WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,015
Date uploaded in London – 19 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ச.நாகராஜன்
வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான ஜோதிடக் குறிப்புகள் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.
சிலவற்றை இங்கே காணலாம்.
ஶ்ரீ ராமரின் ஜென்ம நக்ஷத்திரம் – புனர்பூசம் (27 நக்ஷத்திரங்களில் ஏழாவது நக்ஷத்திரம்)
பால காண்டம் 18ஆம் ஸர்க்கம் 9, 10,11 ஸ்லோகங்கள் தரும் விவரங்கள் இவை.
“அப்போது பன்னிரண்டாவது மாதத்தில் சித்திரை மாதத்து சுக்கில பக்ஷ நவமி திதியிலும் புனர்வஸு நக்ஷத்திரத்தில் ஐந்து கிரகங்கள் உச்சமாய் நிற்க கர்க்கடக லக்கினத்தில் குரு சந்திரனோடு உதயமாகும் போது ஜகன்னாதரான ஸர்வலோக நமஸ்கிருதரும், திவ்ய லக்ஷணங்கள் பொருந்திய விஷ்ணு பகவானுடைய பாதி அம்சமான மஹாபாக்கியசாலியான இக்ஷ்வாகு வம்சத்தை மகிழ்வூட்டுகின்ற ராமராகிய குழந்தையை கௌஸல்யை பெற்றெடுத்தாள்
பரதனின் நக்ஷத்திரம் – புஷ்யம்; லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்னனின் நக்ஷத்திரம் ஆயில்யம்!
பால காண்டம் 18ஆம் ஸர்க்கம் 15வது ஸ்லோகம் தரும் விவரம் :-
களங்கமற்ற புத்தி உடைய பரதரோ எனில் புஷ்ய நக்ஷத்திரத்தில் மீன லக்னத்தில் பிறந்தார். (பூச நக்ஷத்திரம் 27 நக்ஷத்திரங்களில் எட்டாவது நக்ஷத்திரம்) சுமித்திரையின் இரண்டு புதல்வர்களும் – லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்னன் ஆகிய இருவரும் – ஆயில்ய நக்ஷத்திரத்தில் சூரியன் உச்சமாய் இருக்க கர்க்கடக லக்னத்தில் பிறந்தனர். (ஆயில்ய நக்ஷத்திரம் 27 நக்ஷத்திரங்களில் ஒன்பதாவது நக்ஷத்திரம்)
ரோஹிணிக்கும் சந்திரனுக்கும் உள்ள நெருக்கம்!
ரோஹிணி நக்ஷத்திரத்திற்கும் சந்திரனுக்கும் உள்ள நெருக்கம் அனைவரும் அறிந்த ஒன்றே.
சுந்தர காண்டம் இருபத்திநான்காவது ஸர்க்கத்தில் ரோஹிணிக்கும் சந்திரனுக்கும் உள்ள நெருக்கம் பலருடன் ஒப்பிடப்பட்டு அப்படிப்பட்ட நெருக்கத்தை சீதையும் ராமரும் கொண்டிருப்பதாக சீதையே கூறுவதை 10,11, 12 ஆகிய ஸ்லோகங்களில் பார்க்கலாம்.
“மஹா பாக்கியவதியான சசிதேவி எப்படி இந்திரனை இணை பிரியாமல் இருக்கிறாளோ, அருந்ததி வசிஷ்டரையும், ரோஹிணி சந்திரனையும் எப்படியோ, லோபாமுத்திரை அகஸ்த்யரை எப்படியோ, சுகன்யை ச்யவனரை எப்படியோ, ஸாவித்ரீ ஸத்யவானை எப்படியோ, ஶ்ரீமதி தேவி கபிலரை எப்படியோ, மதயந்தி ஸௌதாஸரை எப்படியோ, கேசினீ தேவி ஸகரரை எப்படியோ, கணவனாகப் பின்பற்றிய பீமராஜன் குமாரத்தியான தமயந்தி நள மஹாராஜனை எப்படியோ, அப்படியே நான் இக்ஷ்வாகு குலக் கொழுந்தான ஶ்ரீ ராமரை மணாளனாக விடாது தொடர்பவள்” என்று இப்படி சீதா தேவியார் ராவணனால் நியமிக்கப்பட்ட ராக்ஷஸிகளிடம் கூறுகிறாள்.
இங்கு வசிஷ்ட நக்ஷத்திரம், அருந்ததி நக்ஷத்திரம், அகஸ்த்ய நக்ஷத்திரம் ஆகிய நக்ஷத்திரங்கள் குறிப்பிடப்படுவதையும் பார்க்க முடிகிறது.
உத்தர பல்குனி நக்ஷத்திரத்தில் ஶ்ரீ ராமர் கல்யாணம்
27 நக்ஷத்திரங்களில் 12வது நக்ஷத்திரமாக அமைவது உத்தர பல்குனி. இது மிகவும் சிறப்பு வாய்ந்த நக்ஷத்திரமாகவும் மிகவும் புனிதமான ஒன்றாகவும் கருதப்படுகிறது.
இந்த நக்ஷத்திரத்தில் தான் ஶ்ரீ ராமர் சீதையை மணந்தார். பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் ஆகியோருக்கும் இதே நாளில் இதே நக்ஷத்திரத்தில் தான் திருமணம் நடைபெற்றது.
பால காண்டத்தில் 71வது ஸர்க்கத்தில் வஸிஷ்டரிடம் ஜனகர் தனது வம்சம் பற்றி விவரித்துக் கூறுகிறார். அதில் 24வது ஸ்லோகத்தில் வருவது இது.
ஜனகர் கூறுகிறார்: “மஹாபாகுவே! இன்று மக நக்ஷத்திரம் அல்லவா! பிரபுவே! மூன்றாவது தினத்தில் பல்குனி என்கிற அந்த உத்தர நக்ஷத்திரத்தில் கல்யாணத்தைச் செய்யும். அரசே! இராமர் லக்ஷ்மணர் இவர்களின் விஷயத்தில் மேன்மேலும் நலங்களைக் கொடுக்கின்ற தானமானது செய்யத் தக்கது.
இதில் மக நக்ஷத்திரம் மற்றும் உத்தரபல்குனி நக்ஷத்திரங்கள் குறிப்பிடப்படுகின்றன.
ஹஸ்த நக்ஷத்திரம் – ஶ்ரீ ராமருக்கு ஆகாத நக்ஷத்திரம்!
ஶ்ரீ ராமரின் நக்ஷத்திரம் புனர்வஸு. அதற்கு ஏழாவது நக்ஷத்திரமாக அமையும் ஹஸ்த நக்ஷத்திரம் வதத்தாரை ஆகும். ஆகவே அது அவருக்கு ஆகாத நக்ஷத்திரம். உத்திர நக்ஷத்திரம் ஆறாவது நக்ஷத்திரம். ஆகவே அது ஸாதகத்தாரை.
யுத்த காண்டத்தில் நான்காவது ஸர்க்கத்தில் ஆறாவது ஸ்லோகத்தில் வருவது இது:
சுக்ரீவனிடம் பயணப்பட ஆயத்தமாகு என்று ஶ்ரீ ராமர் சொல்லும் போது இதைச் சொல்கிறார்.
“இன்றோ உத்தர நக்ஷத்திரம். நாளையோவெனில் ஹஸ்த நக்ஷத்திரம் வரப்போகிறது.
சுக்ரீவனே! எல்லா சைன்யங்கள் சூழ நாம் பிரயானமாகலாம்.”
விசாக நக்ஷத்திரம்
யுத்த காண்டம் நான்காவது ஸர்க்கத்தில் 42வது ஸ்லோகம் விசாகத்தைக் குறிப்பிடுகிறது.
27 நக்ஷத்திரங்களில் விசாகம் 16வது நக்ஷத்திரம்.
லக்ஷ்மணர் திரண்ட படை செல்லும் போது நல்ல சகுனங்களைக் காண்கிறார். அதனால் மகிழ்ச்சியுற்று ஶ்ரீ ராமரிடம் அவற்றைச் சொல்கிறார்.
அதில் ஒரு முக்கிய விஷயம் விசாக நக்ஷத்திரம் பற்றியதாகும்.
“இரட்டையான விசாக நக்ஷத்திரங்கள் குரூர கிரக சம்பந்தம் இல்லாதவையாக, தெளிவாகப் பிரகாசிக்கின்றன. மகாத்மாக்களாகிய இக்ஷ்வாகுகளுக்கும், நமக்கும் மேன்மை பெற்று விளங்கும் நக்ஷத்திரம் இது.”
இப்படி விசாக நக்ஷத்திரம் தங்களுக்கு “ஆகி வரும்” நக்ஷத்திரம் என்று கூறுகிறார்.
மூல நக்ஷத்திரம்
அதே ஸர்க்கத்தில் அடுத்த 43 மற்றும் 44வது ஸ்லோகத்தில் மூல நக்ஷத்திரத்தை லக்ஷ்மணர் குறிப்பிடுகிறார் இப்படி:
“நிருதியை தேவதையாகக் கொண்டதும், அரக்கர்களுக்கு உரியதுமான மூல நக்ஷத்திரமானது பாபக் கிரகங்களால் பீடிக்கப்பட்டிருக்கிறது.
மூல நக்ஷத்திரம் பக்கத்தில் இருக்கும் தூம கேதுவால் தீண்டப்பட்டதாய எரிக்கப்படுகின்றது.”
“யமனுக்கு ஆட்பட்டுவிட்ட அரக்கர்களின் அழிவின் பொருட்டு அந்திக் காலத்தில் இந்த நக்ஷத்திரம் முழுவதும் க்ரகத்தால் பீடிக்கப்பட்டதாகவும் ஏற்பட்டிருக்கிறது.
பிராஜாபத்ய நக்ஷத்திரம், ரோஹிணி நக்ஷத்திரம், விசாகா நக்ஷத்திரம்!
போர்! போர்! உக்கிரமான போர்! ராமருக்கும் ராவணனுக்கும் போர்!
யுத்தகாண்டம் 103வது ஸர்க்கம் இந்தக் கடும் போரை அற்புதமாக வர்ணிக்கிறது.
30,31, 32வது ஸ்லோகங்களில் பிராஜாபத்ய நக்ஷத்திரம், ரோஹிணி நக்ஷத்திரம், விசாக நக்ஷத்திரம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
ராவணனாகிய ராகுவால் ஶ்ரீ ராமராகிய சந்திரனை பீடிக்கப்பட்டதாய்க் கண்டு, புதன் பிராஜாபத்ய நக்ஷத்திரத்தையும், சந்திரனுக்கு பிரியையான ரோஹிணி நக்ஷத்திரத்தையும் தீண்டி பிரஜைகளுக்குத் தீமை விளைவிப்பவனாக இருந்தான்.
அப்போது கடல் புகையுடன் எழும் அலை கொண்டதாக முற்றும் கொதிப்பதாக கொந்தளித்து சூரியனைத் தொடுவது போல உயரக் கிளம்பியது.
சூரியன் தூமகேதுவால் பீடிக்கப்பட்டவனாய் ஆயுதம் கொண்டவனாகவும், பயங்கரனாகவும், ஒளி மங்கியவானகவும், முண்டத்தைக் களங்கமாகக் கொண்டவனாகவும் காணப்பட்டான்.
செவ்வாயும் இந்திரனையும் அக்னியையும் தேவதையாகக் கொண்டதும், தெளிவானதும், கோஸலா தேசத்து (இக்ஷ்வாகு) மன்னர்களுக்கு குல நக்ஷத்திரமானதுமாகிய விசாகா நக்ஷத்திரத்தையும் ஆகாயத்தில் தீண்டி நின்றான்.
இக்ஷ்வாகு மன்னர்களில் குல நக்ஷத்திரம் விசாகம் என்பது இங்கு கூறப்படுகிறது.
போரின் கடுமையை நக்ஷத்திர நகர்வுகளினால் வால்மீகி விளக்குவது அவரது ஜோதிட அறிவையும் வானியல் நிகழ்வுகளை அவர் உன்னிப்பாகக் கவனிப்பதையும் காட்டுகிறது.
இப்படி ராமாயணத்தில் ஏராளமான நக்ஷத்திர ரகசியங்கள் அடங்கி உள்ளன!
***