
Post No. 12,003
Date uploaded in London – – 15 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
டேய் கிழவா! உனக்கு 60 வயசு ஆனதும் மூளை குழம்பிப் போச்சுடா! டேய் கிழவா உன் ஆஸ்ரமக் கன்னுக்குட்டிக்குக் கொடுத்த விஷ ஊசியை உனக்குக் கொடுத்து கொல்லனும்டா — இவ்வாறு காந்திஜிக்கு தினமும் நூற்றுக் கணக்கில் கடிதங்கள் வந்தன .

ஆஸ்ரமத்தில் வலியால் துடித்த கன்றுக்குட்டியைக் கொல்ல காந்திஜி அனுமதித்தார்; தெரு நாய்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் கொல்லலாம் என்றார் ; குஜராத்தில் வயல்களில் புகுந்து சேதப்படுத்தும் குரங்குகளைக் கொல்லலாம் என்றார் . வெறிநாய் கடித்து என் மகனுக்கு ஹைட்ரோ போபியா என்னும் பயங்கர நோய் வந்தால் அவனையும் கொல்ல அனுமதிப்பேன் என்றும் எழுதினார். நவஜீவன், யங் இந்தியா, ஹரிஜன் ஆகிய பத்திரிகைகளில் இது பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், பிராணி நல ஆர்வலர்களையுயும் , சமண மத பக்தர்களையும் கொதித்து எழச் செய்தது. உடனே நாள் தோறும் அவருக்கு ஏராளமான “காதல் கடிதங்கள்” வரத்துவங்கின . இது பற்றி காந்திஜி எழுதியதைப் படியுங்கள்:-
அஹிம்சை எனும் கொள்கையை ஆதரிக்கும் சில கோபாவேச பக்தர்கள் இந்திய தபால் இலாகாவின் வருமானத்தைப் பெருக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டனர். நாள் தோறும் எனக்கு ஏராளமான கடிதங்களை எழுதிக் குவிக்கின்றனர் அவை அனைத்தும் என் மீது சேற்றை அள்ளி வீசுகினறன. அவர்கள் அஹிம்சைக்குப் பதிலாக ஹிம்சையையே ஆதரிக்கின்றனர் . ஆஸ்ரமக் கன்றுக்குட்டி சர்ச்சையை அவர்கள் நிறுத்தப் போவதில்லை சிலர் மிகவும் அன்பாக என்னை வசை பாடுகின்றனர். டேய் கிழவா , உனக்கு 60 வயசு ஆனவுடன் மூளை தேஞ்சு போச்சுடா என்று எழுதினார்கள். இன்னும் சிலர் டேய் கிழவா, உன்னை சசூன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோதே உன்னை HOPELSS CASE ஹோப்லஸ் கேஸ் (இனிமே இது பிழைக்காது) என்று தீர்மானித்து டாக்டர்கள் விஷ ஊசி கொடுக்காம போய்ட்டாங்க. அப்படி உனக்கு விஷ ஊசி ஏத்தி உன்னை கொன்னு இருந்தா, ஆஸ்ரம கன்னுக்குட்டி விஷ ஊசியிருந்தது தப்பிச்சு இருக்கும்; குரங்கு இனமும் உன்னோட அழிவு வேலையிலிருந்து தப்பிச்சு இருக்கும் — எனக்கு தினமும் கத்தை கத்தையாக வரும் “காதல் கடிதங்களில் ” இருந்து சில மாதிரிகளை மட்டும் கொடுத்துள்ளேன் இப்படி நிறைய கடிதங்கள் வ,ர வர நான் நவஜீவன் பத்திரிகையில் , வாட்டி வதைக்கும் பிரச்சனை பற்றி எழுதியது மிகவும் சரியே என்ற நம்பிக்கை என்னுள் வலுவடைந்து கொண்டே வருகிறது.
பித்துப் பிடித்து இப்படி எழுதும் மக்கள் அஹிம்சையை ஆதரித்துப் பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்பது அவர்களுக்கு ஏன் விளங்கவில்ல?. அஹிம்சையின் ஆணி வேரை அல்லவா அவர்கள் பிடுங்கி எறிகிறார்கள் ?
தீவிர எதிர்ப்பு காட்டும் வேறு வகையான கடிதக் கொத்தும் வருகின்றன. அவ்வகைக் கடிதங்களில் ஒன்றை மட்டும் காண்போம்
நீங்கள் கன்றுக்குட்டி சம்பவம் பற்றி எழுதியவை பல விளக்கங்களைக் கொடுத்தன. ஆயினும் ஒரு சம்சயம் (டவுட் DOUBT ) ஒரு கொடுங்கோலன் இருக்கிறான். அவன் மக்களுக்கு சொல்லொணாத துயரம் தருகிறான் அவனை அடக்க வேறு வழியே இல்லை; அப்போது அவனையும் கொல்லுவது அவசியம்தானே? அது அஹிம்சைதானே ? கன்றுக்குட்டியைக் கொன்ற விஷயத்தில் , அப்படிச் செய்ப்பவரின் நோக்கம்/ மனப்பாங்கு தான் முக்கியம் என்கிறீர்களே . அதே அடிப்ப டையில் .கொடியவர்களையும் தீர்த்துக் கட்டலாமே ; விவசாயிகளின் நிலங்களை அழிக்கும் ஜந்துக்களை அழிப்பது தவறு இல்லை என்றும் சொல்கிறீர்கள் அப்படியானால் மனித சமுதாயத்துக்கு தீங்கு செய்யும் கொடிய மக்களையும் அழிக்கலாமே ; அதுவும் அஹிம்சைதானா ?

இந்தக் கடிதத்துக்கு காந்திஜி எழுதிய பதில் :
இந்தக் கடிதம் எழுதியவர் என் கருத்தை தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறார் என்பதை இதைப் படிக்கும் விவேகமுள்ள வாசகர்கள், அறிந்திருப்பார்கள் . மனிதனைக் கொல்வதும் அஹிம்சை என்று சொல்வதற்கு என்னுடைய விளக்கங்களை பயன்படுத்த வாய்ப்பே இல்லை. எங்கெல்லாம் உயிர்வதையைத் தடுக்க முடியுமோ அங்கெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றுதான் விவசாயிகள் பிரச்சனையில் கூட நான் எழுதினேன் .அப்படி விவசாயிகள் உயிர் வதை செய்தால் அதை மன்னிக்கலாம் ; ஆனால் அதுவும் ஹிம்சைதான் ; விவசாயி தனக்காக வோ சமுதாயத்துக்காகவோ அதைச் செய்கிறான். இப்படி செய்வதும் அஹிம்சையின் வரம்பில் வராது . ஆஸ்ரமத்திலுள்ள கன்றுக்குட்டியைக் கொன்றது அந்த வாய்பேசாத ஜீவனின் நலனைக் கருதிதான். அதன் நலனே அப்போது நம் கொள்கை .
இப்போது குரங்குத் தொல்லையை விவாதிப்போம் மனிதனுக்கும் குரங்குக்கும் வித்தியாசம் உண்டு. குரங்கின் உள்ளத்தை மாற்ற வழி யில்லை ; கொடிய மனிதனின் மனதையும் மாற்றித் திருத்த மார்க்கம் உண்டு.. ஆகையால், நம்முடைய நலனுக்காக ஒரு கொடியவனைக் கொல்லுவது அஹிம்சை ஆகாது.
இப்போது மனப்பாங்கு/ நோக்கம் என்பதை விளக்குவேன்; என்ன நோக்கத்துக்காக இதைச் செய்கிறோம் என்பது அஹிம்சையின் ஒரு அம்சம்தான். அதுவே முழு இலக்கணம் என்று எண்ணிவிடக்கூடாது.
நம்முடைய சுயநலத்துக்காக ஒரு ஜீவனை (உயிரை) அழிப்பது ஹிம்சையே; எவ்வளவு உன்னதமான எண்ணத்துடன் செய்தாலும் ஹிம்சைதான். தீய எண்ணம் கொண்ட மனிதன் வாய்ப்பு கிடைக்காததாலோ, பயத்ததாலோ செயலில் இறங்காமல் இருப்பதும் ஹிம்சையே. ஆனால் அவன் செயலில் இறங்கவில்லை ஆகையால் நோக்கத்துக்கும் செயலுக்கும் உள்ள வேறுபாட்டையும் அஹிம்சையின் வரையறைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.அவனுடைய பல செயல்களைக் கவனித்தே அவன் நோ க்கம் என்ன என்பதை அறியவேண்டும் .
யங் இந்தியா 18-10-1928
xxx
(காந்தி இறப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே, அவர் எவ்வளவு சர்ச்சைக்கு உள்ளானார் என்பதை அவரது எழுத்துக்களும் கடிதங்களும் காட்டுகின்றன.)
–subham—
Tags- காந்திஜி, காதல் கடிதங்கள், விஷ ஊசி, கன்றுக்குட்டி, குரங்குத் தொல்லை, அஹிம்சை, கொடுங்கோலன்