விஸ்வாமித்திரருடன் சென்ற 25 நாட்களில் ஶ்ரீ ராமருக்குக் கல்யாணம்!( Post.12,024)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,024

Date uploaded in London –   21 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com

இராமாயண வழிகாட்டி 

விஸ்வாமித்திரருடன் சென்ற 25 நாட்களில் ஶ்ரீ ராமருக்குக் கல்யாணம்!

 ச.நாகராஜன்

 பெரிய மஹான்கள் ஒருவருடன் சேர்ந்தால் அப்படிச் சேர்ந்தவருக்கு நிச்சயமாக நல்லது நடக்கும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.

 இராமாயணத்தில் விஸ்வாமித்திரர் அயோத்தி வந்து தசரதனிடம் அவரது குமாரரான ஶ்ரீ ராமரை தனது யாகத்தை இடையூறின்றி நடத்த பாதுகாப்பதற்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

முதலில் தசரதர் தயங்கினாலும் பின்னர் வசிஷ்டர் அவரை சமாதானப்படுத்த ஶ்ரீ ராமரை விஸ்வாமித்திர மஹரிஷியுடன் அனுப்பச் சம்மதித்தார்.

அதிலிருந்து என்ன நடக்கிறது என்பதை நாள் வாரியாக ஶ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் ‘வால்மீகி ஹ்ருதயம்’ என்ற நூலில் விவரித்துள்ளார்.

நாள்வாரியாக அவர் தரும் விவரத்தின் சுருக்கத்தை இங்கே பார்க்கலாம்.

முதல் நாள் ; விஸ்வாமித்திரர் ஶ்ரீ ராம, லக்ஷ்மணரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். சரயூ நதியின் தென் கரையில் அரை யோஜனை தூரம் சென்றவுடன் அவருக்கு ஆசமனம் செய்யச் சொல்லி பலை, அதிபலை ஆகிய இரு மந்திரங்களை உபதேசித்தார்.

இரண்டாம் நாள் : சரயு நதியும் கங்கையும் சேருமிடத்தில் உள்ள காமனுடைய ஆசிரமம் சென்று அங்கே இரண்டு நதிகளின் மத்தியில் அன்றிரவு அனைவரும் தங்கினர்.

மூன்றாம் நாள் : காலையில்  முனிவர்கள் தயாரித்துக் கொடுத்த ஓடத்தில் ஏறி நதியைக் கடந்து ஜம்பாஸுரனின் புத்திரனான ஸுந்தனியின் மனைவியும் மாரீசனின் தாயுமான தாடகையை விஸ்வாமித்திரரின் வார்த்தையைக் கேட்டு ராமர் சம்ஹாரம் செய்தார். அன்றிரவு அங்கேயே அனைவரும் தங்கினர்.

நான்காம் நாள் : காலையில் விஸ்வாமித்திரர் சகல விதமான அஸ்திரங்களையும் ராமருக்கு உபதேசிக்கிறார்.  அஸ்திர உபசம்ஹார மத்திரங்களையும் உபதேசிக்கிறார். தனது ஆசிரமமான சித்தாஸ்ரமம் சென்று அன்றே விஸ்வாமித்திரர் தீக்ஷை எடுத்துக் கொள்கிறார்.

ஐந்தாம் நாள் : விஸ்வாமித்திரரிடம் உற்சாகமாக ராம லக்ஷ்மணர்,
“ராக்ஷஸர்கள் எப்போது வருவார்கள்?” என்று கேட்க விஸ்வாமித்திரர் தீக்ஷையினால் பேச முடியாதவராக இருக்க, இதர முனிவர்கள் ‘இன்னும் ஆறு தினங்கள் இங்கு காவல் இருக்க வேண்டும்” என்று கூறுகின்றனர்.

6,7,8,9 ஆகிய நாட்களில் ராமரும் லக்ஷ்மணரும் காவல் காக்கின்றனர்.

பத்தாம் நாள் : யாகத்தின் கடைசி தினம். மாரீசனும் ஸுபாஹுவும் வந்து ரத்தத்தை வர்ஷிக்க, ராமர் மானவாஸ்திரத்தை பிரயோகித்து மாரீசனை நூறு யோஜனை தூரத்திற்கு அப்பால் உள்ள கடலில் அமிழ்த்தி விடுகிறார். ஆனால் கொல்லவில்லை. ஸுபாஹுவை ஆக்னேயாஸ்திரத்தால் அடித்து ஸம்ஹரிக்கிறார். மற்றவர்களை வாயவ்யாஸ்திரத்தினால் அடித்து ஸம்ஹரிக்கிறார்.

யாகம் முடிகிறது. விஸ்வாமித்திரர் மிக்க மகிழ்ச்சியை அடைகிறார்.

அனைவரும் இரவு ஓய்வு எடுக்கின்றனர்.

பதினொன்றாம் நாள் : மிதிலைக்குச் சென்றால் ஒரு யக்ஞத்தையும் தனுசையும் பார்க்கலாம் என்று சொல்ல, அனைவரும் கிளம்பி அன்று சூரியன் மறையும் வேளையில் சோணா நதி தீரம் சென்று அங்கே தங்குகின்றனர்.

பனிரெண்டாம் நாள் : சோணா நதியில் காலை ஆஹ்நிகங்களை முடித்த பின்னர் கங்கைக் கரையைச் சேர்கின்றனர். அங்கு கங்கையின் கதையை விஸ்தாரமாக விஸ்வாமித்திரர் சொல்ல அதை ராமர் மிக உற்சாகமாகக் கேட்கிறார்.

பதிமூன்றாம் நாள் : கங்கையைக் கடந்து வடகரையில் உள்ள விசாலா என்ற நகரம் சென்று அடைகின்றனர். விசாலனின் வம்ச பரம்பரையில் வந்த ஸுமதி என்ற மஹாராஜன் உபசரிக்க அங்கே தங்குகின்றனர்.

பதிநான்காம் நாள் : மிதிலை நகருக்கு வெளியே ஒரு உபவனத்தை அடைகின்றனர். அங்கு அகல்யையின் சாப விமோசனம் நடைபெறுகிறது. பின்னர் ஜனகரின் யாக சாலை சென்றடைய அங்கே ஜனகர் அனைவரையும் வரவேற்கிறார்.

பதினைந்தாம் நாள் : ஜனகரிடம் விஸ்வாமித்திரர் சிவதனுசைக் கொண்டு வருமாறு சொல்ல, ஶ்ரீ ராமர் அதை எடுத்து வளைத்து ஞாண் பூட்டும் போது அது ஒடிகிறது. உடனே சீதையை ராமருக்கு மணம் செய்விப்பதற்காக தசரத மஹாராஜனுக்கு தூதர்கள் அனுப்பப்படுகின்றனர்.

16, 17ஆம் நாட்கள் : மூன்று தினங்களில் தூதர்கள் அயோத்தி சென்று சேர்கின்றனர்.

பதினெட்டாம் நாள் : தசரதரிடம் அனைத்து விஷயங்களும் விவரிக்கப்பட அவர் மிக்க மகிழ்ச்சி கொள்கிறார். மறுநாளே கிளம்பலாம் என முடிவு செய்யப்படுகிறது.

பத்தொன்பதாம் நாள் : குடுபத்தினர், நண்பர்கள், உறவினர்கள், மஹரிஷிகள், சதுரங்க சைன்யம் புடை சூழ தசரதர் மிதிலை நோக்கிப் புறப்படுகிறார்.

20, 21ஆம் நாட்கள் : தசரதரின் யாத்திரை மிதிலையை நோக்கித் தொடர்கிறது.

இருபத்தியிரண்டாம் நாள் :  மாலை அனைவரும் மிதிலை அடைகின்றனர். மொத்தம் பயணப்பட்ட நாட்கள் நான்கு.  ஜனகரால் அனைவரும் மிக்க மரியாதையுடன் வரவேற்கப்படுகின்றனர்.

சீதையை ராமருக்கும் ஊர்மிளையை லக்ஷ்மணருக்கும் கொடுக்க ஜனகர் தீர்மானித்து விவாகத்திற்கு முன்பு செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பிக்கிறார்.

இருபத்திமூன்றாம் நாள் : ஜனகர் இக்ஷூமதி நதிக்கரையில் ஸாங்காசியம் என்ற நகர்த்தில் உள்ள தனது தம்பி குசத்வஜரை அழைத்து வரச் செய்கிறார். அன்று  மக நக்ஷத்திரம். ஆகவே மூன்றாம் நாள் உத்தரபல்குனீ நக்ஷத்திரத்தில் விவாகம் நடக்க முடிவு செய்யப்படுகிறது.

குசத்வஜரின் குமாரிகள் இருவரையும் பரதனுக்கும் சத்ருக்னனுக்கும் கொடுக்கத் தீர்மானம் செய்யப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்படுகிறது.

இருபத்திநான்காம் நாள் : கைகேயியின் தம்பி யுதாஜித் விவாகம் பற்றித் தெரிந்து கொண்டு மிதிலை வந்து சேர்கிறார். தசரதர் அனைத்து தானங்களையும் செய்கிறார்.

இருபத்திஐந்தாம் நாள் : விவாக நாள். ஜனகர் அக்னி சாக்ஷியாக சீதா தேவியை ஶ்ரீ ராமருக்கும் ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கும், மாண்டவியை பரதனுக்கும், சுருதகீர்த்தியை சத்ருக்னனுக்கும் பாணிக்ரஹணம் செய்து வைக்கிறார்.

இப்படியாக விஸ்வாமித்திரருடன் கிளம்பிய ஶ்ரீ ராமர் மற்றும் லக்ஷ்மணருக்கும் 25ஆம் நாள் மிதிலையில் திருமணம் நடைபெறுவதை வால்மீகி விளக்கமாகக் குறிப்பிடுகிறார்.

ராமாயணம் முழுவதும் ஆங்காங்கே ஒவ்வொரு சம்பவத்திற்கும் காலத்தை வால்மீகி குறிப்பிடுவது குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம்.

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: