எல்லோரா எனும் உலக அதிசயம்; 108 மஹாராஷ்டிர புனிதத் தலங்கள்- 11 (11,978)

Nageswaram Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,978

Date uploaded in London – –  May 7 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பகுதி 11

சிவ பெருமான் ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ ஆவான் ; மஹா யோகி; யோகேஸ்வரன்; படைத்தல், காத்தல் , அழித்தல் என்ற மூன்று பணிகளில் அழித்தலுக்கு  உரியவன். அது மூலம் புது படைப்புகளுக்கும், பிறவாத நிலைக்கும் உதவும் மூர்த்தி. அவனுக்கு இமயம் முதல் குமரி வரையுள்ள 12 ஜோதிர் தலங்களில் ஐந்து மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ளன .

இன்று, அவுந்தா என்னுமிடத்தில் உள்ள நாகநாதர் கோவிலைக் காண்போம்..

41.அவுந்தா நாக்நாத் மந்திர் (औंढा नागनाथ मंदिर) Aundha Nagnath Temple, Hingoli

இது ஒரு ஜோதிர்லிங்கம் . நாக நாதம்நாகேஸ்வரம் என்றும் பெயர்கள் உண்டு.

சிவ பெருமானுக்கு உரிய 1008 நாமங்களில் நாக நாதன் என்பதும் ஒன்று. நாகம் என்னும் பாம்பினையே உடலில் அணிகலனாக .அணிந்தவன்.  தமிழ் நாட்டிலும் நாகநாத சிவன் கோவில் உண்டு. மஹாராஷ்டிரா நாக  நாதன் கோவில் ஹிங்கோலி மாவட்டத்தில் இருக்கிறது. பர்பானி, நான்டெட் என்னும் நகரங்களில் இருந்து இரண்டு மணி நேரத்தில் காரில் செல்லலாம். நான்டெட், அவுரங்காபாத் விமான நிலையங்கள் அணித்தே உள்ளன. சொண்டி என்னும் ரயில் நிலையமும் அருகில் உள்ளது

இந்தக் கோவிலை மஹாபாரத புகழ் யுதிஷ்டிரன்  முதலில் கட்டியதாக ஐதீகம் (செவி வழி வரலாறு).

முஸ்லீம் மதவெறியனான அவங்க சீப் அழித்த கோவில்களில் இதுவும் ஒன்று. ஆனால் சனாதனமான இந்தக் கோவில்கள் மீண்டும் மீண்டும் உயிர்பெற்று எழும் ; அழிவே கிடையாது 13ம் நூற்றாண்டில் யாதவ அரசர்கள் இதை புனர் நிர்மாணித்தனர். பின்னர் அகல்யாபாய் ஹோல்கர் என்னும் இந்தூர் மஹாராணி திருப்பணி செய்தாள் .

அருமையான சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். லிங்க வடிவில் அமைந்த சிவனின் பிரதான சன்னதி தவிர 12 ஜோதிர்லிங்க தலங்களையும் செதுக்கி வைத்துள்ளார்கள். சிவனின் லீலைகளைக் காட்டும் பிற கோவில்கள், சிற்பங்கள் ஆகியனவும் இங்கே இடம்பெற்றுள்ளன. ஜோதிர் லிங்க தலம் என்பதால் பக்தர்களின் கூட்டத்திற்குக்  குறைவில்லை

xxxx

42. எல்லோரா கைலாசநாதர் கோவில்

.மஹாராஷ்டிரம், குகைக் கோவில்கள் நிறைந்த மாநிலம். அதில் சிவ பெருமானின் சிலைகள் உடைய எல்லோரா குகைக்கோயில் உலக மஹா  அதிசயம். 100 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்ட குடைவரைக் கோவில். பூமியைத்தோண்டி அமைக்கப்பட்ட உலகின் ஒரே கல்லிலான (World’s largest monolithic monument) மாபெரும் அமைப்பு.. பூமிக்கு மேலேயுள்ள குன்றுகளைக் குடைந்து ஏனையோர் கோவில் அமைத்தனர். ஆனால் எல்லோராவிலோ பூமிக்கு கீழே உள்ள பாறைகளைக் குடைந்து குகைகளை அமைத்து அதில் சிற்பங்களை செதுக்கியுள்ளார்கள். இங்கு புத்த, சமண மத உருவங்களும் இருக்கின்றன.

இந்தக் கோவிலை ஆராய, ஆராய புதுப்புதுத் தகவல்கள் கிடைத்து வருகின்றன. 1000 பேர் தினமும் வேலை செய்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக எறும்பு போல , டன் கணக்கில் கற்களையும் பாறைகளையும் பூமிக்கு வெளியே கொண்டுவந்துள்ளனர். தாஜ்மஹால் போன்ற கட்டிடங்களைவிட புகழ்பெற வேண்டிய இடம். ஆயினும் ஏதோ ஒரு காட்டுப்பகுதியில் இருந்ததாலும் 700 ஆண்டு முஸ்லீம், 300 ஆ ண்டு கிறிஸ்தவர் ஆட்சி காரணமாகவும்  புகழ் மங்கிக் கிடந்தது . இதை பாரதியார் ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி என்று வருணித்துள்ளார்.

இருக்கும் இடம்

எல்லோரா செல்லுவோருக்கு இரண்டு தலங்களின் தரிசனம் கிட்டும். மிக அருகில் கிருஷ்ணேஸ்வர சிவன் கோவில் இருக்கிறது அவுரங்கா பாத்திலிருந்து 18 மைல் / 29 கிலோமீட்டர்தான். அஜந்தா குகைகளிலிருந்து 23 கிலோ மீட்டர்.

குகையின் உயரம் 32 மீட்டர்; நீளம் 78  மீட்டர். ஒரு சிவன் கோவிலை பூமிக்கு அடியில் அமைத்தது போல இருக்கிறது. சூரிய ஒளி உள்ளே வருவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் மிகவும் திட்டமிட்டு செய்யப்பட பொறியியல் (Engineering marvel) அதிசயம் என்றும் சொல்லலாம்

பழமையிலும் குறைவில்லை. ராஷ்டிர கூட மன்னனான தந்தி துர்க்கணும் , முதலாவது கிருஷ்ணனும் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோவில்.

இந்த குகைகளில் எண் 16-ல் சிவன் உருவங்கள் இருக்கின்றன.

34 சமண , பெளத்த , இந்து குகைக் கோவில்களில் எண் 16 குகை தான் மிகப்பெரியது .

சிவனுடைய பல்வேறு ரூபங்களுடன் ஏனைய இந்துக் கடவுளரின் திரு உருவங்களும் இங்கே செதுக்கப்பட்டுள்ளன. சம்ஹராம் , அனுக்கிரகம் , குரு உபதேசம், நாட்டியம் என்னும் அம்சங்களை அவை காட்டுகின்றன. அத்துடன் இரண்டு பெரிய துவாரபாலகர் புடை சூழ அமைந்த கஜ லெட்சுமி , யானை, சிங்கம் போன்ற மிருகங்களின் பேருருவம், ராமாயண, மஹாபாரதக் காட்சிகள் முதலியனவும் குறிப்பிடத் தக்கவை .

இரண்டு அடுக்குகளில் ,மேலேயுள்ள அடுக்கினை கோவில் என்று சொல்லலாம். நந்தி மண்டபம், 16 தூண்கள் உடைய சபா மண்டபம், க பக கிரகம், விமானம்  5 சந்நிதிகள் ஆகியன இதில் அடக்கம். ஒருகாலத்தில் பெரும் பூஜை, புனஸ்காரங்கள் நடந்திருக்க வேண்டும்.

மத வெறியனான அவங்க சீப் ஆயிரம் ஊழியர்களை அனுப்பி மூன்று ஆண்டுகள் முயன்றும் கொஞ்சம் பகுதிகளையே இடிக்க முடிந்ததாம்.

சிவன் நடனம் ஆடும் நிலையிலுள்ள உருவம் குறிப்பிடத்தக்கது. ஆனால் சோழர்கால சிற்பிகள் இதற்கும் மேலே ஒருபடி சென்று , இன்று நாம் காணும் நடராஜர் உருவங்களை உருவாக்கினர் .

Xxxx

அம்பர்நாத் சிவன் கோவில்

முந்தைய பகுதிகளில் இந்த சிவன் கோவில் விவரங்களைக் கொடுத்துவிட்டேன் .

Xxxx

43.கோபேஸ்வர் சிவன் கோவில், Kopeshwar Shiva Temple, Kolhapur District

கோலாப்பூர் மாவட்டத்தில் கிதராப்பூர் என்னும் சிற்றூரில் அமைந்த கோவில் இது

சாங்க்லி நகரிலிருந்து 36 கிலோமீட்டர் கோலாப்பூ ரிலிருந்து  60 கிலோமீட்டர்.

இந்தக் கோவிலை நான்கு பகுதிகளாகக் காணலாம். ஸ்வர்க்க மண்டபம், சபா மண்டபம், அந்தராள கக்ஷ, கர்ப்பக் கிரகம். இவைகளில் கர்ப்பக் கிரஹம் கூம்பு வடிவத்தில் அமைந்து இருக்கிறது வெளிப்புற சுவர்களில் பல கடவுளர் உருவங்களும், பொதுவான சமய சார்பற்ற உருவங்களும் உள்ளன. கர்பக் கிரஹத்தில் இரண்டு சிவ லிங்கங்கள் இருப்பதும், நந்திக்கு தனியே சந்நிதி இருப்பதும் குறிப்பிட்டது தக்கவை  கோவிலை யானையின் சிலைகள் தாங்கி நிற்பது போல அமைக்கப்பட்டுள்ளது

முதலில் தோபேஸ்வர் என்னும் விஷ்ணுவையும் பின்னர் கோபேஸ்வர் என்னும் சிவனையும் காண்கிறோம்.கோபம் என்ற உடனேயே சிவ பெருமானின் கோப உருவம்- ருத்ர தாண்டவம் நமக்கு நினைவுக்கு வரும் . தக்ஷன் நடத்திய யாகத்தில் சிவனுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் சிவனின் மனைவியான பார்வதி, தந்தையான தக்ஷன் யாகத்தில் தீக்குளித்ததும், அதை அறிந்த சிவன், கோபம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடியதும் , அவர் தூக்கிக்கொண்டு திரிந்த சதி என்னும் பார்வதியின் உடல் பாகங்கள் விழுந்த 51++ இடங்களும் சக்திக் கேந்திரங்களாக மாறி,  மக்களைக்  கவர்ந்திழுப்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்த சிவனின் கோபத்தை அடக்கி சமாதானப் படுத்த விஷ்ணு வந்த இடம் தான் கோபேஸ்வர் தலம் என்பது மக்களின் நம்பிக்கை; செவி வழி வரலாறு..

ஸ்வர்க்க மண்டபம்

கோபேஸ்வர் கோவிலில் குறிப்பிடத்தக்க கட்டிட அம்சம் ஸ்வர்க்க மண்டபம் . வட்டவடிவில் அமைக்கப்பட்ட இந்த மண்டபத்தில் 48 தூண்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும், சதூரம், வட்டம், அறுகோண , எண்கோண தூண்கள். ஒவ்வொன்றிலும் சிற்ப வேலைப்பாடுகளும் உண்டு. தூண்கள் மூன்று வட்டங்களில் உள்ளன. மேல் கூரை கிடையாது. நீல நிற வானத்தைக் காணலாம். அந்த திறந்த பகுதி 13 அடி விட்டம் உடையது .

இந்தக் கோவிலின் கர்ப்பக் கிர கம் கூம்பு வடிவில் இருக்கிறது .

கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்த இக்கோவில், ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கிய ஆட்சியில் துவக்கப்பட்டு 13ம் நூற்றாண்டு ஷிலாஹார ஆட்சியில் முடித்திருக்கலாம். இதிலுள்ள சிற்பக்கலை அதற்கு சான்று பகர்கின்றன.

To be continued…………………………………………..  tags… கோபேஸ்வர், எல்லோரா, கைலாசநாதர், நாகநாத, நாகேஸ்வரம், ஜோதிர்லிங்க , தலம் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: