
Post No. 11,981
Date uploaded in London – – May 8 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
காந்திஜி ‘யங் இந்தியா’ (YOUNG INDIA) பத்திரிகையில் எழுதிய விஷயம் கீழே தரப்பட்டுள்ளது.
“இந்தக் கடிதம் எழுதியவர் மாமிச உணவு சாப்பிடும் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர்கள் வற்புறுத்தியும் கூட மாமிச உணவுக்குத் திரும்ப மறுத்துவிட்டார். ஆனால் எனக்கு முன்னால் இருக்கும் ஒரு புஸ்தகத்தில் இந்த விஷயம் பற்றி சுவாமி விவேகானந்தர் சொன்ன அபிப்ராயத்தைப் படித்துவிட்டுக் கலங்கிப் போனேன்.என்றும் இப்போது இந்தியர்கள் உள்ள நிலைமையில் , மாமிச உணவு மிக அவசியம் என்றும் தாராளமாக மாமிசம் சாப்பிடுங்கள் என்று அவருடைய நண்பர்களுக்கு சுவாமிகள் சொல்லியிருக்கிறாரே என்றும் எனக்கு கடிதம் எழுதியவர் சொல்லியிருக்கிறார். மாமிசம் சாப்பிடுவதால் ஏதேனும் பாவம் வருமானால் அதை என் மீது சுமத்துங்கள்; அதை நான் ஏற்கத் தயார் என்று கூட விவேகானந்தர் சொல்லிவிட்டாரே ; நான் மாமிச உணவு சாப்பிடலாமா கூடாதா என்று குழம்பிக்கிடக்கிறேன் என்று கடிதத்தில் கூறியுள்ளார் .
காந்திஜி மேலும் எழுதுகிறார்
எதையும் குருட்டுத்தனமாக பின்பற்றுவது மனதின் பலவீனத்தைக் காட்டுகிறது .மாமிச உணவு சாப்பிடுவது தவறு என்பது கடிதம் எழுதியவரின் கருத்து ஆனால் உலகம் முழுதும் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு கொள்கைக்கு எதிரான ஒரு கொள்கையைக் கேட்டு அவர் ஏன் கலங்க வேண்டும் ? ஒருவர் எந்த ஒரு கொள்கையை ஏற்பதிலும் முதலில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். . ஒரு கொள்கையை ஏற்றபின்னர் என்ன எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்த்து நிற்க வேண்டும்..
மதிப்பிற்குரிய சுவாமிகள் எழுதிய கருத்தை நான் படித்ததில்லை. ஆயினும் கடிதம் எழுதியவர் அவரை சரியாக மேற்கோள் காட்டுகிறாரா என்பதை நான் சந்தேகிக்கிறேன். . இந்த விஷயத்தில் என் கருத்து எல்லோருக்கும் தெரிந்ததே .ஒரு மனிதன் சாதாரண சூழ்நிலையில் உயிர்வாழ முடியுமானால் அப்போது எந்த இடத்திலும், இந்தக் காலத்திலும் மாமிச உணவு தேவையே இல்லை . மனித இனத்திற்கு மாமிச உணவு உகந்தது அல்ல . மிருகங்களுக்கும் மேலானவர்கள் மனிதர்கள் என்றால் மாமிச உணவு சாப்பிடுவது மிருக்கங்களைப் போல நடப்பதாகும் . புலன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு மாமிச உணவு சரியானதல்ல என்பதை அனுபவம் காட்டுகிறது.

ஆயினும் உணர்ச்சிகளை அடக்குவதற்கோ ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்கோ உணவு மட்டும் போதும் என்றும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது . உணவு என்பது மிகவும் சக்திவாய்ந்த அம்சம்.. ஆனால் இந்தியாவில் உணவுப் பழக்கம் என்பதை மதத்துடன் தொடர்புபடுத்திப் பேசுவதும் தவறு. அதே போல உடலுக்கு உணவே பிரதானம் என்று நினைத்து அத்தனை கட்டுப்பாடுகளையும் உடைத்து எறிவதும் தவறு. காய்கறி உணவை மட்டும் சாப்பிடவேண்டும் என்ற கருத்து உலகிற்கு இந்துமதம் அளித்த மாபெரும், விலை மதிக்கவொண்ணாத கொடை ஆகும் .. அந்தக் கொள்கையை எளிதில் புறக்கணிக்கக் கூடாது .
உடலையும் மனதையும் பலவீனப்படுத்துவது காய்கறி உணவு; செயல்படாத , மந்த புத்தியை உண்டாக்குவது காய்கறி உணவு என்ற தவறான கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் . இந்து மதத்தின் மாபெரும் சீர்திருத்தவாதிகள் மிக உற்சாகத்துடன் செயல்பட்டுள்ளார்கள் . அவர்கள் அனைவரும் காய்கறி உணவை உண்டவர்களே . சங்கரர் அல்லது தயானந்தரை விட அதிக சேவை செய்த எவரையாவது, யாராவது காட்ட முடியுமா?
ஆயினும் எனக்குக் கடிதம் எழுதியவர் நான் சொல்கிறேன் என்பதற்காக இதை ஒப்புக்கொள்ள வேண்டாம். ஒருவரின் உணவுப் பழக்கம் அவரது மத நம்பிக்கையின் அடிப்படையில் அமைவதல்ல. தாமே காரணங்களை சிந்தித்து ஏற்க வேண்டிய கொள்கை.. காய்கறி உணவின் சிறப்பு பற்றி மேலை நாடுகளிலும் நிறையபேர் எழுதியுள்ளார்கள். அவைகளைப் படிப்பதும் பலன் தரும். பிரபல மருத்துவர்களும் இதுபற்றி எழுதியுள்ளனர் இந்தியாவில் காய்கறி உணவின் அவசியத்தை உணர்த்த, ஊக்குவிக்க எதுவும் தேவையே இல்லை . ஏனெனில் இதுதான் மிகவும் விரும்பத்தக்கது, மதிப்புமிக்கது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்ட இடம் இது. ஒருவேளை எனக்குக் கடிதம் எழுதியவரைப் போல எவருக்கேனும் மனக் குழப்பம் இருக்குமானால் மேல் நாடுகளில் இதற்குக் கிடைத்து வரும் ஆதரவு பற்றி படிக்கலாம்.
–யங் இந்தியா பத்திரிகை 7-10-1926
–subham—
Tags- சங்கரர் ,தயானந்தர், காந்திஜி, மாமிச உணவு, சுவாமி விவேகானந்தர், காய்கறி உணவு