Post No. 12,043
Date uploaded in London – – 25 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxxx
1970 களில் கல்வெட்டுப் பயிற்சி முகாமையும் கல்வெட்டுகள் உள்ள இடங்களுக்கு நேரடியாகச் சென்று அவைகளைக் காண்பதையும் தொல்பொருட் துறை இயக்குநரும் வரலாற்றுப் பேரறிஞருமான டாக்டர் இரா நாகசாமி ஏற்பாடு செய்தார்.. அப்போது திருவனந்தபுரம் முதல் சிதம்பரமுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் காண இலவச சுற்றுலாப்பயணத்தையும் தொல்பொருட் துறையின் சார்பில் ஏற்பாடு செய்தார். அந்த ஆயிரம் மைல் இலவச பஸ் பயணத்தில் ஆசிரியரல்லாத ஆசிரியர் நான் ஒருவன்தான் . நான் தினமணிப் பத்திரிக்கையின் உதவி ஆசிரியர். ஏனையோர் அனைவரும் பள்ளிக்கூட ஆசிரியர்கள். அவர்களோடு தொல்பொருட் துறையின் கல்வெட்டு மாணவர்களும் வந்திருந்தனர். எனக்கு நண்பர்களான இரண்டு பேரும் அதில் இருந்தனர். ஒருவர் சேதுபதி உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் வி.ஜி. சீனிவாசன், இன்னொருவர் அதே பள்ளியைச் சேர்ந்த என்.சி.சி. மாஸ்டர் சீனிவாசன் . மூவரும் அரட்டை அடித்துக் கொண்டும் ஜோக் அடித்துக்கொண்டும் பயணத்தை இனிதே முடித்தோம்.
கன்யாகுமரி வட்டாரத்தைப் பொறுத்த மட்டில் இன்று வரை நினைவில் நிறைக்கும் காட்சி திருவாட்டாறு கோவில், இயற்கை வனப்பும், பத்மநாபபுரம் அரண்மனையும் தான் .
இந்த அரண்மனையின் முக்கிய பகுதிகள் – பூமுகம்(நுழைவு மண்டபம்), மந்திர சாலை (அவை மண்டபம்), மணிமேடை(மணிக்கூண்டு), நாடக சாலை (கதகளி நடனம் ஆடும் இடம்), ஊத்துபுரம் (உணவுக் கூடம்), தாய்க் கொட்டாரம், உப்பரிகை மாளிகை (அடுக்கு மாளிகை), கண்ணாடி தளம், நவராத்திரி மண்டபம், இந்திர விலாசம் மற்றும் சந்திர விலாசம்.
இந்த அரண்மனை திருவநந்தபுரத்திலிருந்து 55 கிலோ மீட்டர் தூரத்திலும் , தக்கலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது .
அவைகளைப் பற்றிய சுவையான விஷயங்களைக் காண்போம் .
1550 முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை வேணாட்டுத் தலைநகராக விளங்கியது . இதைப் பிற் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் என்று அழைத்தனர். கார்த்திகைத் திருநாள் ராம வர்மா (கி.பி 1758-1798) ஆட்சி முடிவு வரை இதுவே தலைநகர். கோட்டையும் அரண்மனையும் சேர்ந்து 186 ஏக்கர். நுழை வாயிலில் அலங்கார வளைவு. . அதைத்தாண்டி பூமுகம் அல்லது நுழைவறை ; அதிலுள்ள குறிப்பிடத்தக்க விஷயங்கள் :
ஒரே கல்லால் ஆன கட்டில்;
மன்னர்க்கு பரிசாக வந்த ஓவியங்கள் , வில்கள் ;;
அலங்கரிக்கப்பட்ட மரக் கூரை .
Xxx
பூமுகத்தின் முதல் மாடி மந்திர சாலை; அதாவது மந்திரிசபை மண்டபம்; அரசனுக்கும் மந்திரிகளுக்கு தனித்தனி ஆசனங்கள்.; மேலே காற்று வருவதற்கு துவாரங்கள்.ஆசனங்களில் யாளி, சிங்க உருவங்கள். மண்டபத்தைத் தாங்கும் தூண்களிலும் சிற்பங்கள் !
இதன் அருகில் ஊத்துப் புறம் என்னும் உணவருந்தும் அறை ; இது கீ ழடுக்கும், மாடியும் உடையது . அன்னதானம் அளிக்கும்போது 2000 பேர் உட் காரலாம் ; இவ்வறையின் கூடாரம் இரு கூறைகளுடன் அமைக்கப்பட்டிருப்பதால் மழைக் காலத்திலும் பாதிக்கப்படமாட்டாது..
xxx
மணிக்கூண்டு
இதிலுள்ள கடிகாரம் 200 ஆண்டுக்கு முன்னால் செய்யப்பட்டது.. அது அடிக்கும் மணி ஓசை சில கிலோ மீட்டர் தொலைவுக்கு கேட்கும் ; சக்கரம், அதிலிருந்து தொங்கும் 9 மீட்டர் சங்கிலி, அதில் தொங்கும் இரண்டு கற்களால் இயங்கும் விசித்திரமான கடிகாரம் ஆகும் .
Xxx
தாய்க்கொட்டாரம் அல்லது தாய் அரண்மனை
இதுதான் பழமையான இடம்; ஏகாந்த மண்டபம் எனும் திறந்த வெளிக்கூடத்தில் பல மரச் சிற்பங்களைக் காணலாம்.. நவம்பர் டிசம்பர் மாதங்களில் 41 நாட்களுக்கு துர்கா பூஜை நடத்தப்பட்ட இடம் .
உப்பரிகை மாளிகை
இதுதான் அழகான இடம்.; மூன்று மாடிகள் கொண்டது. மேல் மாடியில் ஒரு மரக்கட்டில் போடப்பட்டுள்ளது தினமும் இதில் விஷ்ணு சயனிப்பதாக நம்பிக்கை. . ஓர் மூலையில் சிவப்புத துணியால் போர்த்தப்பட்ட கத்தி இருக்கும். இப்போதும் கூட நவராத்ரி விழாவின்போது இக்கத்தி திருவனந்த புரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது .
17ம், 18ம் நூற்றாண்டு ஓவியங்கள் இந்த மாடியை அலங்கரிக்கின்றன. அவைகள் இந்த மாநிலத்தின் கலைப் பாரம்பரியத்தின் சின்னங்களாகத் திகழ்கின்றன . முக்கிய ஓவியங்களில்ன் பட்டியல் இதோ :
ஹரிஹரன், அர்த்த நாரீஸ்வரர், கணேசர், கிருஷ்ணனும் கோபியர்களும், நடராஜர், சாஸ்தா வேட்டையாடுதல், சுப்ரமண்யர், அனந்த சயனம், பார்வதி திருமணம், தேவியர்களுடன் ஸ்கந்தன்..
Xxxx
நவராத்ரி மண்டபம்
உப்பரிகை மாளிகைக்கு மேலேயுள்ள நவராத்ரி மண்டபம் ஓர் விசாலமான அறை . இதில் நாயக்கர் கால பாணியை நினைவுபடுத்தும் அழகிய கற்றூண்கள் இருக்கின்றன . முன்காலத்தில் காலை நிகழ்சசிகள் நடந்த இடம். இதற்கு முன்னால் , சிறிய சரஸ்வதி கோவில் இருக்கிறது. கோவிலை இணை க்கும் நமஸ்கார மண்டபத்தில் தூண்கள் இருக்கின்றன. மண்டபம் முழுதும் இந்துக் கடவுள்களின் தெய்வங்களும் ஊழியர்களின் சிற்பங்களும் இருக்கின்றன அந்தப் புறத்திலிருக்கும் பெண்கள் மறைவாக நின்று பார்க்கக்கூடிய திரைகள் உள்ள இடமும் இருந்தது .
அரண்மனையில் தஸ்தாவேஜுகளைப் பாதுகாத்து வைக்கும் (சந்திர விலாசம் )அழகான வேலைப்பாடு மிக்க மர மேஜைகளும் இருந்தன . வேலை பார்க்கும் இடங்களில் கூட சிற்பங்கள் !!
கோவிலைச் சுற்றி பெரிய கோட்டை . இந்தக் கல் கோட்டையின் குறுக்களவு நாலு கிலோமீட்டர் என்றால் எவ்வளவு பெரியது என்பதை ஊகிக்கலாம் ; நான்கு புறங்களிலும் கொத்தளங்கள் இருக்கின்றன..
(இதிலுள்ள படங்கள் கேரள அரசு தொல்பொருட் துறை இயக்குனர் என். ஜி, உண்ணித்தான் வெளியிட்ட கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது).
xxxx
2-11-2020 News Item
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சென்ற முன்னுதித்த நங்கை அம்மன் சிலை சுசீந்திரம் வந்து சேர்ந்தது. பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பின்னர் மன்னர் தலைநகரை திருவனந்தபுரத்துக்கு மாற்றினார். அதைத்தொடர்ந்து நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் திருவனந்தபுரம் செல்வது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டும் விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் அரண்மனை தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் கடந்த மாதம் 14-ந் தேதி பத்மநாபபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று, திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்றன. அந்த சாமி சிலைகள் கடந்த 27-ந் தேதி திருவனந்தபுரத்திலிருந்து மீண்டும் ஊர்வலமாக குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டது. பத்மநாபபுரம் அரண்மனை வந்தடைந்த சாமி சிலைகளுக்கு கோட்டை வாசலில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சரஸ்வதி அம்மன் தேவார கட்டு கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. இதே போல் வேளிமலை முருகன் குமாரகோவில் சென்றடைந்தது.
—subham—
Tags- பத்மநாபபுரம் அரண்மனை, சரஸ்வதி அம்மன், நவராத்ரி மண்டபம், ஓவியங்கள்