

Post No. 12,041
Date uploaded in London – 25 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 67
பொருள் தராத உன்னைக் கடைவிதியில் விலை கூறி விற்பேன் – புலவரின் தைரியம்!
ச.நாகராஜன்
பழைய காலத்தில் புலவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தது என்பதைக் கேட்டால் பிரமித்துப் போவோம்.
வள்ளல் ஒருவர் புலவருக்கு தான் சொன்னபடி குறித்த காலத்தில் பொருள் தரவில்லை. அவர், “கேட்டவுடன் பொருள் தராத உன்னைக் கடைவீதியில் விலை கூறி விற்பேன்” என்று அவர் கையைப் பிடித்து இழுத்தார்.
உண்மையில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கொங்குமண்டல சதகம் தனது 67ஆம் பாடலில் இப்படிப் பதிவு செய்கிறது.
கொடையிற் பெரியோ யுடனே யெனக்குக் கொடாமையினாற்
கடையிற் பெறநினை விற்றென் கலியைக் கழிப்பனென
மடியைப் பிடித்திழுத் தேவிலை கூறிய வாணன்மிடி
வடியப் பொருடந்த காமிண்டனுங் கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் : ஈகையில் சிறந்தோனே! கேட்ட பொழுதே நீ பொருள் தந்து உதவாமையால் உன்னைக் கடைத்தெருவில் விலை கூறி விற்பேன், வா என மடியைப் பிடித்து இழுத்த புலவனது வறுமை போகும்படி பொன் கொடுத்து உதவிய காமிண்டனும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாம்.
வரலாறு : காமிண்டன் என்பது ஒரு பழைய காலப் பட்டப் பெயர்.
இதைக் கொண்ட சர்க்கரை என்ற பெரும் வள்ளல் ஒரு சமயம் சிவனை தரிசிக்கத் தலயாத்திரையை மேற்கொண்டிருந்தார். அங்கே வழியில் ஒரு புலவர் இவரைப் பார்த்தார். அவருக்கு வறுமை, கடன் தொல்லை.
தனக்குக் கடன் தொல்லை இருப்பதாகவும் பொருள் தந்து உதவ வேண்டும் என்றும் அவர் சர்க்கரையாரை வேண்டினார்.
“தல யாத்திரையில் இருக்கிறேன். பதினைந்து தினங்களில் யாத்திரையை முடித்து ஊர் திரும்பி விடுவேன். அப்போது என்னை வந்து பாருங்கள். உங்களுக்கு உதவுகிறேன்” என்றார் வள்ளல்.
பதினைந்து நாட்கள் கழிந்தன. புலவர் நத்த காரையூருக்கு வந்தார்.
‘வள்ளல் பெருமான் எங்கே’ என்று விசாரித்தார். ‘அவர் இன்னும் ஊர் வந்து சேரவில்லை’ என்ற பதில் அவருக்குக் கிடைத்தது.
உடனே அவர் திரும்பிச் சென்றார். நேராகக் கரூருக்குப் போனார்.
அங்கே அவர் வள்ளல் இருக்கக் கண்டார்.
“உன் வார்த்தையை நம்பிக் கடன்காரனுக்குக் கடனைத் திருப்பித் தருவதாக வாக்களித்தேன். சொன்ன நாள் கடந்து மூன்று தினங்கள் ஆகின்றன. பணத்தை உடனே கொடு” என்றார் புலவர் வள்ளலை நோக்கி.
அவரோ, “ஊருக்குப் போவோம், வாருங்கள். அங்கே கொடுக்கிறேன்” என்றார்.
வந்ததே புலவருக்குக் கோபம்!
“”இது தான் உனது கொடைத்தன்மையா? உன்னை நான் இதே ஊர் கடைவீதியில் விலை கூறி விற்பேன்” என்ற புலவர் அவரது மடியைப் பிடித்து இழுத்தார்.
வள்ளலுக்குக் கோபம் வரவில்லை. மகிழ்ச்சியே பிறந்தது.
அவரது கடன் தொல்லையும் தன்பால் அவருக்குள்ள நம்பிக்கையும் அவருக்குப் புரிந்தது.
உடனேயே பொருளுதவி செய்து அந்தப் புலவரின் கடனைத் தீர்த்தார் சர்க்கரையார்.
இந்தச் சம்பவம் ஊரெங்கும் பரவி அனைவரும் காமிண்டனைக் கொண்டாடினர்.
இதைப் பதிவு செய்யும் இன்னொரு பாடல் இது:
மற்றோர் புலவன் மடிமேற்கை போட்டிழுத்து
விற்றா லல்லாதென் வறுமை நோய் தீராதே
எங்கும் விலைகூற வேயிசைந்த புண்ணியவான்
எங்குங் கனகாபி ஷேகமாகப் பொழிந்தோன்
என்று இப்படி நல்லதம்பி சர்க்கரைக் காதல் என்ற நூல் கூறுகிறது.
காமிண்டன் என்ற பட்டப்பெயரை இன்றும் கூட கொங்குமண்டலத்தில் வாழும் பலர் கொண்டிருக்கின்றனர்.
சாலி சகம் 727 என்பது கி.பி. 803-804 அப்போது இருந்த ராஷ்டிரகூட ராஜா மூன்றாவது கோவிந்தப்பனது மனைவியின் பெயர் காமுண்ட பாய் (Gamundab Bai)
இன்னும் வரலாற்று சாஸனங்களை உற்று நோக்கினால் பல உண்மைகள் வெளிப்படுகின்றன.
அனந்தப்பூர் மாவட்டம் இந்துப்பூர் தாலுகாவில் மானிப்பள்ளியில் நுளம்ப பல்லவ ராஜா ஜயதேவன் காலத்து சாஸனம் ஒன்று ஶ்ரீ புருஷய்யர் மகன் கோரப்பனும், காமுண்டர்களும், பிராமணர்களும் சேர்ந்து பெத்து கொண்டே என்ற ஊரில் சூரிய தேவனுக்குத் தானம் செய்தனர் என்று கூறுகிறது.
சித்தூர் மாவட்டம் கர்ஷனபல்லி என்ற ஊரில் முத்துக்கூர் கிரமத்தில் இறந்த ஒரு வீரனுடைய மகனுக்குக் காமுண்டர்கள் தானம் செய்தார்கள்.
இதை சாஸன எண் 331- 1912 கூறுகிறது.
இப்படி இன்னும் பல சாஸனங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. விரிப்பின் பெருகும்.
ஆக புலவர் எந்த அளவிற்கு உரிமை கொண்டாடி வள்ளல்களிடம் பழகினார்கள் என்பதை இந்தச் சம்பவம் விளக்குகிறது.
தமிழின் வன்மையும் அதைத் தம் பால் கொண்ட புலவர்களின் தைரியமும் போற்றுதற்கு உரியதே!
***