
Post No. 11,921
Date uploaded in London – 21 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்
புதிய நெடுந்தொடர்
இரண்டாம் உலகப் போர் – கிண்டர் டிரான்ஸ்போர்ட்!
ச.நாகராஜன்
3
கிண்டர் டிரான்ஸ்போர்ட்
இரண்டாம் உலக போரில் மனதைப் பதைபதைக்க வைக்கும் ஒரு விஷயம் கிண்டர் டிரான்ஸ்போர்ட்!
கிண்டர் என்றால் ஜெர்மானிய மொழியில் குழந்தைகள் என்று பொருள்.
இந்தக் குழந்தைகளை கொடூரமாகப் பயணப்பட வைத்தான் ஹிட்லர்.
அது தான் கிண்டர் டிரான்ஸ்போர்ட்!
எதற்காக?
நெஞ்சமே நடுநடுங்க வைக்கும், எழுதவே கை நடுநடுங்கும் விதத்தில் யூதக் குழந்தைகளை கொலை செய்வதற்காக!
ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆங்கில மாத இதழில் ஏராளமான உலகப்போர் பற்றிய கட்டுரைகள் வந்துள்ளன.
அவற்றில் கிண்டர் டிரான்ஸ்போர்ட் பற்றிய ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அதில் ஒரு பகுதி இது:
ஜெர்மானிய நாஜிப் படைகள் கிழக்கு பிரான்ஸைப் பிடித்து ஆக்கிரமித்துக் கொண்டது.
ஒரு நாள் அங்கு ரெட் க்ராஸ் -இல் பணி புரியும் ஒரு பெண்மணி ஒரு ரயில் நிலையத்தில் ரயில் ஒன்றின் அருகே சென்று கொண்டிருந்த போது விசித்திரமான ஒரு சத்தத்தைக் கேட்டாள். ஒரு ரேடியோ சிக்னலில் ஓசை போல அது இருந்தது. மிக மெல்லியதாக வந்த ஓசையால் அந்தப் பெண்மணி திகைத்தாள்.
எங்கிருந்து வருகிறது இந்த ஓசை? எதனால்?
ரயிலில் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே சென்றாள். ஒரு பெட்டியிலிருந்து அந்த ஓசை வந்ததை அவள் கண்டாள்.
என்ன பயங்கரம?!!
அந்த குட்ஸ் வண்டிப் பெட்டியில் 80 யூதக் குழந்தைகள் திணித்து அடைக்கப்பட்டிருந்தன. இடமில்லாமல் ஒன்றை ஒன்று அந்தக் குழந்தைகள் பிடித்துக் கொண்டிருந்தன.
இரண்டு ரொட்டித் துண்டுகள் ஒரு குடுவை நீர் – இவற்றுடன் அந்தக் குழந்தைகள் ஜெர்மானியரால் பாரிஸிலிருந்து கிளம்பும் வண்டியில் திணிக்கப்பட்டிருந்தன. 18 மணி நேரப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
வண்டி நிற்கும் இந்த இடத்தில் அந்தப் பெண்மணி இதைக் கண்டுபிடித்தாள்.
அந்தக் குழந்தைகள் ‘Reich’- ஆம் அது தான் ஹிட்லர் தனது சாம்ராஜ்யத்திற்கு அளித்திருந்த பெயர் – THIRD REICH-க்குக் கடத்திச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.
அதில் நான்கு குழந்தைகள் ஏற்கனவே கொடூரப் பயணத்தால் இறந்து விட்டிருந்தன.
மீதிக் குழந்தைகளோ இடமின்மை, கடும் இருள், என்ன நடக்கப் போகிறதோ என்ற பயம் ஆகியவற்றால் மனம் கலங்கி இருந்தன.
பலருக்கு பைத்திய நிலை.
அந்தக் குழந்தைகளின் அடையாள அட்டைகளை ஜெர்மானியர் துண்டித்துத் தூக்கி போட்டிருந்தனர். பலருக்கு தங்கள் பெயரைக் கூடச் சொல்லத் தெரியாத அளவு குறைந்த வயது.
ஒரு புத்திசாலிக் குழந்தை தான் வசித்து வந்த வீட்டின் எண் 16 என்று கூறியது. தெருவின் பெயர் அதற்குத் தெரியவில்லை.
ஆனால் ஒரு விதத்தில் இந்தக் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகளே.
உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு காப்பாற்றப் பட்டார்கள்.
ஆனால் பிரான்ஸில் ஜெர்மானியர்கள் பிடித்த யூதக் குழந்தைகள் 15000 பேர்கள்.
அவர்கள் பார்சல் கட்டப்பட்டு ஜெர்மனிக்குக் கடத்தப்பட்டனர்.
எல்லாக் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டன.
பின்னார் நடந்த ஆய்வில் அந்தக் குழந்தைகள் போலந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நச்சு வாயு அறையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

நாஜிக்களால் கொல்லப்பட்ட யூதர்கள் அறுபது லக்ஷம் பேர்கள்.
அதில் குழந்தைகளும் உண்டு, ஆண் பெண் நடுத்தர வயதினர், இளைஞர்கள், முதியோர் என்ற பேதமே இல்லை. அவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்த ஒரே ஒரு அம்சம் – அவர்கள் யூதர்கள் என்பது தான்.
**** தொடரும்