
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,944
Date uploaded in London – 28 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்
புதிய நெடுந்தொடர்.
அத்தியாயம் 9
ச.நாகராஜன்
பகுதி 12
ஹிட்லரின் எண்ணம் தான் தான் கடவுள் என்று!
வலிமை மிக்க தனக்கு அழிவே இல்லை என்று அவன் நினைத்துக் கொண்டான்.
கிறிஸ்தவ பைபிளை அழித்து விட்டு தன் பெயரில் ஒரு புதிய பைபிளை உருவாக்குவது அவனது எண்ணம்.
இதை விளக்கும் சம்பவம் ஒன்று உள்ளது.
ஹிட்லரின் சீக்ரட் போலீஸின் தலைவராக விளங்கியவர் ஹிம்லர்.
இவருக்கு வயிறு சம்பந்தமான உபாதை உண்டு. பல்வேறு மருந்துகளைச் சாப்பிட்டுப் பார்த்தும் பயன் ஒன்றும் இல்லை.
அந்த நேரத்தில் தான் அவரிடம் எட்வர்ட் அலெக்ஸாண்டர் ஃபெலிக்ஸ் கெர்ஸ்டன் (பிறப்பு 30-9-1898 மறைவு 16-4-1960) என்பவரை ஒருவர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
சீனர் ஒருவரிடம் யோகா உள்ளிட்ட கலைகளைக் கற்ற கெர்ஸ்டன் மருந்து எதையும் ஹிம்லருக்குத் தரவில்லை.
மாறாக ஹிம்லரின் அடி வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்தார். எப்போதும் எதற்கும் தீராத வயிற்றுவலி ஹிம்லருக்கு உடனே நீங்கியது.
அன்று முதல் கெர்ஸ்டன் மீது அபார நம்பிக்கையைக் கொண்டார் ஹிம்லர்.
இந்த நம்பிக்கையை நன்கு பயன்படுத்திக் கொண்டு அதை கெர்ஸ்டன் மேலும் மேலும் வளர்த்துக் கொண்டார்.
இதனால் பல்லாயிரக்கணக்கானோரை கெர்ஸ்டனால் உயிர் பிழைக்க வைக்க முடிந்தது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்ப வைக்க முடிந்தது. – ஏனெனில் கெர்ஸ்டனின் பேச்சை ஹிம்லர் கேட்டதால் தான்.
ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் கெர்ஸ்டனைப் பற்றிய கட்டுரை ஒன்று வெளி வந்துள்ளது.
அதில் இடம் பெறும் குறிப்பிடத்தகுந்த சம்பவம் இது.

ஒரு நாள் ஹிம்லரின் நூலகத்திற்குள் அடைக்கலம் புகுந்தார் கெர்ஸ்டன். அங்கு இருந்த புத்தகங்களைப் பார்த்து அவர் திகைத்தார்.
பைபிளின் பழைய ஏற்பாடு, குர் ஆன், ஹிந்து வேதங்கள், பல்வேறு வியாக்யானங்கள், மத போதனைகள் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களை அவர் பார்த்தார்.
ஹிம்லரை அவர் சந்தித்த போது அவர் கேட்டார்: “ நீங்கள் உண்மையான ஒரு நாஜிக்கு மதமே கிடையாது என்று சொன்னீர்களே?”
ஹிம்லர் உடனே, “ ஆமாம். அப்படித்தான் சொன்னேன்” என்றார்.
பின்னர் இதோ இந்த அலமாரியில் ஏராளமான மத புத்தகங்கள் உள்ளனவே, இவை எதற்காக?” என்று கேட்டார் கெர்ஸ்டன்.
ஹிம்லர் சற்று சங்கடப்பட்டார். என்றாலும் உடனே, “ நான் மனம் மாறி விடவில்லை. இவை எனது வேலைக்குத் தேவை” என்றார்.
பின்னர் மெதுவாக யாருக்கும் இதுவரை சொல்லாத ரகசியத்தை விவரித்தார்: “ஹிட்லர் என்னிடம் ஒரு முக்கிய வேலையைக் கொடுத்திருக்கிறார். நாஜி மதத்தின் புதிய பைபிளைத் தயாரிக்க வேண்டும் நான்.”
கெர்ஸ்டன், “எனக்குப் புரியவில்லை, விளக்கிச் சொல்லுங்கள்” என்றார்.
உடனே ஹிம்லர் தனது திட்டத்தை விவரித்தார்:
“தேர்ட் ரிச் (நாஜி ஜெர்மனி) வெற்றியை அடைந்தவுடன், ஹிட்லர் கிறிஸ்தவ மதத்தை அடியோடு அழிக்கப் போகிறார். அது அழிந்தவுடன் அதன் இடத்தில் ஜெர்மானிய நம்பிக்கையை வேரூன்றப் போகிறார். கடவுள் என்ற நம்பிக்கை லேசாக மேலெழுந்தவாரியாக இருக்கும். ஆனால் பிரார்த்தனைகளில் ஹிட்லரின் பெயரே சொல்லப்படும். லக்ஷக்கணக்கான மக்கள் தினமும் இப்படிச் சொல்லும் போது இன்னும் நூறு வருடங்களில் வேறு எதுவும் இருக்காது. நாஜி மதமே இருக்கும் – ஹிட்லரின் பெயருடன்”
கெர்ஸ்டன் திகைத்தார். முகத்தில் கோபம் கொப்பளித்தாலும் அதை ஹிம்லர் பார்க்க முடியாத படி தலையைக் கவிழ்த்துக் கொண்டார் அவர்.
இதற்கான பல அடித்தளக் கொள்கைகளை தனது புத்தகமான மெய்ன் காம்ஃப் என்ற புத்தகத்தில் முதலிலேயே எழுதி வைத்தான் ஹிட்லர்.
கிறிஸ்தவத்தை அழித்து விட்டு தனது மதத்தை ஸ்தாபித்துத் தானே கடவுளாக நினைத்தவன் ஹிட்லர் என்பதை இந்தச் சம்பவம் விளக்குகிறது.
***