
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,927
Date uploaded in London – 23 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்
புதிய நெடுந்தொடர்.
அத்தியாயம் 4
நாஜிக்களின் சித்திரவதையால் பிறந்த புதிய மின்னல் வேகக் கணிதம்!
ச.நாகராஜன்
பகுதி 5
உயர் குடும்பப் பெண்ணான ஆலிசுக்கும் டிராக்டன்பெர்க்கிற்கும் பரஸ்பரம் ஈர்ப்பு ஏற்பட அவர்கள் மணம் புரிந்தனர்.
தொடர்ந்து ரஷியாவைப் பற்றிய பல புத்தகங்களை எழுதியதால் டிராக்டன்பெர்க் ரஷியா பற்றி அனைத்தும் அறிந்த அறிஞர் என்ற புகழைப் பெற்றார்.
அயல் நாட்டு மொழிகளை எளிமையாகக் கற்பதற்கு அவர் ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தார். இதனால் அயல் மொழிகளை அவர் சொல்லித் தரவே அனைவரும் அவரிடம் வர ஆரம்பித்தனர். அவர் சொல்லித் தந்த அந்த முறை இன்றளவும் ஜெர்மனியில் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்தச் சமயத்தில் தான் ஹிட்லரின் எழுச்சி வேகமாக இருந்தது. அதனால் நொந்து போன அவர் ஹிட்லரை எதிர்த்து தைரியமாகப் பேச ஆரம்பித்தார்.
ஆனால் 1934ஆம் ஆண்டு ஹிட்லர் டிராக்டன்பெர்க் மீது குறி வைக்கவே அவர் தன் மனைவியோடு வியன்னாவிற்குத் தப்பி ஓடினார்.
அங்கு ஒரு அறிவியல் இதழை ஆரம்பித்தார்.
சமாதானத்தைப் பற்றி டிராக்டன்பெர்க் உபதேசித்து வருகையில் ஹிட்லரோ ஆஸ்திரியா மீது மின்னல் தாக்குதல் தொடுத்து அதைக் கபளீகரம் செய்தான். டிராக்டன்பெர்க்கைச் சிறிதும் பிடிக்காத ஹிட்லர் அவரைப் பிடித்துச் சிறையில் தள்ளினான. ஆனால் டிராக்டன்பெர்க்கோ தனது மனைவி சீமாட்டி ஆலிஸின் உதவியால் சிறையிலிருந்து தப்பி யூகோஸ்லேவியாவிற்கு ஓடினார். ஹிட்லரின் கெஸ்டபோ அவரைத் துரத்திப் பிடித்தது.
ஒரு நாள் நள்ளிரவில் அவர் வீட்டிற்குள் நுழைந்த கெஸ்டபோ அவரைக் கைது செய்து மிருகங்களைத் ஏற்றிச் செல்லும் வண்டியில் தூக்கிப்போட்டு ஒரு சித்திரவதை முகாமிற்கு அனுப்பியது.
கடினமான விதிமுறைகள் அவருக்கு விதிக்கப்பட்டன. அதை அவர் மீறும் போது இன்னும் அதிக சித்திரவதை செய்தனர்.
சித்திரவதை தாங்காமல் பலரும் இறக்கவே சிறையில் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
இந்த சித்திரவதையால் தன் புத்தி பேதலிக்காமல் இருக்க வேண்டுமென்று நினைத்த டிராக்டன்பெர்க் தனக்கு மிகவும் பிடித்த கணித உலகில் மனதைச் செலுத்த ஆரம்பித்தார்.
அதனால் விளைந்தது ஒரு அற்புதம். அது தான் டிராக்டன்பெர்க் சிஸ்டம் ஆஃப் மேத்ஸ். டிராக்டன்பெர்க் கணித முறை.
சித்திரவதை முகாமில் அடைக்கப்பட்டிருந்த டிராக்டன்பெர்க்கிடம் பேனா, பென்சில், தாள் எதுவும் இல்லை. பிரம்மாண்டமான எண்களை மனத்திரையால் பார்த்தவாறே, அவற்றைக் கூட்டும் விதத்தை அவர் கண்டுபிடித்தார். இந்த முறையில் பிழையே இல்லை. கூட்டுத் தொகை சரியாக இருந்தது.
ஆண்டுகள் செல்லச் செல்ல கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அனைத்திற்கும் மிக மிக எளிய வழிகளைக் கண்டு பிடித்தார். பேப்பரே அவரிடம் இல்லாத காரணத்தினால் எப்போதேனும் கிடைக்கும் சிறிய துண்டு காகிதத்தில் அவற்றை எப்படிச் செய்வது என்பதை மட்டும் எழுதி வைத்துக் கொண்டார்.
இதனால் இன்றும் கூட டிராக்டன்பெர்க் கணித வழி முறையைக் கடைப்பிடிப்பவர்கள் விடைகளை மட்டும் பேப்பரில் எழுதும் பழக்கம் நீடித்திருக்கிறது.
1944ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை வந்தது. ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில் டிராக்டன்பெர்க்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வெகு சீக்கிரமே அது நிறைவேற்றப்படும் என்பதும் தெரிய வந்தது. தனது புதுவழிமுறைகளை முற்றிலுமாகக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற அடங்காத ஆர்வத்தினால் கடுமையாக உழைத்து அதைக் கண்டுபிடித்ததோடு அதை சக கைதி ஒருவருக்கும் சொல்லித் தந்தார் அவர்.
ஒருவேளை தான் இறந்து விட்டாலும் தான் கண்டுபிடித்த கணித முறை உலகெங்கும் பரவி இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இதைச் செய்தார்.
அவரது அழகிய மனைவி ஆலிஸ் அவர் இருந்த சித்திரவதை முகாம் அருகிலேயே வசித்து வந்தார். டிராக்டன்பெர்க் கொடூரமான முறையில் சாக இருப்பதை அறிந்த அவர் தன்னிடம் இருந்த அனைத்து நகைகளையும் கழட்டி அவற்றை விற்றார். கையில் இருந்த பணத்தையும் அத்துடன் சேர்த்து கணிசமாகச் சேர்ந்த தொகையை சிறை மேற்பார்வையாளர்களிடம் லஞ்சமாக அளித்தார். மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பாக டிராக்டன்பெர்க்கை வேறொரு முகாமுக்கு மாற்ற அவர் ஏற்பாடு செய்தார்.
டிராக்டன்பெர்க்கை லெய்ப்ஜிக் என்ற நகருக்கு மாற்ற ஏற்பாடுகள் நடந்தன,
̀ ***** தொடரும்