பாரதி போற்றி ஆயிரம் – 70 & 71 (Post No.4882)

Date- 5 April 2018

 

British Summer Time- 4-59 am

 

Written by S Nagarajan

 

Post No.4882

 

Pictures are taken from various sources;thanks.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 70

  பாடல்கள் 570 முதல் 578

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

பாரதி பத்துப்பாட்டு

 

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி தொடர்கிறது.

 

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

21 முதல் 29 வரை உள்ள பாடல்கள்

 

காதல் போயின் சாதல் என்றே

    கழறும் படிசெய்தாய்

நீதம் அதுவே என்றிடும் வண்ணம்

    நீடுற உரைத்திட்டாய்

ஆதலி னாலே நீயே எந்தன்

    ஆரு யிரைக்கவரும்

காதல னாக வந்தாய் எந்தன்

    கான மதைக்கேட்டாய்

 

பாட்டினில் உன்போல் இதயந் தன்னை

    பறிகொடுத் திடுவோர்கள்

நாட்டினி லெங்கும் இருந்திடு வாரோ

    நானுந் தன்மேலே

காட்டிய காதலில் உள்ளம் நெகிழ்ந்தாய்

    கனிவுட னதையேற்றாய்

ஏட்டிலும் காணா காதல் இதுவென

    எனைப்பி ரிந்தே சென்றாய்

 

ஆயினு மென்ன காதல் தனையே

    அவம தித்தல்போல்

ஆயிடை மறுநாள் நானொரு குரங்கிடம்

    அதே பாடல் பாட

ஏயின அம்பாய் காயம் பட்டாய்

    என்மேல் கோபமுடன்

போயினை எந்தன் காதல் தனையே

    போலியென் றேநினைத்தாய்

 

குரங்கி லிருந்தே மனிதன் வரவென

    குறித்தார் நூல்களிலே

மரங்க ளின்மேல் தாவிட லாலே

    மனமே குரங்கென்றார்

குரங்கை விரும்பும் எந்தன் மனமும்

    குரங்காய் நினைத்தாயோ?

தரங்கெட்ட குயில் எனவே வெறுத்துத்

     தனியாய் தவித்தாயோ?

 

மூன்றாம் நாளில் நீவரும் போதில்

    முன்னிலும் கொடுமையதாய்

நான்செய் செயலை நேரினில் கண்டாய்

    நாடியோர் மாட்டினிடம்

மீண்டும் அந்தக் காதல் பாடல்

    மோகத் துடனிசைக்க

ஏன்தான் இந்தக் குயிலைக் கண்டேன்

    எனநீ நொந்தனையே

 

காதலைநீ மதித்திடல்தான் உண்மை யென்றால்

    கருத்தற்ற குரங்கிடமும் மாட்டைக் கண்டும்

காதல்பாட் டிசைத்திடுதல் சரியா என்றே

    கடுங்கோபத் துடன்நீயும் கேட்டு நின்றாய்

வாதமேதும் செய்யாமல் கண்ட தெல்லாம்

     மாயையென்றே நானெடுத்து உரைத்த போதில்

ஏதமென அதையேற்க மறுத்து விட்டாய்

     என்றாலும் அதையுணர்த்தல் எளிதே யல்ல

 

நடவாத ஒன்றினையே நடந்த தாக

     நாமறிந்தோர் சிலநேரம் சொல்வ துண்டு

திடமாக அதைநம்பும் சிலபே ராலே

     தீங்குகளும் சிலநேரம் நிகழ்வ துண்டு

படமாகக் கண்முன்னே நீயே நேரில்

    பார்த்ததையே நானிங்கு மாயை யென்றால்

தடம்மாறும் என்பேச்சை நம்பப் போமோ

     தானதனைச் சிந்தித்தென் கதையைச் சொன்னேன்

 

முன் ஜென்மச் சிந்தனை இல்லாத பேரிந்த

     மேதினியில் எங்கும் இல்லை

இன்றதனை உணர்ந்திடின் அதிலுற்ற காதலையே

     எண்ணுவார் மாற்ற மில்லை

அன்றந்தப் பிறவியில் நான் கொண்ட காதலை

     அழகாகப் பாடித் தந்தாய்

என்றுமென் நினைவினை எந்நாளும் நிலைபெறும்

    இலக்கியமாய் சூடத் தந்தாய்

 

இக்காலம் கதைகளை எவ்வடிவில் கண்டாலும்

    யாவிலும் ஆழமாக

முக்கோணக் கதைகளே பெருமளவில் வருமதன்

     முன்னோடி நீயே யன்றோ

அக்காலந் தனில்நீயும் அருமையுள நாடகமாய்

     அரியயென் முன்ஜென் மத்தை

எக்காலத் திலுமெவரும் எண்ணியே வியந்திடவே

     ஏற்றமுற இயம்பலானாய்

  குயில் பார்வையில் பாரதி தொடரும்.

xxxxxxxxxxxxxxxxxx

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 71

  பாடல்கள் 579 முதல் 587

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி தொடர்கிறது.

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

30 முதல் 38 வரை உள்ள பாடல்கள்

இருவ ரென்னை விரும்பி நின்ற போதில்

ஒருவர் மீதும் உளம்தி ரும்பா நாளிலே

அருமை யான அரச மரபின் செம்மலாய்

பெருமை மிக்க இளவ லங்கு வந்தனன்

 

கண்ட போதே காத லென்றால் பொருந்துமோ?

பண்ப தல்ல என்ற சொல்லும் பொய்த்ததே

கண்ட போதில் இதயம் மாறி கலந்ததால்

மண்ணின் மாண்பு மாறி யாவும் மறந்ததே

 

திடமு டனிரு மனமி ணைந்து திளைத்ததால்

உடலி ரண்டும் உளமுருகி ஒன்றலால்

இடமு டனொரு கால மென்ப தின்றியே

தடம்ப திக்கத் தந்து விட்டேன் தன்னையே

 

காத்தி ருந்த இருவ ரதனைக் கண்டனர்

ஆத்தி ரத்தில் அறிவி ழந்து வந்தனர்

நேத்தி ரத்தில் ரத்தம் வாளில் நேர்பட

தீத்தெ றித்தல் போல வெட்டிச் சாய்த்தனர்

 

உடலினையான் தந்திட்ட காத லர்தாம்

     உயிரையே எனக்காகத் தந்த போதில்

திடமுடனே கலக்கமின்றி என்னைப் பார்த்து

    திரும்பவும்நாம் மறுபடியும் பிறப்போ மென்றார்

மடமையென சிலர்சொல்வார் ஆனால் என்னே

     மறுபடியும் நானிங்கு பிறந்து வந்தேன்

கடவுளே செய்திட்ட சதியோ என்ன

     கருங்குயிலாய் நானிங்கு தோன்றி வந்தேன்

 

முன்பிறப்பில் தனிலுற்ற இவற்றை யெல்லாம்

     முழுமையாய் உன்னிடத்தில் சொன்ன போதில்

என்னயிது இவையெல்லாம் மெய்யோ பொய்யோ

     ஏற்பதோ வேண்டாமோ எனக்கு ழம்பி

பின்னுமதன் உண்மைதனைக் காண்ப தற்கு

    பேடையேஉன் காதலன்யார் என்று கேட்டாய்

முன்னிற்கும் நீயேதான் என்று சொல்ல

     முகமலர்ந்து எனைத்தொட்டாய் பெண்ணானேன் நான்

 

 குயிலாக எனையேற்றல் இயலா தென்றே

     குமரியாய் மாற்றினாய் என்ற போதும்

செயிரறு செல்லம்மா தனைவி டுத்து

     சேர்ந்தென்னு டனிங்கு சிலநாள் வாழ்தல்

உயிர்ப்புள மட்டிலும் கனவில் கூட

     ஒருபோதும் பொருந்தாது எனயெ ழுந்தாய்

பயின்றிடத் தக்ககாவி யமாய் மாற்றி

     பாவடிவில் யாவையுமே பாடித் தந்தாய்

 

இக்கதையின் பொருள்தன்னைக் காண்ப தற்கு

     எவரேனும் முனைவாரோ என்று கேட்டாய்

அக்கறையாய் அவ்விதமே கூர்ந்து நோக்கி

     ஆய்வு செய்தோர் உண்டெனினும் அவர்க்குள் ளேயும்

மிக்கபல முரண்பாடும் அதனா லிங்கே

     மேலும்பல விவாதமும் விளைந்த தன்றோ?

தக்கபடி இதன் பொருளை நீயும் அந்தத்

     தெய்வமும் அன்றியார் உணர்ந்து சொல்வார்?

 

பாரதி உன் குயில்பாட்டை பூரணமாய் உணர்ந்தவர்கள்

      பாரினிலே எவரு மில்லை

சாரமுள அதன்பொருளை உணர்ந்திட்டேன் என்றெவரும்

      சாற்றிடவும் துணிச்ச லில்லை

வேரத்னைக் காணாமல் வேதாந்த விருட்சத்தை

      விளைவிப்பார் யாரு முண்டோ?

யாரதனைப் படித்தாலும் பொருள்பலவாய் தோன்றிடவே

     யாத்தாயோர் கவிதை வாழி!

 

குயில் பார்வையில் பாரதி முற்றும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

 

 

 

***

 

பாரதி போற்றி ஆயிரம் – 68 & 69 (Post No.4876)

Date- 3 April 2018

British Summer Time- 6-25

Compiled by S Ngarajana

Post No.4876

 

பாரதி போற்றி ஆயிரம் – 68

  பாடல்கள் 526 முதல் 549

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஐந்தாம் அத்தியாயமான கண்ணன் பார்வையில் பாரதி இடம் பெறுகிறது.

ஐந்தாம் அத்தியாயம்: கண்ணன் பார்வையில் பாரதி

1 முதல் 24 வரை உள்ள பாடல்கள்

திருமாலின் அவதாரம் பத்தினுள் யான்மட்டும்

     திகழ்தனிப் பெருமை பெற்றேன்

ஒருமைப்பா டிதுவென்ன பாரதம் எங்கணும்

     உயர்திருக் கோயி லுற்றேன்

கருதரிய எண்ணற்ற காவியங் கள்இந்தக்

     காசினியில் பெற்று வந்தேன்

உருவினில் மனிதனாய் இருப்பினும் தெய்வமென

     உணர்ந்திடும் செயல்பு ரிந்தேன்

 

சிறையினில் பிறந்தவன் என்றபோ தும்பிறவிச்

     சிறைதனை நீக்க வந்தேன்

மறைந்துநான் வாழ்ந்திட நேர்ந்தபோ தும்மாயை

     மறைந்திடச் செய்து வாழ்ந்தேன்

கறையென்று சொல்லிடும் லீலைகள் புரிந்தாலும்

     களங்கமற் றுத்தி கழ்ந்தேன்

உறைந்திடும் களத்தினுள் உலகுய்ய கீதையை

     உரைத்துவழி காட்டி நின்றேன்

 

என்றுமென் தாசனாய் திகழ்அக் ரூவர்போல

     எண்ணற்ற பேர்க ளுண்டு

தன்னரும் தோழனாய் கருதியே இணைந்திட்ட

     தனஞ்செயன் நட்பு முண்டு

அன்பினால் வளர்த்தெந்தன் அன்னையாய் விளங்கிய

    யசோதை பாச முண்டு

நன்னிய ராதைபோல் நாயகி பாவத்தில்

     நாடிய பக்த ருண்டு

 

ஒவ்வொரு வருமெனை  ஒவ்வொரு நிலையினில்

    உணர்ந்திடக் கூடு மென்றால்

செவ்விய பல்வேறு நிலைகளில் ஒருவரே

     சேவிக்க இயல்வதுண்டோ

எவ்விதம் பாரதி நீமட்டும் எனக்குளே

      இத்தனை வடிவு கண்டாய்

இவ்விதம் இதற்குமுன் கண்டவர் யாருமிலை

     இனிவரப் போவ தில்லை

 

எந்தனைத் தாயாகக் கண்டபின் சேயாக

     எவ்விதம் காணயியலும்? – நெஞ்சில்

வந்திக்கும் குருவாக ஏற்றபின் சீடனாய்

     மதித்திடல்தா னெவ்விதம்? – மேலும்

விந்தையாய் அரசனொடு சேவகன் எனயிரு

     வியன் நிலை அமைவதுண்டோ? – இன்னும்

அந்தமார் நாயகன் தானேநா யகியாக

     ஆகிடும் நிலையுமுண்டோ?

 

என்றாலும் இத்தனை வடிவங் களில்காண

     என்னாலே இயலுமென்று என்றும்

என்மீது கொண்டதோர் பக்தியா லல்லவா

     எண்ணற்ற பாவடித்தாய் இங்கு

இன்றுமதை ஆய்வோர்கள் ஒவ்வொரு நிலைக்குமோர்

     இலக்கணம் கண்டவுந்தன் அரிய

பன்முகச் சிந்தனையின் படிமங்க ளைக்கண்டு

    பாங்குடன் போற்றுகின்றார்

 

போர்க்களம் தன்னில் பகவத்கீ தைதனை

     புகன்றிடும் போதினிலேநான்

யார்யாரின் வடிவில் இருக்கின் றேனென

     யாவையும் உரைக்கையிலே அதில்

பார்த்தனாய் உள்ளேன் பாண்டவ ருள்ளென

     பகர்ந்ததை நினைத்தாயோ? – கவிதைத்

தேர்தனில் என்னை இருத்தியே பாக்களாம்

     தெறிகணைத் தொடுத்தாயோ?

 

தெய்வத்தை உணர தோழமை முதலென

     தேர்ந்துனை அருச்சுனனாய் யாவும்

செய்தன்று என்னுடன் இருந்தவன் நீயென

     செப்பிடும் வகையினிலே எந்தன்

துய்யநற் குணங்களைத் தொகுத்தளித் தாயென்னை

     சிலிர்த்திடச் செய்துவிட்டாய் வாழ்வில்

உய்வுற வேண்டுவோர் உனைப்போல் தோழமை

     உணர்ந்தால் உயர்ந்திடுவார்

 

அன்னையின் வடிவினிலே எந்தன்

     அற்புத தரிசனம் நீயுணர்ந்தாய்

விண்ணையும் கடந்துசென்ற அந்த

     விராட்சொ ரூபத்தை உணர்த்திவிட்டாய்

தண்ணொளி தருநிலவும் பிறவும்

     தாய்தரு பொம்மைகள் எனக்கண்டாய்

நண்ணும்பொய் வேதங்கள் நீ

     நகைத்திடத் தந்ததும் சொல்லி வைத்தாய்

 

தந்தையின் நோக்கினிலே எந்தன்

     தன்மையை உரைத்திட முயலுகையில்

விந்தைப் பயித்தியமாய் கண்ட

     விசித்திரச் செயல்களைப் பாடலுற்றாய்

எந்தயி டத்திருப்பேன் நான்

     எங்கெதைச் செய்வேன் எவரறிவார்?

அந்தநி லைதன்னை மிக

    அற்புதம் என்றிடப் பாடிவைத்தாய்

 

சேவகன் எனநீயும் எனை

    செப்பிட முயல்கையில் யான்வியந்தேன்

ஏவலைச் செய்பவனாய் சொல்ல

    எவ்விதம் துணிந்தாய் எனநினைந்தேன்

காவல் புரிபவனாய் எனைக்

     காட்டிய பொழுதினும் மிகநயமாய்

மேவரும் தெய்வமென எந்தன்

    மேன்மையும் எளிமையும் கலந்துரைத்தாய்

 

அரசன் என்பவனை இந்த

     அகிலம் எவ்விதம் தூற்றுமென

தரமுடன் விரித்துரைத்தாய் எந்தன்

     சக்கரம் சுழன்ற மறுகணமே

தருமம் தழைத்ததென்றே எந்தன்

     தகுதியை யாவரும் உணரவைத்தாய்

கருத்தில் பதிந்திடவே இந்தக்

     கண்ணனின் தன்மையை எடுத்துரைத்தாய்

 

எங்கணும் வெற்றியே எதிலும் வெற்றி

    எனைப்போல் பெற்றவர் எவரும் இல்லை

இங்கெவர் இவ்விதம் உரைத்திட் டாலும்

    யாவும் தோல்வியாய் முடிதற் கூடும்

அங்கதை மாற்றியே தோல்வி நேர்ந்தால்

    அவன்செயல் என்றதை ஏற்பின் உள்ளப்

பங்கயம் தனில்நான் உதிப்பே னென்று

    பகர்ந்திட்ட சீடனென என்னைக் கண்டாய்

 

கண்ணனைக் குருவாகக் கொள்க யென்றே

     கருத்தற்ற கிழவனவன் சொன்னதாலே

நண்ணிய போதிலென் செயல்கள் கண்டு

     நாடியதே தவறென்று நினைத்து விட்டாய்

உண்மையுள மெய்ப்பொருளை ஓர்நா ளில்நான்

    உபதேசம் செய்தபோதில் எனையுணர்ந்தாய்

கண்ணிலுறும் தோற்றமல்ல ஆன்ம ஞானம்

    கருத்திலும் இறையுணர்வு என்று கண்டாய்

 

தீராத விளையாட்டுப் பிள்ளை யாக

     தெருவிலே செய்திட்ட குறும்பை யெல்லாம்

நேராகக் கண்டவன்போல் பாடி நின்றாய்

    நீயுமந்த கோபியருள் ஒருவன் தானோ?

சீரான அப்பாடல் கேட்கும் போதில்

     சிறுவயதின் நினைவெல்லாம் தோன்றச் செய்தாய்

ஆராத ஆவலுடன் எந்தன் உள்ளம்

    ஆயர்பா டிச்செல்ல ஏங்கு தப்பா

 

தனக்கொரு பெண்குழந்தை வேண்டு மென்று

     தவித்திட்ட யசோதையாம் எந்தன் தாயார்

எனக்கேயோர் பெண்ணைப்போல் அலங்க ரித்து

    ஏக்கமது தீர்ந்திட்டாள் அந்த நாளில்

உனக்குமது போலாசை வந்த தாலோ

     ஒருநொடியில் பெண்குழந்தை யாக்கி வைத்தாய்

அனந்தம்பா எனக்கெனநீ இசைத்திட் டாலும்

    அச்சின்னஞ் சிறுகிளிக்கோ ஈடே யில்லை

 

நாயகி பாவத்திலே என்னை

நாடிய பொழுதினிலே

தூயநின சிந்தையதும் திரிந்து

துயரப் பட்டதெலாம்

ஆயபல் கருத்துக்கள் அதிலே

ஆழ்கடல் முத்தெனவே

ஏயநற் கவிதைகள் நீயும்

ஏக்கமுற் றுப்பாடினாய்

 

பாங்கிகள் அருகிருந்தால் என்னைப்

பார்த்திடச் சென்றிடவே

ஆங்கவர் தடையெனவே அவரை

அனுப்பியே வைத்ததுவும்

ஓங்கிய மரங்களுள் காட்டில்

ஓய்வின்றித் தேடியதும்

தேங்கிய காதலினால் நீயும்

தெவிட்டாமல் பாடிவைத்தாய்

 

கன்னியர் பலரென்னைக் காதலித்தார் அக்

    காதலைக் கவியாகச் சொல்லிவைத்தார்

என்னையே பெண்ணாகப் பார்த்தவர்கள் புவியில்

    எங்குமெந் நாளிலும் இருந்ததில்லை

துன்னிய வடிவெலாம் நானாகினேன் என்று

     தூயநற் கவியாகப் பாடிவைத்தாய்

என்னதான் நினைத்துக் கண்ணம்மாவாய் கண்டு

    எந்தனை நீயங்கு உருவகித்தாய்

 

பெண்ணாக நீயென்னைக் கண்டிட்டாலும் அதில்

    பழம்பிற விக்கதையில் ஆணாக்கினாய்

திண்மையுள ராமன்நான் என்றபோது  உன்னை

    சீதையெனும் பெண்ணாகச் சொல்லிக்கொண்டாய்

வண்மையுள நரசிங்கம் நானாகிட நீ

     மகிமையுள மைந்தனெனும் உறவுசொன்னாய்

உண்மைநிலை இவற்றுக்குள் ஆய்ந்தாலன்றோ உன்

     உள்ளத்தின் பக்திதனை உணரக்கூடும்

 

பன்னிரு ஆழ்வார்கள் தாமளித்த அரிய

    பாசுரங் களென்னும் கடலினிலே

அன்புரு கவிஞநீ மேகமாகி பல

     அருங்க ருத்துக்களாம் நீரைமொண்டு

இன்னிசைக் கலந்து என்மேலே தேன்போல்

     இனியகவி மழையாகப் பொழிந்துவிட்டாய்

என்றுமென் நெஞ்சினுள் நினைவென்னும் நல்ல

    ஏற்றமிகு பயிரினை விளையவைத்தாய்

 

நண்பனாய்க் காண பார்த்தனுண்டு எனை

    நாயகனாய்க் காண ராதையுண்டு

திண்ணிய குருவாய் சாந்தீபினி பண்பு

    திகழ்கின்ற சீடனுக்கு சாத்யகியே

நண்ணிய தாயென யசோதையே நாளும்

    நாடும்பிள்ளைமைக்கு கோபியரே

எண்ணிட இதுபோல் நாயகிக்கு உவமை

    எவருண்டு எவ்விதம் பாடினாயோ?

 

பற்பல மருத்துவம் இருந்தாலும் அதன்

     பாதைகள் வெவ்வே றானாலும்

முற்றிய பிணியைத் தீர்ப்பதற்கே அவை

    முயன்றிடும் என்பது இயல்பன்றோ?

அற்புத பாவனை எதிலேனும் மக்கள்

    அறிந்தெனை நாடி அடைந்திங்கு தம்மை

ஏற்றிடும் பிறவிப் பிணிதீர நீ

    ஏந்திய மருத்துவ நெறிகளன்றோ?

 

முனிவருள் பிருகு தேவரிஷி தம்முள்

    முகடெனும் நாரதன் ருத்திரருள்

முனிந்திடும் சங்கரன் வசுக்களிலே நான்

     மூண்டெழும் அக்கினி தளபதியுள்

இனியதமிழ் முருகன் யட்சருளே எவரும்

     ஈடில்லா குபேரன் எனகீதை

தனில்சொன்ன நானினி கவிஞருள்நான் என்றும்

     தமிழ்க்கவி பாரதி என்பேன்வாழி!

 

 

கண்ணன் பார்வையில் பாரதி முற்றும்

 

xxxx

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 69

  பாடல்கள் 550 முதல் 569

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி துவங்குகிறது.

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

1 முதல் 20 வரை உள்ள பாடல்கள்

வானப் பறவையென வாழினும் பூமியில்

கான மிசைக்கும் கருங்குயில்நான் எங்கும்

பயிலும்நல் பாட்டோச கேட்டாலே மக்கள்

குயிலின் குரலென்றே கூறி மகிழ்ந்திடுவார்

ஆடலும் பாடலும் ஆங்கொன்றி னுக்கொன்று

நாடும் துணையாகி நானிலத்தில் தாமிணையும்

ஆட மயிலென்றும் அவ்வாறே இன்சுவையாய்ப்

பாடக் குயிலென்றும் பாங்காய் உரைத்திடுவார்

ஆனாலும் என்ன பயன் ஆடும் மயிலுக்குத்

தானாக முன்வந்து தேசியச் சின்னமெனும்

உன்னதத் தன்மை உவந்தளித்தா ரென்னை

என்னகார ணத்தாலோ எல்லாரும் மறந்திட்டார்

இவ்விதம் நேர்ந்ததை எண்ணிக் கலக்கமுற

செவ்வையாய் ஓங்கும் சிறப்பளித்தாய் பாரதியே

முப்பெரும் பாட்டெழுதி மூன்றினுள் ஒன்றாக

இப்பறவை தன்னை இலக்கிய மாக்கிவிட்டாய்

கண்ணன் திரௌபதிக்குக் காணும் வரிசையில்

கன்னங் கரியயெனைக் காவிய மாக்கிவிட்டாய்

கண்ணன் கடவுள் கருதுமுயர் பாஞ்சாலி

பெண்டிரில் தெய்வமென பேசும் பெருமையுற்றாள்

என்ன தகுதி இவரோ டிணைத்திந்த

சின்னஞ் சிறுகுயிலை சீர்பெறச் செய்தாய்

குயிலெங்கும் கூவும் குரலோசை தன்னை

இயல்பாய் செவிமடுப்பார் எங்கணும் உண்டு

அதிலுறும் இசையை அனுபவித் தாங்கே

மதிப்போர் சிலரேனும் மாநிலத்தில் தாமுண்டு

கேட்ட இசைதன்னில் காவியம் கண்டிட

பாட்டுத் தலைவாநின் போல்வேறு யாருண்டு?

புதுவை நகரின் புனிதமுள்ள தோப்பு

எனைத்தந்து உந்தன் எழில்கவிதை பெற்றதுவோ?

அன்றாடம் செல்லும் அருமையான தோப்பதனில்

அன்று நிகழ்ந்திட்ட அற்புதம் தானெதுவோ?

எந்நாளும் கேட்கும் எமதுகுர லோசைதான்

அந்நாளில் உன்மனதை அவ்விதமேன் ஈர்த்ததுவோ?

உன்பாட்டில் எல்லோரும் உள்ளம் உருகிடுவார்

என்பாட்டில் நீமகிழ என்னதான் உள்ளதுவோ?

என்னதான் காரணம் யாருமறி யாரெனினும்

என்பெயரால் காவியம் இன்தமிழ்தான் பெற்றதுவே!

பாரதிநின் பாடல்களில் காதல் தன்னைப்

     பாடாத இடமென்று எதுவும் இல்லை

பாரதனில் நாம்காணும் காட்சி யெல்லாம்

     பாங்குடைய காதலன்றி ஏது மில்லை

சாரமுள அதன்சிறப்பைச் சொல்வ தற்கும்

     சாகாத காவியமாய்ப் படைப்ப தற்கும்

சீராகஎன் கதையைத் தேர்ந்திட் டாயோ?

     சிறுகுயிலின் காதலென இசைத்திட் டாயோ?

குயில் பார்வையில் பாரதி தொடரும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

xxxx

 

பாரதி போற்றி ஆயிரம் – 66 & 67 (Post No.4870)

Date: 1 April, 2018

 

 

Time uploaded in London- 7-17 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4870

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 66

  பாடல்கள் 485 முதல் 491

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி தொடர்கிறது.

மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி

31 முதல் 37 வரை உள்ள பாடல்கள்

எத்தனையோ தெய்வங்களைப் பாடிடினும் யாவிலுமிச்

     சக்திதன்னை யேநீயும் கண்டாய் – அவை

     அத்தனையும் என்வடிவே என்றாய் – உலகில்

சக்திதாசர் என்றிடவே வாழ்ந்தவரும் உன்போலே

     தத்துவத்தில் உறுதிகொண்ட தில்லை – கவியில்

     நித்தமெனைக் கண்டதுந்தன் எல்லை

 

மணக்குளத்து விநாயகர் நான்மணிமா லைதனிலும்

     மணப்பதெலாம் என்புகழே யன்றோ? – அதன்

     மகத்துவத்தை உணர்த்துவதுதான் என்றோ? – பாவில்

இணக்கமாய் சக்திதொழில் யாவுமெனில் சஞ்சலமேன்

     எனவுரைத்து போற்றினையே என்னை – அதனை

     இனியுணர்ந்து போற்றுவரே உன்னை

 

முருகனவன் பெருமைகளை உரைக்கின்ற போதினிலே

     அருமையுடன் ஒருவரியைச் சொன்னாய் -குகன்

     அருளாகிய தாய்மடிமேல் என்றாய் – மேலும்

ஒருமுறையா இருமுறையா உமைமைந்தன் என்பதனை

     திருக்குமரன் சிறப்பெனவே கொண்டாய் – மயில்மேல்

     வரும்முருகன் தனிலுமெனைக் கண்டாய்

 

கலைமகளும் திருமகளும் கண்களெனக் கொண்டதினால்

     காமாட்சி என்றபெயர் பெற்றேன் – அதுபோல்

     காணுமுந்தன் பாட்டினிலும் உற்றேன் – இன்று

நிலையுரைக்க இயலாத பரமனோடு கண்ணனையும்

     நிகழ்சக்தி வடிவெனவே சொன்னாய் – எதிலும்

     நீக்கமற நிற்பவள்யான் என்றாய்

 

எங்கணும் சக்தி எதனிலும் சக்தி

    என்பதே உந்தன் கவித்துவ சக்தி

அங்கத னால்நீ ஆவேச முற்றே

    யாரையும் பணிய மறுத்திட் டாயே

சிங்கமென் றுன்னைச் சொல்லிடும் வண்ணம்

    சீரிய மேனி இருந்திட்ட போதும்

அங்கங் கலைந்தே அளவிலா துன்பம்

    அடைந்த தினாலுடல் சிதைவுற் றாயே

 

நூறாண்டு வாழ்ந்திட வரமது கேட்டாய்

     நோயுடன் அவ்விதம் வாழ்ந்திடல் நன்றோ?

சீரான வாழ்வின்றி எத்தனைக் காலம்

     சிந்தைநொத் துலகில் இருந்திடக் கூடும்?

ஆறான தொருநாள் சமுத்திரம் தன்னில்

     ஆவலாய் சங்கமம் ஆகிடுந் தானே

பேரான படைப்புகள் போதுமென் றேநான்

     பிள்ளையே உந்தனை அழைத்துக் கொண்டேன்

 

என்றுமிங் கொருவன் எத்தனைக் காலம்

     இருந்தனன் என்பதில் பெருமைதான் உண்டோ?

பொன்றிடும் முன்னர் வேடிக்கை மனிதர்

     போலவீ ழாமல்சா திக்கநி னைத்தாய்

இன்றுள படைப்பே இவ்வுல கிங்கே

     இருந்திடும் வரையுன் சிறப்பினைக் கூறும்

நன்றினை என்றுன் கவிமலர் யாவும்

     நான்மகிழ் தேற்றேன் வாழ்கநீ வாழ்க!

பராசக்தி பார்வையில் பாரதி முற்றும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய அறிமுகம் ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

 xxxx

பாரதி போற்றி ஆயிரம் – 67

  பாடல்கள் 492 முதல் 525

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு நான்காம் அத்தியாயமான பாஞ்சாலி பார்வையில் பாரதி இடம் பெறுகிறது.

 பாஞ்சாலி பார்வையில் பாரதி

1 முதல் 34 வரை உள்ள பாடல்கள்

திருவுடைப் பாஞ்சால நாட்டினில் தோன்றலால்

       திகழ்பாஞ் சாலி யென்பார்

துருபதன் மகளாய் வளர்ந்ததால் எந்தனை

      திரௌபதி என்ற ழைத்தார்

கிருட்டிணன் தங்கையென கருநிறம் பெற்றதால்

      கிருட்டிணை என்று சொன்னார்

பெருந்திறல் கொண்டதோர் பாண்டவர் தேவியென

      புகழ்தலே உயர்வாய்க் கொண்டேன்

 

தீயவை யாவையும் தீய்த்திட வந்ததால்

      தீயினில் தோன்றி வந்தேன்

தீயதை மாசுகள் தீண்டாது என்பதால்

      திகழ்ஐவர் தேவி யானேன்

ஆயயிப் புவிமுறைகள் ஏதுமெனக் கேலாது

     ஆய்ந்தவர் இதை யுணர்வார்

தூயநன் னெறிதனில் நினைத்ததால் அல்லவோ

     தெய்வமாய் சிறப்புப் பெற்றேன்

 

 

அரனருள் முற்பிறவி வரத்தினால் தோன்றினும்

      அரிமகிழ் தங்கை யானேன்

அரண்மனை தன்னிலே வளர்ந்தவ ளாயினும்

     அடவியில் வாழலானேன்

அரணெனும் ஐவர்தம் தேவியா யிருந்தும்

     அடுத்தவன் இழுத்துச் சென்று

அரசவை தன்னிலே ஆடைகள் பறித்திட

      அபலையென தவித்து நின்றேன்

 

அன்றுமுதல் என்மனதில் நான்கொண்ட பாரமே

     அரிய பாரதமாய் ஆக

என்றுமென் நெஞ்சத்தில் குமுறிய ஆவேசம்

     ஏயும்குருச் சேத்ர மாக

அன்றங்கு பதினெட்டு அக்ரோணி சேனைகள்

     அவளால் அழிந்த தென்று

என்றுமெனைப் பழிப்போர்கள் இருந்தாலும் காரணம்

     எவரிங்கு ஆய்ந்து சொன்னார்?

 

பாரதி எனும்புலவா – இந்தப்

பாஞ்சாலி துயரினை நீயுணர்ந்தாய்

பாரதிர்ந் திடநடந்த – அந்தப்

பாரதப் போரின் காரணத்தை

ஈரநெஞ் சத்துடனே – ஆய்ந்து

எனது நிலையினைத் தேர்ந்துரைத்தாய்

சீரற்ற கௌரவர்கள் – செய்த

சூழ்ச்சியால் விளைந்ததை ஆய்ந்துரைத்தாய்

 

காலத்தின் கண்ணாடியாய் – பல

கவிதைகள் புனைகின்ற பணியிருந்தும்

சாலநற் சுதந்திரப்போர் – தனில்

சற்றேனும் ஓய்வற்ற உழைப்பிருந்தும்

ஏலவோர் இடமுமின்றி – சென்று

எங்கெங்கோ உறைகின்ற வாழ்விருந்தும்

சீலமாய்ப் பாஞ்சாலி – நிலையை

சிறப்புறப் பாடுவேன் எனயெழுந்தாய்

 

எண்ணற்றா காவியம் நாட்டினுண்டு – அதில்

     எனைப்பற்றிப் பாடினோர் பலருண்டு

திண்ணமாய் முன்னமென் கதையுரைத்த – ஞானம்

     திகழ்கின்ற வியாசனின் பெருமையுண்டு

உண்டிடத் திகட்டாத அமுதமென்ன – வில்லி

     உரைத்திட்ட அற்புதப் பாடலுண்டு

பண்ணிலே எனதருங் கதையைநாளும் – இங்கு

     பாடியே வைத்திட்டோர் நிறையவுண்டு

 

எத்தனைப் பேரென்னைப் பாடியென்ன? – அதில்

     எவருமென் நிலையெண்ணித் துடித்ததுண்டோ?

பித்தனைப் போலந்த துரியன்அன்று – செய்த

     பேய்ச்செயல் கண்டிங்கு பதைத்ததுண்டோ?

நித்தமும் நிகழ்கின்ற எளியசெயலாய் – எந்தன்

     நிலைபற்றி இயல்பாக எழுதிவைத்தார்

அத்தகை யோர்க்கெலாம் எனதுவாழ்வு – பெண்ணின்

     அவலமல்ல ஆங்கதுவோர் கதைமட்டும்தான்

 

பாரதி நீயொருவன் தானே அய்யா

     பதறினாய் குமுறினாய் கோபமுற்றாய்

சீரற்ற மாந்தரின் சிறுமை கண்டு

    சீறினாய் மாறினாய் சாபமிட்டாய்

யாரவர் நெட்டைக ரங்க ளென்றாய்

    எல்லாரும் பெட்டைகள் எனப்பழித்தாய்

வேரற்ற மரமாக வீழ்ந்தி டாமல்

    வீறுகொண் டெழுந்தெனை முழங்கச் செய்தாய்

 

பாரதத்தை என்னுருவில் பார்த்திட் டாயோ?

      பாஞ்சாலி பாரத மாதாஎன்றே

சாரமுடன் உன்மனதில் தேர்ந்திட் டாயோ?

      சார்ந்திட்ட தீவிர வாதியாக

சூரனெனும் பீமனை நினைத்திட் டாயோ?

      சூழ்நிலையை உணர்ந்தவையில் பேசிநின்ற

வீரனருச் சுனந்தன்னை மிதவா தத்தின்

      விளங்குமொரு வடிவமெனப் படைத்திட் டாயோ?

 

தருமனையே அறத்திற்கோர் வடிவ மென்றே

     தக்கோர்கள் யாவருமே புகழ்ந்து சொல்வார்

தருமன்போல் என்றேதான் பண்பிற் கெல்லாம்

     தலைமையுறு உவமையென எவரும் சொல்வார்

தருமனவன் சூதாட்டம் தன்னில் கொண்ட

     தாளாத மோகத்தால் ஈடு பட்டே

தருமத்திற் கெதிராக எனையே அங்கு

     தான்வைத்து ஆடியதை எவர்தான் சொன்னார்?

 

ஆதலினால் தருமன்தான் நாட்டை வைத்தே

    ஆடிய போதேநீ கோபம் கொண்டு

சீதமதி குலத்திற்கே களங்கம் நேர

     சீச்சீயிவன் சிறியர்செய்கை செய்தான் என்றாய்

ஏதமுற அதன்பின்னும் மனையாள் தன்னை

     ஏற்றதொரு பணயமென வைத்திட் டானே

ஈதறமோ நற்செயலோ எனக்கொ தித்தே

     இவன்கையை எரித்திடுவோம் என்றிட் டாயே

 

இத்தனைக் கடுமையுடன் – தருமனை

     எவர்விமர் சித்தாலும்

அத்தனைப் பேருமாங்கே – அவர்மேல்

     ஆத்திரம் கொண்டிருப்பார்

வித்தகம் ஏன்நானும் – அவரை

     விழியால் எரித்திருப்பேன்

நித்தியப் புலவனேநீ – காட்டிய

     நியாயங்கள் அருமையன்றோ?

 

ஆதலி னால்தானே – அதனை

      அனைவரும் ஏற்கின்றார்

நாதனைப் பழித்தபோதும் – உந்தன்

     நடுநிலை நானுணர்ந்தேன்

வேதனைப் பட்டவள்நான் – நானே

     வியந்திட விரித்துரைத்தாய்

சாதனை செய்திட்டாய் – புதிய

     சரித்திரம் படைத்திட்டாய்

 

பாரதப் போர்நடக்கக் – காரணம்

     பாஞ்சாலி சிரிப்புயென்றே

பாரத நாடெங்கும் – கதையைப்

     பாங்குடன் சொல்லுகின்றார்

யாரதில் என்செயலை – மிகவும்

    இயல்பென உணர்த்துகின்றார்?

பாரதி நீயல்லவோ – திருத

     ராட்டின ராயுரைத்தாய்

 

  தடுமாறி விழும்போதில் – பெற்ற

     தாய்கூட நகைப்பளன்றோ?

கடுஞ்செய லாகிடுமோ – மைத்துனி

     கண்டங்கு சிரித்திடல்தான்

நடுநிலைக் கருத்திதுதான் – இதனை

     நயமுறச் சொல்லவைத்தாய்

எடுத்திதை யாருரைத்தார்? -இன்னும்

     ஏன்பழங் கதையுரைத்தார்?

 

காவியம் ஒன்றைப் படைத்திட நீயும்

    கருதிய போதினிலே

மேவிய கதைகள் எத்தனை எத்தனை

     மனதினில் உதித்திருக்கும்

பாவினில் வடிக்கப் பொருத்தம் நானென

     பல்வகைப் பாத்திரங்கள்

தாவிமுன் வந்தே எந்தனைப் பாடென

     தாமே கேட்டிருக்கும்

 

சங்க இலக்கியம் தனிலுறை மாந்தர்

     சரித்திரம் அறியாயோ?

பொங்கும் பக்தியில் சிறந்தவர் தம்மை

     போற்றிட உணராயோ?

தங்கும் ஐம்பெருங் காப்பியங்களில்தான்

    தகுந்தவர் கிடையாதோ?

எங்கும் புகழ்ந்திடும் இராமா யணத்துள்

    ஏதும் பொருந்தாதோ?

 

இத்தனைக் கதைகள் இருந்திட்ட போதிலும்

    ஏனந்த பாரதம் தன்னை

நித்தமும் நிலைத்திடும் காவிய மாக்கிட

     நீதேர்ந் தெடுத்தனை யென்று

இத்தினம் உந்தனை ஆய்வுகள் செய்பவர்

    ஏதேதோ காரணம் சொல்வார்

அத்தனைக் கும்மேலாய் ஆழ்மனத் தில்இந்த

     அபலையை நினைத்தனை யன்றோ?

 

இவ்விதம் பாரதக் கதைதன்னில் ஓர்பகுதி

    எழுதலென ஏற்ற பின்பும்

எவ்விதம் எப்பகுதி தனைநாமும் தேர்ந்திங்கு

    ஏற்பதென குழப்பம் தோன்றும்

செவ்விய பாரதம் சமுத்திர மல்லவோ

     செப்பமுற அதனுள் மூழ்கி

வவ்வியே ஓர்முத்தை எடுத்திடல் எளிதாமோ

     வாய்த்தசோ தனைதான் அன்றோ?

 

சந்திரன் மரபினில் வந்திட்ட மன்னவர்

    சரித்திரம் பற்பல உண்டு

அந்தநாள் அத்தின புரத்தினில் நடந்துள

    அரியணைப் போட்டிகள் உண்டு

எந்நாளும் யாவரும் போற்றிடும் கண்ணனின்

    எண்ணற்ற லீலைகள் உண்டு

இந்தநாள் நினைப்பினும் பதறிடும் குருசேத்ர

     யுத்தத்தின் கொடுமையும் உண்டு

 

எந்தனைப் பற்றியே பாடுதல் என்றாலும்

     யானன்று வேள்வி தன்னில்

செந்தணலில் தோன்றிய சிறப்புண்டு எனக்குற்ற

    சுயம்வரப் போட்டி உண்டு

இந்திரப் பிரத்தத்தின் அரசியெனும் புகழுண்டு

    இருண்டவன வாசம் உண்டு

சிந்திய இரத்தத்தில் சீற்றம் தணிந்தெந்தன்

    சிகைதனை முடித்த துண்டு

 

இத்தனையும் விடுத்து – ஏன்

எந்தன் சபதத்தை

அத்தினம் தேர்ந்தெடுத்தாய்? – யான்தான்

அதனை அறிந்திடுவேன்

 

இளமைப் பிராயத்தில் – நீ

எந்தன் கதைதன்னை

விளங்கும் தெருக்கூத்தில் – அந்நாள்

விருப்ப முடன்பார்த்தாய்

 

திரௌபதி வேடத்தில் – உள்ள

திறன்மிகு நடிகர்தனை

துரியன் சபைதனக்கே – அந்த

துச்சா தனன்தானும்

 

இழுத்து வருகியிலே – காண்போர்

இதயம் துடித்திருக்க

அழுது கதறிநிற்கும் -அந்த

அபலை பதைத்திருக்க

 

ஆடை பறித்திடுவாய் – என்று

அண்ணன் சொன்னவுடன்

வேடன் பறவைதனை – அங்கு

வீழ்த்திடும் நிலைபோல

 

துச்சா தனன்பாய்ந்தான் – அவளைத்

துகிலு ரியமுனைந்தான்

அச்சத் துடனதனைக் – காண

அனைவரும் காத்திருந்தார்

 

அந்நிலை தான்கண்டே – நீயும்

ஆத்திரம் கொண்டெழுந்தாய்

இந்நிலை வந்ததுஏன் – என

எண்ணிலா வினாதொடுத்தாய்

 

தெருக்கூத் தென்பதையே – மறந்து

தீரமாய் வாதிட்டும்

ஒருவரும் ஏற்கவில்லை – சிறுவன்

உளரலென விடுத்தார்

 

அன்றுன் பிள்ளைப் பிராயத்த்தில் – கொண்ட

     அரியநற் சிந்தனை வித்தன்றோ – நித்தம்

பன்னருங் கேள்வியாய் கிளைவிட்டு – பின்னர்

     பாஞ்சாலி சபதமாம் விருட்சமாகி – தமிழில்

என்றுமே நிலைத்திடும் காவியமாய் – எளிய

     இன்னருங் கவிகளாய் கனிகளாகி – கற்றோர்

உண்டிடத் திகட்டாத நிலைபெற்றது – என்னை

     உன்னத நிலைக்கு உயர்த்திட்டது

 

எளியபதம் எளியநடை எளிதாய் இங்கு

     எவருமதன் பொருளுணர இனிமை யோடு

தெளிவுறவே அமையுமொரு காவி யந்தான்

     தெள்ளுதமிழ்க் கிந்நாளில் தேவையென்று

அளியுறவே அந்நாளில் அமைத்துத் தந்தாய்

     அதற்குரிய தலைவியென என்னைக் கண்டாய்

ஒளியினால் சூழலையே சிவக்க வைக்கும்

     உயர்ரத்ன மாயுளங்கள் சிவக்கச் செய்தாய்

 

சமநோக்கே நற்கவிஞன் பன்பு என்றே

     சகுனிக்கும் சிலநியாயம் உரைத்திட் டாயே

எமதன்னை எனயேற்று எந்தன் குரலாய்

     எண்ணற்ற கேள்விகளைத் தொடுத்திட் டாயே

தமதரும் பக்தியினால் பலரும் இங்கே

     திரௌபதி கோயிலென அமைத்த போது

நமதன்னை கற்கோயில் தானா காண்பாள்

    நான்சொற்கோ யில்தருவேன் எனதந் தாயே

 

பாரதக் கதைபுவியில் வாழ்கின்ற வரையிந்தப்

     பாஞ்சாலி தானும் வாழ்வாள்

பாரமுள என்கதையைப் பாங்குடனே பாடியதால்

     பாவலனே நீயும் வாழ்வாய்

பாரதிநின் படைப்பினிலே யாவுமே மறைந்தாலும்

     பாஞ்சாலி சபதம் போதும்

பாரதனில் உன்புகழைக் காலமெலாம் காத்திருக்கும்

    பைந்தமிழ்போல் வாழ்க! வாழ்க!!

 

 

     பாஞ்சாலி பார்வையில் பாரதி முற்றும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி

கவிஞரைப் பற்றிய அறிமுகம் ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

 

 

***

 

“நடப்பது நடந்தே தீரும்” கம்பன் Philosophy பிலாஸபி/ தத்துவம் (Post No.4868)

“நடப்பது நடந்தே தீரும்” கம்பன் Philosophy பிலாஸபி/ தத்துவம் (Post No.4868)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 31 MARCH 2018

 

Time uploaded in London –  6-14 am (British Summer Time)

 

Post No. 4868

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மஹாபாரதத்தில் கர்ணன் என்னும் கதா பாத்திரமும், ராமாயணத்தில் கும்பகர்ணன் என்னும் கதபாத்திரமும் அற்புதமான படைப்புகள்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு—

என்ற குறளுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர்கள். இது புறநானூற்றிலும் (புறம்.34, ஆலத்தூர் கிழார் பாடியது) ராமாயண மஹா பாரதத்திலும் உள்ள வாசகம்.

கும்பகர்ணன் வாய்மொழி மூலமாக கம்பன் உதிர்க்கும் கருத்துக்களைச் சில பாடல்கள் மூலம் காண்போம்

 

 

ஆகுவது ஆகும் காலத்து ஆகும்; அழிவதும் அழிந்து சிந்திப்

போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்!

சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்?

ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்

 

யுத்த காண்டம்,கும்ப கர்ணன் வதைப் படலம், கம்ப ராமாயணம்

 

ராமனிடம் அடைக்கலம் புக மாட்டேன் என்று மறுத்து, வீடணனிடம் கும்பகர்ணன் சொன்ன சொற்கள்:-

“என்றும் வாழ்பவனே! உரிய காலத்தில் ஆக வேண்டியது ஆகியே தீரும்; அழிய வேண்டியது. அதற்குரிய காலத்தில் அழிந்து சிதறிப் போகும். அவ்வாறு அழிய வேண்டியதை அருகேயிருந்து பாதுகாத்தாலும், அழிந்தே போவது உறுதி. இதைக் குற்றமற உணர்ந்தவர், உன்னைக் காட்டிலும் யார் உள்ளனர்? வருத்தப் படாமல்

(ராமனிடமே) நீ திரும்பிச் செல். என்னை நினைத்து நீ வருந்தாதே — என்று கூறினான் கும்பகர்ணன்.

 

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதே

 

என்பது கும்பகர்ணனின் முடிவு.

ராமனிடம் சரணடைந்தால் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் உண்டு என்று வீடணன் சொல்கிறான். அதற்கு மறுமொழி தந்த கும்பகர்ணன், நீ சொல்வது எல்லாம் சரிதான்; அதர்மத்தின் தரப்பிலுள்ள நாங்கள் எல்லோரும் இறப்பது உறுதி. நானும் ராவண னும் அரக்கர் சேனையும் கூண்டோ டு, கைலாஸம் போகப் போகிறோம். எங்களுக்கு எல்லாம் எள் இறைத்து நீர் தெளித்து இறுதிக் கடன்கள் செய்து     நாங்கள் நரகம் புகாமல் , தடுக்க ஒருவராவது தேவை. ஆகையால் நீ வெற்றி பெறும் ராமர் தரப்புக்கே சென்று விடு என்கிறான்.

 

 

இதோ சில பாடல்கள்:

 

கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனைக்காத்துத்

திருத்தலாம் ஆகின் அன்றே திருத்தலாம்? தீராது ஆயின்

பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி

ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா

 

பொருள்

“தலைவன் ஒருவன் ஆலோசனை செய்யாமல் தீய செயல் செய்ய நினைத்தால் அதைத் தடுத்து நிறுத்த முடியுமானால் நல்லது. முடியாதாயின் அவனது பகைவரை (ராமனை) அடைந்து பெறக்கூடிய பயன் உண்டா? ஒருவன் இட்ட சோற்றை உண்டவர்க்கு உரிய செயல் போரில் இறங்கி போரிட்டு, அன்னம் இட்டவர்க்கு முன்னமேயே இறக்க வேண்டியதே

 

அடுத்த பாட்டிலெல்லோரும் அழிந்தபின்னர் ராவணன் அனாதையாக அழிவதைப் பார்க்க விரும்பவில்லை என்கிறான்.

 

இராமன் செலுத்தும் அம்பு மழையில் அரக்கர் அனைவரும் அழிவர். அவ்வாறு அழிந்து விட்டால் அயோத்தி வேந்தனிடம் அடைக்கலம் அடைந்த நீ இல்லாவிட்டால் எள்ளுடன் கூடிய நீரைக் கொடுத்து தர்ப்பணம் செய்ய யார் உளர்? இருந்தால் அவரைக் காட்டுவாய்- என்கிறான் கும்பகணன்.

எய்கணை மாரியாலே இறந்து பாழ்படுவேம் பட்டால்

கையினால் எள் நீர் நல்கிக் கழிப்பாரைக் காட்டாய்

 

 

வீடணன் Philosophy பிலாஸபி பிறவி நோய்க்கு மருந்து ராமன்

 

ராமனைச் சரணடைந்தால் என்ன பயன் கிட்டும் என்று விபீஷணன் உரைக்கிறான். அதிலும் கம்பன் இந்துமத தத்துவங்களை மொழிகிறான்

 

 

இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் கரந்த வீரன்

அருளும் நீ சேரின் ஒன்றோ அபயமும் அளிக்கும் அன்றி

மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம், மாறிச் செல்லும்

உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே.

 

பொருள்

 

அறியாமை உடைய எனக்கும் அருள் பொழிந்த வீரன் ராமன்.

நீ வந்தால் உனக்கும் அருள் புரிவான். உனக்கு அபயம் (பாதுகாப்பு) தருவான்.

அஞ்ஞானம் நிறைந்த பிறவி நோய்க்கு அவன் மருந்தாக அமைவான்.

உருண்டு செல்லும் வண்டிச் சக்கரம் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இயல்புடையது வாழ்க்கை. இதனை நீக்கி மோட்சத்தை அருளுவான் ராமன்.

 

அதாவது ஜனன- மரண பிறவிச் சுழலிலிருந்து விடுவிப்பான்.

 

ஆக கும்ப கர்ண வதைப் படலத்தில் யார் யார் எல்லாம் பேசுகிறார்களோ அவர்கள் மூலம் எல்லாம் இந்துமதக் கருத்துகளை ஜூஸாகப் பிழிந்து தருகிறான் கம்பன்.

படிக்கப் படிக்கப் பேரின்பம் கிடைக்கும்.

சுபம்

கனி மொழி பற்றி வள்ளுவன், கம்பன் (Post No.4865)

WRITTEN by London Swaminathan 

 

Date: 30 MARCH 2018

 

Time uploaded in London –  6-33 am (British Summer Time)

 

Post No. 4865

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கனி இருப்ப பூக்கொய்யலாமோ? — கம்பன்

 

கம்பன் கனி மொழிகளை உதிர்க்கிறான் கம்ப ராமாயணத்தில்! வள்ளுவனைக் கரைத்துக் குடித்த கம்பனுக்குப் படலம் தோறும், திருக்குறள் வரிகளும், சொற்களும் தாமாக வந்து விழுகின்றன.

‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ — என்றான் வள்ளுவன்.

கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ?

——-என்றான் கம்பன்

 

முனிவரும் கருணை விவைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி

இனிவரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று  இரங்க வேண்டா

துனிவரும் செறுநர் ஆன தேவரே துணைவராவர்

கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ?

 

 

எங்கே, எப்போது, யார் நுவல்வது இஃது?

 

கும்பகர்ணனைக் கஷ்டப்பட்டு உசுப்பிவிட்டு ராமன் முன்னிலையில் போருக்கு நிறுத்தினார்கள். வேத நாயகனான ராமன், யாரையா இந்தப் புது முகம்? என்று விபீஷணனிடம் வினவுகிறான். அப்போது கும்பகர்ணனை அறிமுகம் செய்து வைக்கிறான். இவரையும் நமது கட்சியில் சேர்த்துக் கொண்டால் நமக்கு வெற் றி  நிச்சயம் என்று சுக்ரீவன் ஒரு யோஜனை சொல்கிறான். ராமனும், எத்தனை பேர் வந்தாலும் எனது கட்சியில் இடம் உண்டு; அழைத்து வா- என்று விபீஷணனை அனுப்புகிறான்.

அப்போது விபீஷணன், கட்சி மாறினால் வரும் சாதகங்களை உரைக்கிறான்:

“நீ ராமன் கட்சியில் சேர்ந்தால், அந்த நிலையில் முனிவர்களும் உன்னிடம் கருணை காட்டுவார்கள்; மூன்று உலகங்களிலும் உனக்குப் பகைவர்கள் இரார். உனக்கு சாவு என்பதே கிடையாது. தேவர்களும் நண்பர்கள் ஆவர். இனிக்கும் பழங்கள் தோன்றும் காலத்தில் வெறும் மலர்களைப் பறிப்பதற்கு நினைக்கலாமா? (கூடாது).”

இந்திய மக்கள்– குறிப்பாகத் தமிழர்கள், இயற்கையோடு இயைந்த வாழ்வு நடாத்தியதால், இயற்கையாகவே மரம், செடி, கொடி, காய், கனி உவமைகள் வரும்.

கனி மொழி பற்றி வள்ளுவன்

 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந்  தற்று- குறள் 100

 

பொருள்

இனிமையான சொற்கள் இருக்கையில் ஒருவன் சுடு சொற்களைப் பெய்வது, இனிப்பான பழங்கள் இருக்கும் போது கய்களைத் தின்றது போலாகும்.

 

சேலத்து மாம்பழமும் , மல்கோவா, பாதிரி, நீலம் அல்பான்ஸோ பழங்களும் இருக்கும்போது நாட்டுப்புறத்தில் கீழே விழுந்து கிடக்கும் புளிச்ச மாங்காயைத் தின்னும் மாங்காய் மடையனாக இராதே என்று கனி மொழி பற்றி வள்ளுவன் சொல்கிறான்.


(
பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன்பெர்னார்ட் ஷாவின் தம்பிகாந்திஜியின் தாத்தா சொன்னது)

–Subham —

 

அன்பிற்கும் அவதி உண்டோ? – ராவணன் (Post No.4863)

WRITTEN by London Swaminathan 

 

Date: 29 MARCH 2018

 

Time uploaded in London –  20-04 (British Summer Time)

 

Post No. 4863

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்றான் தெய்வப் புலவன் வள்ளுவன். தமிழ் வேதமான திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகரத்தில் அருமையான பத்து குறட் பாக்களைக் காண்கிறோம். கம்ப ராமாயணம் முழுதும் நூற்றுக்கணக்கான பாடல்களில் குறளின் எதிரொலியைக் கேட்க முடிகிறது. கம்பன், தெய்வப் புலவனின் திருக்குறளை மனப்பாடமாக அறிந்திருக்க வேண்டும் ஒரு நாளைக்கு 700 கவிகள் பாடிய கம்பனுக்கு முடியாததும் உண்டோ!

 

கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கும்பகர்ணன் வதைப் படலத்தில் ஒரே பாடலில் இரண்டு செய்திகளைத் தருகிறான் கம்பன்

 

1.அன்புக்கு எல்லை இல்லை

2.விநாஸ காலே விபரீத புத்தி (விதி கெட்டால் மதி கெட்டுப் போகும்)

 

ராவணன் முதல் யுத்தத்தில் தோற்றவுடன் மால்யவான், மகோதரன் ஆகிய அமைச்சர்களையும் உறவினர்களையும் கலந்தாலோசிக்கிறான். மாமனான மால்யவான், சீதையை விட்டுவிடு என்கிறான். மகோதரன் என்பவனோ , வா, சண்டக்குப் போவோம், வெற்றி நமதே என்கிறான். அப்போது ராவணன் சொல்வான்—

 

பெறுதியே எவையும் செல்வம் பேர் அறிவாள சீரிற்று

அறிதியே என்பால் வைத்த     அன்பினுக்கு அவதி உண்டோ

உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான்

இறுதியே இயைவது ஆனால் இடைஒன்றால் தடைஉண்டாமோ?

 

பொருள்

மகோதரன் சொன்னதைக் கேட்ட ராவணன் அவனை நோக்கி, “சிறந்த அறிவுடையனே! நீ செல்வம் யாவையும் பெறுதற்கு உரியவன்; சிறந்த செயல்களை நீ அறிந்துள்ளாய். நீ என்னிடம் கொண்ட அன்புக்கு அளவு உண்டா?  நீ எனக்கு உறுதி பயக்கும் செயலையே உரைத்தாய்” – என்று அவனைப் பாராட்டி, தனது சோர்வைக் கைவிட்டான். ஒருவனுக்கு அழியும் காலம் வந்துவிட்டால், இடையிலே எது வந்தாலும் அந்த அழிவுக்குத் தடை உண்டாகுமோ? உண்டாகாது.

 

அவதி= எல்லை, அளவு, துயரம்

 

ஆக, கம்பனும் வள்ளுவனும் அன்பினுக்கு எல்லையோ தாழ்ப்பாளோ இல்லை என்கின்றனர்.

மேலும் சில ஒப்பீடுகள்

யாக்கையதியல்பினுமன்பினும் கொண்டுதன்

காட்சிக்கண்ணீர் கரந்தகத் தடக்கி (பெருங்கதி 1-36; 147-8)

 

உன்னுபே ரன்புமிக்கொழுகியொத் தொண்கணீர்

பன்னுதாரைகள் தரத் தொழுதெழும் பரதனை

-கம்ப. எதிர்கோள்.26)

அன்பிற்கும் உண்டோ | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/அன்பிற்கும்-உண்ட…

2 Dec 2016 – அன்பிற்கும் அன்ன தானத்துக்கும் சக்தி உண்டு!அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கண்நீர் பூசல் தரும் (குறள் 71). பொருள்:- அன்பை, பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் கதவோ தாழ்ப்பாளோ உண்டா? கண்களிலிருந்து பெருகும் கண்ணீரே அந்த அன்பினைப் …

 

பாரதி போற்றி ஆயிரம் – 65 ( Post No.4854 )

Date: MARCH 27, 2018

 

 

Time uploaded in London- 5-56 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4854

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 476 முதல் 484

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி தொடர்கிறது.

மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி

22 முதல் 30 வரை உள்ள பாடல்கள்

 

 

சக்தி எனுமோர் அரியநற் பாட்டில்

   சக்தி எவையென பட்டிய லிட்டாய்

எக்க ணத்திலும் உரியநற் பண்பாய்

   எண்ணத் திருந்திடும் எரியதே சக்தி

தக்க ததுவென  தெளிவுறச் சொன்னாய்

   தழல துவேசிவ சக்தியா மென்றாய்

இக்க ணத்தினில் அதையுணர் வோர்கள்

   என்றும் வாழ்வினில் வெற்றியே காண்பார்

 

சக்தி விளக்கமென் றருளிய பாட்டில்

   சாற்றும் மூர்த்திகள் மூவரென் றாலும்

தக்க தோர்மூலப் பெருவெளி யொன்றில்

   தானே அவைகிளை விட்டன யென்றாய்

மிக்க அவ்வொளியே சக்தியென் றிட்டாய்

   மேன்மை பெற்றிடப் போற்றிடச் சொன்னாய்

எக்க ணத்திலும் எதனிலும் என்னை

   என்றும் நினைந்தவனை வாழ்த்தினேன் நின்னை

 

மகாசக்தி வெண்பா மனத்திற்கு யெந்தன்

மகாசக்தி யைக்கூறும் மாண்பால் – தகாதவற்றை

நீக்கி எனதருள் நீங்கா வகைகாட்டி

காக்கும் கவசமது காண்

 

போற்றி அகவலில் படைப்பு முதல்நாள்

ஆற்றும் செயல்கள் ஐந்தையும் உரைத்தாய்

உலகம் நானாய் ஒவ்வொரு பொருளிலும்

கலந்து நிறைந்ததும் கனிவுடன் பகர்ந்தாய்

ஆனால் இதுவரை ஆய்ந்த ஞானிகளும்

காணாக் குறிப்பினைக் காட்டலால் மகிழ்ந்தேன்

உயிரில் உயிரென உரைத்தாய் இயல்பே

உயிரது இறப்பினும் உளதென் றனையே

யோகியர் ஞானம் யாதென உன்போல்

யூகித்தோர் வரியில் உரைத்தவர் யாருளர்?

சைவசித் தாந்த சார மென்பாரே

நைவதின் றியுன்போல் நயம்பட உரைத்ததார்?

யானெனும் அகங்காரம் எனதெனும் மகங்காரம்

ஏனென விடுத்தவன் ஏற்புறு யோகியென்றாய்

நோக்கு மிடமெல்லாம் நின்னருள் ஞானம்

நீக்க மின்றி நிறைந்ததே வாழ்கநீ!

 

நாவுக்க ரசரின் அரங்க மாலை – என்றும்

   நம்மங் கம்யாவும்  இறைவ னுக்கே

மேவும்ப டியமைந் ததென்றே உரைக்கும் -அந்த

    மேன்மைபோல்நீ வரைந்தாய் எனக்கும்

சக்திக்கு ஆத்ம சமர்ப்பணமாக – நீ

   சாற்றியதோர் புதிய அங்க மாலை

எக்காலத் தையுமிங்கு வென்று வாழும் – அதுபோல்

    எவர்வா ழினுமென் னருளும் மேவும்

 

கருணையின் வடிவமாய் சக்தியின் சொரூபமாய்

   காண்பதில் நிறைவுகொள் ளாமல்

உருத்திர ஆங்காரக் காளியாய் எந்தனின்

   ஊழிக்கூத் தினைப்பாட லுற்றாய்

ஒருமுறை அதையெவர் பாடினும் அங்குநான்

   ஓங்காரக் காளியாய் வந்தே

பெருகிய வெறியுடன் நடம்புரி வேனதில்

   பேரண்டம் குலுங்கிடும் அன்றோ?

 

காலவ னத்தினிலே – நானோர்

களிவண் டாமெனவே

சீலமு டன்சொன்ன – உவமையில்

சிந்தை குளிர்ந்ததடா

 

மாரியெ னைப்பணிந்தும் – மாந்தர்

மனம்வெளுக் காநிலையைக்

கூறிவ ருந்தினையே – அதிலுன்

குமுறலைக் கண்டேனடா

 

காணிநி லந்தனையே – தனக்குக்

கருத்துடன் கேட்டாலும்

பேணிஇவ் வையத்தைப் – பாட்டால்

பாலிக்க நினைத்தாயடா

 

பராசக்தி பார்வையில் பாரதி தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

பாரதி போற்றி ஆயிரம் – 64 (Post No.4842)

PICTURE OF ACTORS FROM BHARATIYAR DRAMA (ACTED BY RAMANAN AND DIRECTED BY RAMAN)

Date: MARCH 23, 2018

 

 

Time uploaded in London- 7-36 am

 

 

COMPILED by S NAGARAJAN

 

 

Post No. 4842

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

  பாடல்கள் 464 முதல் 475

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி தொடர்கிறது.

மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி

10 முதல் 21 வரை உள்ள பாடல்கள்

 

 

பக்தி யிலக்கியம் என்றே தமிழைப்

    பாரே போற்றிடினும்

சக்தி என்புகழ் பாடிய நூல்கள்

   சாற்றும் படியில்லை

இக்க ணம்வரையில் எனக்கோர் காவியம்

    ஏனோ எழவில்லை

தக்கநற் பட்டியல் இட்டுப் பார்த்தால்

    தமிழ்நூல் அதிகமில்லை

 

சங்க இலக்கியத்துள் – சிவத்தைச்

சார்ந்தெனைச் சிலவரிகள் பாடிவைத்தார்

தங்கும் சிலம்பினிலே – இளங்கோ

தகவறு கொற்றவைத் துதியுரைத்தான்

 

கலிங்கத் துப்பரணி – கூத்தன்

கவித்துவ தக்கயா கப்பரணி

வலிமையைத் தருகின்ற – காளியாய்

வடித்தென் பெருமையைச் சாற்றினவே

 

குமர குருபரனோ – என்னைக்

குழந்தையாய் கண்டினிய கவிபாடினான்

அமர்ந் ததனைப்போலே – புலவோர்

அரும்பிர பந்தங்கள் சிலபாடினார்

 

தாயுமா னவனென்மேல் – செய்ய

தமிழ்ப்பதி கம்சில வடித்திட்டான்

ஏயும் வடிவுடைமாலை – வடலூர்

இராம லிங்கமும் கொடுத்திட்டான்

 

அபிராமி பட்டன்தான் – அரிய

அந்தாதி ஒன்றினைச் சூட்டிநின்றான்

அபிமானத் துடனதனை – இந்நாள்

அனைவரும் ஒருமனதாய் ஓதுகிறார்

 

என்புகழ் பாடயிவை போதுமோ?

  இனியொரு வரைத்தமிழ் காணுமோ?

என்றயென் ஏக்கத்தைத் தீர்க்கவே

   இங்குவந் தாய்நீயும் பாரதி

உன்செயல் யாவுமென் செயலதாய்

   உரைத்திட்ட நீசக்தி தாசனாய்

என்றுமென் புகழ்தனைத் தீட்டினாய்

   எண்ணற்ற கவிமலர்கள் சூட்டினாய்

 

எந்தன்மேல் அரியநற் காவியம்

    ஏதும்நீ இயற்றாமல் போயினும்

செந்தமிழ்க் கூறிடும் பிரபந்தம்

    சிறப்பாக உருவாக்கா திருப்பினும்

சந்தங்கள் நிறைந்தநற் பாக்களால்

    சக்தியென் புகழ்நாளும் பாடினாய்

இந்நாளுக் கேற்றபடி தந்ததால்

    எல்லோரும் என்புகழைப் பாடினார்

 

தேசவிடு தலைக்குந்தன் பாடல்கள் யாவும்

தேவையென்ற நிலை தொடர்ந்திட்ட போதும்

நேசமுடன் தேவியாவும் தனக்கெனவே கேட்டாள்

நறுமலர்கள் நாளுமிங்கு சூட்டிடுவேன் என்றாய்

 

பாசமுள்ள நின்வாழ்வில் சோதனைகள் யாவும்

பதைத்திடவே வந்திடினும் பலகவிதை தந்தாய்

பூசலற இக்கவியைச் செய்ததுநா னல்ல

புகலரும் பராசக்தி தானென்று சொன்னாய்

 

மூன்றுகா தலெனும் அரியநற் பாட்டில்

முளரிமா திருவரை முன்னுரைத் தாலும்

தோன்றிடும் காளியே அருளுவாள் யாவும்

தோத்திரம் செய்வமென என்திறம் கண்டாய்

 

ஆயிரம் தெய்வமென அறிவிலிகள் செல்வார்

அறிவொன்றே தெய்வமென சொன்னாய்நீ என்பார்

ஆயினதை பராசக்தி பூணுநிலை யென்றே

அறுதியிட்டுத் தெளிவுறவே ஆங்கதனில் சொன்னாய்

பராசக்தி பார்வையில் பாரதி தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

 

–Subham–

பாரதி போற்றி ஆயிரம் – 63 (Post No.4816)

Picture posted by Vidhya Subramanian in Facebook

Date: MARCH 15,  2018

 

 

Time uploaded in London- 5-07 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4816

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 455 முதல் 463

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி ஆரம்பிக்கப்படுகிறது

மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி

1 முதல் 9 வரை உள்ள பாடல்கள்

 

 

பராசக்தி என்றாலே பாரதம் முழுவதும்

   பக்தியுடன் போற்று மன்றோ?

பராசக்தி யாலேதான் இகவாழ்வின் நலம்யாவும்

   பாங்குடனே அமையு மன்றோ?

பராசக்தி தானிங்கு மூலசக்தி யாய்த்தோன்றி

   பரிணமித்த சக்தி யன்றோ?

பராசக்தி தானிங்கு புவனங்கள் உயிரினங்கள்

   பார்க்கின்ற யாவு மன்றோ?

 

ஆயிரம் பெயர்கொண்டு அழைத்தாலும் ஆதாரம்

   ஆதிபரா சக்தி யன்றோ?

ஆயிரம் வடிவினில் அமர்ந்தாலும் அவையாவும்

   அன்னையென் வடிவ மன்றோ?

ஆயிரம் பணிகளைச் செய்தாலும் வலிமையை

   அருள்பவள் யானே யன்றோ?

ஆயிர மாயிரம் கோயில்க ளிலென்றும்

    அமர்ந்ததிச் சக்தி யன்றோ?

 

புவனங்கள் அனைத்தும்தன் வடிவாகக் கொண்டதால்

   புவனேச்வ ரியென்று ரைப்பர்

அவமற அகிலத்தைக் காத்துவாழ் விப்பதால்

   அகிலாண்டேச் வரியே என்பார்

கவல்கின்ற நிலைமாற்றி கவினுறவாழ் விப்பதால்

   காமாட்சி என்று சொல்வார்

விவரிக்க வொண்ணாத பேரரசு கண்டதால்

   மீனாட்சி எனப்பு கழ்வார்

 

இமயத்தின் பார்வதியாய் இருப்பினும் வங்கத்தில்

   இகல்காளி யென்றி ருப்பேன்

அமர்வென்ற மராட்டிய பவானியாய் இருக்கும்நான்

    ஆந்திரத் துர்கை யாவேன்

குமரியாய் தென்கடலில் நிற்கும்நான் பாரதக்

   கோயிலெங் கணுமி ருப்பேன்

சமயஒற் றுமையோடு தேசியஒற் றுமைகாண

   சார்ந்தவள் நானே யன்றோ?

 

இத்தனைச் சிறப்புகள் எனக்கிருந்தும்

எனைப்பற்றிப் பாடல்கள் அதிகமில்லை

இத்தினம் அதனை நினைத்தாலும்

என்னதான் காரணம் புரியவில்லை

 

ஆலயங் கள்தமிழ் நாட்டினிலே

யாருக்கு அதிகம் எனப்பார்த்தால்

சாலவும் எனக்கே பலகோயில்

சான்றிடும் நூல்களோ சிலவேதான்

 

இடபா கத்தில் என்னை ஏற்ற

   ஈசன் புகழ்பாட

அடல்சார் மூவிழி எனமுப் புராணம்

   அழகாய் அமைந்தனவே

திடமார் நால்வர் பாவுடன் பன்னிரு

   திருமு றையானதுவே

கடல்போல் பரந்த சிற்றிலக்கியங்கள்

   கணக்கி லடங்காவே

 

எந்தன் தமையன் திருமால் பெருமை

   என்றும் நிலைபெறவே

சிந்தை துள்ளும் சந்தக் கவியில்

    திவ்ய பிரபந்தம்

அந்த மில்லாமல் அதற்குப் பின்னும்

   அட்ட பிரபந்தம்

எந்த நாளும்ரா மாயண பாரத

    இதிகா சம்உளவே

 

முருகன் எந்தன் அருமை மைந்தன்

   முத்த மிழின்தலைவன்

பெருமை உரைக்க எத்தனை எத்தனைப்

    புலவர் நாடிவந்தார்

திருமு ருகாற்றுப் படைமு தலாகத்

    திருப்பு கழுந்தொடர

அருள்பெற் றவனைப் பாடிய நூல்கள்

   அளவி டயியலாதே

 

         பராசக்தி பார்வையில் பாரதி தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

***

பாரதி போற்றி ஆயிரம் – 62 (Post No.4810)

A scene from Bharati Drama

Date: MARCH 13,  2018

 

 

Time uploaded in London-15-01

 

 

COMPILED by S NAGARAJAN

 

 

Post No. 4810

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 442 முதல் 454

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு இரண்டாம் அத்தியாயம் தொடர்கிறது

இரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி

31 முதல் 43 வரை உள்ள பாடல்கள்

 

 

சொந்த மண்ணை விட்டு வந்து

   சோர்ந்து வாழ்தல் வாழ்க்கையோ?

இந்தி யாவில் சிறையி லென்னை

   இட்ட போதும் தாழ்ச்சியோ?

இந்த வாழ்வு தேவை யில்லை

   என்று வந்து சிறையிலே

தந்த துன்பம் ஏற்று மீண்டாய்

   சார்ந்த நட்பால் விரைவிலே

 

வறுமை யுன்னை கடையம் தன்னில்

   வாட்டி வதைத்த நாளிலும்

சிறுமை செய்து சுற்ற மெல்லாம்

   சீறி விழுந்த போதிலும்

உறுதி யோடு சென்னை வந்து

   உற்ற இதழின் பணியேற்றே

இறுதி வரையில் எழுதி எழுதி

   எனக்கெ னவுயிர் தந்தாயே

 

சுதந்திர ஆடை நெய்திட நூலை

   சேர்த்திடும் அந்நாளே – அங்கு

அதையவர் அன்றே அணிந்திட் டாற்போல்

   ஆடுவோ மேயென்றாய் – உலகில்

இதனிலும் தீர்க்க தரிசனம் என்பதை

   எங்கும் பார்த்ததில்லை – பின்னர்

அதன்படி சுதந்திர பூமியில் மக்கள்

    ஆடியே பாடினரே!

 

இறந்த காலச் சிறப்புகள் பாடி

   இறும்பூ தெய்தினையே! – ஆனால்

பிறங்கும் நிகழ்கா லத்தின் நிலையை

   பிழையற உரைத்தனையே – அன்றே

சிறந்த எதிர்கா லத்தின் மேன்மையை

   சீருற மொழிந்தனையே – அதனால்

கறங்கும் திரிகா லமும்மொழி ஞானக்

   கவியாய் திகழ்ந்தனையே!

 

புதிதாய் மலர்ந்த ருஷியப் புரட்சியின்

    பெருமையை உணரவைத்தாய் – மேலும்

மதித்தற் குரிய பெல்ஜிய வாழ்த்து

    மாஜினி சபதமுடன் – நாளும்

விதியது வோயென பீஜித் தீவினில்

   வேதனைப் படும்பெண்கள் – கொண்ட

கதியையும் பாடி எல்லையில் உலகக்

   கவியாய் உயர்ந்தனையே!

 

வந்தே மாதரம் என்பார் – அது

   தந்திடும் பொருளுணராமலே மொழிவர்

வந்தே மாதரம் என்றால் – எங்கள்

    மாநிலத் தாயை வணங்குத லென்றே

சிந்தை தெளிந்திட உரைத்தாய் – பொருள்

    செம்மையாய் உணர்ந்திட வேமொழி பெயர்த்தாய்

இந்த நாளிலும் இன்னும் – அதை

    இகழ்வாய் பேசிடும் ஈனருள ரன்றோ?

 

தாயின் மணிக்கொடி என்றே – நான்

   தாங்கிடும் துவசத்தின் சிறப்பை வடித்தாய்

சேயிவர் உயிரினைத் தந்தும் – அதன்

   செம்மையை உதிரத்தால் காப்பாரென் றுரைத்தாய்

ஆயினும் நிகழ்வது என்ன? – இன்று

    அவரவர்க் கெனதனிக் கட்சிகள் கண்டே

ஏயின கொடிகள்கிழ் நின்றார் – அதில்

    எனக்குள தேசியக் கொடியினை மறந்தார்

 

பொன்விழா கண்டஎன் நாட்டில் – இன்னும்

   பஞ்சமும் பசியும் தீர்ந்திட வில்லை

அன்றுநீ உணவைப் பறிக்கும் – மனிதர்

   அகன்றிடு வாரென அகமிக மகிழ்ந்தாய்

இன்றுமந் நிலையே அமைத்தார் – பலர்

    ஏழைக ளாகிட சிலர்யாவும் பறித்தார்

 என்றிவர் வறுமைகள் நீங்கும் – பாரதி

    அன்றுதான் நீ சொன்ன பாரதம் ஓங்கும்

 

முப்பது கோடி மக்களுக் கோருயிர்

முன்னம் உரைத்தனையே – இன்று

செப்பரும் நூறு கோடி யாயிவர்

சிதைவுற்று நின்றனரே

 

 

அறுபது கோடி தடக்கை களாமென

அகம்மிக மகிழ்ந்திருந்தாய் – ஆனால்

இருநூறு கோடி கரங்க ளிருந்தும்

ஏதும்முன் னேற்றமில்லை

 

மேவினர்க கின்னருள் செய்பவள் தாயென

மேன்மை யுறவுரைத்தாய் – இங்கே

மேவிய பற்பல பேதங்க ளால்பகை

மூண்டுள தென்செய்வேன்?

 

அல்லவ ராயின் அவரை விழுங்குவள்

அன்னையென் றேவுரைத்தாய் – என்ன

சொல்லுவேன் இவர்கள் மாறுபட் டுத்தம்மைத்

தாமே விழுங்கினாரே

 

அடிமை விலங்கினை உடைத்திட அந்நாள்

   அரியநற் கவிதைகள் தீட்டிவிட்டாய்

முடிவே இல்லாத மதஇன சாதியாம்

   விலங்குகள் இந்நாளில் பூட்டிவிட்டார்

கடின முயற்சிகள் அதனிலும் தேவையாய்

   கழற்ற முடியாமல் திணறுகின்றேன்

விடிவினைக் காணவே மீண்டும் நீவந்தால்

    விடுதலை பெறுவேன் வாழியவே.

 

பாரதமாதா பார்வையில் பாரதி முற்றும்

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****