தாளம் தப்பாமல் பாத்துக்கோ! (Post No.11,954)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,954

Date uploaded in London –   May 1 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com  

தாளம் தப்பாமல் பாத்துக்கோ!

ச. நாகராஜன் 

முன்னொரு காலத்தில் ராஜா ஒருவன் பெரிய ராஜ்யத்தை ஆண்டு வந்தான். ஆனால் அவன் சுத்த கருமி. எதை எடுத்தாலும் அதில் எவ்வளவு செலவு ஆகும் என்று பார்ப்பான்.

ஒரு நாள் அரசவைக்கு நடனமாடும் கோஷ்டி ஒன்று வந்தது. தாங்கள் பல ராஜ்யங்களுக்கும் சென்று தங்கள் நடனத்தைக் காண்பித்திருப்பதாகவும் இந்த ராஜ்யத்திலும் தங்களது திறமையைக் காண்பிக்க ஒரு வாய்ப்பை ராஜா நல்க வேண்டும் என்றும் அந்தக் குழுவினர் ராஜாவைக் கேட்டுக் கொண்டனர்.

ராஜாவோ தயங்கினான். நடனம் முடிந்த பின்னர் அந்தக் கோஷ்டியினர் அனைவருக்கும் நிறைய பரிசு வழங்க வேண்டி இருக்குமே!

ஆகவே அவன் பதில் சொல்லாமல் தயங்கினான்.

அரசனின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மந்திரி ராஜாவிடம் சென்று,
“மன்னா! கவலைப்பட வேண்டாம். இந்தக் குழுவினருக்கு இதோ குழுமி இருக்கும் மக்கள் தங்களால் ஆன தொகையையோ அல்லது பரிசுப் பொருள் எதையாவதோ நிச்சயம் வழங்குவர். அதுவே அந்தக் கோஷ்டியினர் திருப்தி அடையப் போதுமானது. ஆகவே நிகழ்ச்சியைத் தொடங்க அனுமதியை வழங்குங்கள்” என்றார்.

தன் கையிலிருந்து செலவழிக்க வேண்டாம் என்ற  செய்தி கிடைத்தவுடன் மகிழ்ந்த மன்னன், நடனமாடும் குழுவினரை உடனே ஆரம்பிக்கலாம் என உத்தரவிட்டான்.

கோஷ்டியின் அற்புத நிகழ்ச்சி ஆரம்பமானது.

நேரம் சென்று கொண்டே இருந்தது.

நடனப் பெண்மணி ஆடி ஆடிக் களைத்துப் போனாள். தனது கூட ஆடிக் கொண்டிருந்த ஆண்மகனைப் பார்த்து பூடகமாக அவனுக்கு மட்டும் புரியும் வகையில் பாடலைப் பாடினாள்.

“இதோ பார்! இந்த இடம் பிரயோஜனம் இல்லை. ஒரு ஆளும் பாராட்டி ஒரு காசைக் கூட இது வரை தரவில்லை. ஆட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டியது தான்! என்ன சொல்கிறாய்!”

“நீ சொல்வது உண்மை தான்! நேரம் ரொம்ப ஆகி விட்டது. இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கிறது. முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தாலும் ஒரு விஷயத்தை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆட்டத்தில் நன்கு கவனம் செலுத்து. தாளத்தை மட்டும் தப்ப விட்டு விடாதே!”

“தாள் மே பங்க நா பாய்”  தாளத்தை மட்டும் தப்ப விட்டு விடாதே!

நடன மங்கை ஆட்டத்தில் கவனம் செலுத்தினாள்; தாளத்தைத் தப்ப விடாமல் ஆடி முடித்தாள்.

அனைவரும் கை தட்டிப் பாராட்டினர்.

ஒரு சந்யாசி அந்த மங்கையிடம் வந்து பாராட்டி விட்டு தன்னிடமிருந்த ஒரு அருமையான கம்பளத்தைத் தந்தார். அவரிடமிருந்த சொத்து அது ஒன்று தான்! அதை அவர் தந்து விட்டார்.

 அடுத்தாற்போல ராஜ குமாரி நடன மங்கையிடம் வந்தாள். தான் அணிந்திருந்த விலை மதிப்புள்ள நெக்லஸை அவளிடம் தந்தாள்.

அடுத்தாற் போல ராஜ குமாரன் வந்தான். அவன் நடன மங்கையிடம் தான் அணிந்திருந்த விலை உயர்ந்த தங்க நகையைத் தந்தான்.

 நடன கோஷ்டி மிக்க மகிழ்ச்சியுடன் விடை பெற்றுச் சென்றது.

 ராஜாவுக்கு ஒரே ஆச்சரியம்.

சந்யாசி, ராஜகுமாரி, ராஜகுமாரன் ஆகிய மூவரையும் ஒவ்வொருவராக தனித் தனியே அழைத்தான்.

“எப்படி இதைக் கொடுக்க உங்களுக்கு மனம் வந்தது?” என்று ஒவ்வொருவரையும் அவன் கேட்டான்.

முதலில் சந்யாசி பதில் கூறினார்: “ராஜாவே! நடன மங்கையின் இன்பமான பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த நான், இப்படி உலக இன்பங்களை விட்டு விட்டு எதற்காகத் தவம் புரிய வேண்டும்? நாளையிலிருந்து உலக வாழ்க்கையை மேற்கொண்டு இன்பமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் கடைசியில் “தாளத்தை மட்டும் தப்ப விட்டு விடாதே” என்பதைக் கேட்டவுடன் என் மனம் மாறியது. ஒரு நாளும் தாளத்தை தப்ப விட மாட்டேன், என்ன ஆனாலும் சரி என்று முடிவுக்கு வந்து தவத்தைத் தொடர முடிவு செய்தேன். என்னிடம் இருந்த விலையுயர்ந்த  வஸ்து அந்தக் கம்பளம் ஒன்று தான். ஆகவே அதையும் துறக்க முடிவு செய்தேன். அதைக் கொடுத்தேன். இதோ என் தவத்தை மேற்கொள்ளக் கிளம்புகிறேன்” என்று கூறிய சந்யாசி அங்கிருந்து கிளம்பினார்.

அடுத்து ராஜகுமாரி தந்தையான ராஜாவிடம் மனதை விட்டு எதையும் ஒளிக்காமல் கூறினாள். “தந்தையே! நீங்களோ ஒரு கருமி. நாளுக்கு நாள் என் வயது கூடிக் கொண்டே போகிறதே! எனக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு வரவில்லையே! என்ன செய்வது? நாளைக்கு மந்திரி மகனுடன் ஓடிப் போகலாம் என்ற முடிவுக்கு நடன நிகழ்ச்சி பார்க்கும் போது வந்தேன். ஆனால் கடைசியில் தாளத்தை மட்டும் தப்ப விட்டு விடாதே என்ற வரியைக் கேட்டவுடன் என் மனம் மாறியது. ஓடிப் போனால் உங்களுக்கும் ராஜ்யத்திற்கும் மாபெரும் அவப் பெயர் அல்லவா வரும்? ஆகவே இப்படி ஒரு அறிவுரையைத் தந்த கோஷ்டிக்கு என்னிடம் இருந்த ஒரே விலை உயர்ந்த நெக்லஸைத் தந்தேன்.”

அடுத்து ராஜகுமாரனும் தன் உள்ளத்தில் இருந்ததை ஒளிக்காமல் ராஜாவிடம் கூறினான் : “தந்தையே! தாங்களோ கருமி! ராஜ்யத்தை ஒரு நாளும் நீங்கள் எனக்கு அளிக்கப் போவதில்லை. ஆகவே நாளை உங்களைக் கொன்று விடலாம் என்ற முடிவை எடுத்தேன். ஆனால் கடைசியில் தாளத்தை மட்டும் தப்ப விட்டு விடாதே என்ற வரியால் என் பிழையை உணர்தேன். உயர்ந்த ராஜ குடும்பத்தில் பிறந்து இப்படி ஒரு இழிந்த எண்ணம் எனக்கு வரலாமா? எனக்கு உண்மையைப் போதித்த கோஷ்டியினருக்கு என்னிடம் இருந்த ஒரே விலை மதிப்புள்ள ஆபரணத்தை அளித்தேன். என்னை மன்னித்து விடுங்கள்”

 அரசன் மனம் மாறினான். அவன் புத்தி தெளிந்தது. அவன் கண்களில் நீர் துளித்தது.

தாளத்தை மட்டும் தப்ப விட்டு விடக் கூடாது என்று முனகிய அவன், சந்யாசியிடம் கொஞ்சம் இருங்கள்” என்றான்.

ராஜ்யத்தை மகனுக்கு அளித்து முடி சூட்டினான். மந்திரி மகனை அழைத்து தன் மகளை அவனுக்கு விமரிசையாக மணம் முடித்துக் கொடுத்தான்.

பின்னர் சந்யாசியுடன், “இதோ, நானும் உங்களுடன் தவம் புரிய வருகிறேன்” என்றான்.

 தாளத்தை மட்டும் ஒரு போதும் தப்ப விட்டு விடக் கூடாது.

தாள் மே பங்க நா பாய்!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: