WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,666
Date uploaded in London – – 17 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கம்பன் தரும் காதல் காட்சிகள்
ஆற்றைக் கடக்க உனக்குத் துணையாக வருபவர் யார்?
ச.நாகராஜன்
கம்பன் எழுச்சிப் படலத்தில் சிருங்கார ரஸம் ததும்பும் பாடல்களில் ஆறு இளைஞர்களைச் சுட்டிக் காட்டுகிறான்.மூவரைப் பார்த்தோம். இன்னும் மூவரை இப்போது பார்ப்போம்.
அவளது கேஸம் சுருண்டு அழகாக அலை போல இருக்கிறது. அந்தக் கேஸத்தின் ஈர்ப்பினால் வண்டுகள் அவள் தலையைச் சுற்றி ரீங்காரம் இடுகின்றன. அந்த அழகியின் விழிகளோ கூர்மையாக இருக்கின்றன. அவளைப் பார்க்கின்றான் யானை போல நடந்து செல்லும் ஒரு வாலிபன். (சின்ன யானை நடையைத் தந்தது என்ற திரைப்படப் பாடலை இங்கு ஒப்பிடலாம்) அவள் கண்களின் கூர்மை அவன் சிந்தனையைத் தூண்டி விடுகிறது.
தன் கையிலிருந்த வேலைப் பார்க்கிறான். இந்த வேலின் நுனி கூர்மையா, இல்லை அந்தக் கண்கள் கூர்மையா என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறான்.
இந்த வேலை விட அந்தக் கூரிய கண்கள் மிகவும் ஆபத்தானவை என்ற முடிவுக்கு அவன் வந்து விடுகிறான்.
ஏனெனில் இந்த வேல், கேவலம், ஒருவனின் உடலின் மீது மட்டுமே பாய்ந்து அவனை வருத்த முடியும். ஆனால் அந்தக் கண்களோ எனது உயிரின் மீது பட்டு உயிரையே அல்லவோ வருத்துகிறது, ஆகவே அந்தக் கண்களே மிகக் கூர்மையானவை என்ற முடிவுக்கு வருகிறான்.
பாடலைப் பார்ப்போம்:
சுழியும் குஞ்சிமிசை சுரும்பு ஆர்த்திட,
பொழியும் மா மத யானையின் போகின்றான்,
கழிய கூரிய என்று ஒரு காரிகை
விழியை நோக்கி, தன் வேலையும் நோக்கினான்
-எழுச்சிப் படலம் பாடல் 34
பொருள் :
சுழியும் குஞ்சிமிசை – சுழியலுடன் இருக்கும் ஒருத்தியின் கூந்தலின் மேல்
சுரும்பு ஆர்த்திட – வண்டுகள் ஆரவாரித்துக் கொண்டிருக்க
மா மதம் பொழியும் யானையின் போகின்றான் – மத நீரைச் சொரிகின்ற யானை போலச் செல்லும் ஒரு வாலிபன்
ஒரு காரிகை விழியை நோக்கி – அழகியான அவளது கண்களை நோக்கி, அவை கூர்மையாய் இருப்பதைப் பார்த்து
தன் வேலையும் நோக்கினான் – தனது வேலையும் நோக்கினான் (ஒப்பிட்டுப் பார்த்தான் – எது கூர்மை என்று)
இன்னொரு வாலிபன். பேரழகன். அவன் ஒரு பேரழகியைப் பார்க்கிறான். அவனுக்கு வந்தது ஒரு சந்தேகம்.
அலை போல் நீண்டு சுருண்டிருக்கும் கூந்தல் ஒரு புறம். தாமரை போன்ற அழகிய சிறு பாதங்கள் இன்னொரு புறம். நெருங்கிய ஆபரணங்களை அணிந்த பெருத்த மார்பகங்கள்; அழகிய வளையல்கள் கொண்ட அழகிய தோள்கள். ஆனால், அடடா, அவளது இடையைக் காணோமே! அது தான் அவனது சந்தேகம். சரி, இதை யாரிடம் கேட்பது.
அவளிடமே கேட்டு விடுவது என்று தீர்மானித்து அவளையே கேட்டு விடுகிறான்.
(அவள் நாணினாளா, கன்னத்தில் ஒரு அறை கொடுத்தாளா, என்பது நமக்குத் தெரியாது)
கம்பன் தரும் காட்சியைப் பார்ப்போம்:
தரங்க வார் குழல் தாமரைச் சீறடிக்
கருங் கண் வாள் உடையாளை, ஓர் காளை தான்,
‘நெருங்கு பூண் முலை நீள் வளைத் தோளினீர்!
மருங்குல் எங்கு மறந்தது நீர்?’ என்றான்.
எழுச்சிப் படலம், பாடல் 35
பொருள்:
தரங்கம் வார் குழல் – அலை போலச் சுருண்டு நீண்ட கூந்தலையும்
தாமரைச் சீறடி – தாமரை மலர் போன்ற சிறிய பாதங்களையும்
வாள் கருங் கண் – வாள் படை போன்ற கரு நிறமுள்ள கண்களையும்
உடையாளை – கொண்டிருக்கும் பேரழகியைக் கண்ட
ஒரு காளை – ஒரு வாலிபன்
‘நெருங்கு பூண் முலை நீள் வளைத் தோளினீர்!
மருங்குல் எங்கு மறந்தது நீர்?’ – ‘நெருங்கிய ஆபரணங்களை அணிந்த, மார்பகங்களையும் நீண்ட வளையலை அணிந்த தோள்களையும் உடையவரே!நீர் உமது இடையை எங்கு மறந்து வைத்திருக்கிறீர்?’
என்றான் – என்று கேட்டான்.
ஆக அந்த அழகியின் இடை கண்ணுக்குப் புலனாகாதவாறு அவ்வளவு நுண்மையாக இருக்கிறது.
கடைசியாக இன்னொரு இளைஞனை கம்பன் சுட்டிக் காட்டுகிறான்.
இவன் கொஞ்சம் குறும்புப் பேர்வழி!
தைரியமாக ஒரு கேள்வியைக் கேட்டு நான் உதவிக்கு வரலாமா என்று கேட்கிறான்.
யமனைப் போல கொலை செய்ய வல்ல கண்கள் அவளுடையது. கண் ஜாடையினால் மட்டுமே அவள் பேசுவாள்; வாயைத் திறக்க மாட்டாள். அவளிடம் சென்ற ஒரு வாலிபன்,
ஆற்றைக் கடக்கும் போது உம்மைக் கைகளால் எடுத்து அக்கரை சேர்ப்பார் யார்? என்கிறான்.
‘நீ பேச மாட்டேன் என்கிறாய்? உன் பேச்சுக்கு உரியவன் அல்லாதவன் உன்னைத் தீண்டுதற்கு மட்டும் உரியவனோ, ஆகவே (தேன் மொழியாளே, உன் குரலைக் காட்டி) கொஞ்சம் பேசேன்’ என்கிறான்.
பாடல் இதோ:
கூற்றம் போலும் கொலைக் கணினால் அன்றி,
மாற்றம் பேசுகிலாளை, ஓர் மைந்தன் தான்,
‘ஆற்று நீரிடை, அம் கைகளால் எடுத்த்
ஏற்றுவார் உமை, யாவர் கொலோ?’ என்றான்
எழுச்சிப் படலம், பாடல் 36
பொருள்:
கூற்றம் போலும் – யமனைப் போன்ற
கொலை கணினால் அன்றி – கொல்லும் தன்மையுள்ள கண் ஜாடையினால் அல்லாமல
மாற்றம் பேசுகிலாளை – வாயைத் திறந்து பேசாமல் மௌனம் சாதிக்கும் ஒருத்தியை
ஓர் மைந்தன் – ஒரு இளைஞன்
‘ஆற்று நீரிடை, அம் கைகளால் எடுத்த்
ஏற்றுவார் உமை, யாவர் கொலோ?’ – ‘வழியே இருக்கும் ஆற்று நீரில் உம்மை அழகிய கைகளால் எடுத்து கரை ஏற்ற வல்லவர் யார்?’
என்றான் – என்று கேட்டான்.
மைந்தனை காதலன் என்றும் கொள்ளலாம்; கணவன் என்றும் கொள்ளலாம்.
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்பது அவள் பேசினால் தான் அவனுக்குப் புரியும்!
ஆக இப்படி ஆறு பாடல்களில் அழகிய காதல் சித்திரங்களை சித்தரிக்கும் கவிஞன் மகா கவிஞன் தானே!
You must be logged in to post a comment.