
Post No. 11,936
Date uploaded in London – – 25 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று பேரின் அம்சங்களும் ஒன்று சேர்ந்த தத்தாத்ரேயரை மஹாராஷ்டிரர்கள் வழிபடுகின்றனர். மேலைக் கடற்கரை ஓரமாக கர்நாடகம் வரை இந்த வழிபாடு பரவியிருக்கிறது.. மார்கழி மாத பெளர்ணமி அன்று அவரது ஜயந்தி கொண்டாடப்படுகிறது.
தத்தாத்ரேயர் பற்றி தெரியாதவர்களுக்கு இதோ சுருக்கமான கதை:-
சப்த ரிஷிகளில் ஒருவர் அத்ரி. இன்றும் பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் அவரது பெயரைச் சொல்லுவர் . சப்த, அதாவது ஏழு ரிஷிகளின் பெயர்களில், முதலில் அவர் பெயர்தான் வரும். அது மட்டுமல்ல. ரிக் வேதத்தில் அதி கமான கவிகளை இயற்றியவர் அவர்தான் . 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தில் அதே வரிசையில் சப்த ரிஷிக்களின் பெயர்கள் வருவது இது எவ்வளவு பழமையானது என்பதைக் காட்டுகிறது .
அத்ரி மஹரிஷியின் மனைவியின் பெயர் அனுசூயா . அவருடைய கற்பின் திறத்தினை உலகிற்கு உணர்த்த பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் ஒரு நாடகம் ஆடினார்கள். மூவரும் சந்யாசிகள் வேடம் தாங்கி , முனிவர் இல்லாத நேரத்தில் அந்த வீட்டுக்குப் பிச்சை கேட்கச் சென்றனர்.
அனுசூயா உணவினைச் சமைத்துக் கொண்டுவந்த பின்னர் பெண்கள் ஏற்க முடியாத ஒரு நிபந்தனையை விதித்தனர். அவர் அதை மறுக்க முடியாது ஏனெனில் வேதம், அதிதி தேவோ பவஹ = விருந்தாளி என்பவன் இறைவன் , என்று செப்புகிறது. அவளும் நிபந்தனைக்கு இசைவு தெரிவித்து என்ன நிபந்தனை என்று வினவினாள். பெண்ணுடைய தாய்ப்பாலை அருந்த வேண்டும். அதுவும் ஆடை யின்றி வரும் பெண்மணியிடம்தான் தாங்கள் சாப்பிட முடியும் என்றனர்.
கற்புடைய பெண்கள் உலகில் எதையும் செய்ய முடியும். கணவனை மட்டுமே மனதில் கொண்ட பெண், மழையே பெய் – என்று கட்டளையிட்டால் உடனே மழை கொட்டும் என்று வள்ளுவன் சொல்லுவான். சீதையோ , அம்மையாரே என் தோளில் அமர்க ; இப்போதே ராமபிரானிடம் சேர்த்துவிடுகிறேன் என்று அசோக வனத்தில் சொன்ன அனுமனிடம், என் கற்பினால் ஈரேழு உலகங்களையும் எரித்துவிட முடியும். அந்த ஆண்சிங்கம் இராமபிரானுக்கு இழுக்கு வரக்கூடாதென்று காத்திருக்கிறேன். அவரே வந்து காப்பாற்றட்டும் என்கிறாள் சீதா தேவி .
அப்படிப்பட்ட கற்பின் ஆற்றலால், விருந்துக்கு வந்த மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றி உணவூட்டுகிறாள் அனுசூயா தேவி. அவர்கள் மூவரும் அவளது கற்பின் சக்தியை உலகிற்கு உணர்த்திவிட்டோம் என்ற திருப்தியுடன் தேவ லோகம் செல்கின்றனர்.
அத்ரி மகரிஷி, வீடு திரும்பியவுடன் அனுசூயா , அன்று நடந்த வினோத விருந்து பற்றி எடுத்துரைத்தாள். வந்தவர்கள் மூவரும் மும்மூர்த்திகள் என்பதை ஞான சக்தியால் உணர்ந்த அத்ரி பிரார்த்தனை செய்யவே மூவரும் தோன்றி, அவளுடைய மனைவியின் கற்பின் திறத்தைக் கண்டு வியந்ததாகக் கூறி என்ன வரம் வேண்டும் என்று வினவ , மூவரும் மீண்டும் குழந்தைகளாக வரவேண்டும் என்று அத்ரி சொல்ல , அவர்கள் குழந்தையற்ற அந்த வீட்டில் அவதரிப்பதாக வரம் தந்தனர்.
பின்னர் சந்திரன் என்ற பெயரில் பிரம்மா, அவதரிக்க, அந்தக் குழந்தை, சந்திரனிடமே சென்று விட்டது.
துர்வாசன் என்று பெயரிட்ட குழந்தை (சிவன்) , முனிவராக சஞ்சாரம் செய்யப் புறப்பட்டுவிட்டது . விஷ்ணுவோ தத்தாத்ரேயர் என்ற பெயரில் பிறந்தவுடன் அது மட்டும் தங்கி, மூவரின் பிரதிநிதியாக இருந்தது. அதைக் குறிக்கும் வகையில் தத்தாத்ரேயர் உருவத்தை மூன்று தலைகளுடன் வரைவார்கள் . சிலர் அவரை விஷ்ணுவின் அவதாரமாகவே கருதுவர். இன்னும் ஓர் கதை அந்த மூன்று குழந்தைகளையும் இணைத்து தத்தாத்ரேயரை அத்ரி மகரிஷியே உருவாக்கினார் என்பதாகும்.
xxx
இந்தக் கதையில் பல கருத்துக்கள் உள்ளன
மனம், மொழி, மெய் ஆகிய மூன்றினாலும் கணவனைத் தவிர வேறு யாரையும் நினையாத கற்பரசிக்கு மகத்தான சக்தி உண்டு
இறைவனும் கூட பெண்களின் கற்பின் சக்திக்குட்பட்டவன்
பெண்கள் திறமைசாலிகள்;0- எந்த கஷ்டமான சூழ்நிலையையும் சமாளிக்க அவர்கள் திட்டம் வைத்துள்ளனர். இதை சாவித்ரி , யமனிடம் கேட்ட புத்திசாலித்தனமான 3 வரங்களிலிருந்து அறியலாம்.
xxx

Picture shows 24 Gurus of Datta, aaccording to Bhavatha Puraana
அவதூத கீதை என்ற நூலில் தத்தாத்ரேயர் உபதேசங்கள் இருக்கின்றன
அத்தி மரத்தின் கீழ் நான்கு நாய்களுடனும் மூன்று தலைகளுடனும் இவரை சித்தரிப்பர். அந்த 4 நாய்களை வேதங்கள் என்று பக்தர்கள் கூறுவார்கள். இவர் இயற்கையில் உள்ள 24 பொருள்களிடமிருந்து என்ன கற்றார் என்பது பாகவத புராணத்தில் உள்ளது
இப்படிப் புகழ் பெற்ற தத்தாத்ரேயர் பற்றி பல கதைகள் உண்டு அவர் காலையில் காசிக்குச் சென்று காலை வழிபாட்டை முடிப்பார் . பகலில் பிச்சை எடுத்து உண்ணுவதற்காக மஹாராஷ்டிரத்திலுள்ள கோலாப்பூருக்கு வந்து விடுவார். மாலையில் சஹ்யாத்ரி மலைக்கு வந்து ஓய்வெடுப்பார் என்பது ஒரு நம்பிக்கை. இதை ஒட்டி இரண்டு மராத்தி பழமொழிகள் தோன்றின.
1.தத்தாத்ரேய பேரி – தத்தாத்ரேய பயணம் போல (இருக்கிறதே)
யாரேனும் காலை, மதியம், மாலை என்று வெவ்வேறு இடத்திற்குச் சென்றால் இப்படிக் கிண்டல் செய்வார்கள் . நாமோ தமிழ்நாட்டில் இதை ஆள் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு இருக்கிறான் போல என்று நக்கல் செய்வோம்.
2.தத்த கரூன் யேணேன் (வந்தான், தத்தாத்ரேயர் போல நடித்தான்./ நாடகம் ஆடினான் .
இதன் பொருள் – யாரோ செய்த உழைப்பின் பலனைப் பெற்றுக்கொள்ள உரிய நேரத்தில் வருதல் .
அதாவது தமிழ் சினிமா பாட்டின் கதை- ஆத்துல தண்ணி வர,
அதுல ஒருத்தன் மீன் பிடிக்க,
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டுபோக — என்ற கதை .
xxx
இதோ கருத்துள்ள அந்த முழுப் பாட்டு :
ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்?
கண்ணம்மா
அதைப் பாத்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா
பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன்
கண்ணம்மா
கண்ணம்மா கலப்பை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா
பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமா நூல்நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா – இங்கு
கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா
காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்துமாலை போடுவதேன்
கண்ணம்மா கண்ணம்மா அவள்
நேத்திரத்தைப் பறிப்பதும் ஏன் சொல்லம்மா
ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
– இதை
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா
படம்: வண்ணக்கிளி
இயற்றியவர்: மருதகாசி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
–சுபம் —
Tags- தத்தாத்ரேயர் , அத்ரி, அனுசூயா, சப்த ரிஷி, பழமொழி, மராத்தி,