது. அவர்களுக்குத் தேங்காய் இல்லாமல் சமைக்கத் தெரியாது.
xxxx
தேங்காய் உடைப்பது ஏன் ?
முதலில் தேங்காய் உடைப்பது ஏன் ? என்ற கேள்வியை எடுத்துக்கொள்வோம். இதற்கு சமயச் சொற்பொழிவு ஆற்றுவோர், உபன்யாசம் செய்வோர் சில விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். தேங்காய்க்கு மூன்று கண்கள் இருக்கும். அவை காமம், க்ரோதம் மோகம் என்ற மூன்றைக் குறிக்கும். அவற்றை விலக்கினால்தான் இறைவனைக் காண முடியும் என்பதை மூன்று கண்ணுள்ள தேங்காயை உடைப்பது காட்டுகிறது. சதிர்த் தேங்காய் போட்டு உடைப்பது ஆணவ, கண்வ மாயா மலங்களை அகற்றுவதைக் குறிக்கிறது
இன்னொரு விளக்கமும் சொல்லப்படுகிறது. பரமாத்மா என்னும் தூய வெள்ளை நிற பருப்பையும் இனிப்புச் சுவையுள்ள இளநீரையும் சுவைப்பதற்கு ஓடு போலுள்ள ஜீவாத்மா உடைய வேண்டும், அதாவது பக்குவப்பட வேண்டும் என்பதாலும் தேங்காய்களை உடைக்கிறோம்.
xxxx
தேங்காய் மங்களச் சின்னம்
தென்னிந்தியக் கல்யாணங்களில் தேங்காய் முக்கிய இடம்பெறும். ஏன் எனில் இது ஒரு மங்களச் சின்னம் . நிச்சயதார்த்தம் சடங்கில் இரு தரப்பினரும் இன்னாரின் பேரனும், இன்னாரின் மகனுமான இந்த ஆண்மகனை இன்னாரின் பேத்தியும் , இன்னாரின் மகளுமான இந்தப் பெண்ணை மணம் முடிக்கப் பெரியவ்ர்கள் நிச்சயித்து இருக்கிறார்கள் என்று மூன்று முறை அறிவித்தவுடன் கெட்டி மேளம் கொட்டுவார்கள். அப்போது மஞ்சள் தடவிய தேங்காய்களை பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மாற்றிக்கொள்ளுவார்கள். அதை கல்யாணம் முடியும் வரை வைத்துப் பாதுகாப்பார்கள். இது மங்களத்தின் சின்னம்.
எந்த ஒரு இடத்தையும் அல்லது எந்த ஒரு மனிதனையும் புனிதப்படுத்த தண்ணீரைக் குடத்தில் வைத்து வருண மந்திரம் சொல்லுவார்கள் . பின்னர் அந்த நீரை புரோகிதர்கள் எடுத்து மனிதர்கள் மீது தெளிப்பார்கள் அல்லது அபிஷேகம் செய்வார்கள். அந்த பூரண கும்ப குடத்திலும் மேலே தேங்காயும் மாவிலையும் தான் இருக்கும் . ஏனெனில் இரண்டும் மங்களச் சின்னங்கள் .
ஊருக்கு யாரேனும் பெரியோர் வந்தால், சாது சன்யாசிகள் வந்தால் அவர்களையும் தேங்காயுள்ள பூரண கும்பத்துடன்தான் வரவேற்பார்கள்.
xxx

தென்னை மரம் = கற்பக விருட்சம்
ஒரு வேளை, சமய நம்பிக்கையே இல்லை என்றாலும் அவர்களுக்கும் தே ங்காயின் பயன்கள் நன்கு தெரியும். தென்னை மரத்தை கற்பக விருட்சம் என்று அழைக்கிறார்கள். ஏனெனில் தென்னை மரத்தின் எல்லாப்பகுதிகளும் ஆதிமனிதனுக்குப் பயன்பட்டன. அதன் மரத்தைத் தூண்களாக நட்டு அதன் ஓலைகளை கூரையாக வேய்ந்து வீடு கட்டி வாழ்ந்தான், அதன் தேங்கா யையும் இளநீரையும் உணவாகப் பயன்படுத்தினான். ஓடுகளையும் கட்டையையையும் அடுப்பு எரிக்கப் பயன்படுத்தினான் . ஓலை , நார் ஆகியவற்றைப் பயன்படுத்தி கயிறு திரித்து வீடு கட்டப் பயன்படுத்தினான். கூடைகளைச் செய்து பண்டங்களை எடுத்துச் சென்றான். இளநீர் மட்டையையும் தேங்காய் ஓடுகளையும் கூட வீணடிக்காமல் பயன்படுத்தினான். இதனால் எல்லாவற்றையும் நல்கும் கற்பக மரமே என்று போற்றினான். தேங்காய் எண்ணெய் , தேங்காய் சட்னி இல்லாத இடம் இல்லை
தேங்காய் என்பதன் ஸம்ஸ்க்ருதப் பெயர் நாரி கேளம் ; அதிலும் கூட நார் என்ற தமிழ்ச் சொல் இருப்பது ஆராய்ச்சிக்குரியது ;
coconut nucifera என்பது தாவரவியல் பெயர்
இன்றும் கேரளத்திலும், தமிழ் நாட்டில் கோவில் முன்புறக் கடைகளிலும் ஏராளமான வியாபாரிகளுக்கு வாழ்வூதியம் தருவதும் இந்த கற்பக விருட்சம்தான் .
கணபதி ஹோமம் எங்கு நடந்தாலும் அதில் கொப்பரை போடுவது வழ க்கம் ; யானைக்குப் பிடித்தது தேங்காயதானே .
xxxx

தேங்காய்த் திருவிழா
ஆவணி மாத பெளர்ணமி தினத்தை இந்துக்கள் பல்வேறு விதமாகக் கொண்டாடுவார்கள். இருபிறப்பாளராக இருந்தால் (பூணுல் போடும் ஜாதிகள்) அன்றைய தினம் பூணுலை மாற்றிக்கொண்டு புதிதாக வேத அத்தியயனத்தைத் துவங்குவார்கள்.
நாடு முழுதும் சகோதர சகோதரிகள் ரக்ஷை காட்டும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படும்.
மஹாராஷ்டிரா, கொங்கணக் கடற்கரையில் வாழும் மீனவ மக்கள் கடலில் தேங்காய்களை வீசி எறிந்து கடல் தெய்வத்தை, வருண பகவானை வணங்குவார்கள் . இங்கும் தேங்காய்தான் பூஜைக்குரிய பொருள்.
மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சில வழக்கங்களை 100 ஆண்டுப் பழ மையான புஸ்தகம் கூறுகிறது. குழந்தை இல்லாத பெண்மணிகள் ஒரு பிராமணர் வீட்டிலுள்ள பாத்திரத்தில்/ குடத்தில் ரகசியமாக ஒரு தே ங்காயைப் போடுவாராம் இதை அவசித்த பல (ரகசியப் பழம் ) என்று அழைப்பர் .
மற்றொரு வழக்கம்; பக்கத்து வீட்டில் இரண்டு தேங்காய்களைப் போட்டுவிட்டு இரண்டு தேங்காய்களைப் பிச்சையாகக் கேட்பார்கள் . கேளதே க்யா ராங்கதே த்யா = ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டு ஒரு பிள்ளையைத் தா என்பது இதன் பொருள். एक खेळणी घ्या आणि मुलाला म्हण द्या Ēka khēḷaṇī ghyā āṇi mulālā mhaṇa dyā என்றும் சொல்லலாம்
கெளரி பூஜைகளிலும் தேங்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. தேங்காய் தானம் தந்தால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
xxx
தென்னை மரத்தின் தியாகம்!
பர்த்ருஹரி என்னும் சம்ஸ்கிருதப் புலவனும் அவ்வையாரும் தென்னை மரத்தை உவமையாக்கி ஒரு கவிதை புனைந்துள்ளனர்.
தென்னை மரத்தைப் பார்! பூமிக்கடியில் இருக்கும் வெறும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து அதைத் தலையால் (இளநீரால்) இனிய இளநீராக்கித் தருகிறது ஒருவருக்கு உதவி செய்தால் ஒருநாள் அவரும் இளநீர் போலத் திருப்பித் தருவர்.:-
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும் கொல்லென வேண்டா – நின்று
தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்
–வாக்குண்டாம்
Xxxx
மனிதர்கள் மூன்று வகை
உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே
மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே – முத்தலரும்
ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே
தேங்கதலியும் போல்வார் தேர்ந்து
–நீதிநெறிவெண்பா
பனைமர மனிதர்கள்
பனைமரத்துக்கு தண்ணீர்விடவே வேண்டாம்; அது தண்ணீர் விடாமலே பலன் தரும்; உத்தம மனிதர்களும் அவ்வகையே. பலனை எதிர்பாராமல் பலன் தருவர்.
தென்னைமர மனிதர்கள்
தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும். அது போல நடுத்தர (மத்திம) மனிதர்கள், பிறர் உதவி செய்தால் அந்த அளவுக்கு திருப்பி உதவி செய்வர்.
பாக்கு மரமனிதர்கள்
பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்; அது போன்ற மனிதர்கள் கடைத்தர மனிதர்கள். எப்பொழுதும் பாராட்டினாலோ, பலன் கிடைக்கும் என்று தெரிந்தாலோதான் உதவி செய்வார்கள்.
xxxxx
MY OLD ARTICLES
தென்னை மரம்
tamilandvedas.com
https://tamilandvedas.com › tag › த…
7 Jun 2019 — தென்னை மரம் பற்றிய சுவையான கதை! (Post No.6503) … ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co.
தென்னை மரம் பற்றிய சுவையான கதை! (Post No. …
https://tamilandvedas.com › தெ…
·7 Jun 2019 — தென்னை மரம் பற்றிய சுவையான கதை! (Post No.6503). Written by London Swaminathan. swami_48@yahoo.com.
இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும்
https://tamilandvedas.com › இளந…
28 May 2012 — பொருள்: தென்னை மரம் நிலத்திலிருந்து குடித்த தண்ணீரை சுவையுடைய இளநீராக தலை …
—-subham—
Tags – தென்னை மரம், இந்து மதம் , தேங்கய் , உடைப்பது ஏன் ?, மூன்று கண்கள் , கற்பக விருட்சம் , மராத்தி பழமொழி, மங்கள சின்னம் , பூரண கும்பம்