
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,949
Date uploaded in London – 29 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாபாரத மர்மம்
அரசியல்வாதிகளுக்கு பீஷ்மரின் அட்வைஸ்!
ச.நாகராஜன்
“என்ன சார்? பீஷ்மர் எப்போது நமது அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ் செய்தார்?” என்று ஆச்சரியப்பட வேண்டாம்.
அன்றைய ராஜாவை விட இன்றைய ‘சாதா மந்திரி’ நூறு மடங்கு ‘பவர்ஃபுல்’.
சரி, அன்றைய நாளில் ராஜா ஒரு எப்படி இருந்திருக்க வேண்டும்?
யுதிஷ்டிரர், பீஷ்ம பிதாமஹரை நோக்கி. “ ஓ! பிதாமஹரே! ஒரு அரசன் எப்படி ஒழுக்கத்துடன் இருந்து மனிதர்களை மேன்மையடையச் செய்து புண்ணிய உலகங்களை ஜெயிப்பான் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.
பீஷ்மர் 36 குணங்களைக் கூறி இவை அரசன் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
1) தர்மத்தை அதன் செயல், நடைமுறைகளோடு முற்றிலுமாக அப்படியே அவன் கடைப்பிடிக்க வேண்டும். அதில் அவன் வெறுப்புடன் அவற்றைச் செய்யக் கூடாது.
2) தர்மத்தைக் கடைப்பிடிக்கும் போது மற்றவருடன் அன்பினால் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
3) பணமோ அல்லது செல்வ வளங்களோ எதானாலும் சரி அவற்றைக் கொடூர வழிகளில் பெறக் கூடாது.
4) அவன தனது வளங்களை அனுபவிக்கும் போது மிக்க கௌரவத்துடன் இருத்தல் வேண்டும்.
5) அனைவருடனும் கனிவாகப் பேச வேண்டும்.
6) அவன் வலிமை வாய்ந்த மாபெரும் வீரனாக இருக்க வேண்டும். ஆனால் தன் வீரம் பற்றித் தற்புகழ்ச்சியாகப் பேசக் கூடாது.
7) அவன் தானங்களை வெகுவாக வழங்க வேண்டும். ஆனால் தகுதி அற்றவருக்கு வழங்கக் கூடாது.
8) கெட்டவர்களுடன் அவன் ஒரு போதும் பழகக் கூடாது.
9) வீரனாக இருப்பினும் கொடூரனாக இருக்கக் கூடாது.
10) நல்ல நண்பர்களுடன் ஒருபோதும் அவன் சண்டை போடக் கூடாது.
11) தனக்கு விசுவாசமில்லாத ஒருவனை ஒற்றனாக அவன் நியமிக்கக் கூடாது.
12) தனது பணியை மற்றவர்களுக்குத் தொந்தரவு தராமல் அவன் செய்ய வேண்டும்.
13) வெறுக்கத்தக்க மனிதர்களிடம் அவன் தனது பணிகளையும் திட்டங்களையும் அவன் சொல்லக் கூடாது.
14) தனது நற்குணங்களைப் பற்றித் தானே புகழ்ந்து பேசக் கூடாது.
15) தன்னை விட மேலான நற்குணங்களை உடைவர்ளிடமிருந்து, அரிய சிறப்பானவர்களிடமிருந்து அவன் ஒரு போதும் பணத்தைப் பெறக் கூடாது.
16) அயோக்கியர்கள், தரம் தாழ்ந்தவர்கள் ஆகியோரிடமிருந்து அவன் ஒரு போதும் உதவியைப் பெறக் கூடாது.
17) குற்றம் செய்து விட்டான் என்று சொல்லப்படும் ஒருவனை நன்கு விசாரிக்காமல் அவன் குற்றத்தை உறுதி செய்யாமல் ஒரு போதும் தண்டிக்கக் கூடாது.
18) ரகசிய ஆலோசனைகள் வெளியில் தெரியாதவாறு அவன் செயல்பட வேண்டும்.
19) பேராசையுள்ளவர்களுக்குப் பணத்தைத் தரக் கூடாது.
20) தனக்கு எதிராக தீய செயல்களைச் செய்தவர்களை அவன் ஒரு போதும் நம்பக் கூடாது.
21) தனது மனைவியைப் பொறாமையின்றி அவன் காப்பாற்ற வேண்டும்.
22) அவன் சுத்தமாக இருக்க வேண்டும், தவறற்றவனாகத் திகழ்தல் வேண்டும், மற்றவர்களை வெறுக்கக் கூடாது.
23) பெண்களிடம் அதிகமாக ஈடுபாடு கொண்டு போகம் அனுபவிக்கக் கூடாது.

24) சுத்தமான ருசியான உணவை மட்டுமே அவன் உண்ண வேண்டும். சுவையில்லாத மணமற்ற உணவை ஒருபோதும் உண்ணக் கூடாது.
25) தான் என்ற அகங்கார அணுகுமுறை அவனிடம் இருக்கக் கூடாது, மதிப்பு வாய்ந்தவர்களை மிக்க ஜாக்கிரதையுடன் மதிக்க வேண்டும்.
26) தன்னை விட உயர்ந்தவர்களுக்கு ஏமாற்றாமல் அவன் சேவை செய்ய வேண்டும்.
27) மிக்க தாழ்மையுடன் எளிமையாக அவன் கடவுளை பூஜிக்க வேண்டும்.
28) தவறான வழியில் ஒருபோதும் செல்வத்தைச் சேர்க்கவோ அல்லது சொத்தை அடையவோ முயலக் கூடாது.
29) மிக்க அன்புடன் எப்போதும் அவன் நடத்தல் வேண்டும்.
30) எல்லாப் பணிகளிலும் திறமையானவனாகவும் நிபுணத்வம் கொண்டவனாகவும் அவன் இருக்க வேண்டும். இடையறா பணியில் அவன் தகுந்த ஓய்வு எடுத்துக் கொள்ள மறக்கக் கூடாது.
31) இறுதிச் சடங்குகளில் அவன் போலித்தனமான இரங்கலைத் தெரிவிக்கக் கூடாது.
32) ஒருவனுக்கு ஆதரவு தெரிவித்த பின்னர், அவன் வருந்தக் கூடாது.
33) ஒருவனின் தவறை ஊர்ஜிதம் செய்து கொள்ளாமல் அவனை அடிக்கக் கூடாது.
34) எதிரிகளைக் கொன்ற பின் அவன் வருந்தக் கூடாது.
35) திடீரென்று ஒருவனின் மீது தன் கோபத்தைக் காட்டக் கூடாது.
36) தீங்கு செய்தோரிடம் அவன் அன்பு பாராட்டக் கூடாது, இதர மனிதர்களிடன் நட்புடன் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
*
முழுமையாகப் படிக்க விரும்புபவர்கள் சாந்தி பர்வம் 75ஆம் அத்தியாயத்தைப் பார்க்கலாம்.
***
இப்போது அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு டெஸ்ட்!
உங்களுக்குப் பிடித்த ராஜாவை – அது தான் சார் – இந்தக் கால அரசியல்வாதியை – மந்திரியை – யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலே உள்ள 36இல் அவரை வைத்து உரசுங்கள்.
யூ-டியூபர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்! யூ டியூப்களையும் பாருங்கள்!!
எந்த மாடல் அரசாக முன் வைக்கப்பட்டாலும் அந்த மாடலை அந்த மாடலை முன் வைத்தவரை, அவரது பூர்வீகத்தை அலசி ஆராயுங்கள்!
முடிவு ?!
பீஷ்மரும் பரிதாபம், யுதிஷ்டிரரும் பரிதாபம், நீங்களும் பரிதாபம்!
***
இன்னொரு கிருத யுகத்தை எதிர் நோக்குவோம் அல்லது நாமேஉருவாக்குவோம்!
****
ஹனி ட்ராப், ஸ்டிங் ஆபரேஷன், நாங்கள் போட்ட பிச்சை நீங்கள், எங்கள் மாடல் அரசு சூப்பர், பாத யாத்திரை, ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் மாதா மாதம் இலவம், இலவசமாகத் தேரில் போகலாம் – ஸாரி, பஸ்ஸில் போகலாம் …… இன்னும், இன்னும், இன்னும்……
பாடம் தரும் யூ டியூபே சரணம்!