இசைத் தமிழில் இராமாயணத்தை இயற்றிய எம்பெருமான்! (Post No.12,005)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,005

Date uploaded in London –   16 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் எண் 64 

இசைத் தமிழில் இராமாயணத்தை இயற்றிய எம்பெருமான்! 

ச.நாகராஜன் 

ஆதி கவியாகிய வால்மீகி இயற்றிய இராமாயணத்தைப் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு கவிஞர்கள் யாத்துள்ளனர்.

இதைத் தமிழில் வெண்பாவாகவும், கீர்த்தனையாகவும், கும்மியாகவும் யாத்துப் பெருமை சேர்த்த கவிஞர்கள் பலர்.

இசைத் தமிழில் இராமாயணத்தை இயற்றியவர் எம்பெருமான் என்னும் கவிஞர் ஆவார்.

இவரை ஆதரித்து அதை இயற்றுவிக்க ஊக்குவித்தவன் நல்லதம்பிக் காங்கேயன் என்னும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த கீழ்கரைப் பூந்துறை நாட்டு அதிபன் ஆவான்.

சங்ககிரி துர்க்கத்தில் இடையர் குலத்தில் எம்பெருமான் என்ற கவிராயர் ஒருவர் இருந்தார். அவர் இளமையில் மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் தங்கி கல்வி பயின்றார். தமிழில் நன்கு தேறினார். தெய்வ பக்தியுள்ள பெரியோர்களது அன்பின் கனிவை அவர் வியந்து பாராட்டுவார்.

மதுரையில் கல்வி, கேள்வியில் சிறந்த பூங்கோதை என்னும் நற்குண மாதினை அவர் மணம் புரிந்தார். அக்காலத்தில் மதுரையை அரசாண்டவர்கள் பாண்டியர்கள்.

பின்பு பாண்டிய நாடு நாயக்கர் வசமாயிற்று. என்றாலும் கூட கிருஷ்ணப்ப நாயக்கர் அரசராக அரசாண்ட போது அவரால் எம்பெருமான் போற்றப்பட்டார்.  அவரிடம் விடை பெற்றுத் தன் சொந்த ஊருக்கு அவர் வந்தார்.

அவரது ஊர் கொங்கு மண்டல இருபத்து நான்கு நாட்டிற்கும் தலைமையாய் ஏழு சுற்றுக் கற்கோட்டை உடைய கடிஸ்தலமாய், அந்த மண்டலத்தில் அரசு இறை செலுத்தாத குற்றம் போன்றவற்றைச் செய்தவர்களைச் சிறை வைக்கும் அரணுள்ள இடமாகத் திகழ்ந்தது.

மற்றைய சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், பட்டக்காரர்கள் முதலானோர் நாயக்கரது சமஸ்தான பிரதிநிதி காவலரைக் காண அங்கு வருவர்.

அப்போது எம்பெருமான் அவர்களிடம் இராமாயணத்தில் பொதிந்துள்ள ரகசியங்களையும் உள்ளுறைப் பொருளையும் நன்கு விளக்குவார்.  அதைத் தேன் துளியைப் பருகுவோர் போல அனைவரும் கேட்டு ஆனந்திப்பர்.

அவர்கள் அனைவரும் இராமாயணத்தை சுருக்கமாகச் சொல்லி மகிழ்விக்க வேண்டும் என்று எம்பெருமானை வேண்டினர்.

கீழ்கரைப் பூந்துறை நாட்டு அதிபனாக அப்போது மோரூரில் நல்லதம்பிக் காங்கேயன் என்பவன் சிறப்புற ஆட்சி செய்து விளங்கினான். அவரிடம் எம்பெருமான் அன்பு பாராட்டினார். எம்பெருமானுக்கு அந்த சங்ககிரி மோரூரில் காணி பூமி இருந்தது.

அவரிடம் காங்கேயர், “இராமாயணம் பாடுக” என்று வேண்டினார்.

“இராமபிரான் அருள் இருப்பின் அது நிறைவேறும்” என்று மகிழ்ச்சியுடன் எம்பெருமான் விடை பகர்ந்தார்.

ஒரு நாள் அக்கோட்டையுள் விளங்கும் ஶ்ரீ வரதராஜப் பெருமாள் சந்நிதியை அடைந்து தனது இராமாயணம் இயற்றும் எண்ணத்தை விண்ணப்பித்தார்.

“உலகமாதா” என்ற சொல் தோன்ற அதை மங்கலச் சொல்லாகக் கொண்டு தக்கையிசையால் இராமாயணம் பாடத் தொடங்கினார்.

காண்டங்கள் மற்றும் சில படலங்கள் தலைப்பில் வெண்பாவாகவும்  மற்றையன தக்கை ஒற்றை இரட்டை என்னும் குடகம் முதலிய வரிப்பாட்டுகளும் ஆங்காங்கே அமைத்து ஆறு காண்டமாய் இராமாயணத்தை கம்பரின் கருத்தைத் தழுவிப் பாடினார்.

இதைக் கேள்வியுற்ற மதுரை சமஸ்தானாதிபதிகள் கவிராயர் மீதும் காங்கேயன் மீதும் மிக்க மதிப்பு கொண்டு அவர்களைப் போற்றினர்.

“பாடுக” என்று கேட்டுக் கொண்ட காங்கேயனை நன்றி மறவாமல் ஆங்காங்கே தனது இராமாயணத்தில் அவர் சிறப்பித்திருக்கிறார்.

மேற்கு ரங்கம் என்று புகழ்ந்து பேசப்படும்  சங்ககிரி ஶ்ரீ வரதராஜப் பெருமாள் சந்நிதியில் எம்பெருமானின் இராமாயணம் அரங்கேற்றப்பட்டது என்பர்.

மெத்த வேகண்ணன் வெண்ணெய்தனில் விருத்தச்சீரா ராமாயணத்தைச்

சுத்தநாக் கம்பநாடன் சொன்னான் சொன்ன பொருள் 

               தக்கையிசையாலே

பத்தர் பாடியெம் பெருமானாற் பகரும் படிசெய்தான் மோரூரான்

அர்த்த நாரிசொ னல்லதம்பி யமலனருள் பெற்று வாழ்வாரே

–    தக்கை ராமாயணம்

நல்லதம்பிக் காங்கேயன் பல பிரபந்தங்கள் கேட்டிருக்கிறான். திருச்செங்கோட்டிற் பல கற்பணிகளும் கட்டளைகளும் செய்திருக்கிறான். அவனுடைய சிலாசாசனம் ஒன்று இதோ:

இது செங்கோட்டு வேலர் கற்பக்கிரக வடசுவரில் உள்ளதாகும்.

ஸ்வஸ்தி ஶ்ரீ சகாப்தம் தருஎ உயக (1521) இதன் மேற் செல்லா நின்ற சார்வரி சித்திரை மாதம் கீழ்கரைப் பூந்துறை நாட்டில் மோரூரில் இருக்கும் வேளாளக் கண்ணர்களில் திருமலை அத்தப்ப நல்லதம்பிக் காங்கேயன் உபயம்.

இதனால் இவரது காலம் கி.பி. 1590-1600 என்று ஆகிறது.

இவரது மூதாதையர் திருமலை காங்கேயனுடைய சாசனம் ஒன்றும் சித்தளந்தூரில் உள்ளது. அது வருமாறு:

ஸ்வஸ்திஶ்ரீ வியாதிஹ்ருதய சாலிவாஹன…. தசருரு…..- ந் மேல் செல்லா நின்ற சுபானு வருஷம் கார்த்திகை மாசம் உஙஉ பௌர்ணமையும்  ஞாயிற்றுக்கிழமையும் பெற்ற புண்ணிய காலத்தில் ஶ்ரீமன் ராசாதிராசன் ராசபரமேசுரன் ராசமார்த்தாண்டன் பூவக்ஷண ……. எம் மண்டலமும் கொண்டருளிய ஶ்ரீ வீரபிரதாபர் கிருஷ்ணராயர் மஹாராயர் பிதுருவிராச்சியம் பண்ணி யருளா நின்ற காலத்து முளவாய் சாந்த எயிநூர்ச்சாவடி செங்கோல் செலுத்தும் திரியம்பக உடையார் காரியத்துக்கு கடவரான சாம நயனார்க்கு நடக்கிற காலத்தில் எழுகரைப் பூந்துறை நாட்டு மோரூரில் திருமலை காங்கைய சீமையான சிற்றளுந்தூரில் என் காணி சொத்தில் ….

(No 138-1915)

இப்படிப்பட்ட அருமையான சம்பவத்தை கொங்குமண்டல சதகம் தனது 64ஆம் பாடலில் போற்றிப் புகழ்கிறது.

பாடல் வருமாறு:

அம்புவி மெச்சுகுன் றத்தூரி லாயரி லாய்கலைதேர்

எம்பெரு மானைக் கொடுதக்கை யென்னு மிசைத்தமிழால்

நம்பு மிராம கதையையன் பாக நவிலவிசை

வம்பவிர் தார்ப்புய னல்லய னுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் :

குன்றத்தூரான சங்ககிரி துர்க்கத்தில் இடையர் குலத்தில் உதித்துச் செந்தமிழ்ப் புலமை வாய்ந்த எம்பெருமான் என்னும் கவிராயனைக் கொண்டு இசைத் தமிழில் இராமாயண கதையை இயற்றுவித்த நல்லதம்பிக் காங்கேயனும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாம்.

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: