
Post No. 11,933
Date uploaded in London – – 24 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Part 3
10.பீமசங்கரம் சிவன் கோவில்
12 ஜோதிர் லிங்க தலங்களில் மூன்று, மஹாராஷ்டிர மாநிலத்தில் இருப்பதோடு எங்கு நோக்கினும் சிவன் கோவில்களைக் காணலாம். பீமா நதிக்கரையில் அமைந்த பீம சங்கரம், 12 ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்றாகும் இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவிலும், நாசிக்கிலிருந்து 120 கிமீ தொலைவிலும் உள்ளது
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் மற்றும் அயோத்தி மன்னன் பீமன் ஆகியோருடனும் தொடர்புடைய கோவில் இது.
அழகான மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளுக்கு இடையே அமைந்த கோவில் இது. இயற்கையும் இறைவனும் மனிதனின் மனச் சாந்தியை மேம்படுத்தும். இதை அறிந்த இந்துக்கள் காடு மலையிலும் கிராமத் தொலைவிலும் கோவில்களை அமைத்துள்ளனர் . இதனால் யாத்திரை செல்லும் காலம் முழுதும் ஆண்டவன் சிந்தனை ஒன்றே நிலைத்து நிற்கும்.
இந்தக் கோவிலில் வேறு எங்கும் இல்லாத சில சிறப்புகள் உண்டு.

பூமிக்கு அடியில்- தரை மட்டத்துக்கு கீழே லிங்கம் இருப்பது ;
அந்த லிங்கம் கூம்பு வடிவத்தில்,இருப்பது ;
எல்லா பக்தர்களும் அருகில் சென்று தாமே லிங்கத்தை வழிபட முடிவது;
கர்ப்பக் கிரகத்துக்கு முன்னர் நந்திக்குப் பதில் ஆமை இருப்பது;
பழைய சிவன் கோவிலானாலும் ராமர் லட்சுமணர் மூர்த்தங்கள் இருப்பது
சிறப்பு அம்சங்கள் .
பக்கதர்கள் காடு , மலை வழியே நடந்து சென்று வழிபடுவது முக்கிய யாத்திரை அம்சம்.
போர்ச்சுகீசியரை வென்று மராட்டியர் எடுத்து வந்த பெரிய மணியும் இந்தக் கோவிலை அலங்கரிக்கிறது.
மஹா சிவராத்திரி இங்கு மிகப்பெரிய பண்டிகை
xxx
11. புதர் காட் பைரவர் கோவில்
கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பைரவர் கோவில் பழமையான பைரவர் கோவில்.. மாசி மாத கிருஷ்ண பட்ச பிரதமை முதல் தசமி வரை பெரிய விழா நடைபெறுகிறது. இங்கு மேலும் சில கோவில்கள் இருக்கின்றன. இங்குள்ள கோட்டை காரணமாக சமீப காலத்தில் மலை ஏறுவோரின் சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. சிவாஜி மஹாராஜ் இந்தக் கோட்டை யைக் கைப்பற்றி அதை மேலும் வலுப்படுத்தினார்
12.சாந்துர் கண்டோபா கோவில்
கண்டோபா என்பவர் சிவனின் ஒரு அம்சமாக கருதப்படும் கிராமப்புற தெய்வம். மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஏராளமானோருக்கு குல தெய்வம். தமிழ் நாட்டின் முனியாண்டி, ஐயனார் போல ஒரு கடவுள். கத்தி ஏந்திய கோலத்தில் காட்சி தருவார். சாந்தூர் கண்டோபா கோவிலில் பெளஸ (தை ) மாத பெளர்ணமியில் பெரிய விழா நடைபெறுகிறது .
xxxx
13.சாப்பால் ராம் மந்திர்
இது வீர சிவாஜியின் குருவான சமர்த்த ராமதாஸ் சுவாமிகளின் கோவில். இங்கு சித்திரை சுக்லபட்ச நவமியான ராம நவமி அன்று பெரிய திரு விழா நடக்கிறது. சாதாராவிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் சாப்பால் கிராமம் , மாண்ட் நதிக்கரையில் அமைந்துள்ளது . சுமார் 400 ஆண்டுப் பழமையான இக் கோவில் சலவைக் கற்கலால் ஆனது. இதன் மற்றும் ஒரு சிறப்பு, சூரிய விக்ரகம் இருப்பதாகும். இதை ராமதாஸ் சுவாமிகள் அங்கபூர் குளத்திலிருந்து மீட்டு வந்து இங்கே நிறுவினார்.
xxxx
14.சதுர் சிருங்க (சதர்சிங் ) தேவி கோவில்
நாசிக் அருகிலுள்ள சப்த ஸ்ருங்கி தேவி கோவில் மிகவும் பிரசித்தமானது. இந்தக் கோவிலுக்கு ஆண்டுதோறும் சென்றுவந்த ஒரு வணிகர், முதிய வயதில் புனே நகரிலிருந்து செல்ல முடியாமல் தவித்தார். அப்போது தேவியே அவர் முன் (கனவில்) தோன்றி புனே அருகிலுள்ள நான்கு சிகரத்தில் (சதுர் சிருங்க) தான் உள்ளதாக தெரிவித்தார். அவரும் அங்கு சென்று பார்த்தபோது ஸ்வயம்பூ (தாமாகத் தோன்றும்) தேவி உருவம் அங்கே கிடைத்தது. அங்கு கோவில் எழுப்பிய பின்னர் நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்களும் பெரிய விழா ஏற்பாடாகியது . பத்தாவது நாளான விஜய தசமியில் பெரிய வெள்ளி ரதம் உலா வரும். அதை ஒட்டி அந்த ஊரே கடை, கன்னிகள், கேளிக்கை, ராட்டினம் முதலியவற்றுடன் விழாக்கோலம் பூணும்.
xxx
15.செளல் தத்த மந்திர்

கடற்கரையை ஒட்டிய மலை முகட்டில் அமைந்த இந்த தாத்தாத்ரேயர் கோவில் இயற்கை வனப்பு சூழ அமைந்துள்ளது. சுமார் 1000 படிகளுக்கு மேல் ஏறி பிரம்மா , விஷ்ணு, சிவனின் அவதாரமான தத்தாத்ரேயர் உருவத்தைக் காணலாம்.அவருடைய பாதுகைகளையும் காணலாம் மார்கழி மாத பெளர்ணமி தினத்தன்று பெரிய விழா நடைபெறுகிறது. ரெவ் தண்டா என்னும் ஊரிலிருந்து செல்லுவது எளிது. சற்று தொலைவில் அலிபாக் என்னும் பெரிய ஊர் உள்ளது சிவாஜி மஹராஜ் காலத்திலிருந்து புகழ்பெற்ற இடம் இது. இங்கிருந்து தொலைதூர இடங்களைக் காணமுடியும் . அண்மைக்காலத்தில் பிரம்மேந்திரா என்பவர் கோவிலைக் கட்டினார் . ஆனால் புனிதத் தலம் மிகப்பழமையானது.
–subham—
Tags- தத்தாத்ரேயர், கண்டோபா , மந்திர் , செளல் , சதுர்ச்ருங்க , பீம சங்கர, ஜோதிர்லிங்க