
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,989
Date uploaded in London – 11 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 51
புலவரின் தாயார் முதுகில் ஏறிய புலவர்! கொங்கு நாட்டின் மீது தொண்டை நாடு செய்த சோதனை!
ச.நாகராஜன்
ஆணூர் என்ற ஊர் கொங்குமண்டலத்தில் பிரசித்தி பெற்ற ஒரு ஊர். இது நொய்யல் நதிக்கரையை அடுத்து இருக்கும் ஊர். இதனையொட்டி நத்தக் காரையூர், பழையகோட்டை என்னும் ஊர்கள் உள்ளன.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியை ஆண்டவர்கள் தமிழுக்கெனில் தம் உயிரையும் கொடுப்பர்.
இந்த நொய்யல் நதி வளப்பத்தில் சிறந்த காங்கேய நாட்டு ஆணூரில் சர்க்கரையாரது சமஸ்தானத்தில் ஒரு புலவர் வாழ்ந்து வந்தார்.
அவர் ஒரு சமயம் தக்க சன்மானம் பெரும் பொருட்டு தொண்டை நாடு சென்று எல்லப்பன் என்பவரை நாடித் தன் திறமையைக் காட்டவே அவர் மிகவும் மகிழ்ந்து தகுந்த வரிசையை அளிக்க முன் வந்தார்.
ஆனால் அந்தக் கொடையைப் பெற வலது கையை நீட்டாமல் தனது இடது கையை நீட்டினார் புலவர்.
எல்லப்பன் புலவரை நோக்கி, “ என்ன புலவர் நீர்? சன்மானம் பெறும் முறை கூட உமக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.
அதற்குப் புலவர், “சீமானே! அதை நன்றாக நான் அறிவேன். ஆனால், அமர்ந்த பொறையும், தமிழ் அறிவும், ஈகைக் குணமும் ஒருங்கே நிறைந்துள்ள சர்க்கரையாரின் சமூகத்தில் வாங்கிப் பழக்கப்பட்ட இந்த வலது கை பிறரிடத்து ஒரு போதும் நீட்டுவதில்லை என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. ஆகவே தான் இங்கு இடக்கையை நீட்டினேன். ஆகவே கோபம் கொள்ள வேண்டாம்” என்று பணிவுடன் கூறினார்.
இதைக் கேட்ட எல்லப்பன் எல்லையற்ற வியப்பை அடைந்தார்.
“அப்படியா? இதை அறிந்து நான் மிகவும் மகிழ்கிறேன். அப்படிப்பட்ட உதாரகுணம் கொண்ட சர்க்கரையாரை நாமே சோதிக்க ஆவல் கொண்டுள்ளோம். அந்தச் சோதனை முடியும் வரை நீர் எனது விருந்தாளியாக இங்கேயே தங்கி இரும்” என்றார் எல்லப்பர்.
தனது சமஸ்தானத்துப் புலவர்கள் சிலரை அழைத்த எல்லப்பர், “நேராக சர்க்கரையரிடம் செல்க; அவரது குணநலன்களை அறிந்து வருக” என்று கட்டளையிட்டார்.
புலவர்கள் சிலரும் கொங்கு நாட்டை அடைந்து சர்க்கரையாரின் சமஸ்தானத்திற்கு வந்தனர்.
அங்கே சர்க்கரையார் வளர்த்திருந்த அருமையான பூந்தோட்டத்திற்குள் நுழைந்தனர். அழகுற வளர்ந்திருந்த மலர்ச் செடிகளையும், கொடிகளையும் தாறுமாறாக வெட்டினர்.
இதைக் கண்ட தோட்டக் காவலாளர் ஓடோடிச் சென்று சர்க்கரையாரிடம் நடப்பதைக் கூறினார்.
இதைக் கேள்வியுற்ற சர்க்கரை மன்றாடியார், “அவர்கள் புலவர்கள் என்றால் அவர்களைத் துன்பப் படுத்தாது இன்சொல் கூறி வரவேற்று என்னிடம் அழைத்து வா” என்று காவலாளியிடம் சொன்னார்.
அவரும் அப்படியே இன்சொல் கூறிப் புலவர்களை அழைத்து வந்தார்.

புலவர்களை வரவெற்ற சர்க்கரையார், “ பெருந்தமிழ்ப் புலவீர்! பூஞ்செடிகள் ஓவ்வாதனவாயின் அவற்றை ஏவலாளரை விட்டு வெட்டுவிக்கலாமே! கற்கள் பதிக்கப்பட்ட கணையாழிகளையும், கனக தோடாக்களையும் அணிந்து கொண்டு புராண இதிஹாஸங்களைத் தொடும் தொழிலை மட்டும் கொண்டிருக்கும் தங்களின் திருக்கரங்கள் இப்படி கடினமான கோடாரி, அரிவாள் ஆகிய ஆயுதங்களைத் தொட்டு வருந்தலாமோ, கைகள் வலிக்குமே” என்று கூறி அவர்களின் கைகளைத் தடவி விட்டு அதில் தைலம் பூசி வெந்நீர் ஆட்டுவித்தார்.
புலவர்கள் அத்தோடு நில்லாமல் மேலும் அவரைச் சோதிக்கக் கருதினர்.
ஒரு புலவர் அருமையாக விருந்து படைக்கப்பட்ட சமயத்தில் சர்க்கரையாரின் அன்னையார் அதைப் பரிமாற வந்தபோது அவர் முதுகின் மீது திடீரென்று ஏறினார்.
திடுக்கிட்ட அன்னையார் தன் மகனை நோக்கினார்.
சர்க்கரையார் தன் அன்னையாரைப் பார்த்து, “அன்னையே! அந்தி பகல் சிரமம் கருதாது தொந்தி சரிய என்னைப் பத்து மாதம் சுமந்தவர் தானே தாங்கள்! இப்புலவரைச் சிறிது நேரம் சுமக்கலாகாதா?” என்று வினவினார்.
இதைக் கேட்ட புலவர் சட்டென கீழிறங்கினார்.
சர்க்கரையாரையும் அவரது அன்னையாரையும் நன்கு பலவாறு புகழ்ந்து வணங்கினார்.
“தங்களின் அன்பையும் பெருகிய ஆதரவையும் புலவர் மக்களுக்கு அளித்து வந்தமைக்காகவே அதன் உண்மைத் தன்மையை அறியக் கருதி இந்தத் தகாத சோதனையைச் செய்தோம். எங்கள் குற்றத்தைப் பொறுத்தருள்க. நாங்கள் தொண்டை நாட்டுப் பெரும் வள்ளலாகிய குன்றை எல்லப்பன் என்பாரது சமஸ்தானப் புலவர்கள்” என்றார்.
இதைக் கேட்டு மகிழ்ந்த சர்க்கரையார், “தொண்டை நாட்டாரின் சோதனைகளுக்குக் கொங்கு நாட்டார் ஆற்றவல்லரோ” என்று பதிலை அளித்தார்.
அவர்களுக்குத் தக்க சன்மானம் அளித்துக் கௌரவித்தார்.
நேரடியாக எல்லப்பரிடம் சென்ற புலவர்கள்,
“செங்குன்றை யெல்லாநின் செங்கைக் கொடையதனுக்
கெங்கெங்குந் தேடி யிணை காணேங் – கொங்கதனிற்
சர்க்கரையைப் பாடலாந் தண்டமிழ்க் கொன் றீயாத
எக்கரையாம் பாடோ மினி”
என்ற அழகிய வெண்பாவைக் கூறினர்.
சர்க்கரையாரிடம் சென்றது முதல் அங்கு நடந்தது அனைத்தையும் புலவர் பெருமக்கள் எல்லப்பருக்கு விளக்க அவர் வியந்து மகிழ்ந்தார்.
தனது விருந்தினராக உள்ள கொங்கு நாட்டுப் புலவரை எல்லப்பர் அழைத்து, “நீர் சர்க்கரையாரைப் பற்றிக் கூறியதனைத்தும் உண்மையே” என்று கூறி அவருக்கு வேண்டிய பொருள் அளித்து விடை கொடுத்தார்.
நல்லதம்பி சர்க்கரை காதல் என்னும் நூல்,
“அன்னை வெரிந் மேற்கொளச்சே யானனத்தை நோக்குதலும்
என்னை யீரைந்து திங்க லின்பாய்ச் சுமந்தீரே
இவரை யொருநிமிட மே சுமப்பீர் என்றுரைத்த”
என்று இவ்வாறு சர்க்கரையாரின் தாயார் புலவரைச் சுமந்த வரலாற்றை எடுத்துரைக்கிறது.
எல்லப்பரைப் பற்றிய பாடல்கள் பல உண்டு.

புறவோ டுடற்றிசை போக்கிய வேந்தன் புரிந்ததினு
மறவோ கொடிது கொடிது கண் டீரற னன்று மற்றுப்
பிறவோ மறுத்துரை செய்யான் மிகச்சிரம் பேர்த்துவைத்த
மறவோனைத் தாங்கிய வையமன் றோதொண்டை மண்டலமே
தலையிந் தாவெனு மைந்தா தாலோ தாலேலோ
தண் குன்றைப்பதியெல்லா தாலோ தாலேலோ
ஆலெங்கே யங்கே யரும்பறவை யாற்றுயிலு
மாலெங்கே யங்கே மலர்மடந்தை – சோலை தோறுஞ்
செங்கே தகைமணக்குஞ் செங்குன்றை யெல்லனெங்கே
யங்கே யிரவலரெல் லாம்
எல்லப்பன் எங்கே, அங்கே அனைத்து இரவலரும் கூடி இருப்பர் என்று இப்படிப் புகழ் பெற்றவர் எல்லப்பர்.
இப்படிப்பட்ட அருமையான சர்க்கரையாரையும் அவர் தாயாரையும் கொண்டது கொங்கு மண்டலமே என கொங்குமண்டல சதகம் பாடல் 51இல் கூறிப் பெருமைப் படுகிறது.
பாடல் இதோ:
திருத்து புகழ்பெறு மாணூரிற் சர்க்கரை செந்தமிழோன்
விருத்தமுட னன்னை மேலேறத் தாய் வெகு ளாமலெனைப்
பொருத்த முடன்பத்து மாதஞ் சுமந்து பொறையுயிர்த்தாய்
வருத்த மிதிலென்ன வென்றா னவன்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள்
பெருகிய புகழ் பெற்ற ஆணூர்ச் சர்க்கரை என்பானின் தாயார் அன்னம் பரிமாற, உணவருந்தும் புலவோர்களில் ஒருவர் அவ்வன்னையின் முதுகில் ஏறினார். இக்கொடிய செய்கைக்கு ஆற்றாத தாய் தன் பிள்ளையின் முகத்தை நோக்க, அந்தப் பிள்ளை, “அம்மா! என்னை பத்து மாதம் சுமந்திருந்த தாங்கள், இப்புலவரைச் சிறிது நேரம் சுமக்கலாகாதா? எனக் கூறினார். அப்படிப்பட்ட சர்க்கரை என்பானும் கொங்குமண்டலமே தான்.
அருமையான இந்த வரலாறு தமிழ்ப் புலவர்கள் மீது வள்ளல்கள் எவ்வளவு மதிப்புக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குகிறது அல்லவா?!
***